Tuesday 30 October 2018

சிறப்பாக பராமரித்ததற்காக தமிழக அரசின் விருதுபெற்ற மாடு : ஐந்து தலைமுறை கண்ட 22 வயது பசு மரணம் :

மதுரை அருகே அலங்காநல்லூரில் தமிழக அரசின் விருதுபெற்ற ஐந்து தலைமுறைகள் கண்டு 14 கன்றுக்குட்டிகளை ஈன்ற 22 வயதான பசு மாடு நேற்று உடல்நலக் குறைவால் இறந்தது. அந்த பசு மாட்டின் உடலை அலங்காநல்லூர் ஊரே திரண்டு எடுத்து சென்று அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

ஜல்லிக்கட்டுக்கு புகழ்பெற்ற அலங்காநல்லூரில் கால்நடை வளர்ப்பும் பிரதானம். இந்த ஊரை சேர்ந்த விவசாயி பார்த்திபன். இவர் வீட்டிலேயே மாட்டுப் பண்ணை வைத்து பால் வியாபாரம் செய்கிறார். தற்போது 16 பசு மாடுகளை வைத்து பராமரிக்கிறார். இவரிடம் உள்ள பெத்தனாட்சி என்னும் பசு மாட்டுக்கு 22 வயது ஆனது. மிகவும் வயதாகி விட்டதாலும், உடல் நலக் குறைவாலும் இந்த பசுமாடு மெலிந்திருந்தது.

14 கன்றுகளை ஈன்ற பெத்தனாட்சி :

பொதுவாக பசு மாடுகளுடைய சராசரி வயது 16 தான். மனிதர்களிலேயே கொள்ளுப் பேரன், பேத்தி, எள்ளு பேரன், பேத்தியை பார்ப்பது மிக மிக அபூர்வம்.

ஆனால், இந்த பெத்தனாட்சி 22 வயதைக் கடந்து மகள்கள், எள்ளு பேரன்கள், பேத்திகள், கொள்ளு பேரன்கள், பேத்திகள் உள்பட 14 கன்றுக்குட்டிகளை ஈன்றுள்ளது. 5 தலைமுறைகளை கண்டுள்ள இந்த பசு மாட்டுக்காக தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை, பார்த்திபனுக்கு சிறந்த மாடு பராமரிப்பாளர் விருது வழங்கி கவுரவித்துள்ளது.

மதுரை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ், சுதந்திர தினழாவில் பெத்தனாட்சி மாட்டிற்கு சிறந்த பசு விருது வழங்கி கவுரவித்தார். இந்த மாட்டின் பிறந்த நாளை பார்த்திபன், ஒவ்வொரு ஆண்டும் மாட்டுப் பொங்கல் அன்று கோலாகலமாக கொண்டாடி வந்தார். அழைப்பிதழ்கள் அச்சடித்து உறவினர்களையும், ஊர்க்காரர்களையும் அழைத்து அந்த பசுமாட்டிற்கு கேக் வெட்டி அனைவருக்கும் விருந்து வழங்கி மகிழ்வார்.

வயதான பெத்தனாட்சி மீது பார்த்திபன் வைத்துள்ள பாசத்தை பார்த்து, அந்த விழாவில் கலந்து கொள்ள வரும் ஊர் மக்கள், உறவினர்கள் நெகிழ்ச்சியுடன் வாழ்த்திச் செல்வர்.

ஊர் மக்கள் ஆறுதல் :

இந்நிலையில் பார்த்திபனின் 22 வயதான பெத்தனாட்சி பசுமாடு நேற்று உடல்நலக் குறைவால் திடீரென இறந்தது. இதனால் மிகவும் சோகமடைந்த பார்த்திபன் மனிதர்கள் இறந்தால் எப்படி அடக்கம் செய்வார்களோ அதுபோல, தனது உறவினர்கள், நண்பர்கள் அனைவரையும் அழைத்து இறந்த பெத்தனாட்சி மாட்டின் உடலுக்கு மஞ்சள் சேலை கட்டி தீபாராதனை காட்டி ஊர்வலமாக எடுத்துச் சென்று வயலில் அடக்கம் செய்தார். பசு மாட்டின் மீது பார்த்திபன் வைத்திருந்த அன்பை பார்த்து நெகிழ்ந்துபோன ஊர் மக்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.

விவசாயியை வாழவைத்த பசு :

பார்த்திபன் கூறியதாவது: பொதுவாக பசு மாடுகள், கன்றுகள் ஈனுவது நின்றுவிட்டாலோ, பால் தருவது குறைந்தாலோ பராமரிக்க முடியாமல் கிடைக்கும் விலைக்கு அடிமாடாக விற்று விடுவர். ஆனால், பெத்தனாட்சியை விற்காமல் வீட்டில் வயதான பெற்றோரை வைத்து பாராமரிப்பதுபோல பராமரித்து வந்தேன். 25 ஆண்டுகளுக்கு முன் நான் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்தேன். அப்போது, இந்த பசுவின் தாய் மாட்டை வாங்கினேன். அந்த மாடு ஈன்ற கன்றுக்குட்டிதான் இந்த பெத்தனாட்சி. இந்த பசு பிறந்த பிறகுதான் என் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்பட்டது.

இந்த மாடு, அதன் வாரிசுகளுடைய கன்றுகளின் பாலை விற்றுதான் என்னுடைய குழந்தைகளை படிக்க வைத்தேன். நிலங்கள் வாங்கினேன். அந்த நன்றிக் கடனுக்காகத்தான் வயதானாலும் அதை விற்காமல் எனது தாயைப் போல் பராமரித்து வந்தேன். வயதாகி விட்டதால் பெத்தனாட்சியால் எழுந்து நிற்க முடியாது.

மூனு, நாலு பேர் சேர்ந்து தூக்கித்தான் நிற்க வைப்போம். சிறிது நேரம் நிற்கும். பிறகு கீழே விழுந்து விடும். நல்ல காரியங்களுக்கு வீட்டில் உள்ள பெரியவங்களிடம் உத்தரவு கேட்பதுபோல, எனது வீட்டில் நடந்த அத்தனை நல்ல காரியங்களுக்கும் இந்த பசுவிடம் உத்தரவு கேட்டுத்தான் நடத்தினேன்.

அந்த காரியங்களும், எந்த தடங்கலும் இல்லாமல் நடந்து முடிந்தன. கடந்த 3 மாதமாகவே உடல்நலக் குறைவால் எனது பெத்தனாட்சி பாதிக்கப்பட்டிருந்து. கால்நடை மருத்துவர்களை அழைத்து சிகிச்சை அளித்தேன். இருந்தாலும் பெத்தனாட்சியை காப்பாற்ற முடியவில்லை. நேற்று காலை எங்களை தவிக்க விட்டுப் போய்விட்டது என்றார்.

https://www.facebook.com/photo.php?fbid=174492199839579&set=a.113829515905848&type=3&size=700%2C433

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment