Monday 29 October 2018

செம்மறி ஆட்டுக்கிடை - மண் வளத்திற்கான பாரம்பரிய தொழில்நுட்பம் :

1. அறிமுகம்
2. ஆட்டுக்கிடை
3. செம்மறி ஆட்டு இனங்கள்
4. பயிர் சத்துக்கள்
5. நன்மைகள்

அறிமுகம் :

பசுமைப்புரட்சிக்கு முன் உள்ள கால கட்டங்களில், வேளாண்மையில் மண் வள மேம்பாட்டிற்கும், பயிர் விளைச்சலுக்கும் பண்ணைக்கழிவுகள், கால்நடைக் கழிவுகளே இயற்கை உரங்களாக அதிக அளவில் பயன்படுத்தப்பட்டு வந்தன. அதன் பின்னர் அதிக விளைச்சலைக் கொடுக்கும் பயிர் இரகங்களுக்கேற்ற இரசாயன உரங்கள் கண்டுபிடிக்கப்பட்டு அதிக அளவில் பயன் படுத்தப்பட்டு வருகின்றன. இதனால் அங்கக கழிவுகளை இயற்கை உரங்களாக பயன்படுத்துவது பெரிய அளவில் குறைந்து விட்டது. மண்ணில் உள்ள அங்ககப் பொருட்களின் அளவே மண்ணின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பதுடன் மண்ணின் இயற்பியல், வேதியியல், உயிரியல் பண்புகளையும் நிர்ணயிக்கின்றது. இன்றைய வேளாண்மையில் பாரம்பரிய முறைகளான தொழு உரம் இடுதல், ஆட்டுக்கிடை போடுதல், பசுந்தாள் உரங்கள் இடுதல் போன்றவற்றைத் தவிர்த்து இரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்தி சாகுபடி செய்து வருகின்றனர்.

பெருகி வரும் மக்கள் தொகைக்கு ஏற்ப உணவு உற்பத்தியைப் பெருக்குவது நமது கட்டாய கடமையாக இருக்கின்றது. இதன் காரணமாக உற்பத்தியைப் பெருக்கும் நோக்கில் அதிக விளைச்சலைக் கொடுக்கும் உயர் விளைச்சல் இரகங்களைப் பயன்படுத்துதல், இரசாயன உரங்களை அதிக அளவில் பயன்படுத்துதல் போன்றவற்றின் மூலம் மண்ணின் வளம் நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. மேலும், பெருமளவில் தேவைப்படும் அங்கக உரங்கள் கிடைக்காமலிருப்பதும், வேளாண்மையில் எந்திரமயமாக்கப்பட்டு, பண்ணை விலங்குகள் பயன்பாடு குறைதல் போன்ற பல காரணங்களால் நாம் நமது பாரம்பரிய வேளாண்மை முறைகளைத் தவிர்க்க வேண்டிய சூழ்நிலை உருவாகிவிட்டது. இதன் காரணங்களால் மண்ணின் வளத்தை மீண்டும் பெற வேண்டுமானால் நாம் நமது பாரம்பரிய அங்கக வேளாண்மையைக் கடைபிடிக்க வேண்டியது அவசியமாகின்றது. அந்த வகையில் நமது பாரம்பரிய தொழில் நுட்பங்களில் ஒன்றான ஆட்டுக் கிடை போடும் முறை மண்ணின் வளத்தைச் சீராக மேம்படுத்தும் ஒரு முக்கிய அங்கக வேளாண்மை முறையாகும்.

ஆட்டுக்கிடை :

பகலில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகளை இரவில் வயலில் வேலியிடப்பட்ட குறிப்பிட்ட இடத்தில் தங்க வைப்பதாகும். இரவில் தங்கும் ஆடுகளின் கழவுகளான சாணம், சிறு நீர் ஆகியவற்றை வயலில் சேகரிக்கப்படுவதே முக்கிய நோக்கமாகும். ஆட்டுச் சாணம், சிறுநீரில் அதிக அளவில் பயிர் வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் உள்ளன. குறிப்பாக ஆட்டுச் சிறுநீரில் அதிக அளவு தழை, சாம்பல் சத்துக்கள் உள்ளன. நமது பாரம்பரியத் தொழில் நுட்பமான ஆட்டுக்கிடை போடுதல் தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்றதாகும். நெல், வாழை, கரும்பு பயிரிடப்படும் நஞ்சை நிலத்திலும், காய்கறி பயிரிடும் தோட்டக்கால் நிலம், மானாவாரிக் கரிசல் நிலத்திலும் ஆடக்கிடை போடப்படுகிறது.

தென்மாவட்டங்களான, திருநெல்வேலி, தூத்துக்குடி, இராமநாதபுரம், விருதுநகர் , சிவகங்கை, திண்டுக்கல், மதுரை போன்ற பகுதிகளில் உள்ள 50 சதத்திற்கும் மேலான ஆட்டுக்கிடை போடுதல் பெரும்பாலும் ஜூன், ஜூலை மாதங்களில் நஞ்சை நிலங்களில் பயிர் அறுவடைக்குப் பிறகு பின்பற்றப்படுகின்றது. தோட்டக்கால் மானாவாரி நிலங்களில் நிலம் பயிர் செய்வதற்கு ஒரு மாத்திற்கு முன்பு ஆட்டுக்கிடை போடப்படுகின்றது.

இத் தொழிலில் ஆடுகளின் உரிமையாளர்கள், ஆடு மேய்ப்பவர்கள் ஈடுபடுகிறார்கள். பகலில் மேய்ச்சலுக்குச் சென்ற ஆடுகள் இரவில் வயலில் தற்காலிகமாக வேலியிடப்பட்ட கொட்டிலில் தங்க வைக்கப்படுகின்றன. வேலிகள் மரப்பட்டிகள் அல்லது நைலான் வலைகள் கொண்டு அமைக்கப்படுகின்றன. ஆடுகளின் எண்ணிக்கைக்கு ஏற்றவாறு 5 மீ x 10 மீட்டர் அல்லது 10 மீx 20மீ நீளம் மற்றும் அகலத்தில் வேலி அமைக்கப்படுகின்றன. ஒவ்வொரு நாளும் இடம் மாற்றி கிடை போடப்படுகின்றது. ஒரு எக்டர் நிலத்திற்கு சுமார் 4000 முதல் 5000 ஆடுகள் தேவைப்படும். நடைமுறையில், ஒரு ஆடு ஒன்றுக்கு ரூ 0.50 வீதம் கிடை போடுவதற்கு கூலியாக ஆடு மேய்ப்பவர்கள் வசூலிக்கின்றார்கள்.

செம்மறி ஆட்டு இனங்கள் :

நெல்லூர், வெம்பூர், இராமநாதபுரம், வெள்ளை, திருச்சி கருப்பு, சென்னை சிவப்பு போன்ற ஆட்டு இனங்கள் நமது தட்பவெப்ப நிலைக்கு குறிப்பாக தமிழகத்திற்கு ஏற்ற இனங்களாகும்.

ஜண்டு :

கிடை போடும் இடங்களில், மூங்கில் கம்புகள், பனை ஓலைகளால் வேயப்பட்ட ஆடுகளின் சிறு குட்டிகளை (30 நாள்களுக்குள்) பாதுகாக்கப் பயன்படுத்தப்படுகின்றன. மழை, அதிக குளிரிலிருந்து ஆட்டுக்குட்டிகளைப் பாதுகாத்து நோய் அண்டாமல் இருக்க இவை பயன்படுத்தப்படுகின்றன.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

பயிர் சத்துக்கள் :

ஆட்டு எருவில் 0.9, 0.6, 1.0 சதம் முறையே தழை, மணி சாம்பல் சத்துக்கள் உள்ளன. குறிப்பாக சிறுநீரில் அதிக அளவு தழை (1.7 சதம்), சாம்பல் (2.0 சதம்) சத்துக்கள் உள்ளன. உழவர்கள் இம் முறையைப் பின்பற்றி வருகின்றனர். குறைந்தபட்சம் இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை கிடை போடப்படுகின்றது.

இவை தவிர சுண்ணாம்புச்சத்தும், நுண்ணுாட்டச் சத்துக்களும் உள்ளன. ஒரு எக்டர் பரப்பில் 5 டன் ஆட்டு எருவும், 5000 லிட்டர் சிறுநீரும் ஆட்டுக்கிடை போடப்படும் நிலத்திலிருந்து சேகரிக்கப்படுகின்றது. இதிலிருந்து சுமார் 150 கிலோ தழைச்சத்து, 50 கிலோ மணிச்சத்து, சுமார் 200 கிலோ சாம்பல்சத்தும் கிடைக்கின்றன. இவை ஒரு எக்டரில் பயிரிடப்படும் நெற்பயிருக்குப் போதுமானதாகும். ஆட்டு எருவில் உள்ள 30 சத ஊட்டச்சத்து முதல் பயிருக்கும், 70 சத ஊட்டச்சத்து இரண்டாம் பயிருக்கும் கிடைக்கும். ஆனால், ஆட்டுச் சிறு நீரிலிருந்து கிடைக்கும் சத்துக்கள் முழுவதும் முதல் பயிருக்கே உடனடியாக கிடைக்கும்.

நன்மைகள் :

நிலத்தில் அங்கக பொருட்களின் அளவு அதிகரிக்கின்றது. நீர்ப்பிடிப்புத்திறன், மண்ணின் நயம், மண்ணின் காற்றோட்டம், மண்ணின் அடர்வு போன்ற மண்ணின் பௌதீக தன்மைகள் மேம்படுகின்றன. களர், உவர் நிலத்தில் ஆட்டுக்கிடை போடும் போது மண்ணின் இரசாயன பண்புகள் மேம்படுத்தப்பட்டு மண் வளம் சீர் படுகின்றது. மணற்பாங்கான நிலங்களில், மண்ணின் ஈரப்பதத்தைத் தக்க வைக்கும் திறனை அதிகப்படுத்துகிறது. மண்ணில் உள்ள பல வகையான நுண்ணுயிர்கள் பாதுகாக்கப்படுவதுடன் அதன் செயல்பாடுகள் அதிகமாகின்றன.

வயலில் கிடை போடுவதன் மூலம் வயலுக்கு எரு ஏற்றிச் செல்லும் செலவு மிச்சமாகின்றது. குறைந்த செலவில் பயிருக்குத் தேவையான அனைத்துச் சத்துக்களும் தேவையான அளவில் தேவையான விகிதத்தில் கிடைக்கின்றன. மேலும், பயிர் வளர்ச்சிக்கு இடையூறாக இருக்கும் களைகளும் கட்டுப்படுத்தப்படுகின்றன. சத்துக்கள் அனைத்தும் பயிருக்கு உடனடியாக கிடைப்பதால், மண்ணில் எந்தக் கெடுதலும் விளைவதில்லை. நீண்டநாள் நிலைத்த வேளாண்மைக்கு ஏதுவாக மண் வளம் செழிக்கின்றது.

ஆகவே, நமது உழவர்கள் ஆட்டுக் கிடையின் சிறப்பை உணர்ந்து அனைவரும் தவறாமல் இந்த பாரம்பரியமிக்க தொழில் நுட்பத்தைப் பின்பற்றினால் நீண்ட நாள்களுக்கு மண் வளத்தைப் பாதுகாப்பதோடு அல்லாமல் வேளாண்மையையும், கால்நடையும் ஒருங்கிணைத்து செயல்பட்டு செலவீனத்தைக் குறைத்து பயிர் விளைச்சலைப் பெருக்கி வருமானத்தை பெறலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment