Saturday 4 March 2017


விவசாயிகள் எளிய முறையில் பஞ்சகவ்யம் தயாரித்தல் :


இயற்கை முறையில் பஞ்சகவ்யம், கிராமத்தில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, நாமே தயார் செய்துகொள்ளக்கூடிய ஒரு அடர் கலவை ஆகும். இதை பயன்படுத்தி குறைந்த செலவில் பயிர்களை ஊக்குவித்து, ரசாயன உரங்களை, பூச்சிக் கொல்லிகளை பயன்படுத்தாமல் அதிகப்படியான மகசூலைப் பெறலாம். நிலம் செழிப்படையும். விளைச்சல் பெருகும். செலவு குறைக்கப்படும்.

பஞ்சகவ்யம் - நன்மைகள்:

1. ரசாயன உரங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்துவது முழுமையாக தவிர்க்கப்படுகிறது.

2. செடியின் வளர்ச்சியை தூண்டி நல்ல வளர்ச்சி அடையச் செய்கிறது.

3. நுண்ணூட்டக் குறைபாட்டை நீக்குகிறது.

4. பூச்சிகளை விரட்டியடிக்கிறது.

5. பயிரின் நோய் எதிர்ப்பு ஆற்றலை வளர்க்கிறது.

பஞ்சகவ்யம் தயாரித்தல்

தேவைப்படும் பொருட்கள்:

1. பசு சாணம் - 5 கிலோ,
2. நெய் - அரை லிட்டர்,
3. 5 நாள் புளித்த தயிர் - 2 லிட்டர்,
4. பால் - 2 லிட்டர்,
5. மாட்டு மூத்திரம் - 3 லிட்டர்,
6. கரும்பு வெல்லம் - கால் லிட்டர்,
7. இளநீர் - 2,
8. தண்ணீர் - 3 லிட்டர்,
9. ஒரு கை அளவு பயிர் செய்யும் நிலத்தின் மண்,
10. ஒரு கை அளவு சுண்ணாம்பு

குறிப்பு:

தயாரிக்கும் கலனை / பிளாஸ்டிக் பாத்திரத்தை நன்கு கழுவ வேண்டும்.

தயாரிக்கும் முறை:

1). முதல் நாள் - சாணம் 5 கிலோ, நெய் அரை லிட்டர், ஒரு கையளவு பயிர் செய்யும் நிலத்தின் மண், ஒரு கையளவு சுண்ணாம்பு இந்த மூன்றையும் நன்கு பிசைந்து 5 நாள், கலன் / பிளாஸ்டிக் பாத்திரத்தின் வாயை ஈரத்துணியால் மூடவேண்டும்.

2). 6ம் நாள் - 2 லிட்டர் பாலில் மோர் கலந்து 2 லிட்டர் தயிராக புளிக்க வைக்க வேண்டும்.

3). 10ம் நாள் தனியாக வேறொரு வாளியில், கீழ்கண்டவைகளை ஊறவைக்க வேண்டும்.2ல் உள்ள புளித்த தயிர்-2 லிட்டர், பால் -2 லிட்டர், மாட்டு மூத்திரம்-3 லிட்டர், கரும்புவெல்லம்-கால் லிட்டர், இளநீர்-2, தண்ணீர்-3 லிட்டர். இவற்றையெல்லாம் வேப்பம் குச்சியைக் கொண்டு தினமும் காலை, மாலை இரண்டுதரம் 3 நிமிடங்கள் வரை (6 நாட்கள்) கலக்கிவிட வேண்டும்.

4). 10ம் நாளில் இந்த கலவையுடன் வாழைப்பழங்கள் (சுமார் 5 எண்ணிக்கை அழுகிய பழங்கள்) இதனுடன் கிடைத்தால் வேப்பம்பழங்கள், பலாப்பழம் ஆகியவற்றை சேர்த்து ஒரு துணியில் கட்டி இந்த கலவையினுள் தொங்கவிட வேண்டும். வேப்பம்பழம் கிடைக்கவில்லையென்றால் வேப்பங்கொட்டயை இடித்து சேர்த்துக்கொள்ளலாம்.
ஆ) தொங்கவிட்டிருந்த பழங்கள் கொண்ட துணியை திறந்து பழங்களை கலவையில் நன்கு கலந்திட வேண்டும்.

21ம் நாள் முடிவில் கிடைப்பது பஞ்சகவ்ய கரைசல் ஆகும். பயன்படுத்தும் அளவு - ஒரு லிட்டர் பஞ்சகவ்ய கரைசலை 30 முதல் 50 லிட்டர் நீரில் கலந்து பஞ்சகவ்யமாக பயன்படுத்தலாம்.

பஞ்சகவ்யம் தயாரிக்கும்போது கவனிக்க வேண்டியவை:

1. தயாரிக்கும்போது பயன்படுத்தப்படும் கலன்கள், பாத்திரங்கள் கண்டிப்பாக மண்/பிளாஸ்டிக் பாத்திரங்களாகவோ அல்லது சிமென்ட் தொட்டியாகவோதான் இருக்க வேண்டும். முக்கிய குறிப்பு: பாத்திரங்களை நன்கு கழவி பயன்படுத்த வேண்டும்.

2. பாத்திரங்களின் வாய்பகுதி எப்பொழுதும் திறந்து துணியால் மூடியதாக இருக்க வேண்டும். தயாரிக்கும் வேளையில், காற்றிலுள்ள பிராணவாயு தேவைப்படுகிறது. கரைசலில் இருந்து மீத்தேன் போன்ற நச்சு வாயுக்கள் வெளியேறுகிறது. இவை நுண்ணுயிர் வளர்ச்சிக்கு உகந்தவையல்ல. எனவே இவைகள் வெளியேற தடைகள் ஏதும் இருக்கக்கூடாது.

3. மூலப்பொருட்கள் நன்கு கலக்கப்பட வேண்டும். தினம் காலை, மாலை 2 வேளை3 நிமிடங்கள் வேப்பம் குச்சியைக் கொண்டு கலக்க வேண்டும். இதன்மூலம் நுண்ணுயிர்கள் அதிகரிக்கின்றன.

4. மூலப்பொருட்கள் கலந்த பாத்திரத்தை நிழலில் வைக்க வேண்டும். இது மிக முக்கியமானது.

5. சாணம் பயன்படுத்துவதால் தெளிப்பானில் அடைப்பு ஏற்பட வாய்ப்புண்டு.ஆகையால் வடிகட்டி பயன்படுத்த வேண்டும். மற்றும் விசைத்தெளிப்பான் பயன்படுத்தும்போது வால்வின் துளையினை பெரிதாக மாற்றி அமைக்க வேண்டும.

6. பயன்படுத்துவதற்கு முன் தெளிப்பானை நன்கு சுத்தம் செய்ய வேண்டும்.

7. பஞ்சகவ்யத்தினை காலை அல்லது மாலை நேரங்களில் பயிருக்கு தெளிப்பது சிறந்தது.

பஞ்சகவ்யம் தயாரிக்கும் முறை பற்றிய விளக்கம் தரும் நம்மாழ்வார் அய்யாவின் காணொலி இணைத்துள்ளேன் பார்த்தபின் பகிரவும்.... நன்றி!!!

faizalpetsfarm.blogspot.com

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm⁠⁠⁠⁠

No comments:

Post a Comment