Wednesday 24 October 2018

மடிநோய் பாதிப்பு மேலாண்மை முறைகள் :

1. அறிமுகம்
2. பண்ணையின் சுற்றுப்புற தூய்மையைப் பேணுதல்
3. கறவை மாடுகளின் தூய்மை
4. பால் கறவையாளர், பால் கறக்கும் இயந்திரம், பால் பாத்திரங்களின் தூய்மை
5. முறையான பால் கறக்கும் முறைகள்
6. பால் வற்றும் காலம்
7. பிற மேலாண்மை நடவடிக்கைகள்
8. கேள்வி பதில்கள்

அறிமுகம் :

மடிநோயின் தாக்கம் பால் தரும் கலப்பினப் பசுக்களில் அதிகமாக இருக்கும். மடிநோயானது கறவைப்பசுக்களின் மடியில் உள்ள பால் சுரக்கம் திசுக்களைப் பாதித்து பாலின் நிறம், தன்மையில் மாற்றம் ஏற்படுத்துவதுடன் பால் உற்பத்தியைக்குறைக்கின்றது. இதுமட்டுமன்றி முறையான சிகிச்சை அளிக்காத நிலையில் பால்மடி முழுவதுமாக பாதிப்படைந்து நிரந்தர பால் உற்பத்தி இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. மடிநோய் நுண்கிருமிகளால் ஏற்படுகின்றது. மடிநோய் எளிதில் குணபடுத்தக்கூடிய நோய் எனினும் முறையான, உரிய நேரத்தில் சிகிச்சையளிக்காத நிலையில் மிக அதிக பாதிப்பினை ஏற்படுத்துகின்றது. எனவே கறவை மாட்டுப் பண்ணையில் மடிநோயின் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பினைத் தவிர்ப்பதற்கு பண்ணையில் நோய் நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும். குறிப்பாக பண்ணையின் சுற்றுப்புறத்தினைத் தூய்மையாக வைத்திருந்தல் வேண்டும்.

பண்ணையின் சுற்றுப்புற தூய்மையைப் பேணுதல் :

சுகாதாரமற்ற பண்ணை, துாய்மையற்ற சுற்றுபுறத்தினால் கால்நடைகளில் நோய் பாதிப்புக்கள் அதிகமாக ஏற்படுகின்றன. சுகாதாரமற்ற சுற்றுப்புறம், நோய்கிருமிகளின் வளர்ச்சிக்கு மிகவும் உகந்ததாகும். எனவே பண்ணையின் உட்புறம், சுற்றுப்புறங்களைத் தூய்மையாக வைத்திருத்தல் மிகவும் அவசியமாகும். கால்நடைப்பண்ணையில் சேரும் சாணம் போன்ற கழிவுகளை உடனுக்குடன் பண்ணையிலிருந்து 50 மீட்டர் தூரத்தில் அகற்றுதல் வேண்டும். மடிநோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளிலிருந்து பாலினை கறந்து விடக்கூடாது. இவ்வாறு பாதிக்கப்பட்ட கால்நடைகளிருந்து பாலினை கறந்து விடுவதன் மூலம் நோய் கிருமிகள் பிற கால்நடைகளில் பாதிப்பினை ஏற்படுத்துகின்றன. மொத்தத்தில் பண்ணையின் சுற்றுப்புறத் தூய்மை கறவை மாடுகளின் ஆரோக்கியம் மற்றும் உற்பத்தியினை நிர்ணயிப்பதில் மிக முக்கிய பங்காற்றுகின்றன.

கறவை மாடுகளின் தூய்மை :

கறவை மாடுகளை தினந்தோறும் குளிக்க வைப்பதன் மூலம் அவற்றின் மடி, அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும் சாணம், அசுத்தங்களை நீக்க முடியும். இவ்வாறு கால்நடைகளைத் நாள்தோறும் குளிக்க வைப்பதன் மூலம் கால்நடைகளில் மடிநோயின் பாதிப்பு குறைவதுடன் சுத்தமான பால் உற்பத்திக்கு வழிவகை செய்யமுடியும். தினந்தோறும் எருமைகளை நீரில் குளிக்கச் செய்வதன் மூலம் அவற்றின் பால் உற்பத்தி அதிகரிக்கவும் செய்யும். பாலைக் கறப்பதற்கு முன்னர் கறவை மாட்டின் பால் காம்பு, மடிப்பகுதிகளைச் சுத்தமான தண்ணிர் கொண்டு கழுவவேண்டும். கிருமி நாசினியைக் கலந்த தண்ணிரினால் கழுவுவதனால் பாலின் மூலம் கிருமிகள் பரவிவதைத் தடுக்கமுடியும். மடிநோய் பாதித்த கால்நடைகள் வீணாக்கிய தீவனங்களைப் பிற கால்நடைகளுக்கு கொடுக்கக்கூடாது.

பால் கறவையாளர், பால் கறக்கும் இயந்திரம், பால் பாத்திரங்களின் தூய்மை :

கறவைமாடுகளில் மடிநோய் மட்டுமில்லாது மேலும் சில தொற்றுநோய்கள் பால் கறவையாளர்கள், பிற பண்ணை வேலையாட்கள் மூலம் பரவ வாய்ப்புள்ளது. எனவே கால்நடைப்பண்ணையின் வேலை ஆட்கள், பால் கறவையாளர்களின் சுத்தம், சுகாதாரம் மிகவும் அவசியமாகும். குறிப்பாக கறவையாளர்கள் சுவாசம் தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் அவர்களைப் பால் கறக்க அனுமதிக்ககூடாது. பால் கறவையாளர்கள் பால்கறக்கும் சமயத்தில் புகைப்பிடித்தல், இருமல், புகையிலையைப் பயன்படுத்துதல், எச்சில் உமிழ்தல் போன்ற செய்கைகளைத் தவிர்க்கவேண்டும். பெரிய பண்ணைகளில் பால் கறவை இயந்திரங்களைப் பயன்படுத்தும் சமயத்தில் கறவை இயந்திரத்தினைச் சுத்தமாக பராமரிக்கவேண்டும். பால் கறவை இயந்திர தயாரிப்பாளர்களின் ஆலோசனையை பின்பற்ற வேண்டும். கறவைக்கு பயன்படுத்தப்படும் பாத்திரங்கள், பிற உபகரணங்களைச் சுத்தமாக பராமரிக்க வேண்டும். பால் கறக்கும் சமயத்தில் காம்புகளில் எண்ணெயைத் தடவுதல் எச்சிலைத் தடவி பால் கறத்தல் போன்ற செய்கைகளை அறவே தவிர்க்க வேண்டும். பால் கறக்கும் சமயத்தில் கறவை மாடுகளுக்கு கலப்பு தீவனம் வைத்தல் போன்ற செயல்களால் பாலில் தூசிகள் சேர வாய்ப்புள்ளது. இதனை தவிர்க்க அடர் தீவனத்தினை சிறிது தண்ணிரில் பிசைந்து அளிக்கலாம். மடிநோய், பிற நோய்களினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளுக்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பிற கால்நடைகளுக்கு பயன்படுத்தக்கூடாது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

முறையான பால் கறக்கும் முறைகள் :

பொதுவாக கறவை மாடுகளில் அனைத்து விரல்களையும் பயன்படுத்தி பால் கறத்தல், கட்டை விரலினை உட்புறமாக மடக்கி கறத்தல், கட்டைவிரல், ஆள்காட்டி விரல்களை மட்டும் பயன்படுத்தி கறத்தல் ஆகிய முறைகளில் பால் கறக்கப்படுகின்றது. பிற முறைகளை ஒப்பிடும் போது அனைத்து விரல்களையும் பயன்படுத்தி கறக்கும் முறை மிகவும் சிறந்ததாகும். இம்முறையில் பால் காம்புகளுக்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பில்லை.

மடிநோய் பாதித்த கால்நடைகளில் இறுதியாக பால் கறப்பதன் மூலம் பிற கால்நடைகளுக்கு நோய் பரவுவதைத் தடுக்கலாம். கறவைக்கு முன்னர் கறவையாளர்கள் தங்கள் இரு கைகயையும் சோப்பு கொண்டோ அல்லது கிருமி நாசினி கலந்த தண்ணீர் கொண்டோ கழுவ வேண்டும். பால் கறவை இயந்திரங்களைப் பயன்படுத்துவோர் இயந்திர தயாரிப்பாளர்கள் பரிந்துரை செய்யும் தொழில்நுட்ப ஆலோசனைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும். மடிநோயினால் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் பால் கறக்க கறவை இயந்திரங்களைப் பயன்படுத்தக்கூடாது. இவ்வாறு பயன்படுத்தும் நிலையில் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் மடிகளில் வலி உண்டாவதுடன் பால் கறவை இயந்திரம் அசுத்தப்பட வாய்ப்புள்ளது. கறவை மாடுகளில் தினசரி இரண்டு கறவைளுக்கு இடையேயான இடைவெளி இருக்கவேண்டும்.

பால் வற்றும் காலம் :

பால் வற்றும் காலம் என்பது சினையாக உள்ள பசுக்களில் எட்டு மாத காலத்தில் பால் கறவையை நிறுத்தி அடுத்த கன்று பிறக்கும் வரை ஓய்வளிப்பதாகும். சினைப்பசுக்களுக்கு ஓய்வளிப்பதனால் பிறக்கப்போகும் கன்று ஆரோக்கியமாக வளர்வதுடன் அடுத்த கறவையில் பால் உற்பத்தி முறையாக இருக்கும். அதிக பால் கறக்கும் பசுக்களில் கறவையை உடனடியாக நிறுத்தக்கூடாது. இவ்வாறு நிறுத்துவதனால் பால் மடியில் பாதிப்புக்கள் ஏற்படும். எனவே இத்தகைய பசுக்களில் பால் கறவையைப் படிப்படியாக நிறுத்த வேண்டும். முதல் சில நாள்கள் ஒரு சேர கறவையை நிறுத்தும் சமயத்தில் அவற்றிற்கான தீவனத்தினைச் சற்று குறைப்பதன் மூலம் பால் உற்பத்தியைக் குறைக்க முடியும்.

பிற மேலாண்மை நடவடிக்கைகள் :

மேய்ச்சலுக்கு செல்லும் கால்நடைகளை மிகவும் அசுத்த நீர் தங்கிய குட்டைகளில் புரளவோ அல்லது தண்ணிர் குடிக்கவோ அனுமதிக்ககூடாது. தொழுவத்தின் சுற்றுப்புறங்களில் தண்ணிர் தேங்காதவண்ணம் பார்த்துக்கொள்ளுதல் வேண்டும். கொசுக்கள், ஈக்கள் உற்பத்தியைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மடிநோய் பாதித்த கால்நடைகளில் கன்றுகளை பால் குடிக்க அனுமதிக்ககூடாது. நோய் பாதித்த கால்நடைகளில் பால் குடிக்கும் சமயத்தில் கன்றுகளுக்கு செரிமான கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பால் கறந்து முடிந்தவுடன் பால் காம்புகள் திறந்த நிலையில் இருக்கும். இச்சமயத்தில் மாடுகள் தரையில் படுக்கும் போது தூசுக்கள் காம்பு துவாரங்கள் மூலம் உட்செல்ல வாய்ப்புள்ளது. இதனைத் தவிர்க்க பால் கறந்தவுடன் கால்நடைகளுக்கு சிறிது பசுந்தீவனம் கொடுப்பதனால் பசுக்கள் உடனடியாக படுப்பதைத் தவிர்க்க முடியும். பால் காம்புகளின் வெளிப்புறங்களில் ஏற்படும் புண்கள், வெட்டுக்காயங்களுக்கு முறையாக சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும். கன்றுகளை உரிய நேரத்தில் பசுக்களிடமிருந்து பிரித்து பராமரிப்பதால் கன்றுகள் மூலம் காம்புகளில் ஏற்படும் காயங்களைத் தவிர்க்கலாம்.

மேற்கண்ட பராமரிப்புகளைக் கடைப்பிடித்து உரிய நேரத்தில் கால்நடை மருத்துவர்களின் ஆலோசனை படி உரிய சிகிச்சையளிப்பதன் மூலம் கறவை மாடுகளில் மடிநோய் பாதிப்பிளைத் தவிர்த்து அதன் மூலம் ஏற்படும் பொருளாதார இழப்பினைத் தவிர்க்கமுடியும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கேள்வி பதில்கள் :

1. மடிநோய் பாதிக்கப்பட்ட பசுக்களின் பால் மடியின் ஒரு பகுதி அதிகம் பாதிக்கப்பட்டு கெட்டுப்போனால் அடுத்த கறவை காலத்தில் அப்பகுதி குணமாகியதன் பின்பு பால் கறவைக்கு பயன்படுமா?

பயன் தர இயலாது.

2. கறவைமாடுகளில் மடிவீக்க நோயை எவ்வாறு ஆய்வறிய முடியும்?

* பாலில் ஏற்படும் மாற்றங்கள் (இரத்தம், கட்டி, சீழ் கலந்திருத்தல்).

* மடியில் ஏற்படும் மாற்றறங்கள் (மடியில் வலியுடன் கூடிய சூடான வீக்கம், அழற்சி)

சில நிறுவனங்கள் மடி நோய் கண்டறியும் சிறு துணுக்குகளைத் தயாரிக்கின்றன. இத்துணுக்கினை பாதிக்கப்பட்ட பாலில் புகுத்தினால் அதன் நிறம் மாறும்.

3. அதிக பால் கொடுக்கும் கறவைமாடுகள் அடிக்கடி மடி நோயினால் பாதிக்கப்படுவது ஏன்?

அதிகப் பால் உற்பத்தி செய்யும் கறவைமாடுகளில் எரிசக்தி குறைவினால் நோய் எதிர்ப்புசக்தி பாதிக்கப்படுகின்றது. இதனால் மடிநோய்த் தாக்கம் அடிக்கடி காணப்படுகின்றது.

4. கறவைமாடுகளில் பால் மடியில் நோயின் பாதிப்பை தவிர்ப்பது எப்படி?

பொதுவாக பால் கறவைக்குபின் பால் காம்பின் துவாரங்கள் சுமார் 30 நிமிடங்கள் திறந்த நிலையில் இருக்கும். எனவே பால் கறவைக்குப்பின் பசுக்களை உடனே தரையில் படுக்கச் செய்தல் கூடாது. பால் கறவைக்கு பின் பசுக்களுக்கு தீவனம் அளிப்பதன் மூலம் பசுக்களை நிற்க செய்து இத்தகைய மடி நோய் பாதிப்புகளை தவிர்க்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment