Monday 16 April 2018


பண்ணை அமைப்பதற்கான இடத்தைத் தேர்வு செய்தல் :


1. நோக்கம்
2. மண்
3. வடிகால் அமைப்பு
4. சந்தை வசதி
5. போக்குவரத்து வசதி
6. இதர வசதிகள்

நோக்கம் :

மாடுகளின் உடல் நலத்தை முறையாக பேணுவதற்கும், அவற்றிற்கு தேவையான வசதிகளை அளிப்பதற்கும், தட்பவெப்ப சூழ்நிலைகளிலிருந்து பாதுகாப்பதற்கும் முறையான கொட்டகை அமைப்பு மிகவும் அவசியமாகும். மாடுகள் நல்ல உடல் நலத்துடன் பேணப்பட்டால் மட்டுமே அவை தங்களது மரபியல் உற்பத்திக் குணங்களை வெளிப்படுத்த முடியும்.

பண்ணைக் கட்டிடங்களை அமைப்பதற்கு இடத்தைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியமாகும். பண்ணை அமைக்க இடத்தைத் தேர்வு செய்வதற்கு முன் கவனிக்கப்படவேண்டியவை.

மண் :

* நல்ல வலுவான கட்டிடங்களை அமைப்பதற்கு ஏற்ப பண்ணை அமைக்கத் தேர்ந்தெடுக்கும் இடத்தின் மண் இருக்கவேண்டும்.

* களிமண், மணல் பாங்கான மண், பாறைகள் இருக்கும் மண் போன்றவை பண்ணை அமைக்க ஏற்றவையல்ல.

* கடினமான மண் கொண்ட இடங்கள் பண்ணைக் கட்டிடங்கள் அமைக்க ஏற்றவை.

பண்ணை அமைப்பதற்கேற்ற இட வசதி :

* பண்ணைக் கட்டிடங்கள் அனைத்தையும் அமைக்கும் வகையில் போதுமான அளவு இடம் இருக்கவேண்டும். இவ்வாறு போதுமான அளவு இடம் இருந்தால் மட்டுமே பண்ணையை எதிர்காலத்தில் விரிவாக்குவது எளிதாகும்.

* 200 மாடுகளைப் பராமரிப்பதற்கு ஏற்ற வகையில் குறைந்தது 2-3 ஏக்கர் அளவாவது நிலம் இருக்கவேண்டும்.

* தீவன உற்பத்திக்கு 2 மாடுகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் தேவைப்படும்.

வடிகால் அமைப்பு :

மழை பெய்யும் போது தண்ணீர் நன்றாக வடிவதற்கு ஏற்ற வகையில் வடிகால்கள் அமைக்க வேண்டும். இவ்வாறு அமைப்பதால் பண்ணையில் ஆரோக்கியமான சூழ்நிலை உருவாவது மட்டுமன்றி, பண்ணையிலுள்ள கட்டிடங்கள் ஈரமாவதையும் தடுக்கலாம்.

தண்ணீர் வசதி :

பண்ணையில் செய்யப்படும் பல்வேறு வேலைகளான மாடுகளைக் கழுவுதல், பசுந்தீவன உற்பத்தி, பால் பதனிடுதல், பாலிலிருந்து உப பொருட்கள் தயாரித்தல், மற்றும் குடிநீர் போன்றவற்றிற்கு போதுமான அளவு தண்ணீர் இருப்பது அவசியமாகும்.

எனவே தொடர்ந்து பண்ணையின் நீர்த் தேவையைப் பூர்த்தி செய்ய எப்போதும் தண்ணீர் இருக்கும் நீர் ஆதாரம் பண்ணையில் அவசியம் இருக்கவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

மின்சார வசதி :

* பண்ணையில் மின்சார வசதி இருப்பது மிகவும் அவசியமாகும்.

* பண்ணையிலுள்ள பல்வேறு உபகரணங்களை இயக்குவதற்கும், வெளிச்சம் தரும் மின்விளக்குகள் வேலை செய்வதற்கும் மின்சாரம் தேவைப்படுகிறது.

காற்று மற்றும் சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு :

* திறந்த வெளியில் அமைந்திருக்கும் பண்ணைகளில் உயரமாக வளரக்கூடிய மரங்களை கட்டிடங்களைச் சுற்றி வளர்க்கவேண்டும்.

* இதனால் காற்றின் வேகம் குறைக்கப்பட்டு, வெயிலின் தாக்கமும் குறைக்கப்படும்.

* சத்தம் மற்றும் இதர தொல்லைகளிலிருந்து பாதுகாத்தல்.

* சத்தம் அதிகம் உண்டாக்கும் தொழிற்சாலைகள், ரசாயன தொழிற்சாலைகள், சாக்கடைக் கழிவுகள் வெளியேற்றப்படும் இடங்கள் போன்றவற்றிற்கு அருகில் பண்ணை அமையக்கூடாது.

* தொழிற்சாலையிலிருந்து வெளியேற்றப்படும் வாயு மற்றும் திரவக் கழிவுகள் சுற்றுப்புறத்தையும் மாசடையச் செய்துவிடும்.

* கால்நடைகளின் உற்பத்தித்திறனை தேவையற்ற சத்தமும் பாதிக்கும். எனவே கால்நடைப் பண்ணையானது நகரத்திலிருந்து தள்ளி இருக்குமாறு பார்த்துக் கொள்ளவேண்டும்.

சந்தை வசதி :

கால்நடைப் பண்ணையானது நகரத்தை விட்டு தள்ளியிருந்தாலும் அது நகரத்திற்கு அருகிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் கால்நடைகளிலிருந்து பெறப்படும் பால், மற்றும் இதர பொருட்களை விற்பனை செய்வதற்கு பண்ணை நகரத்திற்கு அருகில் இருப்பதும் அவசியமாகும்.

போக்குவரத்து வசதி :

பண்ணை அமையுமிடத்தினை எளிதில் அடைவதற்கும், பண்ணையில் உற்பத்தியாகும் பொருட்களை விற்பனை செய்வதற்கும் முறையான சாலை வசதி அவசியமாகும்.

இதனால் போக்குவரத்து செலவு குறைவதுடன், பண்ணையிலிருந்து பெறப்படும் உற்பத்திப்பொருட்கள் வீணாவதும் தடுக்கப்படும்.

இதர வசதிகள் ;

இதர வசதிகளான தொலைபேசி, பண்ணையில் வேலை செய்யும் வேலையாட்களின் குழந்தைகளுக்கு பள்ளி வசதி, தபால் அலுவலகம், கடைகள் மற்றும் பொழுது போக்கு அம்சங்கள் போன்றவையும் பண்ணைக்கு அருகிலிருக்குமாறு பார்த்துக்கொள்ளவேண்டும்.

ஆதாரம் : தமிழ்நாடு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment