Tuesday 30 October 2018

எள் கொடுத்த வரவு... இரண்டரை ஏக்கரில் ரூ.45 ஆயிரம்...

‘இளச்சவனுக்கு எள்ளு, கொழுத்தவனுக்குக் கொள்ளு’ என்று கிராமங்களில் சொல்வார்கள். உடல் மெலிந்தவர்கள், எள்ளைத்தொடர்ந்து உண்டு வந்தால், உடம்பு பெருக்கும். பருமனானவர்கள் தொடர்ந்து கொள்ளை உண்டு வந்தால், உடல் இளைக்கும் என்பது இதன் அர்த்தம். அதனால்தான், உடலுக்கு வலு சேர்ப்பதற்காக, அன்றாட உணவில், எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயைப் பயன்படுத்துவதை வழக்கமாக்கியுள்ளனர், நம் முன்னோர். இதற்கு அதிகளவு சந்தையில் தேவை இருப்பதால், விவசாயிகளுக்கு நல்ல வருமானம் தரும் பயிராகவும் இருக்கிறது, எள். அந்த வகையில் இயற்கை முறையில் எள் சாகுபடி செய்து, எண்ணெயாக ஆட்டி விற்பனை செய்வதன் மூலம் நல்ல வருமானம் எடுத்து வருகிறார், காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டை அடுத்த மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்த வெள்ளைச்சாமி.

ஒரு காலைப்பொழுதில் எள் அறுவடைப் பணிகளைக் கவனித்துக் கொண்டிருந்த வெள்ளைச் சாமியைச் சந்தித்தோம்.

“திருநெல்வேலி மாவட்டத்துல இருக்குற நாஞ்சான் குளம்தான் என் சொந்த ஊர். என் அப்பா காலம் வரை பரம்பரையா விவசாயம்தான் செஞ்சுக் கிட்டுருந்தோம். நான் சின்ன வயசுல அப்பாகூட விவசாயத்துல உதவியா இருப்பேன். இன்ஜினீயரிங் முடிச்சுட்டு பாரத மிகுமின் நிலையத்துல பொறியாளரா வேலைக்குச் சேர்ந்தேன். முதல் போஸ்டிங் திருச்சி. அடுத்து, மகாராஷ்டிரா மாநிலத்துக்கு டிரான்ஸ்ஃபர் பண்ணுனாங்க. சில வருஷம் வேலை பார்த்துட்டு ராஜினாமா பண்ணிட்டு வந்துட்டேன். நிறைய தனியார் கம்பெனிகள்ல ஆலோசகரா வேலை பார்த்தேன். அப்போதான் எனக்குப் ‘பசுமை விகடன்’ புத்தகம் அறிமுகமாச்சு. அதைப் படிக்கப் படிக்க எனக்கு விவசாயத்து மேல அதிக ஆசை ஏற்பட்டுச்சு. ரெண்டு வருஷத்துக்கு முன்னாடி சொந்த ஊர்ல 2 ஏக்கர் நிலத்துல நிலக்கடலை விவசாயம் செஞ்சேன். நல்லா விளைஞ்சு வந்த சமயத்துல காட்டுப்பன்றிகள் வந்து சாப்பிட்டுடுச்சு. அத்தோடு அங்க விவசாயம் செய்றத நிறுத்திட்டேன். அதன்பிறகு என் குடும்பம் சென்னையில இருக்க வேண்டிய சூழ்நிலை. அதனால, மானாம்பதி கிராமத்துல தங்கி விவசாயம் பார்த்துக் கிட்டுருக்கேன். இது என் நண்பர்களோட நிலம். நான்தான் இங்க இயற்கை விவசாயம் செய்துட்டுருக்கேன். அஞ்சு வருஷத்துக்கு முன்னால திருவண்ணாமலையில நடந்த சுபாஷ் பாலேக்கரோட ஜீரோபட்ஜெட் நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு, இயற்கை விவசாயத்தைக் கத்துக்கிட்டேன்” என்று முன்கதை சொன்ன வெள்ளைச்சாமி தொடர்ந்தார்...

“மொத்தம் 13 ஏக்கர் நிலம். போன வருஷம் செப்டம்பர் மாசம்தான் வாங்கினோம். நிலம் வாங்குனப்போ புதர் மண்டி இருந்துச்சு. வாங்கின பிறகு, முதல் வேலையா வேலி அமைச்சோம். அடுத்து புதர்களை வெட்டி வரப்பு அமைத்தோம். இருந்த 2 கிணறுகளையும் தூர்வாரினதோடு, ஒரு போர்வெல்லும் போட்டோம். அதுக்கப்புறம், நிலத்தைச் செம்மைப்படுத்தி மாப்பிள்ளைச் சம்பா நெல், சிறுதானியங்கள், பச்சைப்பயறு, நிலக்கடலை, கத்திரினு பயிர் செஞ்சோம். முழுக்க இயற்கை விவசாயம்தான். அடுத்து தண்ணிப் பற்றாக்குறையாகிடுச்சு. கிணத்துல இருந்த தண்ணியை வெச்சு 4 ஏக்கர் நிலத்துல நெல்லும், ரெண்டரை ஏக்கர் நிலத்துல எள்ளும், ஒரு ஏக்கர் நிலத்துல வேலிமசாலும் போட்டிருக்கோம். எள் பொதுவா மண்ணுல இருக்குற சத்துகளை உறிஞ்சும்னு சொல்வாங்க. அதனால, அடுத்த பயிரை விதைக்கும்போது இயற்கை உரங்களை அதிகமாகப் போட வேண்டியிருக்கும். நெல், ஆகஸ்ட் மாசம் அறுவடைக்கு வரும். வேலிமசால் நல்லா விளைஞ்சிருக்கு. ஆட்டுப்பண்ணை அமைக்கிறப்போ இதைப் பயன்படுத்திக்கலாம்னு இருக்கோம். இப்போ எள் அறுவடையாகிட்டுருக்கு. அறுவடை முடிந்த பிறகு மகசூல் விவரங்களைச் சொல்றேன்” என்று சொல்லி விடைகொடுத்தார் வெள்ளைச்சாமி.

அறுவடை முடிந்த பிறகு நம்மைத் தொடர்பு கொண்ட வெள்ளைச்சாமி, “ரெண்டரை ஏக்கர் நிலத்துல மொத்தம் 300 கிலோ எள் கிடைச்சுருக்கு. எள்ளை ஆட்டி எண்ணை எடுத்து விற்பனை பண்ணலாம்னு இருக்கேன். 300 கிலோ எள்ளை ஆட்டினா 130 லிட்டர் நல்லெண்ணெய் கிடைக்கும். ஒரு லிட்டர் 360 ரூபாய்க்கு விற்பனை செஞ்சா, 46,800 ரூபாய் வருமானம் கிடைக்கும். இதுல எல்லாச்செலவும் போக எப்படியும் 45,000 ரூபாய் லாபமா நிக்கும்னு எதிர்பார்க்குறேன்” என்றார் நம்பிக்கையுடன்.

“100 கிலோ எள்ளுக்கு 46 லிட்டர் எண்ணெய் கிடைக்கும்!”

நாமக்கல் மாவட்டம், கீரம்பூரைச் சேர்ந்த மரச்செக்கு எண்ணெய் வியாபாரம் செய்யும் வேல்முருகனிடம் பேசினோம். “ஒரு கிலோ எள்ளிலிருந்து 42 சதவிகிதம் எண்ணெய் கிடைக்கும். அதாவது 100 கிலோவுக்கு
42 கிலோ எண்ணெய் கிடைக்கும்.

ஒரு லிட்டருக்கு 900 கிராம் எண்ணெய் என்ற கணக்கில் இருக்கும். இதுபோல நிலக்கடலை, தேங்காய், சூரியகாந்தி என்று ஒவ்வொரு எண்ணெய்வித்து பயிருக்கும் எடைக்கு ஏற்றவாறு கிடைக்கும் எண்ணெயின் அளவும் மாறுபடும். 100 கிலோ எள்ளுக்கு 46 லிட்டர் எண்ணெய் கிடைக்கும். வெள்ளைச்சாமி மகசூல் எடுத்திருக்கும் 300 கிலோவுக்கு 138 லிட்டர் எண்ணெய் கிடைத்திருக்க வேண்டும். சில நேரங்களில் எள்ளின் தன்மை, தரம் ஆகியவற்றைப் பொறுத்து எண்ணெயின் அளவு மாறுபடும்” என்றார், வேல்முருகன்.

ஏக்கருக்கு இரண்டு கிலோ விதை

ஒரு ஏக்கர் நிலத்தில் எள் சாகுபடி செய்யும் முறை குறித்து வெள்ளைச்சாமி சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

எள் 90 நாள் பயிர். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தில் 3 டன் மாட்டுஎருவைத் தூவி, ஓர் உழவு செய்ய வேண்டும். பிறகு இரண்டு வாரங்கள் கழித்து ஓர் உழவு செய்து, 20 அடிக்கு 15 அடி அளவில் பாத்திகள் எடுத்து... 2 கிலோ எள் விதையுடன், சலித்த மணலைக் கலந்து தூவி விதைக்க வேண்டும். விதைத்த பத்து நாள்களுக்குத் தண்ணீர் பாய்ச்சக்கூடாது. தண்ணீர் பாய்ச்சினால், எள் விதைகள் மிதந்து ஓரிடத்தில் குவியலாகச் சேர்ந்துவிடும்.

மண்ணின் ஈரப்பதத்திலேயே விதைகள் முளைப்பு எடுக்கும். விதைத்த 10-ம் நாளிலிருந்து 15 நாள்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சினால் போதுமானது. தேவைப்பட்டால் களைகளை அகற்ற வேண்டும். 30-ம் நாள் 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் ஹியூமிக் அமிலம் என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 45-ம் நாள் 10 லிட்டர் தண்ணீரில் 300 மில்லி பஞ்சகவ்யா என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். 50-ம் நாளுக்கு மேல் பூச்சித் தாக்குதல் இருக்கும் என்பதால், அந்தச் சமயத்தில் மூலிகைப் பூச்சிவிரட்டித் தெளிக்க வேண்டும். 90-ம் நாளுக்கு மேல் அறுவடை செய்து களத்தில் கொட்டிப் பரப்பி 2 நாள்கள் காயவைத்து எள்ளை உதிர்த்துச் சேமிக்க வேண்டும்.

மூலிகைப் பூச்சிவிரட்டி :

ஊமத்தன், வேம்பு, ஆடாதொடை, துளசி, எருக்கன், நொச்சி, தும்பை ஆகிய செடிகளின் இலைகளில் மொத்தமாக 5 கிலோ அளவு எடுத்து இடித்து, அக்கலவையை ஒரு லிட்டர் பசுமாட்டுச் சிறுநீரில் இட்டு 10 நாள்கள் ஊற வைத்து வடிகட்டினால், மூலிகைப் பூச்சிவிரட்டி தயார். 10 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் மூலிகைப் பூச்சிவிரட்டி என்ற கணக்கில் கலந்து தெளிக்க வேண்டும்.

தொடர்புக்கு :
வெள்ளைச்சாமி,
செல்போன்: 98407 10755.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment