Monday 15 October 2018

60 சென்ட் நிலம்... ரூ 1 லட்சம் லாபம்... - இனிக்கும் ‘இயற்கை’ வாழை!



நஞ்சில்லா உணவு, குறைவான இடுபொருள் செலவு போன்ற காரணங்களை முன்வைத்துதான் பலரும் இயற்கை விவசாயத்தில் கால்பதிக்கிறார்கள் விவசாயிகள். இவையில்லாமல் இன்னும் ஏராளமான பலன்கள் இயற்கை முறை விவசாயத்தில் கிடைக்கின்றன. குறிப்பாக இயற்கை முறை விவசாயத்தில் நோய்கள் மற்றும் இயற்கை இடர்ப்பாடுகள் ஆகியவற்றைத் தாங்கி வளரும் சக்தி பயிர்களுக்குக் கிடைக்கிறது. இதைக் கண்கூடாக உணர்ந்து சொல்கிறார், தஞ்சாவூர் மாவட்டம், திருக்காட்டுப்பள்ளி அருகேயுள்ள நாகாச்சி கிராமத்தில் இயற்கை முறையில் வாழைச் சாகுபடி மேற்கொண்டு வரும் ரமேஷ்.
இவர் ஏற்கெனவே ‘பசுமை விகடன்’ இதழின் வாசகர்களுக்கு அறிமுகமானவர்தான். 10.2.2018-ம் தேதியிட்ட இதழில் ‘கலகல காந்திகடலை... மதிப்புக்கூட்டினால் கூடுதல் லாபம்’ என்ற தலைப்பில் இவரது சாகுபடி அனுபவம் வெளிவந்துள்ளது. ஒரு மதியவேளையில், ரமேஷின் வாழைத்தோப்புக்குள் நுழைந்தோம். நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றுப் பேசினார், ரமேஷ்.
“போன ரெண்டு மூணு வருஷங்களைவிட இந்த வருஷம் ஆடிக்காற்று ரொம்பப் பலமா இருந்துச்சு. எங்க பகுதியில உள்ள பெரும்பாலான தோப்புகள்ல இருந்த வாழை மரங்கள்ல, கால்வாசி மரங்களுக்கு மேல சாய்ஞ்சுடுச்சு. அதனால, விவசாயிகளுக்கு மிகப்பெரிய பொருளாதார இழப்பு. ஆனா, என்னோட தோப்புல மரங்கள் ரொம்ப உயரமா வளர்ந்திருந்தும் பெரிய அளவுல சேதாரம் இல்லை. இது மூணாம் போகம். தார்கள் நல்ல கணமா இருந்தும் மரங்கள் சாயலை. பல விவசாயிகள், மரம் சாயாமல் இருக்குறதுக்காக நிறைய செலவு பண்ணிக் கட்டைகளைக் கட்டி முட்டுக் கொடுத்தாங்க. ஆனா, எனக்கு அந்தச்செலவே இல்லை. இயற்கை விவசாயம் செய்றதால மண் நல்லா வளமா இருக்கு. மரங்களும் திடகாத்திரமா இருக்கு. மண்ணுக்குள்ள வேர் நல்லா இறங்கியிருக்குறதால மரங்கள் சாயலை” என்று இயற்கை விவசாயத்துக்குக் கட்டியம் கூறிய ரமேஷ், நம்மை வாழைத்தோப்புக்குள் அழைத்துச் சென்று வாழை மரங்களைக் காட்டியபடியே பேச ஆரம்பித்தார்.
“இங்கிருக்கிற வாழை மரங்கள்ல காய்ஞ்சுப் போன சருகுகளை நான் நீக்குறதேயில்லை. அதனால, மரத்துல ஈரப்பதம் இருந்துட்டே இருக்கும். நிலத்துக்கு நிழல் கிடைக்கிறதால, மண்புழுக்கள் நிறைய உருவாகியிருக்கு. நான் பசுமை விகடன் ஏற்படுத்தின தாக்கத்தினாலதான் இயற்கை விவசாயம் செஞ்சுட்டுருக்கேன். இது களியும் வண்டலும் கலந்த மண். மொத்தம் மூணே கால் ஏக்கர் நிலம் இருக்கு. இரண்டே கால் ஏக்கர் நிலத்துல நெல், கடலை, உளுந்துனு மாத்தி மாத்திச் சாகுபடி செய்றோம். 34 சென்ட் நிலத்துல நடவு போட்டு 2 மாசமான வாழை இருக்கு. 66 சென்ட் நிலத்துல பூவன், பச்சைநாடன் இரண்டும் கலந்து 700 வாழை மரங்கள் இருக்கு. காற்றைத் தடுக்கிறதுக்காக வேலி ஓரத்துல உள்ள வாழை மரங்களை மூன்றரையடி இடைவெளியில நடவு செஞ்சுருக்கோம். நிலத்தோட உள்பகுதியில ஏழு அடி இடைவெளி விட்டுருக்கோம். எங்க பகுதியில இப்படி வேலியோரத்துல நடவு செய்ற கன்றுகளைத் ‘தொப்புள் கன்றுகள்’னு சொல்வாங்க.
வாழை நடவு செஞ்ச சமயத்துல பஞ்சகவ்யா, ஜீவாமிர்தம், இ.எம் கரைசல், மீன் அமினோ அமிலம், எரு, பிண்ணாக்குனு நல்லாவே இடுபொருளைக் கொடுத்தோம். அதனால, பூச்சி, நோய்த்தாக்குதல்கள் இல்லாமல் நல்லா செழிப்பா விளைஞ்சது. வேலியோரத்துல இருக்குற நூறு மரங்கள்ல தார் சுமாராத்தான் கிடைக்கும். மத்த மரங்கள்ல நல்ல தரத்துல தார்கள் கிடைச்சது. மொத்தம் 600 தார்கள் கிடைச்சது. ஒவ்வொரு தார்லயும் 10-12 சீப்புகள் இருந்துச்சு. அதனால, நல்ல விலை கிடைச்சது. 600 தார்களை விற்பனை செஞ்சதுல மொத்தம் 1,47,500 ரூபாய் வருமானம் கிடைச்சுது. எல்லாச் செலவும் போக, ஒண்ணேகால் லட்சம் ரூபாய் அளவுக்கு லாபம் கிடைச்சது. இரண்டாம் போகத்துலயும் அதே அளவு வருமானம் கிடைச்சது. இப்போ மூன்றாம் போகம். இரண்டாம், மூணாம் போகத்துல உழவுல இருந்து நிறைய வேலைகள் கிடையாது. அதனால, செலவும் குறைவுதான்” என்ற ரமேஷ் நிறைவாக,
“மூணாம் போகத்துல வேலி ஓரத்துல உள்ள மரங்கள்ல வழக்கம்போலத் தார்கள் சுமாராத்தான் கிடைச்சது. உள்ள இருந்த மரங்கள்ல 48 மரங்கள் காத்துல சாய்ஞ்சுடுச்சு. மீதி 552 வாழை மரங்கள்லதான் தார்கள் தரமா இருக்கு. இதுவரைக்கும் 300 தார்களை வெட்டி விற்பனை செஞ்சுருக்கோம். ஒரு தாருக்கு 200 ரூபாய் விலை கிடைச்சது.
ஆவணிக்கு அடுத்த வர்ற மாசங்கள்ல முகூர்த்தம், பண்டிகைகள் இருக்குறதால விலை ஏறுறதுக்கான வாய்ப்பிருக்கு. தார்கள் நல்ல திடகாத்திரமா இருக்குறதால, ஒரு தாருக்கு எப்படியும் 300 ரூபாய்க்கு மேல விலை கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். 552 தார்கள் மூலமா எப்படியும் 1,65,600 ரூபாய்க்கு மேல வருமானம் கிடைக்கும்னு எதிர் பார்க்குறேன். அதுல அறுவடைக்கும் இடுபொருள்களுக்கும் சேர்த்து 7,500 ரூபாய் செலவு போக மீதி முழுசும் லாபம்தான்” என்றார் சந்தோஷமாக.
தொடர்புக்கு :
ரமேஷ், செல்போன்: 90431 23234.
ஏழு அடி இடைவெளி!
இயற்கை முறையில் வாழைச் சாகுபடி செய்யும் முறை குறித்து ரமேஷ் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...
தேர்வு செய்த நிலத்தை நன்கு உழுது, ஏழு அடி இடைவெளியில், முக்கால் அடி ஆழத்துக்குக் குழிகள் எடுக்க வேண்டும். 30 லிட்டர் தண்ணீரில் 1 லிட்டர் பஞ்சகவ்யா, 1 லிட்டர் இ.எம் கரைசல் ஆகியவற்றைக் கலந்து அக்கலவையில் வாழைக் கட்டைகளை (விதைக்கிழங்கு) நனைத்து எடுத்துக் குழிகளில் நடவு செய்ய வேண்டும். நடவு செய்த 3-ம் நாள் குழிகளைச் சுற்றி மிதித்து விட்டுத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 15-ம் நாளிலிருந்து மாதம் ஒருமுறை பாசன நீரில் ஏக்கருக்கு
200 லிட்டர் ஜீவாமிர்தம் என்ற கணக்கில் கலந்து விட வேண்டும்.
75-ம் நாள் ஒவ்வொரு வாழையின் தூரிலும் 10 கிலோ அளவு எரு போட்டுத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கடலைப்பிண்ணாக்கு, ஆமணக்குப் பிண்ணாக்கு, வேப்பம் பிண்ணாக்கு ஆகியவற்றைச் சமஅளவு எடுத்து ஒன்றாகக் கலந்து வைத்துக்கொள்ள வேண்டும். நடவுசெய்த 85-ம் நாளன்று ஒவ்வொரு வாழையின் தூரிலும் அரைக்கிலோ அளவு பிண்ணாக்குக் கலவையை இட வேண்டும். 90-ம் நாள், மண்ணைக் கொத்திக் களைகளை அகற்ற வேண்டும்.
105-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் 2 லிட்டர் பஞ்சகவ்யா, 2 லிட்டர் இ.எம் கரைசல், 500 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து, இலை மற்றும் தண்டுப் பகுதிகளில் தெளிக்க வேண்டும். 120-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் இரண்டரை லிட்டர் பஞ்சகவ்யா, இரண்டரை லிட்டர் இ.எம் கரைசல், 500 மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் தெளிக்க வேண்டும். 130-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை 130 லிட்டர் தண்ணீருக்கு 3 லிட்டர் பஞ்சகவ்யா, 3 லிட்டர் இ.எம் கரைசல், 1 லிட்டர் மில்லி மீன் அமினோ அமிலம் என்ற விகிதத்தில் கலந்து இலைகள் மற்றும் தண்டுப் பகுதிகளில் தெளித்து வர வேண்டும். எட்டு மாதங்கள் வரை தெளித்தால் போதுமானது.
9-ம் மாதம் தார்விடத் தொடங்கியதும் 100 லிட்டர் தண்ணீரில் 3 லிட்டர் பஞ்சகவ்யா, 3 லிட்டர் இ.எம் கரைசல் ஆகியவற்றைக் கலந்து தார்கள் மீது தெளிக்க வேண்டும். 15 நாள்கள் இடைவெளியில், தார்கள்மீது மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். தொடர்ந்து பக்கக்கன்றுகளில் தரமானவற்றை மட்டும் வைத்துக்கொண்டு மற்றவற்றை நீக்கிவிட வேண்டும். 11-ம் மாதத்துக்குப் பிறகு முற்றிய தார்களை அறுவடை செய்யலாம்.

No comments:

Post a Comment