Monday 27 March 2017


கோடை உழவு..!


பொதுவாக சிறுதானியங்களுக்கு ஆடிப்பட்டம் ஏற்றது. நிலத்தை சித்திரை மாதத்தில் கோடை உழவு செய்து, காய விட வேண்டும். இதனால் மண்ணின் இறுக்கம் குறைந்து பொலபொலப்பாகும். அதோடு, மண்ணில் இருக்கும் பூச்சிகள், முட்டைகள், களைகள் ஆகியவையும் அழிந்துவிடும். ஆனி மாதம் ஒரு ஏக்கர் நிலத்துக்கு ஐந்து நாட்கள் வீதம் செம்மறியாடுகளைக் கிடை அடைக்க வேண்டும். பிறகு, ஒருமுறை உழுது வைக்க வேண்டும். ஆடி மாதம் மழை கிடைத்தவுடன், உடனடியாக ஓர் உழவு ஓட்டி விதைக்க வேண்டும்.

ஒரு ஏக்கர் நிலத்தில் விதைக்க மூன்று கிலோ சிறுதானிய விதை (தினை, குதிரைவாலி, வரகு போன்றவற்றில்) தேவைப்படும். ஊடுபயிராக விருப்பப்பட்ட பயிர்களை விதைக்கலாம். சிறுதானிய விதைகளைச் சம அளவு எடையுள்ள மணலுடன் கலந்து தூவ வேண்டும். இதனால், விதைகள் ஒரே இடத்தில் விழாமல் பரவலாக விதைக்கப்படும். விதைத்த பிறகு, மழை பெய்தால் பத்து நாட்களுக்குள் விதைகள் முளைத்து வரும்.

விதைத்த 20-ம் நாளில், 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் அமுதக்கரைசல் என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். 35-ம் நாள் களைகளை அகற்ற வேண்டும். 40 மற்றும் 50-ம் நாள்களில் 10 லிட்டர் தண்ணீருக்கு 300 மில்லி அளவு பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து கைத்தெளிப்பானால் தெளிக்க வேண்டும். வேறு பராமரிப்புகள் எதுவும் தேவையில்லை. கிடைக்கும் மழையின் அளவைப் பொறுத்து மகசூல் இருக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment