Monday 12 February 2018

அழிவின் விளிம்பில் ஈச்சை மரங்கள்… பன்னாட்டு மோகம்தான் காரணமா?

ஸ்டார் ஹோட்டல்களானாலும் சரி; சாப்ட்வேர் கம்பெனிகளானாலும் சரி. முகப்பில் ஈச்சை மரத்தை வைத்தால்தான் தங்களுக்கு ராயல்டி கிடைத்ததாக உணர்கிறார்கள். பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியாவில் படையெடுப்பதற்கு முன்புவரை ஈச்சமரங்கள் புதர்களிலும், ஓடைகளிலும் மட்டுமே காணப்படும். சமீபகாலங்களாக ஈச்சமரத்தை தங்கள் கட்டடங்களுக்கு அருகே வளர்த்து அழகு பார்க்க தொடங்கிவிட்டார்கள்.

ஐவகை நிலங்களில் பனை, தென்னையுடன் சேர்ந்து ஈச்சமரங்களும் செழித்தோங்கியதாக பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் குறிப்பிட்டிருக்கிறார்கள். விவசாயம் தோன்றும் முன்னரே இவ்வகை மரங்களை தமிழர்கள் பயன்படுத்தத் தொடங்கியதாக வரலாறுகள் கூறுகின்றன. இதன் சரியான பூர்வீகம் அறியப்படவில்லை. அரபு நாடுகளில் அதிக அளவு ஈச்சமரங்கள் இருக்கின்றன. அஃபந்தி, அஜ்வா, அன்பரா உள்ளிட்ட பல ரகங்களில் அங்கே பேரீட்சை மரங்கள் வளர்கின்றன. இந்தியாவில் காணப்படும் மரங்கள் அரபுநாடுகளில் இருக்கும் மரங்களை விட உயரம் குறைவு.

பேரீச்சம் பழத்தில் நார்சத்து, சர்க்கரை சத்து, புரதம் உள்ளிட்ட பல்வேறு வகையான சத்துகள் இருக்கின்றன. கால்சியம், இரும்பு போன்ற தாதுக்களும் அதிக அளவில் பேரிட்சையில் இருக்கின்றன. சுமார் 15 மீட்டர் வரை வளரும். கோடையில் காய்த்துக் குலுங்கும். சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும்போது புதர்களில் காணப்படும் ஈச்சம்பழத்தைப் பறித்த ஞாபகம் இந்தத் தலைமுறை மாணவர்களிடம் கிடையாது. பெரிய அளவில் கொட்டையும், குறைவான தடிமனில் சதைப் பகுதியும் இருக்கும். அதிக இனிப்பு சுவை கொண்டிருக்கும். கிராமங்களில் பெரிய மரங்களில் வளரும் ஈச்சங்காய்களை வெட்டியெடுத்து வந்து பானையில் பழுக்க வைப்பார்கள். வெளிநாட்டு பேரீச்சம் பழங்கள் இறக்குமதி செய்வதைத் தொடர்ந்து, உள்நாட்டு ஈச்சம்பழங்களுக்கு மவுசு குறைந்துவிட்டது. அரபுநாடுகளிலிருந்து விதவிதமான பேரீட்சை ரகங்கள் வரத்தொடங்கிவிட்டன. பனைமரத்தை போல ஈச்சமரத்திற்கு பெரிய அளவில் தண்ணீர் தேவைப்படாது. முட்கள் நிறைந்த இலைகள், தென்னையைப் போன்ற குலைகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். தென்னை, பனையைப் போன்று இதிலிருந்தும் கள் இறக்கலாம். கற்கண்டு தயாரிக்கலாம். ஈச்ச ஓலைகளைக் கொண்டு பாய், துடைப்பம் உள்ளிட்ட பொருள்களைச் செய்வார்கள். மட்டைகளில் கூடை முடைவார்கள். தூக்கனாங்குருவிகள் ஈச்ச மர ஓலை நுனியில் கூடுகட்டும்.

சமீபகாலமாக சென்னை உள்ளிட்ட இடங்கிளில் பெரியபெரிய ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்களின் வரத்து அதிகரித்துள்ளது. வளர்ந்த ஈச்சமரங்களை வேரோடு வெட்டியெடுத்து அழகுபடுத்த நினைக்கிறார்கள். இதனால் அந்த நகரங்களைச் சுற்றியுள்ள கிராமங்களில் உள்ள ஈச்சமரங்கள் வேட்டையாடப்படுகின்றன. அரசு நிலங்களிலும், தரிசு நிலங்களிலும் இருக்கும் மரங்கள் ஜேசிபி இயந்திரங்கள் கொண்டு தோண்டியெடுக்கப்டுகின்றன. அவை ஓரிடத்தில் பதியம் போட்டு பாதுகாக்கிறார்கள். காஞ்சிபுரம் மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள தொழுப்பேடு கிராமங்களில் ஈச்சமரங்கள் ஒரே இடத்தில் மொத்தமாக வைத்திருக்கிறார்கள். ஈச்ச மரங்கள் விற்பனையாகாமல் தேக்கமடையும் போது, பராமரிக்கப்படாமல் அவை அழிந்துவிடுகின்றன. இதனால் ஈச்சமரங்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக அப்பகுதியில் உள்ளவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மரங்கள் என்பது கட்டடத்திற்கு அழகுதான். ஆனால், அவை இயற்கையாக வளரும் இடங்களிலிருந்து தேவையில்லாமல் இடமாற்றம் செய்யக் கூடாது. மூங்கில் அதிக அளவு ஆக்சிஜன் கொடுக்கக் கூடியது என்பதால் சில சாப்ட்வேர் கம்பெனிகளில் மூங்கில் மரங்களை வளர்க்கிறார்கள். மேலை நாடுகளில் உள்ளது போல் ஈச்சமர கலாசாரம் இங்கே பரவிவிட்டது. ஈச்சமரங்கள் வைப்பதற்கு பதில் புங்கன், வேம்பு உள்ளிட்ட குளிர்ச்சி தரும் மரங்களை நடலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete