Wednesday 31 October 2018

இயற்கை உளுந்துச் சாகுபடி! - 4 ஏக்கர்... 85 நாள்கள்... 15 குவிண்டால்...

காலங்காலமாக ரசாயன உரங்கள் இடப்பட்டு மலடாகிப்போன நிலங்களில் இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்கும்போது, நல்ல மகசூல் கிடைக்க மூன்று ஆண்டுகள் வரை ஆகும் என்று சொல்வார்கள். அதே சமயத்தில் பஞ்சகவ்யா, இ.எம் என இயற்கை இடுபொருள்களைப் போதுமான அளவில் பயன்படுத்தி முதல் சாகுபடியிலேயே நல்ல மகசூல் எடுக்கும் விவசாயிகளும் உண்டு. அப்படிப்பட்டவர்களில் ஒருவர்தான், திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாண்டியன்.

மன்னார்குடி அருகே உள்ள எடகீழையூரைச் சேர்ந்த பாண்டியன், சித்திரைப் பட்டத்தில் உளுந்து விதைத்து இயற்கை முறையில் நிறைவான விளைச்சல் கண்டுள்ளார். ஒரு பகல் பொழுதில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பாண்டியனைச் சந்தித்தோம். புன்னகையோடு வரவேற்றுப் பேசினார், பாண்டியன்.

“விவசாயக்குடும்பத்துல பிறந்தவன்தான் நான். எங்களுக்குச் சொந்தமா நாலு ஏக்கர் இருக்கு. மணலும் கரிசலும் கலந்த இருமண் பூமி. அப்பா, ரசாயன உரம், பூச்சிக்கொல்லினு பயன்படுத்தித்தான் விவசாயம் செஞ்சார். அதிகமா உரம்போட்டு, அதிகமா பூச்சிக்கொல்லி தெளிச்சாதான் நல்ல விளைச்சல் கிடைக்கும்னு நம்பினவர் அப்பா. நானும் காலேஜ் முடிச்சுட்டு அப்பாகூட விவசாயம் பார்க்க ஆரம்பிச்சேன்.

அதிகமான உரங்கள், பூச்சிக்கொல்லி பயன்படுத்துனதால செலவுதான் அதிகமாகிட்டு போனதே ஒழிய மகசூல் அதிகரிக்கலை. எங்க ரெண்டு பேரோட உழைப்புக்கேத்த லாபம் கிடைக்கலை. அதனால, வேலைக்குப் போகலாம்னு முடிவு பண்ணி ‘டாஸ்மாக்’ கடையில மேற்பார்வையாளர் (சூப்பர்வைசர்) வேலையில் சேர்ந்துட்டேன். வேலைக்குப் போக ஆரம்பிச்ச பிறகும் விவசாய வேலைகளைச் செஞ்சுட்டுதான் இருந்தேன். அந்த சமயத்துலதான் ‘பசுமை விகடன்’ புத்தகத்தைப் படிக்க ஆரம்பிச்சேன். அதைப்படிக்கப் படிக்க இயற்கை விவசாயத்து மேல ஆர்வம் வர ஆரம்பிச்சது. அப்பா ரசாயன விவசாயம் செஞ்சதாலதான் லாபம் கிடைக்கலைங்கிறதையும் உணர ஆரம்பிச்சேன். அப்பாகிட்ட பேசி பூச்சிக்கொல்லிப் பயன்பாட்டைச் சுத்தமா விடச்சொன்னேன். அடுத்து கொஞ்சம் கொஞ்சமா ரசாயன உரங்களோட அளவையும் குறைச்சேன். போன சித்திரைப்பட்டத்துல முழு இயற்கை விவசாய முறையில நாலரை ஏக்கர்ல உளுந்துச் சாகுபடி செஞ்சேன்” என்ற பாண்டியன், நம்மை உளுந்து வயலுக்குள் அழைத்துச் சென்று செடிகளைக் காட்டிக்கொண்டே பேசினார்.

“முழு இயற்கை விவசாயத்தை வீட்டுல ஒத்துக்கலை. எல்லோருமே எதிர்ப்பு தெரிவிச்சாங்க. நம்ம குடும்பச்சூழலுக்கு விவசாயத்துல சோதனையெல்லாம் செஞ்சுட்டு இருக்க முடியாதுனு சொன்னாங்க. ஆனாலும் நான் நம்பிக்கையா இறங்கினேன். இப்போ செடிகள் நல்லா விளைஞ்சு வந்திருக்கிறதைப்பார்த்து எல்லோரும் ஆச்சர்யப்படுறாங்க. உளுந்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளைக் கட்டுபடுத்துறது ரொம்பக் கஷ்டம். ஆனா, இயற்கை முறையில பூச்சித்தாக்குதலே இல்லாம விளைஞ்சு வந்துருக்கு. ஒரு செடிக்குச் சராசரியா 40 காய்கள் இருக்கு. நல்லா திரட்சியாவும் இருக்கு. காய்களை உடைச்சுப் பார்க்குறப்போ உளுந்து நல்லா வாளிப்பா இருக்கு. ரசாயன உரம் போட்டுச் சாகுபடி செஞ்சா செடிக்கு 30 காய் இருக்குறதே பெரிய விஷயம்” என்ற பாண்டியன் நிறைவாக,

“நான் சாகுபடி செஞ்சிருக்குறது ‘ஆடுதுறை-5’ங்கிற உளுந்து ரகம். இதோட வயசு 75-85 நாள்கள். இப்போ காய்கள் முற்றி அறுவடைக்குத் தயாராகிடுச்சு. இன்னும் ஒரு வாரத்துல அறுவடை செஞ்சுடுவேன். ஏக்கருக்கு 5 குவிண்டால்ல இருந்து 6 குவிண்டால் வரை மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்க்குறேன். நாலரை ஏக்கர்லயும் சேர்த்து எப்படியும் 20 குவிண்டால் மகசூல் எடுத்துடுவேன். இயற்கை விளை பொருள்களைக் கொள்முதல் செய்ற ஒரு நண்பர் என்னோட உளுந்தைப் பார்த்துட்டு, அறுவடை முடிஞ்ச பிறகு ஒரு கிலோ 100 ரூபாய்னு எடுத்துக்கிறேன்னு சொல்லிருக்கார். ரசாயன உரம் போட்டு விளைய வெச்சா இந்த விலை கிடைக்காது. இனிமே எந்தப்பயிர் சாகுபடி செஞ்சாலும் முழு இயற்கை விவசாயம்தான்னு முடிவு பண்ணிட்டேன்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

.

உளுந்து மகசூல்: எதிர்பார்த்தது 20, கிடைத்தது 15 குவிண்டால்!

பாண்டியன் தனது 4 ஏக்கர் உளுந்தையும் முழுமையாக அறுவடை செய்த பிறகு தொடர்புகொண்டார். “செடிகள்ல அதிகமான எண்ணிக்கையில் காய்கள் உருவாகி, நல்லா நெத்து முத்தியிருந்தனாலயும், உள்ளிருந்த பருப்பு திரட்சியாக இருந்ததுனாலயும் ஒரு ஏக்கருக்கு குறைந்தபட்சம் 5 குவிண்டால் மகசூல் கிடைக்கும்னு எதிர்பார்த்தேன்.

அறுவடைக்கு நாலஞ்சு நாள்களுக்கு முன்னாடி எதிர்பாராதவிதமாக அதிகமா மழை பெய்ஞ்சதுனால. நிறைய சேதாரமாயிடுச்சு. களைகள் அதிகமானதால மண்ல விழுந்த நெத்துகளை எடுக்க முடியலை. நெத்து வெடிச்சு, பருப்புகளும் சிதறிடுச்சு.

ஆனாலும் ஒரு ஏக்கருக்கு 375 கிலோ வீதம் மொத்தம் 4 ஏக்கருக்கு 1,500 கிலோ உளுந்து தரமானதாக விற்பனைக்குத் தேறியிருக்கு. கிலோவுக்கு 100 ரூபாய் வீதம் விலை கொடுத்து வாங்கிக்கிறேனு, இயற்கை விவசாய நண்பர் ஒருத்தர் சொல்லியிருக்கார். ஒரு ஏக்கர் உளுந்து மூலமாக 37,500 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல செலவு 11,800 ரூபாய் போக, ஏக்கருக்கு 25,700 ரூபாய் நிகர லாபமாக நிக்கும். நாலு ஏக்கருக்கும் சேர்த்து 1,02,800 ரூபாய் லாபம் கிடைக்கும்” என்றார்.

இப்படிதான் சாகுபடி செய்யணும்...

ஒரு ஏக்கர் நிலத்தில் இயற்கை முறையில் உளுந்துச் சாகுபடி செய்யும் விதம் குறித்துப் பாண்டியன் சொன்ன விஷயங்கள் இங்கே...

ஒரு ஏக்கர் நிலத்தில் ஒரு சால் உழவு ஓட்டி, இரண்டு, மூன்று நாள்கள் ஆட்டுக்கிடை போட வேண்டும். பிறகு ரோட்டோவேட்டர் மூலம் ஒரு சால் உழவு ஓட்டி, விதைநேர்த்தி செய்யப்பட்ட 12 கிலோ விதையை விதைக்க வேண்டும். விதைகள் மண்ணுக்குள் மூன்று அங்குல ஆழத்துக்குப் புதையுமாறு செய்து... சிறு பாத்திகள் அமைத்துத் தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

தொடர்ந்து காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர் கொடுத்து வர வேண்டும். விதைத்த 5-ம் நாளுக்குமேல் விதைகள் முளைப்பு எடுக்கும். 15-ம் நாள் 2 லிட்டர் பஞ்சகவ்யாவை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 20-ம் நாள் களையெடுக்க வேண்டும். 30-ம் நாள் 130 லிட்டர் தண்ணீரில் இரண்டரை லிட்டர் பஞ்சகவ்யா, இரண்டரை லிட்டர் இ.எம் கரைசல், 300 மில்லி மீன் அமினோ அமிலம் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும்.

40 மற்றும் 50-ம் நாள்களில் 130 லிட்டர் தண்ணீரில் இரண்டரை லிட்டர் பஞ்சகவ்யா, இரண்டரை லிட்டர் இ.எம் கரைசல், 400 மில்லி மீன் அமினோ அமிலம் ஆகியவற்றைக் கலந்து தெளிக்க வேண்டும். 5 லிட்டர் தயிருடன் 100 கிராம் மஞ்சள் தூள், 100 கிராம் வசம்புத்தூள் ஆகியவற்றைக் கலந்து, 5 நாள்கள் புளிக்கவிட வேண்டும். 60-ம் நாள், இக்கரைசலை 130 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். இது நல்ல வளர்ச்சி ஊக்கியாகச் செயல்படுவதோடு, காய்ப்புழுத்தாக்குதலையும் கட்டுப்படுத்துகிறது.

விதைநேர்த்தி :

ஆறிய சோற்றுக் கஞ்சியில் 250 மில்லி பஞ்சகவ்யா, 500 மில்லி இ.எம் கரைசல் ஆகியவற்றைக் கலந்து, அதில் 12 கிலோ விதையைக் (ஒரு ஏக்கருக்கு) கலந்து நன்கு குலுக்கிவிட வேண்டும். பிறகு அவற்றை ஒரு சணல் சாக்கின்மீது கொட்டி, ஒரு மணிநேரம் நிழலில் உலர்த்தி விதைக்க வேண்டும். இதனால், வேரைத்தாக்கும் பூச்சிகள் மற்றும் நோய்களைத் தடுக்கலாம்.

தொடர்புக்கு :
பாண்டியன்,
செல்போன்: 97914 89792

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment