Tuesday 16 October 2018

மாதிரி வேளாண் காடுகள் :

1. மூன்றடுக்கில் பசுந்தழை உற்பத்தி
2. வேளாண் மர மேய்ச்சல் மாதிரியை உருவாக்குதல்
3. முல்லை மேய்ச்சல் நிலம்
4. தென்னந்தோப்பில் தீவனப்பயிர் உற்பத்தி
5. பழத்தோப்பிற்கு உகந்த வேளாண்காடு மாதிரிகள்
6. மர ஊடுபயிர்
7. தீவன மர நாற்றுகள் தயாரிக்கும் முறை
8. விதை நேர்த்தி செய்யும் முறை

மூன்றடுக்கில் பசுந்தழை உற்பத்தி :

வேளாண் காடு வளர்ப்பு முறையில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியை எந்த அளவிற்கு இலாபகரமாகப் பயன்படுத்த இயலுமோ அந்த அளவிற்குப் பயன்படுத்துதல் வேண்டும். மானாவாரி நிலப்பகுதிகளில் 4 முதல் 5 மாதங்கள் வரை தான் வேளாண்மை மேற்கொள்ளப்படுகிறது. எஞ்சிய 7-8 மாதங்கள் இவ்வகை நிலங்கள் பயன் இன்றி வீணாக உள்ளன. இத்திறந்த நிலப்பரப்பானது மண் அரிமானத்திற்கும் இலக்காகிறது.

கால்நடை வளர்ப்பிற்கு உகந்த தீவன உற்பத்தியில், புரதச்சத்து மிகுந்த பசுந்தீவனம், நார்ச்சத்து மிகுந்த தீவனம் ஆகிய இரண்டையும் உற்பத்தி செய்ய வேண்டியுள்ளது. மானாவாரி நிலங்களில் வேளாண் பயிருடன் இணைத்து, புரதச்சத்து அளிக்கும் மர இலைகளையும், நார்ச்சத்து மிகுந்த புல் வகைகள் கொண்ட மேய்ச்சல் தரையையும் இணைத்து, வேளாண் மர மேய்ச்சல் தரையை உருவாக்கிக் கூடுதல் வருவாய் பெறலாம்.

வேளாண் மர மேய்ச்சல் மாதிரியை உருவாக்குதல் :

* சுமார் 0.25 எக்டர் நிலப்பரப்பில் வேளாண் மர மேய்ச்சலை எவ்வாறு உருவாக்கலாம் என்பதை இனி அறிவோம். 0.25 எக்டர் என்பது 2500 ச.மீ. அதாவது 50 மீ x 50 மீ அளவு கொண்ட பகுதி எனக் கொள்ளலாம். இந்நிலத்தினைச் சுற்றி ஒரு அடுக்கில் 5 மீட்டர் இடைவெளியில் மிதமானது முதல் சற்று உயரமாக வளரும் பன்னோக்கு மரங்களை நட வேண்டும். பசுந்தீவனம், விறகு மற்றும் மரச்சட்டங்கள் அளிக்கவல்ல பூவரசு, வாகை, வேலன், மரமல்லி, வேம்பு, பீநாரி போன்ற மரங்களை இவ்வாறு நடலாம்.

* இவ்வகை மரங்களுக்கிடையே உள்ள 5 மீ இடைவெளியில் அடுத்த அடுக்காக சுபாபுல், கிளைரிசிடியா, மல்பெரி, கல்யாணமுருங்கை போன்ற குறுமரங்களை நடலாம். சுமார் 10 செ.மீ இடைவெளியில் அவைகளை 3 முதல் 4 வரிசைகளாக நடலாம். இரு பெரு மரங்களுக்கிடையே இவ்விதம் சுமார் 150 முதல் 200 குறு மரங்களை நடலாம். இம்மரங்களை மார்பு அளவு உயரம் வளர்ந்தவுடன் மேற்புறம் வெட்டிவிட வேண்டும். இதனால் புதிய இலைகள் முளைத்து அதிக அளவு பசுந்தீவனம் கிடைக்கும்.

* இந்த வரிசையை ஒட்டி உட்புறமாக 5 மீட்டர் அகலத்திற்கு பாத்தி எடுத்து 9 X 5 மீ அளவுள்ள சிறு பாத்திகளாகப் பிரிக்க வேண்டும். இப்பாத்திகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் ஈரத்தன்மை நீண்ட நாட்களுக்குப் பாதுகாக்கப்படும். இந்த பாத்திகளில் அடுத்தடுத்து, ஒரு பாத்தியில் புல் வகையையும் மறு பாத்தியில் பயறுவகைத் தீவனத்தையும் பயிர் செய்யலாம். இந்த அமைப்பின் நடுவில் உள்ள நிலப்பரப்பில் வழக்கம்போல மானாவாரி வேளாண்மைப்பயிர் வளர்க்கலாம். இதன் மூலம் 65 சதவீத நிலப்பரப்பு, வேளாண் பயிர் செய்யவும், 35 சதவீத நிலப்பரப்பு மேய்ச்சல் தரைக்கும் பயன்படுகின்றன.

* மழைக்காலத்தில் மேய்ச்சல் தரையில் புல் மற்றும் பயறுவகைத் தீவனங்கள் நன்கு வளரும். அவற்றை அறுவடை செய்து 30 முதல் 40 சதவிகிதம் பயறுவகைத் தீவனம் மற்றும் 60-70 சதவிகிதம் பசும் புல் தீவனம் எனக் கலந்து கால்நடைகளுக்கு அளிக்கலாம். ஒவ்வொரு பாத்தியாக அறுவடை செய்து 30 முதல் 40 நாட்களில் ஒரு சுற்று அறுவடையை முடிக்கலாம்.

* இக்காலத்தில் குறு மர இலைகளை வெட்டி நிழலில் உலர்த்தி சேமித்துக்கொள்ளலாம். முன்கோடைப் பருவத்தில் மர இலைகளைத் தீவனமாக உபயோகிக்கலாம். முதல் சுற்றில் மாதத்திற்கு ஒரு முறையும், இரண்டாவது சுற்றில் 2 மாதத்திற்கு ஒரு முறையுமாக மத்திய கோடைக்காலம் வரை இலைத் தீவனங்களைக் குறு மரங்களிலிருந்து பெறலாம். இத்துடன் ஏற்கெனவே உலர்த்திச் சேமித்த இலைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.

* கோடைக்காலத்தில் மேய்ச்சல் நிலமும், குறு மரங்களும் தீவனம் அளிக்காதபொழுது பெருமரங்களின் இலைகளைக் கழித்துக் கால்நடைத் தீவனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் உலர்த்தப்பட்ட வேளாண் பயிர்க் கழிவுகளான நிலக்கடலைக் கொடி, துவரை மார், கொள்ளுக்கொடி, சோளத்தட்டை போன்றவற்றையும் கோடையில் கால்நடைகளுக்கு அளித்து அவற்றின் உற்பத்தி பாதிக்காமல் கவனித்துக் கொள்ளலாம்.

* இவ்வாறாக மூன்றடுக்குத் தீவன உற்பத்தி முறையில் ஒவ்வொரு வருடமும் ஒரு எக்டர் பரப்பில் சுமார் 12-15 ஆடுகளை எளிதில் வளர்த்துக் கூடுதல் வருவாய் பெறலாம். மண் அரிமானம் இதன் மூலம் தடுக்கப்பட்டு, மண் வளமும் காக்கப்படுகின்றது. உயிர்வேலி மூலம் வேளாண் பயிர்களைப் பாதுகாத்து எக்காலத்திலும் பசுந்தீவனப் பற்றாக்குறை ஏற்படாமல் தவிர்க்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

முல்லை மேய்ச்சல் நிலம் :

* முல்லை மேய்ச்சல் நிலம் என்பது காடுகளும், அவற்றுடன் சேர்ந்த மேய்ச்சல் பகுதிகளாகும். மரங்களும், புல்வெளியும் இணைந்த நிலம் என்றும் அதனை கூறலாம்.

* இம்முறையில் வளர்க்கப்படும் மரங்களும், தீவனப் பயிர்களும் குறைந்த நீர் வசதியுடன் குன்றுப் பகுதிகளிலும் நன்கு வளர்ந்து பயனளிக்கக்கூடியவை.

* இம்மாதியான முறையில் மண் வளத்தைப் பொறுத்து, கருவேல், வெள்வேல், சீமைக்கருவேல், சவுக்கு, வாகை, சவுண்டல், உதியன் போன்ற மரங்களை வளர்க்கலாம். மரங்களுக்கு இடையில் கொளுக்கட்டை, தீனாநாத், கினியா போன்ற புல்வகைகளை முயல்மசால், வேலிமசால், சிரட்ரோ, செண்ட்ரோ போன்ற பயறு வகைகளுடன் வளர்க்கலாம்.

* மரங்களை வளர்க்க முதலில் கருவேல், வெள்வேல் போன்ற மரங்களின் விதைகளை சுடுநீரில் 24 மணிநேரமும், பின்பு குளிர்ந்த நீரில் 48 மணிநேரமும் ஊற வைக்க வேண்டும். பின்பு 3 மீ x 3 மீ இடைவெளியில் குழிகளை வெட்டி குழிக்கு 10 அல்லது 12 விதைகளை விதைக்க வேண்டும். அவை முளைத்த பிறகு நன்கு வளர்ச்சியுற்ற செடிகளை விட்டு விட்டு மற்றச் செடிகளை அகற்றி விட வேண்டும். ஒரு எக்டரில் வளர்க்கப்படும் மரங்களிலிருந்து சுமார் 5 முதல் 10 டன் தழைத்தீவனத்தையும் கருவேல், வெள்வேல் மரங்களிலிருந்து 8-10 டன் வரை காய்களையும் பெறலாம். வாகை போன்ற மரங்கள் மெதுவாக வளரும். ஆகவே 6 முதல் 7 வருடங்கள் அவற்றில் கிளைகளைக் கழிக்காமல் இருந்தால் பின்னர் வருடம் ஒருமுறை தழைகளைப் பெறலாம். சவுண்டல் மரத்திலிருந்து வருடத்திற்கு 2-3 முறை தழைகளைக் கழித்து கால்நடைகளுக்கு அளிக்கலாம்.

* மரங்களுக்கிடையே கொளுக்கட்டைப்புல் இரகங்களை வளர்க்கலாம். இவ்வகை வறட்சியைத் தாங்கக் கூடியது. ஒருமுறை விதைத்தால் 7 முதல் 10 வருடங்கள் வரை நல்ல மகசூல் தரும். மறுவிதைப்பு செய்யவேண்டிய அவசியம் இல்லை. ஒரு ஏக்கருக்கு 3 கிலோ விதை தேவை. வரிசையாக 30 செ.மீ. இடைவெளியில் விதைகளைப் பதிக்க வேண்டும். ஒரு அறுவடை முடிந்த பின்னர் மேலுரமாக 10 கிலோ தழைச்சத்து இட வேண்டும். கோடையில் காய்ந்து காணப்பட்டாலும் மழைக்காலத்தில் இது மீண்டும் செழித்து வளர்ந்துவிடும். ஆண்டுக்கு 10 டன் வரை இதில் தீவனம் கிடைக்கும். மரங்களுடன் புல் வகைகளும் இணைந்த முல்லை மேய்ச்சல் நிலத்தில் ஒரு ஏக்கரில் 2 மாடுகள் அல்லது 15-16 ஆடுகள் வளர்க்கலாம்.

* ஸ்டைலோ என்கின்ற முயல்மசால் போன்ற பயறு வகைத் தீவனங்களையும் கொளுக்கட்டைப்புல்லுடன் சேர்த்து வளர்க்கலாம். மழைக்காலம் துவங்கும்பொழுது, நிலத்தை 2 அல்லது 3 முறை உழுது, எக்டருக்கு 30 கிலோ தழைச்சத்து மற்றும் 60 கிலோ மணிச்சத்து இடவேண்டும். இப்பயிரை 65 முதல் 75 நாளில் அறுவடை செய்யலாம். கால்நடைகளை மேய்ச்சலுக்கும் அனுமதிக்கலாம். இப்பயறுவகைத் தீவனம் மூலம் கால்நடைகளுக்கும் தரமான புரதச் சத்து கிடைக்கும்.

* மழை அதிகம் பெய்யாத மானாவாரிப் பகுதிகளில் கால்நடைகளுக்குத் தேவையான தீவனம் பெற முல்லை மேய்ச்சல் தரை, சிறந்த முறையாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

தென்னந்தோப்பில் தீவனப்பயிர் உற்பத்தி :

* தமிழ்நாட்டில் 175 இலட்சம் எக்டர் பரப்பளவில் தென்னந்தோப்புகள் உள்ளன. தென்னை மரங்களுக்கிடையே சுமார் 8.0 மீட்டர் இடைவெளி விடப்படுகின்றது. ஆனால் தென்னை மரங்களின் வேர்கள் பக்கவாட்டில் இருபுறமும் தலா 2.0 மீ கீழ்நோக்கி 10 மீ வரையும் செல்கின்றன. எனவே இரண்டு மரங்களுக்கிடையே ஏறத்தாழ 40 மீ நிலப்பரப்பு பயன்படாமல் உள்ளது. தமிழ்நாட்டில் தென்னை மர வளர்ப்பில் உள்ள 175 இலட்சம் எக்டரில் 875 ஆயிரம் எக்டர் நிலப்பரப்பு இவ்வாறு பயன்படுத்தப்படாமல் உள்ளது. பெரும்பாலான விவசாயிகள் தென்னந்தோப்பை குத்தகைக்கு விட்டுவிடுவதால் இந்த நிலவளம் பயனின்றி விரயமாக்கப்படுகிறது.

* தென்னந்தோப்பில் நல்ல நிலவளமும், ஈரப்பதமும் இருந்தாலும் அதிகப்படியான நிழல், தாவரங்களின் வளர்ச்சியைக் குறைத்து விடக்கூடும். இதனால் தென்னை மரங்களுக்கிடையே பயிரிடத் தேர்ந்தெடுக்கப்படும் பசுந்தீவன வகைகள் நிழலை விரும்பக் கூடியதாகவும், குறைந்த அளவில் கிடைக்கும் சூரிய சக்தியை விரயமின்றிப் பெறுவதற்கு ஏற்றதாக அகலமான இலைகளைக் கொண்டதாகவும் இருப்பது நல்லது.

* தென்னை கன்றுகள் நட்ட நாளிலிருந்து சுமார் 7 வருடங்களுக்கும், அதன் பிறகு 15 வருடங்களுக்கு பின்பும், சூரிய வெளிச்சம் தரையில் முழுவதுமாக கிடைக்கப்பெறும் என்பதால், அநேகமாக எல்லா பசுந்தீவனப்பயிர்களையும் தென்னந்தோப்புகளில் இக்காலகட்டத்தில் வளர்க்கலாம். 7 வருடம் முதல் 15 வருடம் சூரிய ஒளி தடைபடுவதால், நிழலைத்தாங்கி வளரக்கூடிய பசுந்தீவனப் பயிர்களைத் தேர்வு செய்து வளர்க்க வேண்டும்.

* தென்னை மரங்களுக்கிடையே புல்வகைகளை மட்டும் பயிரிடுவது போதாது, பயறு வகைத் தீவனங்களையும் சேர்த்துப் பயிரிட்டால்தான் மண்வளம் காக்கப்படும். பொதுவாகக் கம்பு நேப்பியர், வீரிய வகைப்புல் வகைகள் மற்றும் செட்டேரியா, கினியாப்புல் போன்றவற்றையும் டெஸ்மோடியம், கலப்பகோனியம், காராமணி, செண்ட்ரோ, சிரட்ரோ போன்ற பயறு வகைத் தீவனங்களையும் பயிரிடலாம். வீரிய ஒட்டுப்புற்கள் எக்டர் ஒன்றுக்கு 50-75 டன்னும், பயறு வகைப்பயிர்கள் 30 டன் வரையும் பசுந்தீவனம் கொடுக்கவல்லவை.

* இதன் மூலம் ஒரு எக்டரில் 4 மாடுகளையோ அல்லது 20-25 ஆடுகளையோ பராமரிக்க இயலும். இம்முறையில் ஆடுகளின் வளர்ச்சி விகிதம் நாளொன்றுக்கு 50-55 கிராம் வரை இருக்கும். கால்நடைக் கழிவுகளைத் தென்னந் தோப்பில் இடுவதால் தீவன உற்பத்தியும், தென்னை உற்பத்தியும் அதிகமாகும்.

* மரத்திற்கு மரம் உள்ள 4 மீ இடைவெளியில் புல் மற்றும் பயறு வகைத் தீவனங்களை அடுத்தடுத்த இடைவெளியில் மாற்றிப்பயிரிடலாம் அல்லது 3 - 4 வரிசை சூபாபுல் அல்லது கிளைரிசிடியா கன்றுகளை ஒரு அடி நீளத்திற்கு 3 - 4 கன்றுகள் என்ற அளவில் நட்டு தோப்பைச் சுற்றிலும் நெருக்கமாக இவைகளை 2-3 வரிசையில் உயிர்வேலியாகவும் நடலாம். தென்னந்தோப்பில் தீவனப்பயிர் வளர்ப்பதால் களை எடுக்கும் செலவு குறைந்து, உரச் செலவு சுமார் 69 சதவீதம் குறையும். தென்னை மகசூல் சுமார் 10-15 சதவீதம் கூடுதலாகவும் பெற முடியும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

பழத்தோப்பிற்கு உகந்த வேளாண்காடு மாதிரிகள் :

* பழத்தோட்டங்களை அமைப்பதில் விவசாயிகள் பெரும் உற்சாகத்துடன் ஈடுபட்டு வருகின்றனர். பழமரங்களுக்கிடையிலும் வேளாண் பயிர்களுடன் தீவனப்பயிர்களைச் சேர்த்து வளர்க்கலாம். பழமரங்களின் வேர் அமைப்பு, மூன்று வகைகளில் வேறுபடுகிறது. அதற்கேற்ப வேளாண்காடுகள் மாதிரிகளையும் மாற்றி அமைத்துப் பயன் பெறலாம்.

* முதல் வகை, மானாவாரியில் நீரைக்கொண்டு பயிரிடப்படும் மா, சீதா, இலந்தை மற்றும் புளி போன்ற பழமர வகைகளாகும். இவற்றின் வேர்கள் பூமியில் நல்ல ஆழத்தில் சென்று நீர் மற்றும் பிற சத்துக்களை உறிஞ்சுகின்றன. பொதுவாக மாமரங்கள் 10 மீ x 10 மீ அல்லது 12 மீ x 12 மீ இடைவெளியில் நட்டு வளர்க்கப்படுகின்றன. கன்றுகளை நட்டபின் சிலர் பெரும்பாலும் அந்நிலத்தில் வேளாண்மை செய்வதில்லை. சிலர் 3-4 வருடம் சோளம், கொள்ளு, கேழ்வரகு, நிலக்கடலை போன்ற பயிர்களை மகசூல் செய்து பழமரங்கள் காய்க்கத் தொடங்கியவுடன் மெத்தனமாக இருந்து விடுகின்றனர். அதற்குப் பிறகும் கூடப் பழமரங்களுக்குப் பாதிப்பின்றி விவசாயம் செய்ய இயலும். ஆனால், தொடர்ந்து வேளாண் பயிர்களை வளர்த்தால் ஒவ்வொரு ஆண்டும் பயிர் செய்ய வேண்டும். அடிக்கடி களை எடுத்து வர வேண்டும். மாறாகப் பல்லாண்டுத் தீவனப்பயிர்களைச் சாகுபடி செய்தால், களைகள் அந்நிலத்தில் வளராது. ஒவ்வொரு வருடமும் பயிர் செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

* மாமரங்களுக்கிடையே நடுவில் சுமார் 2-3 மீ இடைவெளியில் அவற்றின் வேர் இருக்காது. இப்பகுதியில் சுபாபுல், கிளைரிசிடியா, அகத்தி போன்ற குறு தீவன மரங்களை மர ஊடுபயிர் முறையிலும், பாதையோரப் பயிர் வளர்ப்பு முறையிலும் நடலாம். இந்த வரிசையின் அகலம் 3 முதல் 3.5 அடி வரை இருக்கவேண்டும். இதில் 4 முதல் 5 வரிசைகளில் குறு தீவன மரங்கள் இருக்கவேண்டும். மானாவாரி நிலத்தைச் சுற்றி இரண்டு வரிசையில் கிளைரிசிடியா மரங்களை நடுவதால், அவை நல்ல உயிர் வேலியாகவும் பயன்படும். இவை பழத்தோப்புடன் இணைந்த தீவன மரக்காடுகள் எனப்படும். அத்துடன், ஒரு வரிசையில் மரத்துக்கு மரம் உள்ள இடைவெளியில் மானாவாரியில் மகசூல் தரும் கொளுக்கட்டைப்புல் ஒரு வரிசை இடைவெளியிலும், மறு வரிசை இடைவெளியில் முயல் மசால் என மாற்றி மாற்றி அமைத்துப் பழத்தோப்புடன் இணைந்த முல்லை மேய்ச்சல் காடுகளையும் உருவாக்கலாம்.

* கொய்யா, மாதுளை போன்ற சில வகைப் பழமரங்களுக்கு பூக்கும் தருணத்திலும், காய்கள் விடும் தருணத்திலும் தண்ணிர் தேவைப்படுகிறது. இந்த வகை பழத்தோப்புகளிலும், மர இடைவெளிகளில் பசுந்தீவன உற்பத்திக்கு வேளாண் காடுகளை உருவாக்கலாம்.

* மூன்றாவதாக, வருடத்தின் எல்லா நாட்களிலும் நீர்ப்பாசனம் தேவைப்படும் வாழை, எலுமிச்சை மரங்கள் அதிகப்படியான ஈரத்தை உபயோகிக்க, தோப்பின் உள்ளே இடையிடையே ஒட்டுப்புற்களைப் பயிர்செய்யலாம். பப்பாளி மரவரிசைகளிடையே இருபுறமும் 1x1 மீட்டர் இடைவெளியில் சுபாபுல் நடவு செய்து, இடைப்பட்ட பகுதியில் வேளாண் பயிரும் பயிர்செய்யலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

மர ஊடுபயிர் :

* விவசாயப்பயிர் வளர்ப்பில் ஊடுபயிர்ச் சாகுபடி முறை, ஏற்கெனவே வழக்கத்தில் உள்ளது. குறிப்பிட்ட நிலப்பரப்பிலிருந்து கூடுதல் வருவாய் ஈட்ட, இம்முறை உதவுகிறது. மானாவாரி நிலக்கடலைச் சாகுபடியில் ஊடாக, துவரை மற்றும் ஆமணக்கு சாகுபடி செய்வது ஒரு உதாரணம்.

* ஒராண்டு ஊடுபயிருக்குப் பதிலாக, பிரதான விவசாயப் பயிரின் ஊடே பல்லாண்டுப்பயிரான மரங்களை சாகுபடி செய்யும் முறையே, மர ஊடுபயிர்ச் சாகுபடி எனப்படுகிறது. மானாவாரி நிலங்களில் தீவன மரங்களை குறிப்பிட்ட இடைவெளியில்,நீளவாக்கில் கிழக்கு-மேற்கில் நெடுக்காக ஊடுபயிராக அமைத்து, அம்மர வரிசைகளின் இடைவெளியில் மானாவாரி வேளாண்மையை இம்முறையில் வழக்கம் போல் மேற்கொள்ளலாம்.

* மர வரிசைகளின் எண்ணிக்கையை நிலப்பரப்பின் சரிமானம் மற்றும் கால்நடைகளின் எண்ணிக்கையைக் கொண்டு நிர்ணயிக்கலாம். ஒரு மர வரிசையில் 4 முதல் 5 மர வகைகளை உள்ளடக்கி அகல வரிசையை உருவாக்க வேண்டும். சாய்வான நிலப்பரப்பில் வரிசைகளுக்கிடையே இடைவெளி சுமார் 3 (அல்லது) 4 மீட்டர் இருக்கலாம். சமதளப்பரப்பில் இது சுமார் 8-10 மீட்டர் இருக்கலாம். தீவன மரங்களுக்கிடையே இடைவெளி சுமார் 10 செ.மீ இருக்கும்படி நெருக்கமாக மரக்கன்றுகளை நடவேண்டும்.

* தீவன மரங்களில் அதிக ஊட்டச்சத்து உடைய சுபாபுல், மல்பெரி, கிளைரிசிடியா மற்றும் வேலிமசால் போன்றவை ஏற்றவை. இம்முறையில் ஒன்றுக்கும் மேற்பட்ட மரவகைகளைக் கலந்து வளர்க்க வேண்டும்.

* மர ஊடுபயிர் சாகுபடியின் வெற்றி (1) சரியான மரவகைகளைத் தேர்ந்தெடுப்பதிலும், (2) சரியான முறையில் அவற்றை நடுவதிலும், (3) முறையான மேலாண்மையைக் கையாள்வதிலும் உள்ளது.

* மர வகைகள் எளிதில் பயிர் செய்யக்கூடியதாகவும், வேர்கள் பக்கவாட்டில் பரவாமல் நிலத்தில் ஆழமாக ஊடுருவக்கூடியதாகவும் இருக்கவேண்டும். காற்றிலிருக்கும் தழைச்சத்தை வேர் முடிச்சுக்கள் மூலம் மண்ணில் நிலைப்படுத்தும் தன்மையும் அவசியம்.

* நேரடியாக விதைகளை ஊன்றுவதைவிட, நாற்றங்கால்களில் மரக்கன்றுகளைத் தயார் செய்து அவற்றை மழைக்காலத்திற்கு முன்பு நடுவது சிறப்பானது. கிளைரிசிடியா மற்றும் கல்யாணமுருங்கை போன்ற மரங்களைப் போத்துக்கள் மூலமும், சுபாபுல்லை விதைகள் மூலமும் விருத்தி செய்யலாம். நெருக்கமாகச் சுமார் 10செ.மீ. இடைவெளியில் மரக்கன்றுகளை நடுவதால், தண்டுப்பகுதி பெருக்காமல் இருக்கும். இலைகளும் அதிகமாக இருக்கும். சுபாபுல் மற்றும் கிளைரிசிடியா மரக்கன்றுகளின் வேர்களை ரைசோபியம் நுண்ணுயிர்க் கலவையில் நனைத்து நட்டால் சுமார் 90 சதவீதக் கன்றுகள் விரைவாகவும், எளிதாகவும் வளரும், மரவரிசைகளை, கிழக்கு மேற்காக அல்லது காற்று அடிக்கும் திசைக்கு குறுக்கே அமைக்க வேண்டும்.

இவ்வாறு வளர்க்கப்படும் மரங்களிலிருந்து கிடைக்கும் இலைகளை இருவிதமாகப் பயன்படுத்தலாம்.

(1) வேளாண் பயிர்ச் சாகுபடி தருணத்தில், மரங்களில் இளம் கிளைகள் வளர வளர அவற்றை வெட்டி, பசுந்தாள் உரமாகப் பயன்படுத்தலாம்.வேளாண் பயிர்ச் சாகுபடி முடிந்த பின், கழிக்கும் இலைகளை கால்நடைகளுக்குத் தீவனமாகப் பயன்படுத்தலாம் அல்லது

(2) மர இலைகள் முழுவதையும் கால்நடைகளின் கழிவுகளுடன் உரமாக வேளாண்பயிருக்கு இடலாம்.

மர வரிசைகளை கிழக்கு மேற்காக அமைப்பதால் மரங்களின் நிழல் வேளாண் பயிரின்மேல் விழாமல் தவிர்க்கலாம், காற்று அடிக்கும் திசைக்குக் குறுக்கே அமைப்பதால் மண்ணின் ஈரப்பதத்தைப் பாதுகாக்கலாம், மண் அரிமானத்தையும் தவிர்க்கலாம். இரண்டாவது வருடத்திற்குப் பிறகு மரங்களின் வேர் ஆழமாகச் சென்றுவிடுவதால், வேளாண் பயிரின் சாகுபடி அளவு, எவ்விதத்திலும் பாதிக்கப்படுவதில்லை.

தீவன மர நாற்றுகள் தயாரிக்கும் முறை :

நல்ல விதைகள் நல்ல மரங்களை உண்டாக்குகின்றன. நாற்றுக்கள் உற்பத்தி செய்ய நல்ல விதைகள் தேவை. ஒரு பாத்திரத்தில் தண்ணிர் எடுத்துக்கொண்டு விதைகளைப் போடவும். நல்ல விதைகள் நீரில் மூழ்கிவிடும். இப்படிப்பட்ட நல்ல விதைகளை மட்டும் உலர்த்தி பின்பு விதை நேர்த்தி செய்து நாற்றுகளைத் தயாரிக்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

விதை நேர்த்தி செய்யும் முறை :

மர விதைகள் விரைவாகவும் நன்றாகவும் வளர, விதை நேர்த்தி செய்வது மிகவும் அவசியம்.

அ. வேங்கை போன்ற மரங்களின் விதைகளின் வெளித்தோல் கடினமானது. எனவே இதன் விதைகளை ஒன்றுடன் ஒன்றோ அல்லது கல், இரும்பு போன்ற கடினமான பொருட்களுடனோ லேசாக உராய்ப்பது நல்லது.

ஆ. அகத்தி போன்ற மரங்களின் விதைகளை 12 முதல் 24 மணி நேரம் வரை நீரில் ஊறவைக்க வேண்டும்.

இ. சுபாபுல் போன்ற மரங்களின் விதைகளை சுமார் 80° செல்சியஸ் வெப்பம் உள்ள சுடுநீரில் (நீரை முதலில் கொதிக்கவைத்து, பின்பு சுமார் 10 நிமிடங்கள் குளிரவைத்து) அல்லது குளிர்நீரில் இரண்டு நாட்கள் ஊறவைத்தும் நேர்த்தி செய்யலாம்.

ஈ. எல்லா மர விதைகளையும் உயிர் உரங்கள் கொண்டு (அசோஸ்பைரில்லம், ரைசோபியம் மற்றும் பாஸ்போபாக்டீரியம்) விதை நேர்த்தி செய்தல் அவசியம் (எக்டர் விதைக்கு 600 கிராம் உயிர் உரம் தேவைப்படும்).

மண் :

* பாலிதீன் பைகளில் செம்மண், மணல் மற்றும் மாட்டுத் தொழுவம் சமமாகக் கலந்த கலவையை நிரப்பி, விதையை இலேசாக மண்மூடுமாறு அழுத்திவைக்கவும், பின்புநீர் ஊற்றிவிதைகள் முளைப்பதற்காகப் பைகளை நிழலில் வைக்கவும். மிகவும் ஆழமாக விதைகளை விதைக்கக் கூடாது.

* தண்ணீர் :

விதைகள் முளைத்து சிறுநாற்றுகளாக வளர, சில நாட்கள் முதல் சில வாரக் காலம் தேவைப்படும். அவ்வப்பொழுது நிழலைக் குறைத்து நாற்றுக்களை நேர் சூரிய வெளிச்சத்திற்கு பழக்கிக்கொள்ள வேண்டும். முதல் மாதம் தினமும் காலை மாலை இரு வேளைகளிலும், இரண்டாம் மற்றும் மூன்றாம் மாதம் தினம் ஒரு முறையும் நான்கு மற்றும் ஐந்தாம் மாதம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறையும் நாற்றுகளுக்கு நீர் ஊற்றினால் போதும்.

* நாற்றுப்பைகளை 15 நாட்களுக்கு ஒரு முறை இடம் மாற்றி வைத்து வேர்கள் பூமியில் இறங்காமல் பார்த்துக்கொள்ளவும். நடுவதற்கு ஒரு மாதம் முன்பு நாற்றுக்களுக்கு நீர் விடும் அளவைக் குறைக்கவும். இதனால் அவை வெளியில் நட்டபின்பு நீர் குறைந்த சூழலில் வளரும் தன்மையைப் பெற்றுவிடும். மழைக்காலத்தில் இந்த நாற்றுக்களை நட்டு நல்ல முறையில் வளர்த்துப் பயன் பெறலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment