Sunday 12 March 2017

கொம்பை, சிப்பிப்பாறை, ராஜபாளையம்… வியக்கவைக்கும் நாட்டு நாய்கள் :



உலகிலேயே மனிதனுக்கு நன்றியுள்ள பிராணியாக இருப்பது நாய். நாய்க்கு இருக்கும் நன்றி கூட மனிதனுக்கு இல்லை என்பார்கள். செல்லப் பிராணிகள், காவல் நாய்கள், துப்பறியும் நாய்களை தாண்டி, குழந்தைகளை வளர்க்கும் நாய்கள், பொழுதுபோக்கு நாய்கள், மீட்புப்படை நாய்கள் என நாய்களை பழக்கப்படுத்தும் அல்லது பயிற்றுவிக்கும் முறைகள் பலப்பல உள்ளது. இதில் நம்முடைய தேவை எது என்பதற்கு ஏற்ப, அவர்களை பழக்கப்படுத்த முடியும். நாய்களுடன் பேச வேண்டும், கத்த வேண்டும், அழுது நடிக்க வேண்டும். இப்படியான ஒரு உணர்வுப்போர்வ பந்தம் உருவான பிறகுதான், நாய்களின் இயக்கம் நம்முடைய செய்கைகளுக்கும், கண்ணசைவுகளுக்கு, விரல் அசைவுகளுக்கு கட்டுப்படுகின்றது. நாய்களுக்கு இயற்கையிலேயே மனிதர்களுடனான நட்புணர்வும் பாசமும் அதிகம். அதிலும் குழந்தைகள் என்றால் அவைகளுக்கு கொல்லைப் பிரியம். செல்லப்பிராணியாக வளர்க்க வெளிநாட்டு நாய்கள் உகந்தவை. அவை பெரும்பாலும் குழந்தைகள் வளர்ப்புக்காக வாங்கப்படுகின்றன. ஆட்டிசம் பாதித்த குழந்தைகளுடன் இப்படியான புஸு புஸு நாய்களை விளையாட வைத்தால் அக்குழந்தைகளின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும் என்கிறது ஒரு ஆய்வு. குறிப்பாக கோல்டன் ரிட்ரைவர் நாய்கள் மனிதர்களின் மன அழுத்தத்தை குறைக்கின்றன என்பதாகவும் கூறுகின்றனர்.

செல்லப் பிராணிகளாக வளர்க்க வெளிநாட்டு நாய்கள் உகந்தவை என்றால், காவல் மற்றும் துப்பறியும் பணிகளுக்கு நமது நாட்டு நாய்கள் உகந்தவை. ஏனெனில் நாட்டு நாய்கள் எந்த நிலையிலும் தனது எஜமானை விட்டுக்கொடுப்பதில்லை. உள்ளூர் வகை நாய்களிலும் பல வகை உண்டு. ராஜபாளையம், சிப்பிப்பாறை, அலங்கை, கன்னி, கொம்பை, மலையேறி போன்ற இனங்கள் மிகவும் பிரபலமானவை. அவற்றின் குணங்கள், சிறப்பம்சங்கள் பற்றிதான் இக்கட்டுரையில் நாம் காண இருக்கிறோம்.

ராஜபாளையம் நாய் :

பேருக்கு ஏற்றார்போல கம்பீரமாக காட்சியளிக்கும் ராஜபாளையம் நாய். இவ்வகை நாய்கள் ஒரு போர் வீரனுக்கு இணையான வலிமை கொண்டவை. தன்னுடைய எஜமானை காப்பாற்ற இந்த நாய் எதையும் செய்யும். இப்போது இந்திய ராணுவம், காஷ்மீர் எல்லைகளில் காவல் புரிய இந்த நாய்களைத்தான் பயன்படுத்துகிறது.

சிப்பிப்பாறை :

இவ்வகை நாய்கள் அதி புத்திசாலிகள். இதன் வேகத்துக்கு இணையான நாய் இந்த உலகத்திலேயே வேறு எந்த நாயும் ஈடுகொடுக்க முடியாது. காற்றில் பறப்பது போல அழகாக ஓடி வரும். சிப்பிப்பாறை நாய் தன்னுடைய எஜமானை மட்டுமில்லாது, எதிரிகளையும் ஞாபகத்தில் வைத்திருக்கும். இவ்வகை நாய்களை கடலோர காவல் படையினர் வைத்திருக்கின்றனர்.

கொம்பை :

உடல் வலிமை வாய்ந்த கொம்பை நாய்களை கி.மு. 9ம் நூற்றாண்டுகளில் மன்னர்கள் பயன்படுத்தியுள்ளனர். இவ்வகை நாய்கள் காடுகளில் மான் வேட்டைக்கும் பயன்படுத்தப்பட்டன. ஒரு காலத்தில் தமிழகத்தில் அதிகம் வளர்க்கப்பட்ட நாய் இனம் கொம்பை ஆகும். இப்போது அரசு பங்களாக்களை கொம்பை நாய்கள் காவல் புரிகின்றன.

கன்னி :

இது உக்கிரமான வேட்டை நாய் வகையைச் சேர்ந்தது. தமிழகத்தில் மட்டும் காணப்பட்ட கன்னி நாய்களை வெளிநாட்டினர் அதிக விலைக்கு வாங்கிச் செல்வர். திருநெல்வேலி, பொள்ளாச்சி, மதுரை, சிவகாசி, கழுகுமலை, கோவில்பட்டி பகுதிகளில் கண்ணி நாய்கள் அதிகம் வளர்க்கப்பட்டன. இந்த நாய் தன்னுடைய உடல்நலம் மீது மிகுந்த அக்கரை கொண்டது. ராகி பயிரை தின்று உடலை வாகுவாக வைத்திருக்கும். மாதத்திற்கு அல்லது வாரத்திற்கு ஒரு முறை மட்டுமே இறைச்சியை உண்ணும். இப்போது இந்த இன நாய்கள் மிக மிக குறைவாகவே இருக்கின்றன.

இவ்வளவு மகத்துவம் வாய்ந்த நமது நாட்டு நாய்கள் இன்று அளிக்கப்பட்டுள்ளன. இதன் அழிவிற்கு கலப்பு இனப்பெருக்கமும் ஒரு காரணம். இங்குள்ள ராஜபாளையம் நாய்களை வெளிநாட்டிற்கு கொண்டு சென்று, அங்கிருக்கும் நாய்களுடன் இனப்பெருக்க செய்ய விட்டுவிடுகிறார்கள். இதனால் உள்ளூர் நாய்கள், புதிய வெளிநாட்டு நாய்களாக இங்கு இறக்குமதி ஆகிறது. அதையும் நாம் அதிக விலை கொடுத்து வாங்கி வளர்த்துக்கொண்டிருக்கிறோம். அதற்கென ப்ரித்யேகமாக தீனியையும் பாக்கெட்டுகளில் அடைத்து விற்று கோடி கோடியாக காசு பார்க்கிறார்கள். உண்மையில் நாட்டு நாய்களே உடல் வலிமையிலும், ஆக்ரோஷத்திலும் சிறந்தவை. உள்ளூர் தட்பவெப்ப நிலைகளுக்கு ஏற்ப உடலமைப்பை மாற்றிக்கொண்டு நம்முடன் வாழக்கூடியவை. அவைகள் நம்முடைய நாய்கள். அவைகளின் இனத்தை காப்போம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment