Tuesday 23 October 2018

கால்நடைகளில் ஏற்படும் கோடைக்கால மடிநோய் :

1. முன்னுரை
2. நோயின் காரணி
3. நோய் பரவும் விதம்
4. ஆடுகளில் கோடை மடிநோய்
5. மாடுகளில் அறிகுறிகள்
6. சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள்

முன்னுரை :

கறவை மாடுகளில் ஏற்படும் மடிநோயானது மிகப்பெரிய அளவில் பால் உற்பத்தி திறனை குறைப்பதால் விவசாயிகளுக்குப் பொருளாதார இழப்பை உண்டாக்குகின்றது. மடிநோயானது கறவை மாடுகளை மட்டுமே தாக்கும் எனச் சில விவசாயிகள் எண்ணுகின்றனர். இது தவறான எண்ணம். மடிநோயானது கிடாரிகளுக்கோ குறிப்பாகச் சினைக்கிடாரிகளுக்கோ அல்லது பால் வற்றிய சினை மாடுகளுக்கோ ஏற்பட்டால் அவற்றைக் கோடைக்கால மடிநோய் எனக் கூறுவர். இது பெரும்பாலும் கோடைக்காலத்தில் மேலைநாடுகளில் காணப்படுவதால் இதைக் கோடை மடிநோய் எனக் கூறுவர். இந்நோய் மாடுகளில் சிகிச்சையளிக்காவிடில் சுமார் 50 விழுக்காடு மாடுகள் இந்நோயினால் பால் உற்பத்தியை நிறுத்தி விடுகின்றன. எனவே விவசாயிகள் இந்நோயின் வீரியத்தைப் புரிந்து கொள்ளவேண்டும்.

நோயின் காரணி :

கோடை மடிநோயானது பாக்டீரியாவினால் பெரும்பாலும் ஏற்படுகின்றது. இந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் இந்நோய்த் தாக்கம் பற்றிய புள்ளி விவரங்கள் காணப்படவில்லை என்றாலும் ஆராய்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்ற வண்ணம் உள்ளன. எனினும் கால்நடை மருத்துவர்களின் அனுபவத்திலும் கட்டுரையாளரின் சொந்த அனுபவத்திலும் இவற்றின் தாக்கம் டெல்டா மாவட்டங்களிலும் மேற்கு மாவட்டங்களிலும் ஆங்காங்கே காணப்படுகின்றன.

நோய் பரவும் விதம் :

கோடை மடிநோயை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் முதலில் கன்றுகளின் வாய்ககுழிக் பகுதியில் காணப்படுகின்றன. பால் மறக்கடிக்கப்பட்ட இக்கன்றுகள் சில நேரங்களில் கிடாரிகளின் காம்புகளையும் பால் வற்றிய மாடுகளின் காம்புகளையும் சப்பும். கன்றுகள் ஆர்வக்கோளாறில் காம்புகளைக் கடித்துவிடுகின்றன. இவற்றில் பாக்டீரியா தொற்று ஏற்பட்டுக் கோடை மடிநோய் ஏற்படுகிறது. இவ்வகை பாக்டீரியாக்கள் ஈ மற்றும் கொசுக்கடியினாலும் பரவுகின்றது. பொதுவாக மழைக்காலம் முடிந்தவுடன் கொசு மற்றும் ஈக்களின் பெருக்கம் அதிகமாகி இந்நோய் பரவ வழி செய்கின்றது. மேலும் பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து கிடாரிகளுக்கும் பால் வற்றிய மாடுகளுக்கும் நேரடியாகவும் பரவுகின்றது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

ஆடுகளில் கோடை மடிநோய் :

செம்மறியாட்டில் பாஸ்சுரெல்லா ஹிமோலைட்டிகா எனும் பாக்டீரியா கோடை மடிநோயை ஏற்படுத்துகின்றன. செம்மறியாட்டில் மாடுகளைப் போலவே அனைத்து அறிகுறிகளும் காணப்படும். எனினும் இரத்தம் கலந்த பாலே இதன் பிரதான அறிகுறியாகும். நோய் பாதித்த செம்மறியாடுகளில் அதிகக் காய்ச்சல் மற்றும் சோர்வு ஏற்பட்டு மடி அழுகலுடன் இறந்து விடுகின்றன. வெள்ளாடுகளில் பால் வற்றிய சினை ஆடுகளையே இந்நோய் அதிகம் தாக்குகின்றது. வெள்ளாடுகளில் அறிகுறிகள் மாடுகளைப் போலவே காணப்படும். குதிரைகளிலும் இதன் தாக்கம் உண்டு.

மாடுகளில் அறிகுறிகள் :

பொதுவாக இந்நோய் பாதித்த கிடாரி மற்றும் பால்வற்றிய மாடுகளில் கீழ்க்காணும் மடிநோய் அறிகுறிகளுடன் பால் மிகுந்த துர்நாற்றத்துடன் காணப்படும்..

1. கிடாரிகள் மற்றும் பால்வற்றிய மாடுகளின் மடி மற்றும் காம்பு வீங்கிப் பாறைபோல் காணப்படும்.

2. பால் நீர்த்துப்போய்த் தண்ணீர் போலவோ அல்லது வெளிறிப்போய் வெளிர் மஞ்கள் நிறத்திலோ இருக்கும்.

3. மாடுகளின் பால் சில நேரங்களில் திரிந்து திரியாகவோ அல்லது நூல் போன்றோ வெளியேறும்.

4. வீக்கத்துடன் மடி நன்கு சிவந்து – போய்க் காணப்படும். பொதுவாக எருமை மாடுகளில் மடி நன்கு வீங்கி இருந்தால் அவை கறக்கவிடாமல் உதைக்கும்.

5. மடிவீக்கம் மிகப்பெரிய அளவில் காணப்பட்டால் மாடுகள் மற்றும் கிடாரிகள் தீவனம் உண்ணாது சோர்ந்து போய்க் காணப்படும்.

6. சில மாடுகள் மற்றும் கிடாரிகள் மிகப்பெரிய மடிவீக்கத்துடன் படுத்துவிடும். இவை எழமுடியாமல் மூச்சுவிடுவதற்கு மிகவும் சிரமப்படும்.

7. சில மாடுகள் மற்றும் கிடாரிகளில் பாலானது கறக்கும்பொழுது இரத்த நீர் போல வெளியேறும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

சில நேரங்களில் மடியின் ஒரு பக்கம் மட்டும் வீங்கிச் சீழ்கட்டி உண்டாகின்றன. இவை நன்கு பழுத்து மாடுகள் படுக்கும் பொழுது மடியின் பக்கவாட்டிலோ அல்லது காம்பின் அடிப்பகுதியிலோ உடைந்தவிடுகின்றன. இவற்றிலிருந்து பருபருப்புடன் சீழ் கலந்த பால் வெளியேறுகிறத. இவற்றில் சாணம் மற்றும் மண்படுவதால் நோய்த் தாக்கம் மேலும் அதிகமாகின்றன. சாணம் மற்றும் மண்ணில் உள்ள பாக்டீரியா மற்றும் நச்சுயிரிக் கிருமிகளுடன் ஒட்டுண்ணிக் கிருமிகளும் சேர்ந்து மடியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் மடியில் அழுகல் நிலை ஏற்பட ஆரம்பிக்கின்றது. மடி கரும்பச்சை நிறத்துடனோ அல்லது நன்கு கறுத்தோ வெளிர் மஞ்சள் திரவத்துடன் நீர் கோர்த்தோ அல்லது நீர் வடிந்து கொண்டிருந்தாலோ மடி அழுக ஆரம்பிக்கின்றது என்று அர்த்தம். பல நேரங்களில் மடியானது அழுகி முழுவதுமாக விழுந்துவிடுகின்றது. காய்ச்சல் மற்றும் கிருமிகளின் நஞ்சுத் தன்மையால் முக்கிய உறுப்புகள் பாதிக்கப்படுவதால் மாடுகள் மற்றும் கிடேரிகள் இறந்து விடுகின்றன.

கோடை மடிநோயானது பொதுவாக முன் மடியையே அதிகம் தாக்குகின்றது. சினை மாடுகளிலும் சினைக் கிடாரிகளிலும் கன்று வீச்சு எனும் கருச்சிதைவு ஏற்படுகின்றது. மிகவும் பாதிக்கப்பட்ட மாடுகளில் பின் கால்களில் முட்டி வீக்கம் மற்றும் குளம்புகள் பாதிக்கப்படுவதால் மாடுகள் நொண்டி நடக்கின்றன. சில நேரங்களில் கன்றுகளில் பிறவி ஊனத்தையும் கோடை மடிநோய் ஏற்படுத்துகிறது. பாதிக்கப்பட்ட கிடாரிகள் மற்றும் சினை மாடுகளில் கன்று ஈன்றவுடன் காம்பு வீக்க நோயை இக்கிருமிகள் ஏற்படுத்துகின்றன. சில பசு மற்றும் எருமை மாடுகளில் மடி மற்றும் பால் நன்றாக இருக்கும். ஆனால் ஒன்று அல்லது இரண்டு காம்பு மிகவும் தடித்து வீங்கிக் காணப்படும். இது காம்பு வீக்க நோயாகும். இதைப் பெரும்பாலான விவசாயிகள் மடிநோய் என்று கருதுகின்றனர்.

சிகிச்சை மற்றும் தடுப்பு முறைகள் :

விவசாயிகள் முதலில் மடிநோய் பற்றிய மூடநம்பிக்கையைக் கைவிட வேண்டும். மேற்கண்ட அறிகுறிகளைக் கிடேரி மற்றும் பால்வற்றிய மாடுகளில் கண்டால் காலந்தாழ்த்தாமல் உடனடியாகச் சிகிச்சையளிக்க வேண்டும். பாதிக்கப்பட்ட மடியினை ஒவ்வொரு இரண்டு மணிக்கொரு முறையும் நன்கு கறந்துவிட வேண்டும். மடிவீக்கத்தைக் குறைக்க சாக்பீஸ் அல்லது சுண்ணாம்புக் கட்டிகளுடன் எலுமிச்சைச்சாறு கலந்து மெழுகிவிடவேண்டும். சினைப் பருவ காலத்தில் விவசாயிகள் மடியை நன்கு பிசைந்து பார்க்கவேண்டும். மடியில் கட்டிகளோ அல்லது வீக்கமோ காணப்பட்டால் உடனடியாகக் கால்நடை மருத்துவரை அணுகவேண்டும்.

பால்வற்றிய மாடுகளுக்குக் கொடுக்கப்படும் ஆன்டிபயாடிக் மருந்துகள் நமது நாட்டில் பழக்கத்தில் இல்லை என்றாலும் நோய் வந்தபின் சிகிச்சையளிப்பதைத் தவிர வேறு வழியில்லை. கோடை மடிநோயிலிருந்து காக்கப் பண்ணைகளில் கொசுக்கள் மற்றும் ஈக்களைக் கட்டுப்படுத்துவதே சிறந்தது. குறிப்பாக மடியின் அடிப்பகுதியிலும் அக்குள்களிலும் பியூட்டாக்ஸ் எனும் மருந்தை லிட்டருக்கு 3 – 4 மில்லி என்ற விகிதத்தில் நீருடன் கலந்து தவட வேண்டும். சமீப காலங்களில் முதுகுத் தண்டில் மட்டும் தடவும் வீரிய மருந்துகள் உள்ளன. இவற்றைக் கால்நடை மருத்துவர் ஆலோசனையின் பேரில் தடவலாம். மேலும் பால் மறக்கடிக்கப்பட்ட முதிர் கன்றுகளைச் சினைக் கிடேரிகள் மற்றும் பால்வற்றிய சினை மாடுகளின் அருகில் கட்டி வைக்கக்கூடாது. சினைப்பருவ மாடுகளுக்கும் சினைக் கிடேரிகளுக்கும் சரிவிகித உணவின் மூலம் நன்கு தீவனமளிப்பதாலும் தேவையான நுண்ணூட்டச் சத்துகளைக் கொடுப்பதாலும் அவற்றின் நோய் எதிர்ப்புத் தன்மையைக் கூட்டலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment