Wednesday 11 April 2018

கன்று பராமரிப்பு :

1. பிறந்தவுடன் கன்று பராமரிப்பு
2. கன்றுகளுக்கு தீவனமளித்தல்
3. நீர் அவசியம்
4. கன்றுகளுக்கு தீவனமளிக்கும் முறைகள்
5. கன்றுகளுக்கான அடர்தீவனக்கலவை
6. கன்றுக்கான உலர்தீவனம்
7. செவிலிய மாடு முறையில் கன்றினை வளர்த்தல்
8. கன்றின் வளர்ச்சி
9. போதுமான வீடமைப்பு முக்கியம்
10. கேள்வி பதில்

பிறந்தவுடன் கன்று பராமரிப்பு :

* கன்று பிறந்தவுடனேயே, அவற்றின் மூக்கு மற்றும் வாயில் எதேனும் கோழை மற்றும் சளி இருந்தால் உடனே அகற்ற வேண்டும்.

* கன்று பிறந்தவுடனேயே, தாய் மாடானது கன்றினை நாக்கினால் நக்கும். இவ்வாறு செய்வதால் கன்று மேல் இருக்கும் ஈரம் போவதுடன், இது கன்றின் சுவாசிப்பது மற்றும் இரத்த ஓட்டத்தை தூண்டும். குளிர்காலத்தில் தாய் மாடு கன்றினை நக்கவில்லையெனில் உடனே துணி அல்லது சாக்கினைக் கொண்டு கன்றினை துடைக்கவும். மேலும் செயற்கை சவாசம் அளிக்க, அதன் மார்பில் கையினை வைத்து அமுக்கி அமுக்கி எடுக்கவும்.

* உடம்பிலிருந்து 2-5 செ.மீ விட்டு தொப்புள் கொடியை நறுக்க வேண்டும். மேலும் இதற்கு அயோடின் அல்லது போரிக் ஆஸிட் அல்லது எதாவது ஆன்டிபயாட்டிக் மருந்துகளை தடவ இட வேண்டும்.

* தொழுவத்தில் ஈரமான கூளத்தினை அடிக்கடி அப்புறப்படுத்தி, எப்பொழுதும் தொழுவத்தை சுத்தமாகவும், உலர்ந்த நிலையிலும் வைத்துக் கொள்ள வேண்டும்.

* பிறந்தவுடன் கன்றின் எடையை குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

* மாட்டின் மடி மற்றும் காம்பினை கன்று பால் ஊட்டுவதற்கு முன்பு குளோரின் கரைசல் கொண்டு சுத்தம் செய்து உலரவிட வேண்டும்.

* கன்று அதன் தாயிடமிருந்து சீம்பாலினை ஊட்ட செய்யவேண்டும்.

* கன்று பிறந்த ஒரு மணி நேரத்தில் எழுந்து மாட்டிடன் சீம்பால் ஊட்ட முயற்சி செய்யும். சில மெலிந்த கன்றுகள் தானாகவே சீம்பால் ஊட்டவில்லை என்றால் அவை சீம்பால் ஊட்ட உதவி செய்யவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கன்றுகளுக்கு தீவனமளித்தல் :

பிறந்த கன்றுக்கு முதல் மற்றும் முக்கியமான உணவு சீம்பாலாகும். கன்று பிறந்து 3-7 நாட்கள் வரை இந்த சீம்பாலானது மாட்டில் சுரக்கும், இதுவே கன்றின் முதல்நிலை ஊட்டச்சத்தாகும். சீம்பாலில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி இருப்பதால் தொற்று நோய்கள் மற்றும் ஊட்டசத்து குறைபாடுகள் கன்றுகளுக்கு வராமல் தடுக்கும். பிறந்த கன்றுக்கு சீம்பால் 3 நாட்கள் தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

கன்றின் முதல் 3-4 வார வயதில் சீம்பால் மட்டுமன்றி பாலும் மிக அவசியம். மூன்று – நான்கு வார வயதிற்கு பின்பு கன்று தாவரமாவுச்சத்துக்களை ஜீரணிக்கும் திறன் பெற்று விடும். இதன் பின்னரும் பால் கன்றுக்கு கொடுப்பது நல்லது என்றாலும் அதற்கு பதிலாக அளிக்கப்படும் தானியவகை தீவனங்களை விட பாலுக்கான செலவு அதிகமாகும். கன்றுக்கு அளிக்கப்படும் அனைத்து திரவ வகை உணவுகளும் அதன் உடல் வெப்பநிலையில் இருக்குமாறு அல்லது அறை வெப்பநிலையிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். கன்றுகளுக்கு தீவனம் அளிக்கப் பயன்படும் அனைத்து உபகரணங்களும் தூய்மையானதாக இருக்க வேண்டும். மேலும் தீவனமளிக்க பயன்படுத்தும் உபகரணங்களை சுத்தமான, உலர்ந்த இடத்தில் வைத்திருக்கவேண்டும்.

நீர் அவசியம் :

கன்றுக்கு எல்லா நேரங்களிலும் தூய்மையான மற்றும் புதிய நீர் கிடைக்கச் செய்ய வேண்டும். ஒரே நேரத்தில் கன்று அதிகமான நீரை குடிக்காமல் இருப்பதைத் தடுக்க, தண்ணீரை வெவ்வேறு உபகரணங்களில், வெவ்வேறு இடங்களில் வைக்கவேண்டும்.

கன்றுகளுக்கு தீவனமளிக்கும் முறைகள் :

கன்றுகளுக்கு தீவனமளிக்கும் முறைகள் அவற்றுக்கு அளிக்கப்படும் தீவனங்களைப் பொறுத்தது. கீழ்க்காணும் தீவனமளிக்கும் முறைகளை கன்றுகளை வளர்க்க கடைபிடிக்கப்படுகின்றன.

* பால் மட்டும் அளித்து வளர்ப்பது

* ஆடை நீக்கிய பாலில் வளர்ப்பது

* பால் தவிர்த்த மற்ற திரவங்களான புதிதாக தயாரித்த மோர், புதிதாக தயாரித்த பாலாடையினை பாலிலிருந்து பிரித்தெடுத்தவுடன் பெறப்படும் திரவம், கஞ்சி ஆகியவற்றில் வளர்ப்பது.

* பாலுக்கு பதிலாக பால் மாற்றுதிரவங்களில் வளர்ப்பது.

* தொடக்க நிலை கன்று தீவனங்களில் வளர்ப்பது
செவிலி மாடு கொண்டு வளர்ப்பது.

* பாலில் மட்டும் வளர்ப்பது.

0-3 மாத வயதுடைய சராசரியாக 50 கிலோ உடல் எடையை உடைய கன்றுக்கு தேவையான ஊட்டச்சத்துகளாவன

உலர் பொருள் - 1.43கிலோ

மொத்த ஜீரணமாகக்கூடிய கனிம பொருள் - 1.60கிலோ

புரதம் - 315கிராம்

பாலில் அதிகமான கொழுப்பு சத்து இருப்பதால் அதிலுள்ள மொத்த சீரணமாகும் பொருட்களான TDN ன் அளவு அதிலுள்ள உலர்ந்த பொருட்களின் அளவை விட அதிகம் உள்ளது. கன்று பிறந்து பதினைந்தாவது நாளில் புற்களை மேய தொடங்கும். இது ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு அரை கிலோவாக இருந்து பின்னர் மூன்று மாத வயதில் 5 கிலோவாக உயரும்.

பசுந்தாள் தீவனத்தை விட, நல்ல தரமான வைக்கோல் (1-2 கிலோ) இந்த வயதில் கன்றிற்கு நல்ல உணவாகும். பதினைந்து நாட்களில் ஒரு நாளைக்கு 0.5 கிலோவில் ஆரம்பித்து பின்னர் மூன்று மாதங்களில் 1.5 கிலோவாக அதிகரிக்கப்படவேண்டும்

மூன்று வாரங்களுக்கு பிறகு முழு பால் கிடைக்கவில்லை யென்றால், ஆடை நீக்கிய பால் அல்லது மோர் அல்லது வேறு பால் மாற்று பொருளை உணவாக அளிக்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கன்றுகளுக்கான அடர்தீவனக்கலவை :

* பால் மற்றும் இதர திரவ உணவுகளுக்கு அளிக்கப்படும் அடர்தீவனங்களின் கலவையே அடர்தீவனக்கலவையாகும். இது தானியங்களால் ஆன முக்கியமாக மக்காசோளம் மற்றும் ஓட்ஸ் அதிகம் கொண்ட கலவையாகும்.

* பார்லி, கோதுமை மற்றும் சோளம் போன்ற தானியங்களையும் இந்த அடர்தீவனக்கலவையில் சேர்த்துக்கொள்ளலாம். மொலாசஸ் எனப்படும் கரும்புச்சர்க்கரையை 10 சதவிகிதம் அளவுக்கு இந்த அடர்தீவனக்கலவையில் சேர்க்கலாம்.

* ஒரு தரமான கன்று அடர்தீவனத்தில் 80% TDN (மொத்த சீரணிக்கும் பொருட்கள்)- ம் மற்றும் 22% CP (புரதம்) இருக்கும்.

கன்றுக்கான உலர்தீவனம் :

* இலைகள் மற்றும் மெல்லிய தண்டினை உடைய பயறு வகைககள் கன்றுகளுக்கு சிறந்த உலர்தீவனமாகும். கன்றுகளின் இரண்டு வார வயதிலிருந்து இதனை கொடுக்கலாம். பயறு வகைத் தீவனத்துடன் கலந்து புல் வைக்கோலும் அளிப்பது சிறந்தது.

* சூரிய ஓளியில் உலர்த்திய பசுமையான வைக்கோலில் வைட்டமின் A, D மற்றும் B-complex அதிகமாக இருக்கும்.

* ஆறு மாத வயதில், ஒரு கன்று ஒரு நாளைக்கு 1.5-2.25 கிலோ வைக்கோல் உண்ணும். கன்றின் வயது அதிகரிக்க அதிகரிக்க வைக்கோல் உண்ணும் அளவும் அதிகமாகும்.

* ஆறிலிருந்து எட்டாவது வாரத்தில் கூடுதலாக பதப்படுத்திய புல்லை கொஞ்சமாகக் கொடுக்கலாம். ஆனால் 6-8 வார வயதுக்கு முன்னரே கொடுக்க தொடங்கினால் கழிச்சலை உண்டாக்கும்.

* பதப்படுத்திய புல், 4-6 மாதங்களிலிருந்தே நல்ல உலர்தீவனம் ஆகும்.

* பொதுவாகப் பயன்படுத்தபடும் பதப்படுத்திய சோளம் மற்றும் மக்காச் சோளத் தட்டுகளில் புரதம், கால்சியம் சத்து, மற்றும் வைட்டமின் குறைவாக இருக்கும்.

செவிலிய மாடு முறையில் கன்றினை வளர்த்தல் :

* குறைந்த கொழுப்புச்சத்துடைய ஆனால் அதிக பால் கறக்கக்கூடிய மாட்டுடன், 2-4 தாயற்ற கன்றினை முதல் வாரத்திலிருந்து பால் குடிக்கச் செய்யலாம்.

* உலர்ந்த தீவனத்தினை வைக்கோலுடன் சேர்த்து எவ்வெளவு சீக்கிரம் கொடுக்கமுடியுமோ அவ்வளவு சீக்கிரம் கொடுக்கவேண்டும். இவ்வாறு தீவனமளிக்கப்பட்ட கன்றுகளை 2-3 மாதத்தில் மாட்டிடமிருந்து பிரித்துவிடலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கஞ்சியில் கன்றினை வளர்ப்பது :

கஞ்சி கன்றுக்கு அளிக்கப்படும் திரவ ஆரம்பகால தீவனமாகும். இது பாலுக்கு பதில் அளிக்கப்படுவதால், 4 வாரங்களில் இருந்து சிறிது சிறிதாக பாலை குறைத்து அதற்கு பதில் கஞ்சியினைக் கொடுக்கவேண்டும். இதற்கு 20 தினங்களுக்கு பிறகு முழுவதுமாக பால் அளிப்பதை நிறுத்திவிடவேண்டும்

கன்றுதீவனத்தில் கன்றினை வளர்ப்பது :

இம்முறையில் கன்றுகளுக்கு ஆரம்பத்தில் முழு பாலினை அளித்து பின்னர் உலர் தொடக்க தீவன பொருள் மற்றும் தரமான வைக்கோல் மற்றும் தீவனம் தின்பதற்கு பயிற்சி அளிக்கப்படும். பின்பு கன்றின் 7-10வது வார வயதில் பால் மறக்க செய்யப்படும்.

பால் மாற்று பொருளில் கன்றினை வளர்ப்பது :

கன்றுக்கு தேவைப்படும் சத்துகளை கொடுப்பதில் பாலிற்கு சிறந்த மாற்று பொருள் எதுவும் இல்லை. பால் மற்றும் இதர திரவ உணவு தீவனங்கள் தேவையான அளவு கிடைக்கவில்லையென்றால் பால் மாற்று பொருளை உபயோகிக்கலாம். இது பால் கொடுக்கும் அளவு போன்று கொடுக்கப்பட வேண்டும். அதாவது கன்றின் எடையில் 10-12% பால் மாற்றுப்பொருளை உணவாகக் கொடுக்க வேண்டும்.

கன்றினை தாயிடமிருந்து பிரித்தல் :

* கன்றினை தாயிடம் இருந்து பிரிப்பது, தீவிர மேலாண்மை பண்ணைகளில் பின்பற்றப்படும் ஒரு மேலாண்மை முறையாகும். இதனால் எல்லா கன்றுகளுக்கும் தேவையான அளவு பால் கிடைக்கச் செய்ய முடியும். மேலும் பால் வீணாவதையும், கன்றுகளுக்கு அதிக அளவு பால் கொடுப்பதையும் தடுக்கமுடியும்.

* பண்ணையில் பின்பற்றப்படும் மேலாண்மை முறையினைப் பொருத்து கன்றுகளை தாயிடமிருந்து பிரிப்பதை அவை பிறந்தவுடனேயோ, மூன்று வாரத்திலோ, 8-12 வாரத்திலோ அல்லது 24 வார வயதிலோ செய்யலாம். பொதுவாக பண்ணையாளர்கள் 12 வாரத்தில் கன்றினை தாயிடமிருந்து பிரிப்பார்கள். பண்ணையில் பயன்படுத்த வளர்க்கப்படும் காளைக் கன்றுகள், 6 மாதம் வரை தாயுடன் இருக்கும்.

* நன்கு நிர்வகிக்கப்படும் பண்ணைகளில் அதிக எண்ணிக்கையிலான கன்றுகளை வளர்க்கும்போது அவை பிறந்தவுடனேயே பால் மறக்கச் செய்வது நல்லது.

* பிறந்தவுடனேயே கன்றுகளை தாயிடமிருந்து பிரித்து பால் மாற்றுப் பொருள் மற்றும் தீவனத்தில் கன்றினை வளர்ப்பதால், பால் மனித உபயோகத்திற்கு சேமிக்கப்படும்.

* கன்றினை தாயிடமிருந்து பிரித்ததற்குப் பின் கன்றினைப் பிரித்ததில் இருந்து மூன்று மாதங்களில், சீராக கன்று தொடக்க தீவனத்தை அளிக்க வேண்டும். நாள் முழுவதும் நல்ல தரமான வைக்கோல் கொடுக்க வேண்டும். கன்றின் உடல் அளவில் 3% அளவு, ஈரப்பதம் அதிகம் உடைய பதப்படுத்திய புல் பசுந்தீவனங்களை அளிக்கலாம். ஆனால் பசுந்தீவனங்களை அதிகம் கொடுக்கக்கூடாது ஏனெனில் பசுந்தீவனத்தினை அதிகம் எடுத்துக்கொள்ளும்பொழுது கன்றுகள் எடுத்துக்கொள்ளும் மொத்த ஊட்டச்சத்தின் அளவு குறையும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கன்றின் வளர்ச்சி :

* அடிக்கடி கன்றின் எடையை பார்த்து அது குறிப்பிட்ட எடையில் வளர்கிறதா என்று பராமரிக்க வேண்டும்.

* முதல் மூன்று மாதங்கள் கன்றுக்கு உணவு அளிப்பது மிக முக்கியமானதாகும்.

* இந்த சமயத்தில் சரியாக உணவு அளிக்கவில்லையென்றால், 25-30% கன்றுகள் இறந்து விடும்.

* சினை மாட்டிற்கு சினைப்பருவத்தின் கடைசி 2-3 மாதங்கள் நல்ல தரமான தீவனம் அளிப்பது அவசியம்.

* பொதுவாக கன்று பிறந்தவுடன் 20-25 கிலோ எடையிருக்கும்.

* தகுந்த தீவனமளித்தல் மற்றும் குடற்புழு நீக்கம் தவறாமல் செய்தால் சராசரியாக கன்றின் எடை ஒரு மாதத்திற்கு 10-15 கிலோ எடை கூடும்.

போதுமான வீடமைப்பு முக்கியம் :

தாயிடமிருந்து பிரித்த கன்றுகளை தனித்தனி தொழுவத்தில் கட்ட வேண்டும். இதனால் ஒன்றை ஒன்று நக்குவது தவிர்க்கப்பட்டு நோய் தொற்று வராமல் இருக்கும். தொழுவம் சுத்தமாகவும், உலர்வாகவும் நல்ல காற்றோட்டமாகவும் இருக்க வேண்டும். கன்றுகளின் மீது சுத்தமாக காற்று எப்பொதும் படுமாறு தொழுவத்தினை அமைக்கவேண்டும். கன்றுகளுக்கு வசதியாக இருக்கவும், அவற்றின் உடல் உலர்வாக இருக்கவும் கன்றினை கட்டும் இடத்தில் கூளம் இட வேண்டும். கூளமாக வைக்கோல் அல்லது உமி உபயோகிக்கப்படும். வெளிப்புற தொழுவம் பாதி மூடப்பட்டதாக இருக்க வேண்டும். இதனால் அதிகமான சூரிய வெப்பம் கன்றுகளின் மீது படுவது தவிர்க்கப்படுவதுடன் மழை மற்றும் குளிர்ந்த காற்றிலிருந்தும் கன்றுகள் பாதுகாக்கப்படும். கிழக்கு பக்கம் திறப்பு இருக்கும் தொழுவம், காலை வெயிலினால் வெப்பமாக்கப்பட்டு உச்சி வெயிலில் நிழலால் மூடப்பட்டிருக்கும். மழை இந்த திசையில் இருந்து விழாது.

கன்றுகளை நலமாக வைத்திருத்தல் :

பிறந்த கன்றுக்கு நோய்வராமல் காப்பது மிக அவசியம். இதனால் கன்றுகளின் இறப்பு தவிர்க்கப்படுகிறது. நோயினால் பாதிக்கப்பட்ட கன்றுக்கு சிகிச்சை அளிப்பதை விட அவற்றினை நலமாக பேணுவதற்கு குறைந்த செலவே ஆகும். முறையாக கன்றுகளை கண்காணித்து சரியான உணவு அளித்து, சுத்தமான சூழ்நிலை உருவாக்குவது மிக அவசியம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கேள்வி பதில் :

1. கன்றுகளுக்கு சீம்பால் அளிப்பதன் முக்கியத்துவம் என்ன?

கன்று ஈன்றபின் சுரக்கும் முதல் பாலே சீம்பால் ஆகும். சீம்பாலில் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமிருப்பதால் பிறந்த கன்றுகளை நோய்களின்று பாதுகாக்கின்றது. மேலும், சீம்பால் மலமிளக்கியாதலால், உணவு சீரணிக்க உதவுகின்றது. சீம்பாலை கன்று பிறந்த 1 மணி நேரத்திற்குள் அளிக்க வேண்டும். ஏனெனில் இந்த நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள இம்முனோகிளாபுலின் குடலிலிருந்து உறிஞ்சப்படுவது நேரம் ஆக ஆக குறைகிறது.

2. கன்றுகளுக்கு சீம்பால் எந்த அளவில் அளிக்கப்பட வேண்டும்?

பிறந்த அரை (ஙூ) மணி நேரம் முதல் 12 மணி நேரம் வரையில், கன்றின் உடல் எடையில் 5-8 சதவீதம் அளவிலும், பிறகு 2 மற்றும் 3ம் நாளிலில் கன்றின் உடல் எடையில் 10 சதவீதம் அளவிற்கும் சீம்பால் அளித்திட வேண்டும்.

3. இளங்கன்றுகளுக்கு அளிக்கப்படும் பாலின் அளவு எவ்வளவு?

இளங்கன்றுகளுக்கு அதன் உடல் எடையில் பத்தில் ஒரு பங்கு பால் தினமும் கிடைத்திட வேண்டும். அதாவது 20-25 கிலோ உடல் எடை உள்ள கன்றுகளுக்கு தினமும் சுமார் 2-2. 5 கிலோ பசுவின் பால் கிடைத்திட உறுதி செய்தல் வேண்டும்.

4. பிறந்த கன்றுகளுக்கு எப்பொழுது குடற்புழு நீக்கம் செய்யலாம் மற்றும் எந்த குடற்புழு நீக்க மருந்துகளை கொடுக்கலாம்?

எருமைக் கன்றுகளுக்குப் பிறந்த முதல் நாளிலேயே குடற்புழுநீக்க மருந்தினை அளிக்க வேண்டும். பசுங்கன்றுகளுக்கு ஒரு வாரத்தில் குடற்புழு நீக்க மருந்து அளிக்க வேண்டும். முதல் ஆறுமாத வயது வரை பைப்பரசின் மருந்தினை உபயோகிக்காலம். பின்னர் மூன்று மாதத்திற்கொரு முறை சுழற்சி முறையில் குடற்புழுநீக்க மருந்தினை அளிக்க வேண்டும். ஆல்பென்டசோல், ஃபென்பென்டசோல், லீவாபிசோல் போன்றவை கால்நடை மருத்துவரின் மேற்பார்வையில் குடற்புழு நீக்க மருந்தினை அளிப்பது நலம்.

5. கன்றுகளுக்கு கொம்பு நீக்கம் எந்த வயதில் செய்யலாம்?

பொதுவாக கன்றுகளுக்கு கொம்பு நீக்கம் கன்று பிறந்த 15 முதல் 20ம் நாட்களில் செய்திட வேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு கால்நடை மற்றும் ஆராய்ச்சி மையம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment