Wednesday 25 April 2018

'கோமாளி என்றார்கள் ஜெயிச்சிட்டேன்'- சபதத்தை நிறைவேற்றிய இயற்கை விவசாயி :

நம்மாழ்வார்மீது கொண்ட பற்றால் தரிசு நிலத்தை வாங்கி விவசாயம் செய்து வெற்றிபெற்றுளார் கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ரவி.

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி ஒன்றியத்தில் உள்ள குள்ளமாப்பட்டியைச் சேர்ந்தவர் ரவி. தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையில் பாய் வியாபாரம் செய்கிறார். நம்மாழ்வார் மேல் உள்ள ஈடுபாட்டால், தனது ஊரில் 25 லட்சம் ரூபாய் செலவு செய்து பத்து ஏக்கர் தரிசு நிலத்தை ஐந்து வருடங்களுக்கு முன்பு வாங்கியிருக்கிறார். அதோடு, மேற்கொண்டு 25 லட்சம் செலவு செய்து, அந்த நிலத்தை செப்பனிட்டதோடு, கிணறும் வெட்டியிருக்கிறார். ஆனால், ஊர்மக்கள், `இப்படி 50 லட்சத்தைக் கொண்ட எதுக்குமே லாயக்கில்லாத நிலத்துல யாராவது போடுவாங்களா. இதுல புல் பூண்டுகூட முளைக்காது. கால் ரூபா வருமானம் பார்க்க முடியாது. இயற்கை விவசாயம் செய்றேன்னு சொல்ற நீ ஒரு கோமாளிப் பய' என்று ரவியை மட்டம் தட்டி இருக்கிறார்கள்.

அதனால், வெகுண்டெழுந்த ரவி, ``நான் ஜெயிக்குற வரைக்கும் நான் கோமாளியாவே இருந்துட்டுப்போறேன். அதுவரைக்கும் என் பண்ணைக்கு கோமாளி பண்ணைன்னு பெயர் வைக்கிறேன்" என்றபடி, ஊர் மக்கள் முன்பு சபதம் போட்டிருக்கிறார். இதுகுறித்தது நம்மிடம் பேசிய ரவி, "ஊர் மக்கள்கிட்ட சபதம் போட்டுட்டேன். ஆனால், இந்த மண்ணுல கடலை, உளுந்து, கம்புன்னு நான் போட்ட எந்தப் பயிரும் சரியா விளையலை. தொடர்ச்சியா ஏமாற்றம்தான் மிஞ்சியது. என்னடா இது, ஊர்மக்கள் சொன்னது உண்மை ஆயிடுமோனு கலங்கி போனேன். போதாக்குறைக்கு, வயல்ல போட்ட வெங்காய செடிக்கு இயற்கை மருந்து தெளிச்சேன்.

அதுக்காகக் கோவிச்சுக்கிட்டு என் அப்பாவே ஊரைவிட்டுப் போயிட்டார். ஒரு கணம் ஆடிப்போயிட்டேன். இருந்தாலும், நம்மாழ்வாரை மனசுல வெச்சுகிட்டேன். புது நம்பிக்கை பிறந்துச்சு. மண்ணோடு மண்ணா கிடந்து, பல முயற்சிகளை செஞ்சேன். இப்போ, ஐந்து ஏக்கர்ல கடலை போட்டு, ஏக்கருக்கு நாற்பது மூட்டைகள் வரை கிடைச்சுருக்கு. என் சபதத்துல நான் ஜெயிச்சுட்டேன். இனி என்னை தூற்றிப் பேசிய மக்கள்தான் கோமாளிகள்" என்றார்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment