Tuesday 16 October 2018

கொண்டைக்கடலை... கொத்தமல்லி... 500 ஆண்டுகள் பாரம்பர்யமிக்க விதைகள் மானாவாரியிலும் மதிப்பான லாபம் :

புன்செய் நிலங்களில் புன்செய்ப் பயிர்களையும், நன்செய் நிலங்களில் நன்செய்ப் பயிர்களையும் மட்டுமே விதைக்க வேண்டும் என்பதுதான் பயிர்வாரி முறை. இறவைப்பாசனத்தோடு புன்செய் நிலங்களில் பருவம் தவறாமல் மானாவாரி சாகுபடியை மேற்கொண்டு வரும் விவசாயிகளும் உண்டு. அவர்களில் ஒருவர்தான் திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எத்திராஜ்.

உடுமலைப்பேட்டைக்கு அருகிலுள்ள வி.வல்லக்குண்டாபுரம் கிராமத்தில்தான் விவசாயம் மேற்கொண்டு வருகிறார், எத்திராஜ். தென்மேற்குப்பருவக்காற்றின் உபயத்தில், லேசான சாரல் மழை பெய்து கொண்டிருந்த நேரத்தில் எத்திராஜின் தோட்டத்தை நோக்கிப் பயணமானோம். வழியில் கண்ணுக்கெட்டிய தூரம் வரை கறுப்புநிறக் கடல்போல் விரிந்து கிடக்கிறது, கரிசல்காடு. பாலக்காட்டுக்கணவாய் வழியே புகுந்து வரும் காற்றை மின்சாரமாக மாற்றிக் கொண்டிருந்தன, காற்றாலை கோபுரங்கள். ஆங்காங்கு கரிசல் காடுகளில் பச்சைப்போர்வை போர்த்தியதுபோல விரவிக்கிடந்தன கொத்தமல்லிச்செடிகள். அவற்றிலிருந்து காற்றில் தவழ்ந்து வந்தன, கொத்தமல்லியின் நறுமணம். அவற்றை ரசித்துக்கொண்டே எத்திராஜின் தோட்டத்துக்குள் நுழைந்தோம்.

பண்ணைவீட்டு வாசல் களத்தில் குவிக்கப்பட்டிருந்த காய்ந்த கொண்டைக்கடலையை மனைவி ஜெயலட்சுமியோடு சேர்ந்து மூட்டை பிடித்துக் கொண்டிருந்தார், எத்திராஜ். அவரிடம் நம்மை அறிமுகப்படுத்திக் கொண்டதும் மகிழ்ச்சியாகப் பேச ஆரம்பித்தார்.

“வல்லக்குண்டாபுரம்தான் எனக்குச் சொந்த ஊர். ஊர்ல வீடு வாசல் இருந்தாலும், விவசாயம் செய்றதுக்கு வசதியா தோட்டத்துலேயே பண்ணை வீடு கட்டி குடும்பத்தோடு இருக்கேன். மொத்தம் 21 ஏக்கர் நெலம் இருக்கு. 10 ஏக்கர் நெலத்துல 700 தென்னை மரங்கள் காய்ப்புல இருக்கு. அதுக்குக் கிணத்துப் பாசனம் இருக்கு. மீதமுள்ள 11 ஏக்கர் முழுசும் கரிசல் காடு. அதுல ரொம்ப வருஷமா பனிக்கடலை (கொண்டைக்கடலை), கொத்தமல்லி ரெண்டையும் மானா வாரியா சாகுபடி செஞ்சுட்டுருக்கோம். மார்கழி, தை, மாசி மாசங்கள்ல கிடைக்கிற பனியிலேயே வளர்றதுனாலதான் இதை எங்க பகுதியில பனிக்கடலைனு சொல்றாங்க. திருப்பூர், கோயமுத்தூர் மாவட்டங்கள்ல நல்லாவே விளையுது. கரிசல் மண் இருக்கிற விருதுநகர், தூத்துக்குடி மாவட்டங்கள்லயும் நல்லா வரும். மார்க்கெட்ல இதைக் கொண்டைக்கடலை, சுண்டக்கடலைனு சொல்வாங்க. போன போகத்துல 7 ஏக்கர் நிலத்துல பனிக் கடலையும் 4 ஏக்கர் நிலத்துல கொத்தமல்லியையும் போட்டிருந்தேன். பனிக்கடலை அறுவடை முடிஞ்சிருச்சு. மல்லியில இப்போதான் பூவெடுத்துருக்கு. நாலஞ்சு வருஷமா மழை சரியாகக் கிடைக்கலை. போன வருஷம், தென்மேற்குப் பருவமழை கொஞ்சம் பரவாயில்லை. இந்த வருஷம் போதுமான மழை கிடைச்சுட்டுருக்கு.

எங்க பகுதியில விளையுற பனிக்கடலைக்கு இன்னொரு சிறப்பும் இருக்கு. இது நாட்டு ரகம். 500 வருஷத்துக்கு முன்னாடி எங்க பாட்டன், பூட்டன்லாம் ஆந்திராவுல இருந்து இடம்பெயர்ந்து இந்தப்பகுதியில குடியேறினவங்க. அவங்க வர்றப்போ கோதுமை, கொத்தமல்லி, சின்னப்பருத்தினு பல பயிர்களோட விதைகளையும் எடுத்து வந்திருக்காங்க. அதைத்தான் பயிர் பண்ணி பெருக்கியிருக்காங்க. ஒவ்வொரு முறை பயிர் பண்றப்பவும் அதுல இருந்து அடுத்த போகத்துக்கான விதையை எடுத்து வெச்சுக்குவாங்க. அப்படி வந்ததுதான் இந்தப் பனிக்கடலையும். அதையேதான் நாங்களும் தலைமுறை தலைமுறையாகப் பாதுகாத்துட்டுருக்கோம். இந்தப்பகுதியில என்னை மாதிரி ஆயிரக்கணக்கான கரிசல் காட்டு விவசாயிகள் நாட்டு விதைகளைப் பாதுகாத்துட்டுருக்காங்க” என்ற எத்திராஜ், கொத்தமல்லி வயலுக்கு அழைத்துச் சென்று காட்டியபடியே பேச ஆரம்பித்தார். “மொத்தம் 4 ஏக்கர் நிலத்துல மானாவாரியா நாட்டுக்கொத்தமல்லி போட்டிருக்கேன். இதுவும் பரம்பரையா எங்க வீட்டுல பாதுகாக்குற நாட்டு ரகம்தான். இன்னும் 60 நாள்ல அறுவடைக்கு வந்துடும். மழை மாரி நல்லா இருந்தா ஒரு ஏக்கருக்கு 300 கிலோவுக்குக் குறையாம மல்லி (தனியா) மகசூல் கிடைக்கும். பெரும்பாலும் கடைகள்ல கிடைக்கிற மல்லித்தழையெல்லாம் வீரிய ரகம்தான்.

அதுலயெல்லாம் இந்த நாட்டு ரக அளவுக்கு வாசனை இருக்காது. இந்த இலையைக் கிள்ளிப்போட்டு ரசம் வெச்சா தெருவே மணக்கும். முன்னெல்லாம், விசேஷ வீடுகள்ல... கருப்பட்டி, கொத்தமல்லி போட்டுக் காய்ச்சுன தண்ணீரைத்தான் சுடச்சுட கொடுப்பாங்க. அதெல்லாம் இப்போ மாறிப்போச்சு” என்ற எத்திராஜ், கொண்டைக் கடலையில் சென்ற போகத்தில் கிடைத்த மகசூல் மற்றும் வருமானம் குறித்துச் சொல்ல ஆரம்பித்தார்.

“மொத்தம் ஏழு ஏக்கர் நெலத்துல பனிக்கடலை போட்டதுல... 4,200 கிலோ கொண்டைக்கடலை மகசூலாகியிருக்கு. அதுல விதைக்கு எடுத்து வெச்சுக்கிட்டு மீதியைக் கொஞ்சம் கொஞ்சமா விற்பனை செஞ்சுட்டுருக்கேன். இப்போதைக்குக் கிலோ 70 ரூபாய்னு விலை போகுது. 4,000 கிலோ கொண்டைக்கடலையை விற்பனை செஞ்சா... கிட்டத்தட்ட 2,80,000 ரூபாய் வருமானம் கிடைச்சுடும். அதுல 1,00,000 ரூபாய் செலவு போக... மீதி 1,80,000 ரூபாய் லாபமா நிக்கும்” என்ற எத்திராஜ் நிறைவாக,

“ஏற்கெனவே 10 ஏக்கர் நெலத்துல தென்னை இருக்கு. மீதி 11 ஏக்கர் நெலத்துலயும் தென்னையை நட்டு வெச்சுட்டா பாடில்லாம, மாசா மாசம் வருமானம் கிடைக்கும்னு சொந்தக்காரங்கள்லாம் சொன்னாங்க. ஆனா, அதுக்கு எம்மனசு இடம் கொடுக்கல. பாட்டன், பூட்டன் காலத்துல இருந்து காப்பாத்திட்டு வர்ற விதைகளை அழிச்சிடக்கூடாதுனுதான் இன்னமும் மானாவாரி வெள்ளாமை செஞ்சுட்டுருக்கேன். என்னோட பேரன், கொள்ளுப்பேரன், எள்ளுப்பேரன்னு இது தொடரணும்” என்று சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு :

பி.எத்திராஜ்,
செல்போன்: 94433 71019

வேப்பங்கொட்டைக் கரைசல் :

5 கிலோ காய்ந்த வேப்பங்கொட்டையைப் பொடியாக இடித்து 100 லிட்டர் தண்ணீரில் போட்டு 3 நாள்கள் ஊற வைத்தால், வேப்பங்கொட்டைக் கரைசல் தயாராகிவிடும். இதை வடிகட்டி அதிகாலை நேரத்தில் கைத்தெளிப்பான் கொண்டு புகைபோலச் செடிகள் நனையும்படி தெளிக்க வேண்டும். தொடர்ந்து பூச்சித்தாக்குதல் தென்பட்டால் மட்டும் 7 நாள்கள் இடைவெளியில் இக்கரைசலை மீண்டும் தெளிக்கலாம்.

ஐப்பசிப் பட்டம் ஏற்றது :

ஒரு ஏக்கர் நிலத்தில் கொண்டைக்கடலைச் சாகுபடி செய்யும் முறை குறித்து எத்திராஜ் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

கொண்டைக்கடலை விதைக்க ஐப்பசிப்பட்டம் ஏற்றது. கரிசல் மண்ணில் மட்டுமே சிறப்பாக இது வளரும். ஒரு ஏக்கர் பரப்பில் விதைக்க 50 கிலோ விதை தேவைப்படும். இதன் வயது 100 நாள்கள். தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தைச் சித்திரை மாதத்தில் நன்கு கோடை உழவு செய்து ஆற விட வேண்டும். 25 நாள்கள் கழித்து ஓர் உழவு செய்து, மண்ணைப் பொலபொலப்பாக்க வேண்டும். கோடை உழவின் மூலம் மண்ணில் உள்ள புழு, பூச்சிகள் மற்றும் அவற்றின் முட்டைகள் அழிந்துவிடும். ஐப்பசிப்பட்டத்தில் மழை கிடைத்தவுடன் தலா 5 டன் அளவு ஆட்டு எரு, தொழுவுரம் ஆகியவற்றை நிலத்தில் கொட்டிப்பரப்பி உழ வேண்டும். தொடர்ந்து டிராக்டர் மூலம் இயக்கப்படும் விதைப்புப்பெட்டியில் விதைகளை நிரப்பி... சால் விதைப்புச் செய்ய வேண்டும்.

ஐப்பசி மாதத்தில் கிடைக்கும் மழை மற்றும் பனிப்பொழிவை வைத்து விதைகள் முளைப்பு எடுக்கும். விதைத்த 25 நாளுக்குள் காடெங்கும் பச்சைப்பசேல் எனக்காட்சி அளிக்கும். அந்தச் சமயத்தில் களைகளை அகற்ற வேண்டும். தொடர்ந்து 500 கிலோ வேப்பம் பிண்ணாக்குத்தூளைச் செடிகளின் தூரில் படுமாறு பரவலாகத் தூவி விட வேண்டும். இது வேர்ப்புழுத்தாக்குதலைக் கட்டுப்படுத்தும். செடிகள் வளர்ச்சி குன்றியும், பக்கக்கிளைகளின் எண்ணிக்கை குறைந்தும் காணப்பட்டால் வேர்ப்புழுக்களின் தாக்குதல்கூடக் காரணமாக இருக்கலாம். தொடர்ந்து கிடைக்கும் வடகிழக்குப் பருவமழை, பனிப்பொழிவு ஆகியவற்றைக் கொண்டு செடிகள் செழித்து வளர்ந்து மார்கழி மாதத்தில் பூவெடுக்கும். இந்தச் சமயத்தில் சாறு உறிஞ்சும் பூச்சிகளின் தாக்குதல் இருக்கும் என்பதால்... வேப்பங்கொட்டைக்கரைசலைத் தெளிக்க வேண்டும். இது வெள்ளை ஈக்கள், தத்துப்பூச்சிகள், மாவுப்பூச்சிகள் போன்றவற்றையும் கட்டுப்படுத்தும். மார்கழி மாதக்கடைசியில் பூக்கள் பிஞ்சாக மாறத்துவங்கும். இந்தச்சமயத்தில் பச்சைப்புழுக்கள் தாக்கக்கூடும். அவற்றை இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய்க்கரைசல் தெளித்துக் கட்டுப்படுத்த வேண்டும்.

விதைத்த 90-ம் நாளுக்கு மேல் செடிகள் காய்ந்து அவற்றில், வெளிர் கறுப்பு நிறக் கொண்டைக்கடலைகள் மணி மணியாகத் தொங்கும். அவற்றை அறுவடை செய்து இயந்திரம் மூலம் கொண்டைக்கடலையைச் செடிகளில் இருந்து பிரிக்கலாம். பிறகு காயவைத்துச் சேமித்துக்கொள்ள வேண்டும். சந்தையில் நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்யலாம்.

இஞ்சி, பூண்டு, பச்சைமிளகாய்க் கரைசல் :

தலா 1 கிலோ அளவு இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய் ஆகிய மூன்றையும் எடுத்து விழுதாக அரைத்து, அதை 100 லிட்டர் தண்ணீரில் கலந்துகொள்ள வேண்டும். அதோடு 250 கிராம் காதி சோப் கரைசலைக் கலந்து காய்கள் நனையும்படி தெளித்தால் பச்சைப்புழுக்கள் ஓடிவிடும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment