Sunday 28 October 2018

நிம்மதியும் கொடுக்கும் மாடித்தோட்டம்!

கடந்த நான்கு ஆண்டுகளாக மாடித்தோட்டம் அமைத்து வெற்றிகரமாகப் பராமரித்து வருகிறார், சென்னையைச் சேர்ந்த ராணி லலிதா. கீழ்ப்பாக்கம் பகுதியில் வசிக்கும் இவர் பழைய மகாபலிபுரம் சாலை, பெருங்குடி பகுதியில் உள்ள வீட்டில், மாடித்தோட்டம் அமைத்துப் பராமரித்து வருகிறார். ஒரு விடுமுறை நாளில், மாடித்தோட்டச் செடிகளுக்குத் தண்ணீர் விட்டுக் கொண்டிருந்த ராணி லலிதாவைச் சந்தித்தோம்.

“எனக்கும், என் கணவருக்கும் சொந்த ஊர் திருநெல்வேலி. பிறந்ததிலிருந்தே விவசாயம், செடி கொடிகள்னு பார்த்துதான் வளர்ந்தேன். நகரத்துக்கு வந்ததுக்கப்புறம் எல்லாமே மாறிப்போச்சு. சில வருஷங்களுக்கு முன்னாடி இயற்கை விளைபொருள்கள், நஞ்சில்லாக் காய்கறிகள் பத்தித் தெரிஞ்சுக்கிட்டுத் தேடித்தேடி வாங்க ஆரம்பிச்சேன். அந்தச் சமயத்துல என்கூட வேலை பார்க்குற ஒருத்தரு, வீட்டுல மாடித்தோட்டம் போட்டிருந்தாங்க. அவங்க செடிகளை அடிக்கடி போட்டோ எடுத்துட்டு வந்து அலுவலகத்துல காட்டுவாங்க. அதைப் பார்த்து எனக்கும் மாடித்தோட்டம் அமைக்கணும்னு ஆசை வந்துச்சு. அதன்பிறகு, மூணு வருஷத்துக்கு முன்ன 20 செடிகளை வெச்சு மாடித்தோட்டத்தை ஆரம்பிச்சேன். இயல்பாவே, தோட்டம் போடுறது, செடிகள் வளர்க்குறதுல எனக்கு ஆர்வம் அதிகம். அதனால, இந்தச் செடிகளையும் நல்லாப் பராமரிக்க ஆரம்பிச்சேன்.

மாடித்தோட்டம் இங்க (பெருங்குடி) இருக்குது. நாங்க குடியிருக்குறது, கீழ்ப்பாக்கத்துல. சனி, ஞாயிற்றுக் கிழமைகள்லயும், மத்த விடுமுறை நாள்கள்லயும் இங்க வந்துடுவோம். அஞ்சு நாள்கள் கடுமையா வேலை செஞ்சுட்டு ரெண்டு நாள்கள் இங்க செடி, கொடிகளோட கழிக்கிறப்போ மனசும் உடம்பும் லேசான மாதிரி இருக்கும். மாடித்தோட்டத்தைப் பராமரிக்க வர்றதை ‘அவுட்டிங்’ மாதிரி ஆக்கிட்டோம். பெருங்குடி வீட்டை வாடகைக்குத்தான் விட்டிருக்கோம். நாங்க வராத நாள்கள்ல பக்கத்து வீட்டுத் தாத்தா தண்ணி விட்டுருவார். நாங்க வரும்போது, பஞ்சகவ்யா, அமுதக்கரைசல், மாட்டு எரு எல்லாத்தையும் எடுத்துட்டு வந்துடுவோம். இதைத்தான் ஊட்டத்துக்காகப் பயன்படுத்துறோம்.

இதோடு வீட்டுல மிச்சமாகுற காய்கறி, பழக்கழிவுகள், கரும்புச்சக்கை, மாநகராட்சி குப்பை உரம் எல்லாத்தையும் செடிகளுக்குப் பயன்படுத்துறோம். பூச்சிகள் வந்தா, இஞ்சி பூண்டு கரைசல், மூலிகைப் பூச்சிவிரட்டினு தெளிப்போம்” என்ற ராணி லலிதா தோட்டத்தில் உள்ள செடிகளைக் காட்டிக் கொண்டே பேச ஆரம்பித்தார்.

“இப்போ இங்க 250 தொட்டிகளுக்கு மேல இருக்கு. காலிஃபிளவர், நூக்கல், கேரட், கத்திரிக்காய், தக்காளி, மிளகாய், கொத்தவரை, பாகல், செடிமுருங்கை, சாத்துக்குடி, சப்போட்டா, திராட்சை, டிராகன் பழம், அத்திப்பழம், கொய்யா, சீத்தாப்பழம், காட்டு நெல்லி, மல்லிகை, முல்லை, இருவாச்சி, ஜிமிக்கி செம்பருத்தி, ரோஜா, காஷ்மீர் ரோஜா, சாமந்தி, நீர்த்தாமரைனு பலதரப்பட்ட காய்கறிகள், பழமரங்கள், பூச்செடிகள்னு வளர்த்துட்டுருக்கேன். நிறைய பேர் வந்து செடிகளைப் பார்த்துட்டு என்கிட்ட ஆலோசனை கேக்குறாங்க. ஆரம்பத்துல குறைஞ்சளவு தொட்டிகளை வெச்சு ஆரம்பிச்சுப் படிப்படியா தொட்டியை அதிகரிக்கணும்னுதான் சொல்லிக் கொடுத்துட்டுருக்கேன். பெரும்பாலும் எங்க வீட்டுச் சமையலுக்கு இங்க விளையுற காய்களைத்தான் பயன்படுத்துறோம். சீசன் நேரங்கள்ல அதிகமாகக் காய்கள் கிடைக்கிறப்போ மத்தவங்களுக்கும் கொடுப்போம்” என்றார்.

நிறைவாகப் பேசிய ராணி லலிதாவின் கணவர் பாலாஜி, “ஏதோ ஆசையில கொஞ்சம் செடிகளை வளர்க்கப்போறாங்கனு நினைச்சேன். ஆனா, இவ்வளவு பிரமாண்டமா கொண்டு வருவாங்கனு எதிர்பார்க்கலை. அதனால, எனக்கும் இதுல ஆர்வம் வந்துடுச்சு. அவங்களுக்கு வேண்டிய எல்லாப் பொருள்களையும் வாங்கிட்டு வந்து கொடுத்துடுவேன். அதுமட்டும்தான் என்னோட வேலை. மத்தபடி முழுக்கப் பராமரிக்கிறது அவங்கதான். மாடித்தோட்ட காய்களைச் சாப்பிட்ட பிறகு, நாங்க ஆரோக்கியமா இருக்குறோம். விடுமுறை நாள்கள்ல எங்களுக்கு நிம்மதியைக் கொடுக்குறது, இந்த மாடித்தோட்டம்தான்” என்றார் மகிழ்ச்சி பொங்க.

தொடர்புக்கு :
ராணி லலிதா,
செல்போன்: 98401 65763

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment