Thursday 8 February 2018


உலகப் புகழ்பெற்ற "BULLY BOY" என்ற காங்கேயம் காளை மரணம்..!















































உலக அளவில் அதிகம் படம்பிடிக்கப்பட்ட காங்கேயம் காளை நல்லடக்கம் செய்யப்பட்டது...

திருப்பூர் மாவட்டம் குட்டப்பாளையம் கிராமத்தில் அமைந்துள்ளது காங்கேயம் சேனாபதி நாட்டு இன கால்நடை ஆராய்ச்சிமையம். பல நூறு ஏக்கர் பரப்பளவு கொண்ட மேய்ச்சல் நிலத்தில் அமைந்துள்ளது இந்த ஆராய்ச்சி மையம். அழிந்து வரும் நாட்டு இன கால்நடைகளைக் காப்பாற்றி இனப்பெருக்கம் செய்து அதன் எண்ணிக்கையை அதிகப்படுத்துவதுதான் இந்த ஆராய்ச்சி மையத்தின் நோக்கம்.

உம்பளாச்சேரி, புளிகுளம், ஆலம்பாடி, பர்கூர், தஞ்சாவூர் குட்டை உள்ளிட்ட நாட்டு இன மாடுகள் தமிழ்நாட்டில் உள்ளன. அந்த வகையில் உலகப் புகழ்பெற்ற ஒரு ரகம் காங்கேயம் மாடுகள். அழகிய கொம்புகள், மலைக்குன்று போன்ற திமில். ஊளைச்சதை இல்லாத உடல்வாகு, சாட்டைப்போன்ற வால், நீளமான கால் , கம்பீரமான தோற்றம் உடையவை காங்கேயம் மாடுகள். வலிமையானவை. கடின உழைப்பாளிகள். மேய்ச்சல் நிலங்களில் வளர்ந்து கிடக்கும் கொழுக்கட்டைப் புற்களை மேய்ந்து, உயிர்வேலிகளில் படர்ந்திருக்கும் மூலிகைச் செடிகளை மென்று தின்று காலாற உலவும் தன்மைகொண்டவை. அதனால் முழு ஆரோக்கியத்துடன் திகழ்ந்தன காங்கேயம் மாடுகள். ஊத்துக்குளி வெண்ணெய் உலகப் புகழ்பெற்ற அந்த வெண்ணெயில் உருவான நெய் மணம்தான் காரணம். ஊத்துக்குளி வெண்ணெய் எடுக்க, பயன்படுத்துவது முழுக்க முழுக்க காங்கேயம் பசு மாட்டுப்பால் கொடுத்த தயிர்தான்.

உழவு, வண்டி போன்ற விவசாயப் பணிகளைத்தாண்டி, ஜல்லிக்கட்டு, ரேக்ளா பந்தயங்களிலும் பங்கேற்று பரிசுகளை அள்ளும் திறமை காங்கேயம் மாடுகளுக்கு உள்ளது.
அப்படியான, பல சிறப்புகளை உடைய காங்கேயம் மாடுகள் சமீபகாலமாக அழியும் நிலையில் உள்ளன. அதிகப்பால் கொடுக்கும் கலப்பின பசுமாடுகளை விவசாயிகள் விரும்பியதே அதற்குக் காரணம். அதேபோல உழவு வேலைகளுக்கு டிராக்டர் வந்துவிட்டதால், காங்கேயம் காளைகள் அடிமாடுகளாகப் போகும் அபாயமும் ஏற்பட்டது.

இதைப் போக்கும் விதமாக, காங்கேயம் சேனாபதி நாட்டு இன கால்நடை ஆராய்ச்சி மையத்தைத் துவக்கினார் கார்த்திகேய சிவசேனாபதி என்கிற சமூக ஆர்வலர். அவரது ஆராய்ச்சிப்பண்ணையில் பல நாட்டு மாடுகள் இருந்தாலும், ஹீரோவாக வலம் வந்தது அழகிய காரி நிறக்காளை ஒன்று. 'புல்லி பாய்' மற்றும் 'பெரியவன்' என்று அழைக்கப்பட்ட அந்தக் காளை முழுக்க முழுக்க இனப்பெருக்கத்திற்கான பூச்சிக்காளை( பொலிகாளை)யாகச் செயல்பட்டது. செயற்கை முறை கருவூட்டல் இல்லாமல், நேரடியாகவே இந்தக் காளையுடன் இணைசேர்ந்த பசுக்கள் மூலம் மீண்டும் நாட்டு இன மாடுகள் உற்பத்தி அதிகரித்தது. கடந்த 20 ஆண்டுகளில் இந்தக் காளை மூலம் பல்லாயிரம் பசுக்கள் கருவுற்று காங்கேயம் இன கன்றுகளை ஈன்றன என்கிறார் கார்த்திகேய சிவசேனாபதி. அப்படியான புகழ் பெற்ற புல்லி பாய், வயது மூப்பின் காரணமாக நேற்று காலமானது.

அந்தத் தகவல் அறிந்ததும் பல்லாயிரக்கணக்கான கிராம மக்களும் ,சமூக ஆர்வலர்களும் குட்டப்பாளையத்தில் குவிந்துவிட்டனர். இயற்கை எய்திய புல்லி பாய் காளைக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. உலக அளவில் அதிகம் படம்பிடிக்கப்பட்ட நாட்டு இனக்காளை இதுதான். வெளிநாடுகளில் நடக்கும் கால்நடை சம்பந்தமான கருத்தரங்குகள் கண்காட்சிகளில் இந்தக் காளையின் கம்பீரமான புகைப்படம்தான் இந்திய நாட்டு இன கால்நடைகளுக்கான குறியீடாக இருந்துள்ளது. காலமான காங்கேயம் காளைக்கு மாலை மரியாதை செய்யப்பட்டு ஆராய்ச்சி மைய வளகாத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரபலமான தேவர்பிலிம்ஸ் சினிமா கம்பெனியின் சின்னமாக காங்கேயம் காளை விளங்கியது. அந்தத் தேவர் பிலிம்ஸ் காளை இப்போது இயற்கை எய்திய பெரியவனின் தாத்தா என்பது குறிப்பிடத்தக்கது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete