Monday 15 October 2018

இன்ஜினீயர்தான்.. ஆனா, இயற்கை விவசாயி மேல ஒரு கோடு!

நாட்டு மாடுகள், ஊடுபயிர், சொட்டுநீர் பாசனம்..இயற்கை விவசாயத்தில் அசத்தும் பொறியியல் பட்டதாரி!

இளைஞர் ஒருவர் இயற்கை முறையில் ஊடுபயிர் வளர்த்துவருகிறார் எனக் கேள்வியுற்று திண்டிவனம் அடுத்த பெரமண்டூர் கிராமத்திற்குச் சென்றேன். ஆங்காங்கே நின்று கொண்டிருந்த நாட்டு ரக மாடுகளும், கொக்கரித்துக் கொண்டிருந்த நாட்டு ரக கோழிகளும், நிலத்தை மாடுகளைக் கொண்டு உழுது கொண்டிருந்த உழவர்களையும், ஊடுபயிர் வைக்கப்பட்டிருந்த அழகையும் பார்த்தபோது சரியான இடத்திற்கு வந்துவிட்டோம் எனத் தோன்றியது. உற்சாகத்துடன் நம்மை வரவேற்றார் ஞானவேல்.

தற்போது முழுநேர இயற்கை விவசாயியாக இருக்கும் இவர் ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் கோயம்புத்தூர், துபாய் எனப் பல இடங்களில் உள்ள பொறியியல் நிறுவனங்களில் பணியாற்றிய ஒரு பொறியாளர். பசுக்களுக்குப் பிண்ணாக்கு கொண்டு தண்ணீர் காட்டிக் கொண்டிருந்த ஞானவேலிடம் பேசத்தொடங்கினேன்.

“பாரம்பர்யத்தை மீட்டெடுக்கணும்ங்குறதுதான் என்னோட நீண்ட நாள் ஆசை. என்னோட பல நாள் கனவுனு கூட சொல்லலாம். இப்பத்தான் அது நிறைவேறத் துவங்கியிருக்கு. இன்னைக்கு இருக்குற விவசாயத்தோட நிலைமைதான் என்னை விவசாயம் பக்கமா திருப்பிச்சுனுகூட சொல்லலாம். இப்போ நம்மளை காப்பாத்த நாம விவசாயம் செய்யலை. எதிர்கால சந்ததிகளை காப்பாத்துறதுக்காக மட்டும்தான் விவசாயம் செய்துக்கிட்டு இருக்கோம்ங்குறதுதான் உண்மை. என்னோட அப்பா, ரசாயனம் கலந்துதான் விவசாயம் செய்துக்கிட்டிருந்தார். அப்போவெல்லாம் நிலத்துல போட்ட பணத்தை எடுக்குறது அவ்வளவு சாத்தியம் இல்லை. அதுக்கு தண்ணீர் பற்றாக்குறை, மழை இல்லைனு பல காரணங்கள் இருந்துச்சு. எனக்கு விவசாயம் செய்யணும்னு தோன ஆரம்பிச்சப்போ இயற்கை விவசாயம்தான் செய்யணும்னு உறுதியா இருந்தேன். அதே நேரம் தண்ணீர் பற்றாக்குறையும் சமாளிக்கணும்னு தோணிச்சு.

இயற்கை விவசாயம் செய்ய ஆரம்பிக்குறதுக்கு முதல் வேலையா நாட்டு மாடுகள் வாங்குனேன். இயற்கை முறையில் விவசாயம் செய்யுறதுக்கு மாட்டு சாணமும், கோமியமும் தரமான உரமாக இருக்கிறது. நான் செய்யும் விவசாயத்தில் ஊடுபயிர்களை விதைத்து லாபம் பார்த்து வருகிறேன். அதில் பப்பாளி, வாழை, மஞ்சள், முருங்கை, உளுந்து, ஆமணக்கு, பனங்கிழங்கு, மிளகாய், வெங்காயம், கருணைக்கிழங்கு, சோளம், சுரக்காய், அகத்திக்கீரை என 13 வகையான பயிர்களை பயிரிட்டுள்ளேன்.

உழுத நிலத்துல ஒரு மீட்டர் இடைவெளிவிட்டு வாய்க்கால் மாதிரி மடிச்சு ஒரு மீட்டர் இடைவெளியில செடி முருங்கையும் பப்பாளியும் மற்றொரு வரியில அதே இடைவெளியில தேக்கு அகத்தியையும் நடணும். சின்ன வகைப் பயிர்களை இடைவெளி விட்டு விதைக்குறதால பயிர்களுக்கு நல்ல காற்று ஓட்டம் இருக்கும். ஊடுபயிரைப் பொறுத்தவரை தண்ணீர் என்பது அவசியமான ஒன்று. அதனால நான் சொட்டு நீர்ப்பாசனம் செய்றேன். அதனால தினமும் பாசனம் செய்யணும்ங்குற அவசியம் இல்லை. மண்ணோட ஈரப்பதத்தைப் பார்த்து வாரத்திற்கு ஒரு தடவை பாசனம் செய்யலாம்.

பயிர்களுக்கு இயற்கை உரமா ஜீவாமிர்தம் கொடுக்குறேன். அதை சொட்டு நீர்ப்பாசன குழாயுடன் இணைச்சு பயிருக்கு கொடுத்துடுவேன். நீரை பாய்ச்சுறப்போ தானாகவே பயிருக்கு போயிடும். நான் வளர்க்குற இந்த மாடுங்க உரம் தயாரிக்குறதைத் தவிர, பால் கொடுத்து என்னுடைய குடும்பத்தோட தேவைங்களை பூர்த்தி செய்யுது. அதுல துரிஞ்சல் இலைங்குற நாட்டு ரக பசுக்கள் 5 முதல் 7 லிட்டர் வரை பாலைக் கறக்கும். இதுங்களுக்கு தீவனம் திறந்த வெளி மேய்ச்சல்தான்.

இப்போ ஊடுபயிரா இருக்குற முருங்கையை 1 கிலோ 15 ரூபாய்க்கும், அகத்திகீரைகளை ஒரு கட்டு 5 ரூபாய்க்கும், சுரைக்காயை எடை அளவைப் பொறுத்து 5 முதல் 10 ரூபாய்க்கு விற்பனை செய்யுறேன். வாழைக்கன்றுகளை விஜயதசமிக்கு விற்பனை செய்யப் போறேன்.
எனக்கு இந்த விவசாய முறை ரொம்ப பிடிச்சிருக்கு. அதனால, ஒரு குழு ஆரம்பிச்சு எல்லோருக்கும் இயற்கை விவசாயம் பத்தின விழிப்புணர்வு ஏற்படுத்தணும்னு ஒரு ஆசை. அதோட மீன் பண்ணையும், அதன் மேல் நாட்டு கோழிப் பண்ணையும் வைக்கணும்ங்குறதுதான். அதற்கான முயற்சிகள்ல ஈடுபட்டுகிட்டு இருக்கேன். என்னோட சந்ததிகளுக்கு நல்லதைக் கத்துக் கொடுப்பேன்னு நம்புறேன்” என்று விடைகொடுத்தார், ஞானவேல்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment