Monday 12 February 2018

பாம்பின் விஷம் எப்படி எடுக்கப்படுகிறது? ஸ்பாட் ரிப்போர்ட் :

பாம்புகளிடமிருந்து எப்படி விஷம் எடுக்கிறார்கள் என்பது குறித்தும், மற்ற விஷயங்கள் குறித்தும் பார்ப்போம்.

மருந்து தயாரிப்பதற்காக எவ்வளவு விஷம் தேவைப்படுகிறது என்பதைப் பொறுத்து இந்தக் கூட்டுறவு சங்கத்திற்கு ஆர்டர் அனுப்பப்படும். அதற்கு பிறகுதான் பாம்புகளைப் பிடித்துவரச் சொல்லி ஆட்களை அனுப்புகிறார்கள். வருடத்திற்கு மொத்தம் 8,300 பாம்புகள் வரை மட்டுமே இவர்கள் பிடிக்கவேண்டும் என்பது அரசின் உத்தரவு. இந்த 8,300 பாம்புகளைத்தான், சங்கத்தில் இருக்கும் 372 பேரும் பகிர்ந்துகொள்வார்கள். ஆர்டர் வந்ததும் உடனே சங்கத்தின் உறுப்பினர்களுக்குத் தகவல் சொல்லி அனுப்பப்படும். உடனே அவர்கள் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்களில் இருக்கும் கிராமங்கள் மற்றும் வனப்பகுதிகளுக்குச் சென்று பாம்பு பிடிக்கத்தொடங்குவார்கள். ஒருசிலர் ஒரே நாளில் பாம்புகளைப் பிடித்துவிடுவார்கள். சிலருக்கு ஒருவாரம் அல்லது 20 நாள்கள் வரையிலும் ஆகலாம். இப்படி பாம்புகளைப் பிடித்து பைக்குள் அடைத்துவிட்டு, பின்னர் சங்கத்திற்கு தகவல் தெரிவிப்பார்கள். பின்னர், இங்கிருந்து ஒரு வாகனம் அனுப்பிவைக்கப்பட்டு பாம்புகள் இந்தப் பண்ணைக்குப் பாதுகாப்பான முறையில் கொண்டுவரப்படும்.

இப்படிப் பிடித்துவரப்படும் பாம்புகள் அனைத்தும் பானைகளில் போடப்பட்டு பாதுகாக்கப்படுகின்றன. அவற்றின் உணவுக்காகப் பானைக்குள் நீர் வைக்கப்படுகிறது. பாம்புகள், முட்டை மற்றும் பாலையே விரும்பிச் சாப்பிடும் என்று சொல்லப்படுவதெல்லாம் பொய் என்கிறார் செல்லப்பா. மாறாக, பசியில் இருந்தால் மட்டுமே பால் சாப்பிடுமாம். மற்றபடி நீரும், சின்ன சின்ன உயிரினங்களும்தான் இதன் முக்கிய உணவு. ஒருமுறை உணவை உண்டுவிட்டால், அது செரிக்கும் வரைக்கும் அடுத்த உணவை எடுத்துக்கொள்ளாது. அதற்கு முன்பே உணவு உண்டாலும் வாந்தி எடுத்துவிடும். இதனை உணர்ந்து வாரத்திற்கு ஒருமுறை மட்டுமே எலிகள், தவளைகளை உணவாக அளிக்கின்றனர். இப்படி உணவளிப்பதற்காக வாரத்திற்கு ஒருமுறை பாம்புகளை வெளியில் திறந்துவிடுகிறார்கள். பாம்புகள் உணவருந்திவிட்டு மீண்டும் பானைக்குள் சென்றுவிடுகின்றன. ஒரு பானைக்குள் இரண்டு பாம்புகள் பாதுகாக்கப்படுகின்றன. பானைகள் மிகவும் குளிர்ச்சியானவை என்பதால் பாம்புகள் எந்தச் சிரமமும் இல்லாமல் இருக்குமாம்.

"பாம்பு இங்கே கொண்டுவரப்பட்டதும் உடனே அது என்ன பாம்பு, ஆணா பெண்ணா, அளவு போன்றவை கணக்கிடப்பட்டு சங்க உறுப்பினர்களின் பதிவேட்டில் குறித்துவைக்கப்படும். பின்னர் பானைக்குள் அடைத்துவைக்கப்பட்டு அதற்கு பதிவு எண் கொடுக்கப்படும். இந்த வரிசையில்தான் விஷம் எடுக்கப்படும். ஒவ்வொரு பாம்பிற்கும் ஒவ்வொரு சன்மானம். ஒரு நல்லபாம்பையோ, கண்ணாடி விரியனையோ கொண்டுவந்தால் அதற்கு 2,300 ரூபாய் வழங்கப்படும். கட்டுவிரியனுக்கு 850 ருபாய். சுருட்டை விரியனுக்கு 300 ரூபாய். ஒரு குடும்பத்திற்கு அதிகபட்சம் மாதம் 5,000 ரூபாய் வரை இதன்மூலம் கிடைக்கும். பகுதி நேரமாகத்தான் இந்தப் பணியில் ஈடுபடுகிறோம். மற்ற நேரங்களில், பிற வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடுவோம். இந்த சங்கத்தில் சேர, வனத்துறையிடம் விண்ணப்பித்து முறையாக லைசென்ஸ் வாங்கவேண்டும்.

ஒரு பாம்பிலிருந்து, விஷம் எடுக்கப்பட்டதும் ஒரு வாரம் இடைவெளி விடப்படும். பின்னர் அடுத்தமுறை. இப்படி மொத்தம் நான்கு முறை மட்டுமே விஷம் எடுக்கப்படும். விஷம் எடுத்தபின்னர் அவை மீண்டும் காட்டிற்குள் கொண்டுபோய் விடப்படும். ஒருமுறை விஷம் எடுத்த பாம்பிலிருந்து மீண்டும் விஷம் எடுத்துவிடக் கூடாது என்பதற்காக, பாம்பின் உடலின் கீழே சின்னதாக ஒரு அடையாளக்குறி இடுவோம். இது பாம்பின் செதில் போன்ற ஒரு பகுதிதான். எனவே வெட்டும்போது வலிக்காது. ஒருமுறை வெட்டிவிட்டால் இந்த செதில் மீண்டும் வளர இரண்டு மூன்று மாதங்களாகும். எனவே, யாராவது பாம்பைப் பிடிக்கும்போது இந்த அடையாளக்குறி தென்பட்டால், அங்கேயே விட்டுவிட்டு அடுத்த பாம்பை பிடிக்கப்போய் விடுவோம்." என்ற செல்லப்பா, அடையாளக்குறி தெரிகிறதா என நல்லபாம்பை நம்மிடம் காட்டினார்.

"ரொம்ப சின்னதா தெரியுது. இத எப்படி பாத்ததும் கண்டுபிடிக்க முடியும்?"

"அதெல்லாம் எங்க ஆளுங்க பாத்ததும் கண்டுபிடிச்சுடுவாங்க"

"சரி, எப்படி விஷம் எடுப்பீங்க?"

"முதலில், பாம்பை பானையிலிருந்து வெளியே எடுப்போம். பின்னர் அடையாளக்குறி. அடுத்து அதைக் கையில் பிடித்து விஷம் சேகரிக்கும் கன்டெயினரை கடிக்கவைப்போம். பாம்பின் பல் பதியத்தொடங்கியதும் விஷம் உள்ளே இறங்கிவிடும். பின்னர் மீண்டும் பாம்பை பானைக்குள் அனுப்பிவிடுவோம்"

"அடுத்த தலைமுறையினர் எல்லாம் என்ன பண்றாங்க?" என வரதனிடம் கேட்டோம்

"பசங்கள்ல பலருக்கும் பாம்பு பிடிக்க ஆர்வம் இருக்கு. அவங்களுக்கு மட்டும் லீவ் நாள்கள்ல பாம்பு பிடிக்கிறது எப்படி, பாதுகாப்பு முறை எல்லாம் சொல்லிக்கொடுப்போம். ஆனால், யாரையும் நாங்களா கட்டாயப்படுத்துறதில்ல. பலரும் வேற வேற வேலைக்குப் போறாங்க. இப்போ சங்கத்துல 372 பேர் இருக்கோம். இதுதவிர மற்ற ஊர்கள்ல இருக்குற இருளர்களையும் சங்கத்துல இணைக்க முயற்சி செஞ்சுட்டு இருக்கோம். அவங்க வந்தா, அவர்களுக்கும் வருமானம் கிடைக்கும்ல."

"இந்தப் பணியில் இருக்கும் சவால் என்ன?"

"இங்கே சுற்றிப்பார்க்க வரும் மக்கள்தான் முதல் சவால். சிலர் பாம்புகள் பற்றி ஆர்வமுடன் கேட்பார்கள். அவர்களுக்கு விளக்கிக்கூறுவோம். இன்னும் சிலர் அவர்கள் அறிந்து வைத்திருக்கும் மூடநம்பிக்கைகள் குறித்து எல்லாம் நமக்கு விளக்கத்தொடங்குவார்கள். அவை தவறு என்றால் கூட நம்ப மாட்டார்கள். மூடநம்பிக்கையும், வதந்தியும் படுத்தும் பாடு கொஞ்ச நஞ்சமல்ல.

கட்டு விரியன், கண்ணாடி விரியன் என சீரியஸாக விளக்கிக்கொண்டிருப்போம். திடீரென ஒருவர் 'மண்ணுளிப் பாம்பு என்ன விலைக்கு சார் போகுது?' ன்னு கேட்பார். மொத்த பாம்புகளிலேயே எதற்கும் உதவாத பாம்பு அது. ஆனால் 'ஒரு மண்ணுளி பாம்பு இருக்கு. 50,000 ரூபாய்க்கு வாங்கிக்கிறயா?' என எங்களிடமே கேட்பாங்க. அதையெல்லாம் கேட்டால் சிரிப்புதான் வரும். இன்னும் சிலர் 'பாம்பிலிருந்து நாகமணி வருமாமே?' ன்னு கேட்பாங்க. அப்படியெல்லாம் இருந்தா, நாங்க ஏன் இங்க இருக்கப்போறோம் சொல்லுங்க. இப்படி பாம்புகளை வெச்சு நிறைய பொய் சொல்வாங்க.

எங்களைப் பொறுத்தவரைக்கும் பாம்புன்றது தெய்வம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நாகக்கன்னிகள் முன்னாடி, பாம்பை வெச்சு ஆசீர்வாதம் வாங்கிடுவோம். ஏன்னா அதுதானே எங்களுக்குச் சோறு போடுது?

சென்னைல வெள்ளம் வந்தப்ப, கோவளம்ல ஒரு முதலை தப்பிச்சு போய்டுச்சுன்னு யாரோ புரளிய கிளப்பிவிட்டாங்க. பக்கத்துலதான் கோவளம் முதலைப்பண்ணை. உடனே அதிகாரிங்க எல்லாரும் இங்க வந்துட்டாங்க. நாங்களும் இரவு முழுக்க இங்கயேதான் கிடந்தோம். ஆனா பாருங்க, முதலைப்பண்ணைல இருந்த எந்த முதலைக்கும் அப்போ எதுவும் ஆகல. எல்லாம் பொய். போன வருஷம் புயல் வந்தப்பவும் நாங்க யாருமே வீட்டுக்குப்போகல. பாம்புகளுக்கு ஏதோ ஆயிடுமோன்னு இரவெல்லாம் இங்கயேதான் இருந்தோம். இப்படி நிறைய கஷ்டநஷ்டங்கள் எல்லாம் கடந்துதான் இந்த சொசைட்டிய நடத்திட்டிருக்கோம்.

2008-09 கள்ல ஆர்டர் எல்லாம் குறைஞ்சு சங்கத்துக்கு வருமானமே இல்ல. அப்ப கூட, இந்த சங்கத்துக்கு ஏதாச்சும் ஆச்சுன்னா எங்கள் சமூகத்துக்கு பாதிப்பு ஏற்படுமேன்னு சிரமப்பட்டு நடத்தினோம். நாங்க விஷம் எடுக்குறத நிறுத்திட்டா, அப்புறம் இந்தியால பாம்புக்கடிக்கு மருந்தே தயாரிக்க முடியாமப் போயிடும். இந்த வேலைய நாங்க விட்டுட்டா யாருமே செய்யமுடியாது. அதனால், பல உயிர்களைக் காப்பாத்துற இடத்துல இருக்கோம்னு புரிஞ்சுதான் வேலை பாக்குறோம்.

பாம்பு கடிக்கு ஒரு டாக்டர் மருத்துவம் பார்க்கலாம். ஆனால் மருந்து நாங்கதானங்க தரணும்?"

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment:

  1. சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் மற்றும் பண்ணை சார்ந்த தொழில்கள் செய்ய விருப்பமுள்ளவர்கள் விரும்பும் முதலீட்டில் கொட்டகை அமைத்து அனைத்து பயிற்சியும் உதவிகளும் சிறந்த முறையில் ஏற்பாடு செய்துதரப்படும் தொடர்புக்கு ☎9944209238

    ReplyDelete