Thursday 23 March 2017

தேங்காய்ப் பிண்ணாக்கு... மாடுகளுக்குக் கொடுக்கலாமா?


மரச்செக்கு உரிமையாளர் பழனிராஜன்,“தேங்காய்ப் புண்ணாக்கை மாடுகள் சாப்பிடாது. மீன்கள் இதை விரும்பி சாப்பிடுறதால, மீன் பண்ணைகள்ல இதை வாங்கிக்கிட்டு போறாங்க” எனத் தெரிவித்திருந்தார். அதை மாடுகளுக்குக் கொடுக்கலாமா, கொடுக்கக்கூடாதா?’ எனக் கேள்வி எழுப்பினர்.

இது குறித்து தஞ்சாவூரில் உள்ள மரபுசார் மூலிகை மருத்துவ மையம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் தலைவர் மற்றும் பேராசிரியர் ந. புண்ணியமூர்த்தியிடம் பேசினோம்.

“அந்த நாட்களிலெல்லாம் தமிழ்நாட்டில் எள், கடலை ஆகியவற்றில் இருந்து மட்டுமே மரச்செக்குகளில் எண்ணெய் எடுக்கப்பட்டு வந்தது. தேங்காய்ப் பிண்ணாக்கு அவ்வளவாக கிடைக்காத காரணத்தினால் மாடுகளுக்கு கொடுக்கப்படாமல் இருந்தது. தற்போது தேங்காய்ப் பிண்ணாக்கும் அதிகளவில் கிடைப்பதால், அதை மாடுகளுக்குத் தீவனமாகக் கொடுக்கிறார்கள். மாடுகள் சாப்பிடாது என்பது தவறு.

தஞ்சாவூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் தேங்காய்ப் பிண்ணாக்கை மீன்களுக்கு மட்டுமே தீவனமாகக் கொடுத்து வருகிறார்கள். மாடுகளுக்கு கொடுக்கும் வழக்கமில்லை. மற்ற பிண்ணாக்குகள் போலவே தேங்காய்ப் பிண்ணாக்கும் சத்துக்கள் நிறைந்த தீவனம்தான். கேரளாவில் மாடுகளுக்கு அதிகளவில் தேங்காய்ப் பிண்ணாக்குதான் கொடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில் விற்கப்படும் அடர்தீவனங்களிலும் தேங்காய்ப் பிண்ணாக்கு பயன்படுத்தப்படுகிறது. அதனால், மாடுகளுக்கு தாராளமாக தேங்காய்ப் பிண்ணாக்கைக் கொடுக்கலாம்.

புதிதாக மாடுகளுக்குக் கொடுக்க ஆரம்பிக்கும்போது மற்ற பிண்ணாக்குடன் கொஞ்சமாகக் கலந்து கொடுக்க வேண்டும். சாப்பிடுவதைப் பொறுத்து அளவைக் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரிக்கலாம். எந்த ஒரு புதிய உணவையுமே இப்படித்தான் கொடுத்து உண்ணப் பழக்க வேண்டும்” என்றார், புண்ணியமூர்த்தி.

தொடர்புக்கு :
முனைவர். புண்ணியமூர்த்தி,
செல்போன்: 98424-55833.

அம்மன் கூழ் மாடுகளுக்கு இல்லை... மனிதர்களுக்குத்தான்!

ஆடி மாதத்தில் அம்மன் கோயில்களில் தயாரிக்கப்படும் கூழ் மீதமானால், அதை மாடுகளுக்குக் கொடுக்கும் வழக்கம் உண்டு. இதுகுறித்துப் பேசிய புண்ணியமூர்த்தி, “பொதுவாக ஆடு, மாடுகளுக்கு எளிதில் செரிக்கக்கூடிய அரிசிச் சோறு, பாயசம், கூழ் போன்றவற்றைக் கொடுக்கவே கூடாது. இவை ஆடு, மாடுகளின் வயிற்றில் எளிதில் செரிமானமாகி விடுவதால், அமிலத்தன்மை மிகுந்து உயிருக்கு ஆபத்து நேரிடும். அதேபோல எண்ணெய் வகைகளும் ஆடு, மாடுகளுக்கு ஆபத்தானவை. ஆடி மாதத்தில் கோயில்களில் மிஞ்சும் கூழை ஆடு, மாடுகளுக்குக் கொடுப்பதால் ‘ஃபுட் பாய்சன்’ ஆகி உயிரிழப்பு ஏற்படவும் வாய்ப்புகள் உண்டு.

கூழ் குடித்து மாடுகளுக்கு ஏதேனும் பாதிப்புகள் ஏற்பட்டால்... 5 வெற்றிலை, 100 கிராம் இஞ்சி, 10 கிராம் பெருங்காயம், 10 கிராம் மஞ்சள் தூள், 2 மிளகாய் வற்றல், ஒரு கைப்பிடி பிரண்டை ஆகியவற்றை எடுத்து நன்கு அரைத்து... 100 கிராம் நாட்டுச் சர்க்கரை அல்லது பனங்கருப்பட்டி, சிறிது கல் உப்பு கலந்து கொஞ்சம் கொஞ்சமாக ஊட்டி விட வேண்டும். ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை இதேபோல் 4, 5 முறை கொடுத்தால் சரியாகி விடும். இது ஒரு மாட்டுக்கான அளவு. ஆட்டுக்கு இதில் பாதி அளவு போதுமானது என்றார்.

மாடுகளுக்கான சமவிகித உணவு!

“ஒரு மாட்டுக்கு தினமும் 20 கிலோ பசுந்தீவனம், 15 கிலோ உலர்தீவனம், ஒரு கிலோ அடர்தீவனம் கொடுக்க வேண்டும். கறவை மாடாக இருந்தால், அது கொடுக்கும் ஒவ்வொரு லிட்டர் பாலுக்கும் அரை கிலோ வீதம் கூடுதலாக அடர்தீவனம் கொடுக்கவேண்டும். அடர்தீவனத்தில் நார்ச்சத்து உடைய தவிடு, உளுந்துப் பொட்டு, துவரைப் பொட்டு வகைகள் 45-50 சதவிகிதமும், மாவுச்சத்து உடைய அரிசி, கம்பு, சோளம் ஆகியவற்றின் மாவு 25-30 சதவிகிதமும், புரதச்சத்து உடைய பிண்ணாக்கு வகைகள் 15-20 சதவிகிதமும் இருக்கவேண்டும். அவற்றோடு தலா ஒரு சதவிகிதம் கல் உப்பு, தாது உப்புக்கலவை ஆகியவையும் இடம்பெற வேண்டும்” என்கிறார் புண்ணியமூர்த்தி.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment