Tuesday 24 April 2018

மல்பெரி பட்டுப்புழு கழிவுகளிலிருந்து இயற்கை உரம் :

பட்டுப்புழு வளர்ப்பில் மல்பெரி உணவாக பயன்படுவதோடு உரமாகவும் பயன்படுகிறது.புழுக்களின் கழிவு மற்றும் எஞ்சிய இலைகள், தண்டு மற்றும் இதர கழிவுகளைக் கொண்டு அங்கக உரம் தயாரிக்கலாம்.

இந்த உரத்தில் மற்ற இயற்கை உரங்களைவிட அதிக அளவ சத்துக்கள் உள்ளன. நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு மற்றும் கந்தகச்சத்துக்கள் இதில் அதிக அளவு உள்ளன. இந்த அங்கக உரமானது மல்பெரி பயிருக்கு மட்டுமல்லாது பிற பயிர்களுக்கும் பயன்படுகிறது.

ஒரு ஏக்கர் மல்பெரி தோட்டத்தில் இருந்து இலை அறுவடை முறையில் புழு வளர்ப்பு செய்தால் 3539 கிலோ கழிவுகளும், தண்டு அறுவடை முறையில் 3754 கிலோவும் வருடத்திற்கு கிடைக்கிறது. ஒரு ஏக்கர் பட்டுப்புழு வளர்ப்பில் புழுவிலிருந்துவரும் கழிவுகள் மட்டும் 2400 கிலோ கிடைக்கிறது.

உரம் தயாரிக்கும் முறை :

* பட்டுப்புழு படுக்கை கழிவுகளை 3×3 அளவுள்ள குழிகளில் இடவேண்டும். இக்குழிகள் ஒரு ஏக்கர் மல்பெரி தோட்டத்திலிருந்து கிடைக்கும் கழிவுகளை மக்கவைக்க உதவும்.

* மேலும் இதுபோன்ற 2 குழிகளை அருகருகே அமைத்தால் மாற்றி மாற்றி உபயோகிக்க வசதியாக இருக்கும்.

* இக்குழிகளில் பட்டுப்புழு படுக்கை கழிவுகள், தென்னைக்கழிவுகள் மற்றும் வேம்புக்கழிவுகள் ஆகியவற்றை சீராக பரப்ப வேண்டும்.

* இதன்மீது சாணக்கரைசல் மற்றும் தேவையான அளவு நீர் தெளிக்க வேண்டும்.

* இத்துடன் சூப்பர் பாஸ்பேட் உரத்தினை சேர்ப்பது உரத்தின் சக்தியை ஊட்டமேற்ற உதவும்.

* இம்முறையை அடுக்கடுக்காக செய்துவர வேண்டும்.

* அதாவது குழி நிரம்பி 30 முதல் 45 செ.மீ. அளவு நிலமட்டத்திற்கு மேல் வரும்வரை இதனைத் தொடர்ந்து செய்துவரவேண்டும்.

* இக்குழியில் உள்ள உரத்தை மழை மற்றும் வெயிலில் இருந்து பாதுகாக்க மேற் கூரைகள் அமைத்தல் நல்லது.

* உரம் விரைவில் மக்குவதற்கு டிரைகோடெர்மா, சூடோமோனாஸ் மற்றும் அஸ்பர்ஜில்லஸ் ஆகிய நுண்ணுயிர்களை சேர்ப்பது விரைவில் நன்மைஅளிக்கக்கூடியதாக அமையும்.

இந்த அங்கக உரத்தினை மண்ணிலிடுவதால் நன்மை செய்யும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கையும் செயல்திறனும் அதிகரிக்கிறது. மேலும் தாவரங்கள் செழித்து வளர்கின்றன.
எனவே இவ்வுரத்தினை பயன்படுத்தி சுற்றுச்சூழல் பாதுகாப்பையும் பயிர் வளர்ச்சியையும் அதிகப்படுத்தலாம்.

தகவல் : கா.ராமமூர்த்தி, செல்வி மா.ரேவதி மற்றும் ரா.பாலகுருநாதன், பட்டுப்புழுவியல் துறை, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம், கோயம்புத்தூர் -641003

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment