Wednesday 21 February 2018

செம்மறி ஆடு வளர்ப்பில் கோடைக்காலப் பராமரிப்பு முறைகள் :

1. செம்மறி ஆடுகளில் இனப்பெருக்கப் பருவ காலங்கள்

2. கோடைக் காலத்தில் பின்பற்ற வேண்டிய
வழிமுறைகள் :

(i) குடிநீர் அளித்தல்
(ii) தீவனம் அளித்தல்
(iii) மேய்ச்சலுக்கு விடுதல்
(iv) இனப்பெருக்கத் திறனை மேம்படுத்துதல்
(v) கொட்டகை அமைக்கும்போது
(vi) ஆடுகளைக் கழிவு செய்தல்

நிலமுள்ள மற்றும் நிலமற்ற சிறு, குறு விவசாயிகள் அறிவியல் ரீதியாக ஆடுவளர்ப்புத் தொழிலை கோடைக் காலப் பராமரிப்பையும் சிறப்பாக மேற்கொண்டால் தங்களது வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்வதோடு மட்டுமல்லாமல் நாட்டின் பொருளாதாரத்தையும் உயர்த்தலாம்.

செம்மறி ஆடுகளில் இனப்பெருக்கப் பருவ காலங்கள்
பொதுவாக ஆடுகள் ஆண்டு முழுவதும் சினைப் பருவத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. குட்டி ஈன்ற ஆடுகள் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரித்து பிறகு அதாவது, குட்டி ஈன்ற 60 முதல் 90 நாட்களுக்குள் சினைப் பருவத்தை அடையும் தன்மையுடையவை. இருந்தபொழுதும் குறிப்பிட்ட காலங்ளில் தான் அதிக ஆடுகள் பல முறை சினைப் பருவத்தை வெளிப்படுத்தும் தன்மை கொண்டவை. தமிழ்நாட்டைப் பொறுத்த வரையில் சினைப்பருவ காலங்களை மூன்றாம் வகைப்படுத்தலாம்.

1. மார்ச் – ஏப்ரல் (பங்குனி – சித்திரை)
2. சூலை – ஆகஸ்டு (ஆடி – ஆவணி)
3. செப்டம்பர் – அக்டோபர் (புரட்டாசி – ஐப்பசி)

மார்ச், ஏப்ரல் மாதங்களில் வெப்பம் மிகுந்திருக்கும் சூழலில் சினைப் பருவத்திற்கு வரும் ஆடுகள் ஜூலை, ஆகஸ்டு மாதங்களில் குட்டி ஈனும். பொதுவாக ஜூன் மாதத்தில் இருந்தே தென்மேற்குப் பருவ மழை தொடங்கி விடுவதால் இக்காத்தில் ஆடுகள் மற்றும் பிறக்கும் குட்டிகளுக்கு நல்ல பசுந்தீவனம் கிடைக்கும். ஆகையால், ஆடுகளில் பால் உற்பத்தியும் நன்கு இருக்கும். இதன் மூலம் குட்டிகளின் வளர்ச்சியும் நன்கு இருக்கும். ஆகவே இந்தக் கோடைக்காலத்தில் சினைப்படும் ஆடுகளை நன்கு பராமரிப்பது அவசியம்.

ஆகவே கோடைக் காலத்தில் ஆடு வளர்ப்புத் தொழிலில் சில வழிமுறைகளை முறையாகப் பின்பற்றினால் கோடைக்காலத்தில் ஏற்படும் வருமான இழப்பை ஈடுசெய்யலாம்.

வெப்பநிலை உயரும் பொழுது ஆடு மற்றும் குட்டிகள் வெப்ப அயர்ச்சிக்கு உட்படுகின்றன. இதனால் ஆடுகளில் இனப்பெருக்கத் திறன் பால்உற்பத்தித் திறன், தீனி எடுக்கும் அளவு எடை கூடும் திறன் ஆகியவை குறைய வாய்ப்புண்டு. சில சமயங்களில் அதிக வெப்ப அயர்ச்சியால் ஆடுகளில் இறப்ப கூட ஏற்படலாம். ஆகவே, வெப்ப அயர்ச்சியிலிருந்து ஆடுகளைப் பாதுகாப்பது அவசியமாகும்.

கோடைக் காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் :

குடிநீர் அளித்தல் :

* ஆடுகளுக்குப் போதிய அளவு குடிநீர் வழங்க வேண்டும். தூய்மையான குளிர்ந்த நீரானது தேவையான அளவு கிடைக்கும் வகையில் குடிநீர்த் தொட்டிகளை அமைக்க வேண்டும்.

* குடிநீர்த் தொட்டிகளை நிழலான இடத்தில் வைக்க வேண்டும். குடிநீர்த் தொட்டிகள் சூரிய ஒளியில் / திறந்த வெளியில் இருந்தால் நீரானது வெப்பமாவதால் ஆடுகள் தண்ணீர் குடிக்கும் வெப்பமாவதால் ஆடுகள் தண்ணீர் குடிக்கும் அளவு குறைய வாய்ப்புண்டு.

* சுற்றுப்புற வெப்பநிலை அதிகமடையும் பொழுது தண்ணீர் அருந்தும் அளவு இருமடங்காக உயரும். ஆகவே, குடிநீர் போதிய அளவு கிடைக்கும் வகையில் குடிநீர்த் தொட்டிகளை நிழலில் அமைப்பது அவசியமாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

தீவனம் அளித்தல் :

* கோடைக்காலத்தில் அதிக வெப்பநிலை காரணமாக மேய்ச்சல் நிலங்களில் பசும்புற்களின் அளவு குறைந்தே காணப்படும். ஆகவே ஆடுகளுக்கு அடர்த் தீவனத்தைச் சற்று அதிகமாக அளிக்க வேண்டும். அதாவது சினையாக உள்ள ஆடுகளுக்கு 250 – 300 கிராமும் குட்டி ஈன்ற ஆடுகளுக்கு 300 – 350 கிராமும் அளித்தால் நல்லது. இது சினையாக உள்ள ஆடுகளில் குட்டிகளின் இறப்பைத் தவிர்க்கவும். மேலும், குட்டி ஈன்ற ஆடுகளில் பால் உற்பத்தியினை அதிகரிக்கவும் உதவும்.

* கோடைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே வேளாண் உபபொருள்களான கொள்ளுப்பொட்டு, நிலக்கடலைக் கொடி போன்றவற்றைச் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

* மழைக் காலங்களில் அதிகமாக உள்ள பசுந்தீவனங்களைக் கொண்டு பதனப்புல் (ஊறுகாய் புல்), தயாரித்து வைத்துக் கொண்டால் கோடைக்காலங்களில் பயன்படுத்தி கொள்ளலாம்.

* ஆடுகளுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் பசுந்தீவனம் மற்றும் மரத் தழைகளை அளிக்க வேண்டும்.

மேய்ச்சலுக்கு விடுதல் :

கோடைக்காலங்களில் எப்பொழுதும் காலை 10 மணி வரையிலும் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரையிலும் மேய்ச்சலுக்கு அனுப்ப வேண்டும். மேய்ச்சல் நிலங்களில் ஆங்காங்கே நிழல் உள்ள இடங்களில் தண்ணீர்த் தொட்டிகளை அமைக்க வேண்டும். ஒவ்வொரு 7-10 நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் மேய்ச்சல் நிலங்களை மாற்றுவதன் மூலம், ஆடுகள் உயரமான பற்களை மட்டும் மேய்வதால், 10 நாள்களுக்கு பிறகு புற்கள் மீண்டும் தழைய வாய்ப்புண்டு. மேலும் உயரமாக வளர்ந்த புற்கள் மேல் மட்ட மண்ணிற்கு நிழலாக அமைவதால் நிலமானது அதிக வெப்பமடைவது தவிர்க்கப்படுகிறது.

சுழற்சி மேய்ச்சல் முறையில் ஒட்டுண்ணித் தாக்கம் குறைவாகவே காணப்படும். ஒட்டுண்ணி லார்வாவானது எப்பொழுதும் புற்களின் மேற்பகுதியை விட அடிப்பகுதியிலேயே அதிகம் காணப்படும். சுழற்சி முறை மேய்ச்சலினால் அதிகமாக ஒரே இடத்தில் உள்ள புற்கள் சேதமடைவது தடுக்கப்படுகிறது.

இனப்பெருக்கத் திறனை மேம்படுத்துதல் :

* கோடைக் கால்த்தில் சினைப்பருவ அறிகுறிகள் வெளிப்படுதல் குறைவாகக் காணப்படும். சினைப் பருவகாலச் சுழற்சியானது நீண்டு காணப்படும்.

* முன் சினைக்காலத்தில் ஆடுகளில் உடல் வெப்பிநலை அதிகமாகக் காணப்பட்டால் சினைப் படிக்கும் திறன் குறைய வாய்ப்புண்டு. ஆகவே, ஆடுகளை நிழல் உள்ள இடங்களில் மேய்ப்பது நல்லது. கோடைக்காலங்களில் ஒரு கிடாயை 20 பெட்டை ஆடுகளுக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

* கோடைக்காலத்தில் பெட்டை மற்றும் கிடாக்களுக்கு அதிக அளவு பசுந்தீவனம். தரமான அடர் தீவனம் மற்றும் தூய்மையான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும். போதிய தாது உப்புகள் (தாமிரம், துத்தநாகம் மற்றும் செலினியம்) மற்றும் வைட்டமின்கள் (ஏ, டி ம்றறும் ஈ) கிடைக்குமாறு செய்ய வேண்டும்.

* செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இனவிருத்தி செய்யக் கூடிய ஆடுகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குட்டி ஈனும், முடிந்த அளவு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் இனவிருத்தியைத் தவிர்த்து ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் குட்டிகள் பிறப்பதைத் தவிர்க்கலாம். இதனால் எடை குறைவான குட்டிகள் மற்றும் குட்டிகளின் அதிக இறப்பு போன்ற பிரச்சினைகளைத் தவிர்க்க முடியும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கொட்டகை அமைக்கும்போது :

* கொட்டகையை சுற்றி நிழல் தரும் தீவன மரங்களான சுபாபுல், அகத்தி, வேம்பு, கிளரிசிடியா, கல்யாண முருங்கை, பூவரசு ஆச்சா மற்றும் இச்சி போன்ற மரங்களை நட வேண்டும். இம்மரங்களானது ஆடுகளுக்கு நிழலாக அமைவதோடு மட்டுமல்லாமல் கோடைக்காலத்தில் மரத் தழை தீவனங்களாகவும் பயன்படும். மேய்ச்சல் நிலங்களிலும் ஆங்காங்கே நிழல் தரும் மரங்களை நடுவதன் மூலம் மதிய வேளையில் ஆடுகள் நிழலில் நிற்பதற்கு உதவியாக இருக்கும்.

* ஆஸ்பெஸ்டாஸ் அட்டை கொட்டகையாக இருந்தால், அட்டையின் மீது தென்னங்கீற்றுகளைப் போடுதல் நல்லது. தகரக் கூரையாக இருந்தால் உட்புறத்தில் கருப்பு வர்ணப் பூச்சும், வெளிப்புறத்தில் வெள்ளை வர்ணப் பூச்சும் அடிப்பதன் மூலம் ஆட்டுக் கொட்டகையைக் குளுமையாக வைக்க முடியும். கொட்டகையில் தானியங்கி தண்ணீர்த் தொட்டிகளை அமைப்பதன் மூலம் எந்நேரமும் தூய்மையான, குளிர்ந்த குடிநீர் கிடைக்குமாறு செய்யலாம்.

ஆடுகளைக் கழிவு செய்தல் :

* மந்தையில் உள்ள அளவுக்கு அதிகமான ஆடுகள், குட்டிகள், இனப்பெருக்கத் திறன் குறைந்த ஆடுகள், மெலிந்த ஆடுகள் மற்றும் கிடாக்களைக் கோடைக்காலம் ஆரம்பிக்கும் முன்பே விற்று விடுதல் நல்லது. இதன் மூலம் தேவையற்ற தீவனச் செலவைக் குறைக்கலாம்.

* மேற்கண்ட முறைகளைக் கோடைக் காலத்தில் விவசாயிகள் மற்றும் பண்ணையாளர்கள் பின்பற்றி ஆடு வளர்ப்புத் தொழிலில் அதிக இலாபம் ஈட்டலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete