Monday 24 December 2018

மறைந்து வரும் பாரம்பரியம் :


நான் முதன்முதலாக அகமதாபாத் போனபோது, விமான நிலையத்திலிருந்து ஊருக்குள் போகும் வழியில், சாலையோரம் கம்பீரமாக நின்றுகொண்டிருந்த மாடுகள் என் கவனத்தை ஈர்த்தன. என்னை அழைத்துப்போக வந்தவரிடம் இவை என்ன இன மாடுகள் என்று கேட்டபோது ‘காங்க்ரேஜ்’ மாடுகள் என்றார்.

அவர் கொஞ்சம் விஷயம் தெரிந்த ஆசாமி. இதுதான் மொஹஞ்சதாரோ சித்திரமுத்திரையில் காட்டப்பட்டிருக்கும் இனம் என்று வல்லுநர்கள் கூறுகிறார்கள் என்றார். குஜாரத்தில் பணி செய்யும்போது இந்தப் புள்ளியிலிருந்துதான் எனக்கு இந்திய இன கால்நடைகள் மீது ஆர்வம் ஏற்பட்டது.

இந்தியாவில் உள்ளது போன்ற இத்தனை வகை கால்நடைகள், உலகில் வேறெங்கும் இல்லை என்கிறார்கள் உயிரியலாளர்கள். பரந்த புல்வெளிகள், பழமையான இடையர் பாரம்பரியம் இவற்றால் இங்கு பல மாட்டினங்கள் உருவாகின. பிரிட்டீஷ் காலத்தில் நம் நாட்டில் தனித்துவம் கொண்ட 26 மாட்டினங்கள் பதிவு செய்யப்பட்டன.

இமயத்தில் குஜ்ஜர்கள், குஜாரத்தில் ராபாரிகள் போன்ற மாட்டிடையர்கள் தங்களது மந்தைகளை ஓட்டிக்கொண்டு நெடுந்தூரம் பயணித்திருக்கின்றனர். தமிழ்நாட்டிலும் ஆடுகளை வெவ்வேறு இடங்களுக்கு மேய்ச்சலுக்கு ஓட்டிச்செல்லும் இடையர் மக்கள் உள்ளனர். இவ்ர்களைப் பற்றி தமிழில் ‘ஆடோடிகள்’ எனும் ஒரு முக்கியமான ஆவணப்படத்தை செந்தமிழன் தயாரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்லடம், காங்கேயம் பகுதிகள், குஜராத்தில் சவுராஷ்டிரா பகுதி போன்று விவசாயத்துக்கு உட்படாத, மேய்ச்சலுக்கான நிலம் பரந்திருக்கும் பகுதிகளில் சீரிய மாட்டினங்களைக் காணலாம். தாராபுரம், பல்லடம் போன்ற பகுதிகளில் நம்பீசன் வெண்ணை வருவது போல காரணத்தோடுதான் அகமதாபாத்தில் அமுல் உற்பத்தி செய்யப்படுகிறது.

இதில் ஒரு முரண் என்னவென்றால், இந்த மேய்ச்சல் நிலம், பாசன வசதி படைத்து வேளாண்மைக்கு வரும்போது, இந்த மாட்டினங்களின் நிலைமை மோசமடைகிறது. ஆகவே அவற்றைப் பாதுகாக்கப் புதிய முயற்சிகள் எடுக்க வேண்டியிருக்கிறது. கால்நடை பல்லுயிரியமும் ஒரு நாட்டின் வளத்துக்குக் குறியீடு.

மாட்டைக் காக்கும் ‘தர்பார்’ :

குஜராத்தின் பெயர்போன மாட்டினம் ‘கிர்’ மாடுகள்தாம். உருவில் பெரியவை மட்டுமல்ல. பார்ப்பதற்கும் எழிலார்ந்தவை. இந்த இனத்தைக் காப்பாற்ற ஒரு முன்னாள் குறுநில மன்னர் முயற்சிகள் எடுத்துக் கொண்டிருக்கிறார் என்று கேள்விப்பட்டு அவரைத் தொடர்புகொண்டேன். இங்கு பல சமஸ்தானங்கள் இருந்தன.

பிரிட்டீஷார் காலத்தில் குஜராத்தில் பயணிக்கும்போது அஜாக்கிரதையாய் இருந்தால் ஒரு சமஸ்தானம் உங்கள் காலில் ஒட்டிக்கொள்ளலாம் என்று எங்கள் கல்லூரி வரலாற்றுப் பேராசிரியர் கூறியது நினைவுக்கு வருகிறது. 256 என்று ஒரு கணக்கு சொல்கிறது. அதில் ஒன்றுதான் ஜஸ்தான் சமஸ்தானம்.

அதன் இளவரசர், மக்களால் ‘தர்பார்’ என்றழைக்கப்படும் சத்யஜித் குமார் கச்சார், பறவைகளில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்ததால் அவர் என்னை அன்புடன் வரவேற்றார். அவரது தந்தை கட்ச் பகுதியின் வடபுறத்தில், லட்சக்கணக்கான பூநாரைகள் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்யும் இடத்தைக் கண்டறிந்தது மட்டுமல்லாமல், சலிம் அலியையும் அங்கு கூட்டிச் சென்றார். ‘ஃபிளமிங்கோ சிட்டி’ (Flamingo city) என்றறியப்படும் இந்த உறைவிடத்திலிருந்து பூநாரைகள் தமிழகத்தின் கோடியக்கரைக்கும் கூந்தங்குளத்துக்கும் வலசை வருகின்றன.

கிர் இன மாடுகளைப் பாதுகாக்க சத்யஜித் கச்சார் பல முயற்சிகளை எடுத்து வருகிறார். அதில் ஒன்று இந்தக் காளையின் விந்தை எடுத்து, உறையவைத்து, மற்ற நாடுகளுக்கும் ஊர்களுக்கும் அனுப்புவது. பிரேசில், மெக்சிகோ, அமெரிக்கா, பொலிவியா ஆகிய நாடுகளில் இந்த இனம் பரவி பிரபலமாயிருக்கிறது. இவர் வளர்க்கும் ஒரு பெரிய காளையைப் படமெடுக்க வேண்டி நான் அவரது பண்ணைக்குச் சென்றபோதுதான் அங்கு வேலை செய்யும் வாசாவைச் சந்தித்தேன்.

அஞ்சல் தலையான ‘கிர்’ :

வாசாவுக்கு அப்போது 72 வயது. ஒரு குட்டி யானையைப் போன்ற அந்த கிர் பொலி காளையைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பு அவருடையது. நாள் முழுவதும் வேலை செய்துகொண்டிருந்த அவரது உடல் உறுதியைக் கண்டு நான் வியப்படைந்தேன். பாரம்பரிய சவுராஷ்டிர விவசாயியின் உடையில் தலைப்பாய், முறுக்கு மீசையுடன், அவரே ஒரு ராஜா மாதிரி நடமாடினார். ஒரு நாயும் அவருடன் கூடவே சுற்றிக் கொண்டிருந்தது. அது லாஹோரி என்ற இனம் என்றார் (இது லாகூர் அருகே காணப்படும் மிக அரிதான இனம் என்று பின்னர் அறிந்துகொண்டேன்).

இரவில் பண்ணை ஓரத்தில் ஓநாய்கள் நடமாட்டம் உண்டு என்று அவர் சொன்னதும் அன்றிரவு பண்ணையிலேயே தங்க முடிவு செய்து, நட்சத்திரங்களுக்குக் கீழே ஒரு கயிற்றுக்கட்டிலில் தூங்கினேன். ஆனால் ஓநாய்கள் ஏமாற்றிவிட்டன. வாசாவின் கிர் காளையைப் படமெடுத்தேன். சில ஆண்டுகள் கழித்து அந்தப் படம் ஒரு அஞ்சல் தலையாக வெளிவந்தது.

தமிழ்நாட்டிலும், பிரசித்தி பெற்ற காங்கேயம் காளை உட்பட, பல இனங்கள் உண்டு. உம்பலாச்சேரி, புலிகுளம், பருகூர், ஆலம்பாரி, தேனிமலை மாடு என மறைந்து கொண்டிருக்கும் மாட்டினங்கள் பல. கோவை அருகே உள்ள குட்டப்பாளையத்தில் கார்த்திக் சேனாதிபதி நிர்வகிக்கும் காங்கேயம் காளை ஆய்வு மையம், அகவிட பாதுகாப்பு (in situ conservation) முறையில் இந்த இனத்தைக் காப்பாற்ற பாடுபட்டு வருகிறது.

இது ‘கொங்குநாடு’ என்றறிப்படுகிறது. மழை குறைவான வறண்ட பகுதியில், வேளாண்மை அதிகமில்லாமல், கொரங்காடு மேய்ச்சல் நிலம் பரந்திருந்தது. வேல மரங்கள் நிறைந்த இந்நிலப் பரப்பை மேய்ச்சலுக்கான முல்லை நிலம் என்று வர்ணிக்கலாம்.

வாசாவின் நினைவாக மீசை :

கடந்த நூற்றாண்டில் புதிய அணைக்கட்டுகளால் விவசாய நிலம் பெருகியதாலும், வீடுகள், தொழிற்சாலைகள் கட்ட இடம் வாங்கப்பட்டதாலும், விவசாய வேலைகளுக்கு எந்திரங்கள் வந்துவிட்டதாலும் இந்த மாட்டினங்கள் மேல் கவனம் குறைந்து அவை மறைய ஆரம்பித்துவிட்டன.

இந்திய மாட்டினங்கள் வலுவானவை. நோய் நொடி எளிதில் அண்டாது. மருத்துவச் செலவு மிகக்குறைவு. கடுமையான காலநிலையைத் தாங்கி, எளிமையான இரையை உண்டு, உடல் நலத்துடன் வாழும் சக்தி உடையவை. ஆனால் நம் நாட்டில் எடுக்கப்பட்ட வெண்புரட்சி (White Revolution) என்ற முயற்சியில் பல வெளிநாட்டு மாட்டினங்களை வாங்கி உள்ளூர் மாடுகளோடு கலந்து ஒரு கலப்பினத்தை உருவாக்கினார்கள். பல மாட்டினங்கள் நலிய ஆரம்பித்தன. எல்லாவற்றிற்கும் ஒரு விலை உண்டே..!

ஊருக்குத் திரும்பி சில நாட்களுக்கு எனது நினைவில் வாசா இருந்தார். இந்த மகத்தான மனிதருக்கு என் மரியாதையைச் செலுத்த வேண்டும் என்று அவர் போலவே மீசை வளர்க்க ஆரம்பித்தேன், அந்தச் செழுமை வரவில்லை என்றாலும்..!

நன்றி : ரோஜா முத்தையா ஆய்வு நூலகம்

கட்டுரையாளர், சூழலியல் எழுத்தாளர்
தொடர்புக்கு: theodorebaskaran@gmail.com

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment