Monday 22 October 2018

வெப்ப அயர்ச்சியால் கால்நடைகளில் ஏற்படும் பாதிப்புகளும் தடுப்புமுறைகளும் :

1. வெப்ப அயர்ச்சி
2. வெப்ப அயர்ச்சியால் உடற்செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்புகள்
3. வெப்ப அயர்ச்சியால் உடற்செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் முறைகள்

வெப்ப அயர்ச்சி :

வெப்ப அயர்ச்சி என்பது கால்நடைகளின் உடல் வெப்ப நிலையை விட அதன் சுற்றுச்சூழல் வெப்பநிலை அதிகரிப்பதால் உடல் வெப்பத்தினை வெளியேற்றும் அளவு குறைந்து உடற்செயல்பாடுகளில் ஏற்படும் விளைவுகளாகும்.

கால்நடைகளில் வெப்பச்சமச்சீர்வு என்பது உடலில் உருவாகும் வெப்பம், உடலில் இருந்து வெளியேறும் வெப்பத்தின் அளவிற்குச் சமமாக இருப்பதால் ஏற்படுகிறது. கால்நடைகளில் பெரும்பகுதியான வெப்பம், உட்கொள்ளும் உணவுகளில் ஏற்படும் வளர்சிதை மாற்றங்களால் உருவாகிறது. எஞ்சிய வெப்பம் சுற்றுச்சூழலில் இருந்து வெப்பபரவல் ஆகிய முறைகளில் கால்நடைகளின் உடலை வந்தடைகிறது. கால்நடைகள் உடல் வெப்பத்தினை வியர்வைச் சுரப்பிகள் மூலம் தோல் வழியாகவும் காற்று வெளிச் சுவாசத்தின் மூலம் நுரையீரல் வழியாகவும் வெளியேற்றுகின்றன.

கோடைக் காலங்களில் சுற்றுச் சூழல் வெப்பநிலை உடல் வெப்பநிலையை விட அதிகமாக இருக்கும். எனவே, கால்நடைகளின் உடலில் உருவாகும் வெப்பம் மற்றும் சுற்றுச்சூழலிருந்து உடலை வந்தடையும் வெப்பத்தின் அளவானது, உடல் வெப்பத்தினை இழக்கும் அளவினைவிட அதிகமாக இருப்பதால். அதிகவெப்பம் கால்நடைகளின் உடலில் தேங்கிப் பல்வேறு உடற்செயல் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.

வெப்ப அயர்ச்சியால் உடற்செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்புகள் :

* அனைத்து வகையான கால்நடைகளும் கோடைக்காலங்களில் குறைவான அளவு உணவினை உட்கொள்கின்றன.

* அதிக வெப்பத்தினை வியர்வைச்சுரப்பிகள் மற்றும் காற்றுவெளிச் சுவாசத்தின் மூலம் வெளியேற்றுவதால் உடலில் இருந்து வெளியேறும் சிறுநீரின் அளவு குறைந்து விடுகிறது. எனவே, அதிக அளவு தண்ணீரினைப் பருகுகின்றன.

* உடலில் உள்ள அதிக வெப்பத்தினை வெளியேற்றுவதற்கு ஏதுவாக இதயத்துடிப்பு இரத்த ஓட்டம் காற்று உட்சுவாசம் மற்றும் வெளிச்சுவாசத்தின் அளவுகள் அதிகரிக்கின்றன. நாளமில்லாச் சுரப்பிகளான தைராய்டு சுரப்பிகளிலிருந்து சுரக்கும் கணநீர் அளவுகள் குறைந்தும், அட்ரினல் சுரப்பிகளிலிருந்து சுரக்கும் கணநீர் அளவுக்கு அதிகரித்துக் காணப்படுகின்றன. ஆண் மற்றும் பெண் இனப்பெருக்கத்திற்கு தேவையான கணநீர் குறைவாகச் சுரப்பதால் இனப்பெருக்கம் திறன் குறைந்து காணப்படுகின்றது.

* கோடைக் காலங்களில் கறவைப் பசுக்களின் பால் உற்பத்தித் திறன் குறைந்துவிடுகிறது . வெள்ளாடு மற்றும செம்மறியாடகளில் உடல் வளர்ச்சியில் குறைவு ஏற்படுகிறது. முட்டையினப் பறவைகளில் முட்டை உற்பத்தி குறைந்தும், வெளி ஓடு இல்லா முட்டைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுகிறது. இறைச்சியினப் பறவைகளில் உடல் வளர்ச்சியில் தொய்வு ஏற்பட்டு உடல் எடை குறைந்து காணப்படுகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

வெப்ப அயர்ச்சியால் உடற்செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்கும் முறைகள் :

* கோடைக் காலங்களில் கால்நடைகள் குறைவான அளவு உணவினை உட்கொள்வதால் சமச்சீர் உணவு அளித்தல் மிகவும் இன்றியமையாததாகும்.
உடலில் இருந்து அதிக வியர்வை, காற்று வெளிச் சுவாசத்தின் மூலம் வெளியேறுவதால் கால்நடைகளில் ஏற்படும் நீர்த் தாகத்தினைத் தணிக்க அதிக தண்ணீர் அளித்தல் அவசியமாகிறது.

* சுற்றுச்சூழல் வெப்பம் கால்நடைகளின் உடலை அதிகம் அடையாமல் தடுக்க நிழல் தரும் இருப்பிடத்தைக் காற்றோட்டத்துடன் கூடியவாறு அமைக்க வேண்டும். வெளிநாடுமற்றும் கலப்பினக் கால்நடைகளின் இருப்பிடத்தின் மேற்கூரையில் அதிகவெப்பம் உள்ள பகல் நேரங்களில் குளிர்ந்தநீரைத் தெளித்தல் வேண்டும். இதனால் இதயத்துடிப்பும் மற்றும் காற்று சுவாசத்தின் விகிதத்தினைச் சமநிலைப்படுத்த முடியும்.

* கால்நடைகளின் சமச்சீர் உணவில் வைட்டமின்களும், உப்புக் கலவைகளும் அளிப்பதன் மூலம் உடற்செயல்பாடுகளில் ஏற்படும் பாதிப்புகளைத் தடுக்க இயலும்.

* எனவே, கோடைக்காலங்களில் கால்நடைகளுக்குத் தேவையான உணவு தண்ணீர், இருப்பிடம் மற்றும் சிறந்த மேலாண்மை முறைகளைக் கையாள்வதால் வெப்ப அயர்ச்சியால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுத்து உடல் ஆரோக்கியத்தைப் பராமரிப்பதுடன் கால்நடைகளின் உற்பத்தியைச் சமநிலைப்படுத்தி அதிக இலாபத்தினை ஈட்டமுடியும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment