Saturday 21 April 2018

கால்நடைக் கொட்டகையின் கட்டிட வடிவமைப்பு :


1. அஸ்திவாரம்
2. அடித்தளம் அமைக்கும் முறைகள்
3. 2. சுவர்கள் மற்றும் சுவர் அமைக்கப் பயன்படும் பொருட்கள்
4.செங்கற்கள்
5. இணைப்புப் பொருட்கள்
6. அ. கூரைகளின் அமைப்பு
7. ஆ.கூரை வேயப்பயன்படும் பொருட்கள்
8. கேள்வி பதில்

அஸ்திவாரம் :

கட்டிடங்களை அமைப்பதற்கு தேவைப்படும் அடிப்படைக் கட்டமைப்பு அஸ்திவாரமாகும். அஸ்திவாரத்தில் இரண்டு பகுதிகள் உள்ளன

அவை 1. அடித்தளம், 2.அஸ்திவாரச் சுவர்

அடித்தளம் :

கட்டிடத்தின் எடையினைத் தாங்கும் அஸ்திவாரச் சுவரின் அகண்ட பகுதி, அடித்தளமாகும்

இதன் அளவுகள் பின்வருமாறு :

அளவுகள் - அகலம் - ஆழம்

திடமான அமைப்பு - அகலம் - 24’’
இலகுவான அமைப்பு - ஆழம் - 12’’

திடமான அமைப்பு - அகலம் - 12’’
இலகுவான அமைப்பு - ஆழம் - 8’’

அஸ்திவாரச் சுவர் :

* பண்ணைக் கட்டிடங்கள் அமைக்கப்படும் இடத்தின் மண்ணைப் பொருத்து, அஸ்திவாரச் சுவரின் உயரம் மாறுபடும்.

* கடினத்தன்மை இல்லாத மண்ணில் அமைக்கப்படும் கட்டிடங்களுக்கு ஆழமான அஸ்திவாரமும், பாறைத்தன்மை வாய்ந்த மண்ணில் அமைக்கப்படும் கட்டிடங்களுக்கு ஆழம் குறைவான அஸ்திவாரமும் தேவைப்படும்.

* சிறிய பண்ணைக் கட்டிடங்களின் உயரம் பொதுவாக 18 அடி முதல் 30 அடி வரை இருக்கும். இதன் தடிமன் 9 முதல் 12 அங்குலமாக இருக்கும்.

அஸ்திவாரம் அமைக்கப் பயன்படும் பொருள்கள் :

* அஸ்திவாரம் சிமெண்ட் கான்கிரீட் அல்லது செங்கற்கள், சிமெண்ட் கொண்டு அமைக்கப்படுகின்றன.

* கான்கிரீட் அடித்தளம் கடினத்தன்மை வாய்ந்ததாக இருப்பதால் அது மோனோலி திக் அடித்தளம் என்று அழைக்கப்படுகிறது.

அடித்தளம் அமைக்கும் முறைகள் :

* அடித்தளம் அமைக்க வாணிகள் வெட்டி, அடிப்பகுதியினைக் கடினப்படுத்த வேண்டும்.

* பிறகு வாணிக்குழியினை கற்கள் மட்டும் இதர பொருட்களைக் கொண்டு நிலமட்டம் வரை உயர்த்தவேண்டும்.

* பிறகு அடித்தளத்தை சமமாக அமைக்கவேண்டும்.

* பிறகு ஈரத்தன்மை இல்லாத அஸ்பால்ட் அல்லது இதர பொருட்களை 4 % தயாரித்து வாணிக்குழிகளின் மேற்பகுதியில் மூடவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

2. சுவர்கள் மற்றும் சுவர் அமைக்கப் பயன்படும் பொருட்கள் :

* அஸ்திவாரத்திலிருந்து கட்டிடத்தை முழுவதும் மூட சுவர்கள் அமைக்கப்படுகின்றன.

* இவை செங்கற்கள், கற்கள், சிமெண்ட் காங்கிரீட் போன்றவற்றால் 9, 12 மற்றும் 6 அங்குல அகலத்தில் அமைக்கப்படுகின்றன.

* எடையினைத் தாங்காத சுவர்கள் 4.5 அங்குல அகலத்தில் அமைக்கப்படுகின்றன.

* கட்டிடங்களில் பராமரிக்கப்படும் கால்நடைகளின் உயரத்திற்கு ஏற்றவாறு பண்ணைக் கொட்டகைகளின் சுவர் அமைக்கப்பட வேண்டும்.

பண்ணையில் அமைக்கப்படும் சுவர்களை பூசும் முறைகள் பின்வருமாறு :

* நில மட்டத்தின் அடிப்பகுதியிலிருந்து 4 அடி உயரத்திற்கு தண்ணீர் ஊற்றி சுத்தம் செய்வதற்கு ஏற்றவாறு சிமெண்டினால் சுவர்களைப் பூசி விட வேண்டும்.

* கட்டிடங்களின் மூலைகள் தூசு சேர்வதைத் தவிர்க்க வட்டமாக அமைக்கப்பட வேண்டும்.

* கட்டிடங்களின் உட்பகுதியில் விளிம்புகள் கூர்மையாக இல்லாதவாறு அமைக்கப்பட வேண்டும்.

செங்கற்கள் :

1) கட்டிடங்கள் அமைக்கப் பயன்படும் கற்கள்

* இக்கற்கள் மண் மூலம் தயாரிக்கப்படுகின்றன (களி மண் 50% மற்றும் மணல் 50%).

* செவ்வக வடிவமுடைய இக்கற்கள் அச்சுகளில் தயாரிக்கப்பட்டு, இயந்திரங்கள் மூலம் அறுக்கப்படுகின்றன.

* பிறகு அவை குறிப்பிட்ட வெப்பநிலையில் சூளைகளில் வைக்கப்பட்டு சுடப்படுகின்றன.

* இயந்திரங்களால் முறையாகத் தயாரிக்கப்பட்ட கற்களின் நீள,அகல உயரங்கள்-9" x 4½ " x 3".

* இக்கற்கள் ஒரே மாதிரியான வடிவம், நிறம் மற்றும் தன்மையினை உடையவை. மேலும் அவற்றின் விளிம்புகள் கூர்மையாக இருக்கும்.

* இக்கற்களை கடினமான பொருட்களின் மீது மோதினால் மணி அடிப்பது போன்ற ஒலியினை எழுப்பும்

2) விட்ரிஃபைட் கற்கள் :

* 10% மேல் இரும்பு ஆக்சைடு கொண்ட இக்கற்கள் கடினத்தன்மை வாய்ந்த, தண்ணீர் உறிஞ்சாத, நீண்ட நாட்கள் உழைக்கக்கூடிய கற்களாகும்.

* இவை அதிக வெப்பநிலையில் சூடுபடுத்தப்படுகின்றன.

* இவற்றின் வெளிப்பகுதியில் விளிம்புகள் அமைக்கப்பட்டு, கடினமான மற்றும் உறுதியான அமைப்புடன் இருக்கும்.

* இவை ஈரத்தை உறிஞ்சும் தன்மை அற்றவை.

* இவை கால்நடைப் பண்ணைகளின் தரையினை அமைக்கப் பயன்படுகின்றன.

3) கிளேஸ்ட் கற்கள் :

இக்கற்கள் சைனா களிமண்ணால் தயாரிக்கப்பட்டு வெளிப்புறம் கண்ணாடி போன்ற பொருட்கள் பூசப்பட்ட அல்லது எனாமல் பூசப்பட்ட கற்களாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

B. கற்கள் :

அ. கிரானைட் கற்கள் :

* கிரானைட் கற்கள் கடினத்தன்மை வாய்ந்த இயற்கையில் கிடைக்கும் கற்களாகும். இவை கருப்பு நிறத்திலோ அல்லது வெளிறிய சாம்பல் நிறத்திலோ இருக்கும்.

* இவை நீண்ட நாட்களுக்கு உழைக்கும் தன்மை உடையவை. பல்வேறு வகையான தட்பவெப்ப சூழ்நிலைகளுக்கு ஏற்றவை. இக்கற்கள் பொதுவாக கால்நடைப் பண்ணைகளில் சுவர்கள் மற்றும் தரைகள் அமைக்கப் பயன்படுகின்றன.

* கிரானைட் கற்களின் மேற்புறத்தினை அடிக்கடி சொரசொரப்பாக்கலாம்.

ஆ. வின் கற்கள் :

* இக் கற்களும் இயற்கையான பாறைகளிலிருந்து வெட்டி எடுக்கப்படுபவை. ஆனால் இவை கிரானைட் கற்களைப் போன்று நீண்ட காலம் உழைக்காது. மேலும் பல்வேறு தட்பவெப்பநிலைகளுக்கும் ஏற்றவை அல்ல. எனவே பெரிய கட்டிடங்களைக் கட்டுவதற்கு இக்கற்கள் உபயோகப்படுத்தப்படுவதில்லை.

* முழு வின் கற்கள் சுவர்கள் கட்டுவதற்கும், உடைந்த சிறு கற்கள் சிமெண்ட் காங்கிரீட்டிலும் கலந்து உபயோகப்படுத்தப்படுகின்றன.

இ.மண் கற்கள்

* இக்கற்கள் முழுதாக உருவாகாத பாறைகளாகும். இவை உறுதியாக இருக்காது. மேலும் நீண்ட நாட்களுக்கு உழைப்பதில்லை. எனவே இவை அதிக வலுவான கட்டிடங்கள் கட்ட பயன்படுத்தப்படுவதில்லை

* ஆனால் இக்கற்களை வெவ்வேறு வடிவங்கள் மற்றும் அமைப்புகளில் மாற்றிக்கொள்ளலாம். எனவே இக்கற்கள் கட்டிடங்களை அழகுபடுத்தப் பயன்படுகின்றன.

இணைப்புப் பொருட்கள் :

1. சுண்ணாம்பு :

சுண்ணாம்புத் தூள், சுண்ணாம்புக் கற்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. சுண்ணாம்புக்கல்லை சூடுபடுத்தி பிறகு தண்ணீரில் ஊற வைக்கவேண்டும்

இதிலிருந்து கிடைக்கும் வெள்ளை தூள் சுண்ணாம்பாகும்

2. சுண்ணாம்பு மணல் கலவை :

சுண்ணாம்பு ஒரு பங்கும், மூன்று பங்கு மணலும் கலந்து பிறகு இதனுடன் போதுமான அளவு தண்ணீர் சேர்ப்பதால் கிடைக்கும் கலவை சுண்ணாம்பு மணல் கலவையாகும்.

3. சிமெண்ட்

* 70% சாக்,30% களிமண் போன்றவை கலந்து தண்ணீர் சேர்த்தால் சிமெண்ட் கலவை கிடைக்கிறது.

* பிறகு இந்தக் கலவையினை நீண்ட நேரம் அசையாமல் வைத்திருக்கும்போது அதன் அடியில் தேங்கும் தூளை எடுத்து, சூடாக்கி, பவுடராக்கப்பட்டு சிமெண்ட் தயாரிக்கப்படுகிறது.

* சிமெண்ட் சாம்பல் நிறத்திலோ அல்லது நீலம் கலந்த சாம்பல் நிறத்திலோ இருக்கும். செங்கற்கள், கற்கள் மற்ற இதர பொருட்களுடன் சேர்ந்து சிமெண்ட் ஒரு தரமான இணைக்கும் பொருளாகப் பயன்படுகிறது.

4. சிமெண்ட் மார்ட்டர் :

சிமெண்ட் ஒரு பங்கும் மணல் 3 பங்கும் கலந்தது சிமெண்ட் மணல் கலவையாகும்

5. சிமெண்ட் காங்கிரீட் கலவை :

உட்பொருட்கள் - அளவு

ஜல்லி - 4 பங்கு

மணல் - 2 பங்கு

சிமெண்ட் - 1 பங்கு

தண்ணீர் - போதுமான அளவு

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

3. கூரைகள் :

* கூரைகள் கால்நடைகளை வெயில் மற்றும் மழையிலிருந்து பாதுகாக்க அமைக்கப்படுகின்றன.

* கால்நடைக் கொட்டகைகளின் கூரைகள் எளிமையாக இருக்க வேண்டும். மேலும் இதனை அமைக்க மலிவான பொருட்களே பயன்படுத்தப்பட வேண்டும்.

* வெப்பம் அதிகமுள்ள பகுதிகளிலுள்ள கால்நடைக் கொட்டகைகளின் கூரைகள் வெப்பத்தைக் கடத்தாத திறன் அதிகமுள்ளதாக இருக்கவேண்டும்.

* மேற்கூறிய திறன் இல்லாத கூரைகள் அமைக்கப்படும்போது வெப்பத்தை கடத்தாத இதர அமைப்புகள் கொட்டகைகளுக்குள் அமைக்கப்படவேண்டும்.

அ. கூரைகளின் அமைப்பு :

1. சாய்வான லீன் கூரை :

* இந்த வடிவ கூரைகள் எளிமையான சாய்ந்த கூரையினைக் கொண்ட கட்டிடங்களைக் கொண்டிருக்கும்.

* இந்த சாய்ந்த கூரைகளில் காற்றோட்டத்திற்காக துளைகள் அமைக்கமுடியாது.

* இந்த சாய்வான கூரைக்கொட்டகையில் ஒரு பக்க சுவர் உயரமாகவும், மற்றொரு பக்க சுவர் குட்டையாக கூரை சாய்வாக அமைய ஏதுவாக இருக்கும்.

2. கேபிள் கூரை :

* இந்த வகை கூரை அமைப்பில் இரண்டு கூரைகள் சாய்வாக அமைக்கப்பட்டிருக்கும்.

* இந்த கூரை அமைப்பில் காற்றோட்டம் இருக்கும்.

3. மானிட்டர் கூரை :

* இந்த கூரை அமைப்பில் இரண்டு கூரைகள் இருக்கும். இவற்றில் ஒரு கூரை மற்றொன்றின் மீது சாய்வாக பொருந்தியிருக்கும். இந்த இரண்டு கூரைகளுக்கும் இடையில் ஒரு அடி இடைவெளி இருக்குமாறு அமைப்பதால் காற்றோட்டத்திற்கு வழி வகை ஏற்படுகிறது.

* வெப்பமண்டலப் பிரதேசங்களுக்கு இந்த வகை கூரை அமைப்பு ஏற்றதாகும். ஏனெனில் இவ்வகை கூரை அமைப்பில் நல்ல காற்றோட்டமும் வெளிச்சமும் கிடைக்க ஏதுவாகிறது.

4. செமி மானிட்டர் கூரை :

* இந்த வகை கூரை அமைப்பிலும் ஒரு கூரை மற்றொன்றின் மீது ஒரு அடி இடைவெளியில் பொருத்தப்பட்டிருக்கும்.

5. கோதிக் வளைவு கூரை :

* இந்த வகை கூரை வளைந்த அமைப்புடையது. இதனால் பண்ணையின் சேமிப்புப் பகுதிகளுக்கு இந்த வகை கூரை அமைப்பு மிகவும் ஏற்றது.

* தீவனத்தினை சேமித்து வைக்கும் கட்டிடங்களில் இந்த வகை கூரை அமைப்பு கொண்ட கட்டிடங்கள் கட்டப்படுகின்றன.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

ஆ. கூரை வேயப்பயன்படும் பொருட்கள்

i. ஓடுகள் :

* இந்த ஓடுகள் விலை மலிவானவை மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியவை.

* இந்த ஓடுகள் வெப்பத்தினை விரைவாகக் கடத்தும் தன்மையுடையவை.

* வெப்பமண்டலப் பிரதேசங்களுக்கு இவ்வகை ஓடுகள் ஏற்றவை.

* ஆனால் காற்று அல்லது விபத்து போன்ற காரணங்களால் இவ்வகை ஓடுகள் எளிதில் சேதமடைந்து விடும்.

* குறிப்பிட்ட கால இடைவெளிகளில் இந்த ஓடுகளை மாற்றவேண்டும்.

1) வட்ட வடிவ ஓடுகள் அல்லது மங்களூர் ஓடுகள் :

இந்த ஓடுகள் செவ்வக வடிவத்தில் வெளிப்புறத்தில் கோடுகளுடன், உட்புறத்தில் இரண்டு நிப்களுடன் வடிவமைக்கப்பட்டிருக்கும்.

இந்த ஓடுகள் ஒன்றன் மீது ஒன்றாக பொருந்துமாறு அமைக்கப்பட்டு கூரைகள் வேயப்படுகின்றன.

2).நாட்டு ஓடுகள் :

* இந்த ஓடுகள் விலை மலிவானவை மற்றும் எல்லா இடங்களிலும் கிடைக்கக்கூடியவை.

* இவ்வகை ஓடுகள் வெப்பத்தை மெதுவாகக் கடத்தும்.

* இவ்வகை ஓடுகள் அரை வட்டவடிவில், வெவ்வேறு வடிவத்திலும் அளவிலும் இருக்கும்.

* இந்த ஓடுகளும் ஒன்றன் மீது ஒன்று அடுக்கினார் போன்று அமைக்கப்பட்டு கூரை வேயப்படுகிறது.

ii.ஆஸ்பெஸ்டாஸ் (சிமெண்ட்) அட்டைகள் :

* கால்நடைப் பண்ணைகளில் ஆஸ்பெஸ்டாஸ் (சிமெண்ட்) அட்டைகள் கூரைகள் அமைக்க பெரும்பாலும் பயன்படுத்தப்படுகின்றன.

* சிமெண்ட் கலவையுடன் வெவ்வேறு தாவர நார்களை சேர்த்து இந்த அட்டைகள் தயாரிக்கப்படுகின்றன.

* மேடு பள்ளங்களுடன் கூடிய இந்த அட்டைகள் வெவ்வேறு அளவுகளில் கிடைக்கின்றன.

* இரும்பினாலான டிரெஸ்கள் எனப்படும் பைப்களில் இந்த அட்டைகள் எளிதில் பொருத்தப்படு கூரை வடிவமைக்கப்படுகிறது. மேலும் இந்த அட்டைகள் ஓடுகளை விட நீண்ட காலம் உழைக்கக்கூடியவை

* ஆனால் வெயில் காலங்களில் இந்த கூரை வேயப்பட்ட கட்டிடங்கள் மிகவும் வெப்பமாக இருக்கும்.

iii. அலுமினிய அட்டைகள் :

* மேடு பள்ளங்களுடன் கூடிய அலுமினிய அட்டைகள் வெவ்வேறு தடிமன்களிலும், அளவுகளிலும் சந்தையில் கிடைக்கின்றன.

* இவை 2.5 அடி அகலத்தில் 8-12 அடி நீளத்துடன் கிடைக்கின்றன.

* இவைகள் எடை குறைவாக இருப்பதால் எளிதில் பொருத்தமுடியும்.

* அலுமினிய அட்டைகளின் மேற்பரப்பு பளபளப்பாக இருப்பதால் இவை சூரிய ஒளியினை எதிரொளிக்கின்றன. இந்த ஒளி எதிரொலிக்கும் தன்மையால் இக்கூரைகள் அமைக்கப்பட்ட கட்டிடங்கள் வெயில் காலத்தில் கூட குளிர்ச்சியாகக் காணப்படும்.

* அலுமினிய அட்டைகளின் விலை அதிகம், மேலும் உபயோகப்படுத்தப்பட்ட அட்டைகளை திரும்ப விற்பதற்கான விற்பனை வாய்ப்புகளும் அதிகம்.

* அலுமினிய அட்டைகள் துருப்பிடிக்காதவை. எனவே நீண்ட நாட்களுக்கு உழைக்கும் தன்மையுடையவை.

III. தாவர நார்களால் ஆன கூரைகள் :

* இந்த வகைக் கூரைகள் பனைமர மட்டைகள் அல்லது தென்னை மட்டைகளால் வேயப்படுகின்றன.

* சில நேரங்களில் வைக்கோல் அல்லது பச்சை வைக்கோல் கூட கூரை வேய பயன்படுத்தப்படுகிறது.

* இவை விலை மலிவானவை, மேலும் வெப்பத்தை குறைவாகக் கடத்துபவை.

* இந்த கூரைகள் வெயில் காலத்தில் கட்டிடங்களை குளிர்ச்சியாக வைக்கின்றன.

* ஆனால் இந்த வகைக் கூரைகள் நீண்ட நாட்களுக்குத் தாங்காது. எனவே இந்த கூரைகளை வருடம் ஒரு முறை அல்லது இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மாற்றவேண்டும்.

* இந்த வகைக் கூரைகள் தீ விபத்தினால் எளிதில் பாதிக்கப்படுகின்றன.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

iv. துருப்பிடிக்காத இரும்பு அட்டைகள் :

* இந்த அட்டைகள் இரும்பினால் செய்யப்பட்டு அவற்றின் மீது துத்தநாக முலாம் பூசப்பட்டிருக்கும். இவை மேடு பள்ளங்களுடன் வடிவமைக்கப்படுகின்றன.

* இவை 6 அடி X 3 அடி என்ற அளவுகளில் கிடைக்கின்றன.

* இந்த அட்டைகள் பெரும்பாலும் கால்நடைப் பண்ணைகளில் உபயோகப்படுத்தப்படுகின்றன. ஆனால் இந்த அட்டைகள் மேயப்பட்ட கட்டிடங்கள் வெயில் காலத்தில் மிக வெப்பமாகக் காணப்படும்

* இந்த அட்டைகளின் மீது வெள்ளை நிற பெயிண்டினை பூசுவது நல்லது. இவ்வாறு செய்வதால் இந்த அட்டைகளின் வெப்பம் உறிஞ்சும் திறன் குறையும்.

* இந்த அட்டைகள் உறுதியானவை, ஆனால் நீண்ட நாட்களுக்கு உபயோகிக்கும் போது துருப்பிடிக்கும்தன்மை உடையவை.

கேள்வி பதில் :

1. ஒரு வரிசை கொட்டகை அமைப்பில் எத்தனை மாடுகள் வைத்து பராமரிக்கலாம்?

12 முதல் 16 மாடுகளை வைத்து பராமரிக்காலம்

2. இருவரிசை கொட்டகை அமைப்பில் எத்தனை மாடுகள் வைத்து பராமரிக்கலாம்?

50 மாடுகள் வரை வைத்து பராமரிக்கலாம்

3. கறவை மாடுகளுக்கான கொட்டகை அமைப்பில் எவ்வகை கூரைகள் விலை குறைவானவை?

தென்னை அல்லது பனை ஓலை கூரைகள்

4. கறவைமாட்டு கொட்டகைகளில் கழிவுநீர் வடிகால் அமைக்க தேவைப்படும் சரிவின் அளவு எவ்வளவு?

1/40 முதல் 1/60 வரையில் சரிவினை கொண்டு கழிவுநீர் வடிகால் அமைக்கலாம்.

5. கறவைமாட்டு கொட்டகையில் மாடுகள் நிற்கத் தேவைப்படும் நீளம் மற்றும் அகலம் எவ்வளவு?

நீளம் - 1.5 மீ முதல் 1.7 மீ வரை அகலம் - 1.5 மீ முதல் 1.2 மீ வரை

ஆதாரம் : தமிழ்நாடு கால்நடை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment