Sunday 14 October 2018


கழிவுநீரிலிருந்து சுத்தமான குடிநீர்... எப்படிச் சாத்தியம்?


நம்முடைய நீர்மேலாண்மை இப்போது போலவே எப்போதும் இருப்பின் இதுபோன்ற மாற்றுவழிகளை நோக்கி பயணிக்கவேண்டிய அவசியம் நிச்சயம் வரும்.

தண்ணீர்... இந்த உலகில் வாழும் எல்லா உயிர்களுக்கும் அதி அவசியமான ஒன்று. மூச்சுக்காற்றுக்குப் பிறகு உயிர்வாழ மிக முக்கியமானது தண்ணீர். அதை ஒரு நாளுக்கு எவ்வளவு வீணடிக்கிறோம். காலை பல் துலக்கும் போது தொடங்கி இரவில் பல் துலக்கிப் படுக்கும் வரை எத்தனை முறை தண்ணீர் குழாயை அப்படியே திறந்து விட்டுப் போகிறோம். சரியாக மூடாமல் போகும் குழாய்களிலிருந்து சொட்டும் ஒவ்வொரு துளியையும் சேர்த்தாலே ஒரு நாளுக்கு 2 வாளி சேரும். இப்படி நாம் அன்றாடம் வீணாக்கும் ஒவ்வொரு துளி நீரின் அருமையும் வறட்சிக் காலங்களில்தான் நமக்குத் தெரியவரும். முதலில் குளம் குட்டைகளிலிருந்து இலவசமாகக் கிடைத்துவந்த குடிநீர் பின்னர் குடம் 1 ரூபாய் என விற்பனைக்கு வந்தது; தற்போது அதுவே 20 ரூபாய் வரை விலையேறிவிட்டது. நகரங்களின் சாலைகளில் நாள்கணக்கில் ஊர்ந்துசெல்லும் தண்ணீர் லாரிகளையும், தண்ணீர் கேன் வாகனங்களையும் பார்த்தாலே இந்த உண்மை எளிதில் புரியும்.

நிலைமை இப்படியே தொடர்ந்தால் நேரடியாக நீர்நிலைகளிலிருந்து நீர் எடுக்கும் நிலை மாறி, கடல்நீர் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை மட்டுமே சார்ந்திருக்க வேண்டிய அவசியம் வரலாம். இப்போதே சென்னையின் குடிநீர்த் தேவையில் கடல்நீர் சுத்திகரிக்கும் மையங்கள்தாம் முக்கியப் பங்காற்றுகின்றன. இதேநிலை இன்னும் சில ஆண்டுகள் தொடர்ந்தால் அடுத்து அமெரிக்காவின் கலிபோர்னியா, சான் டியாகோ நகரங்களில் செய்ததுபோல கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்களை அமைக்கவேண்டிய அவசியமும் வரலாம். 2014-ல் அமெரிக்காவில் வறட்சி வந்தபோது மேற்கண்ட நகரங்களில் அதிநவீனக் கழிவுநீர் சுத்திகரிப்பு இயந்திரங்கள் அமைக்கப்பட்டன. அதன்மூலம் கழிவறைகளிலிருந்து வெளியேறும் நீர் சுத்திகரிக்கப்பட்டு குடிநீராகப் பயன்படுத்தப்பட்டது. இதைக் கேட்க சிலருக்கு அருவருப்பாக இருக்கலாம்; ஆனால், இதுதான் அங்கே யதார்த்தம். இதைச் சாத்தியப்படுத்தியது அறிவியல் தொழில்நுட்பம். எப்படிக் கழிவுநீர் குடிநீராகிறது?

நம்முடைய கழிவறைகளிலிருந்து நாள்தோறும் அதிகளவில் நன்னீர் வீணாகிக் கொண்டிருக்கிறது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். ஒருநாளைக்குக் கழிவறைகளிலிருந்து, மனிதக் கழிவுகளை அலசுவதற்காக மட்டுமே சராசரியாக 6 லிட்டர் முதல் 26 லிட்டர்வரை பயன்படுத்தப்படுகிறது. நம் சிறுநீரில் 90 சதவிகிதம் தண்ணீர்தான். மனிதக் கழிவில் மூன்றில் ஒரு பங்கு தண்ணீர்தான். இவற்றை நாம் அப்புறப்படுத்துவதற்காகப் பயன்படுத்துவதும் தண்ணீர்தான். இவற்றையெல்லாம் முறையாகச் சுத்திகரித்தாலே, நம்மால் ஓரளவு குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய முடியுமாம். இதைத்தான் அமெரிக்காவிலும் செய்திருக்கிறார்கள். அது எப்படி என்பதை விரிவாகப் பார்ப்போம்.

முதலில் கழிவறைகளிலிருந்து வெளியேறும் கழிவுகள் அனைத்தும் ஒரு தொட்டியில் சேகரமாகும். இதற்காகக் கழிவறையிலிருந்து நேரடியாகத் தொட்டியில் ஒரு குழாய் இணைக்கப்படும். இதில் தண்ணீர், மலம், பிற கழிவுகள் அனைத்தும் வந்துவிழும். அந்தத் தொட்டியானது பகுதி பகுதியாக வடிகட்டிச் சல்லடைகள் வைத்து 3 பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும். முதலில் நேரடியாக முழுக் கழிவுகளோடு வரும் கழிவுநீரானது இந்தச் சல்லடையின் வழியே பாய்ந்து செல்லும்போது, அதில் கலந்திருக்கும் கல், குச்சி, மனிதக் கழிவுகள், திடக் கழிவுகள் மற்றும் பிற குப்பைகள் போன்றவை அனைத்தும் முதல் நிலையிலேயே நின்றுவிடும். பின்னர் திரவக் கழிவுகள் மட்டுமே அடுத்த சல்லடையை நோக்கிச் செல்லும். இதில் சின்னச் சின்ன துகள்கள் அனைத்தும் கழிவுநீரின் அடியிலேயே தங்கிவிடும் என்பதால், கழிவின் அடர்த்தி இன்னும் குறைந்திருக்கும். பின்னர் இப்படிச் சேகரமான கழிவுப்பொருள்கள் அனைத்தும் முழுமையாக நீக்கப்படும். இந்த வடிகட்டி தொட்டியைத் தாண்டி இரண்டாவதாக, உயிரி நுண்ணுயிர் கழிவுகளைக் கொண்ட ஒரு தொட்டிக்குச் செல்லும்.

அந்தத் தொட்டியில் பாக்டீரியா போன்ற நுண்ணுயிர்கள் கொண்ட சேறு கலந்திருக்கும். அதில், இந்தக் கழிவு நீர் கலக்கும்போது கழிவுகளில் இருக்கும் நுண்துகள்கள், கரிம அசுத்தங்கள் அனைத்தும் வடிகட்டப்பட்டுவிடும். கழிவுநீரில் கலந்திருந்த அனைத்துக் கழிவுகளும் இந்த நிலையில் வெளியேறிவிடும். இந்தச் சுத்திகரிக்கப்பட்ட நீரை தொழிற்சாலைகள் பயன்பாடுகள், தோட்டப் பயன்பாடுகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.

இன்னும் குடிக்கும் அளவுக்குத் தூய்மையாக வேண்டுமென்றால், மீண்டும் நார் போன்ற மெல்லிய இழைகள் நிறைந்த தொட்டிக்குள் இது அனுப்பப்படும். இதன் வழியே நீர் செல்லும்போது மீதமிருக்கும் நுண்துகள்களும் தங்கிவிடும். தற்போது இந்த நீரை குடிக்கப் பயன்படுத்தலாம். ஆனால், கழிவறை நீரிலிருந்து வந்த நீர் என்பதால் பலருக்கும் குடிக்கத் தயங்குவார்கள். எனவே, இயற்கையான நீர்நிலைகளில் இவற்றைக் கலந்துவிடலாம். அவை தூய்மையாக இருக்கும்பட்சத்தில், இந்த நீர்வரத்தால் அதிலிருக்கும் உயிரிகள் இன்னும் செழிப்பானதாக மாறும். பின்னர் அங்கிருந்து மீண்டும் குடிநீர்த் தேவைகளுக்காக எடுத்துக்கொள்ளலாம். மீண்டும் சில சுத்திகரிப்பு பணிகள் நடந்துமுடிந்தபின் நம்வீட்டுக் குழாய்க்கு வந்துசேரும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment