Sunday 14 October 2018

சிறுதானிய உணவுப்பொருள்கள் தயாரிக்க பயிற்சி கிடைக்குமா?

‘‘சிறுதானியங்களில் உள்ள மருத்துவக் குணங்கள் மற்றும் அதிலிருந்து மதிப்புக்கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிப்பது குறித்துச் சொல்லுங்கள்? இதோடு பயிற்சி குறித்தும் சொல்லுங்கள்?’’

மதுரையில் உள்ள மனையியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர் பதில் சொல்கிறார்.

‘‘பெயருக்கு ஏற்றபடி, சிறிய தானியங்களாக இருந்தாலும், இதன் பலன்கள் ஏராளம். சிறுதானிய வகைகளில் சத்துகள் தவிரப் பல மருத்துவக் குணம்கொண்ட பைத்தோ கெமிக்கல்ஸ் மற்றும் ஆக்ஸிஜனேற்ற எதிர்பொருள் உள்ளது. இம்மருத்துவக் குணங்கள் இன்று வாழ்க்கை முறை மாற்றத்தால் ஏற்படும் பல நோய்களிலிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. வளர்ந்து வரும் நாகரீக வாழ்வில் எளிதில் சமைக்கக்கூடிய ஆரோக்கியமான உணவுகளை மக்கள் பெரிதும் விரும்புகின்றனர். இன்று பலரையும் பயமுறுத்தி வரும் சர்க்கரை நோய், புற்றுநோய் போன்ற பல நோய்களுக்குத் தீர்வுகாணும் வகையில் இச்சிறு குறுந்தானியங்களில் பல உயிர்ச் சத்துகளும் மருத்துவக் குணங்களும் விரவி காணப்படுகின்றன. சிறுதானியங்களில் உள்ள லிகனின் என்ற பொருள் மருத்துவக் குணம் உடையது. குறிப்பாகக் குடல் சுத்தப்படுவதற்கு மிகவும் உதவுகிறது. தினமும் ஒரு வேளையாவது சிறுதானிய உணவை உட்கொள்வதால், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னை, இதய நோய் மற்றும் ரத்த அழுத்தம் போன்றவற்றைச் சீராக்கலாம். குழந்தைகளுக்குச் சிறுதானிய உணவு கொடுப்பதன் மூலம் ஆஸ்துமா, தும்மல் போன்ற பிரச்னைகள் வராமல் தடுக்கலாம்.

சிறுதானியங்களில் உள்ள நார்ச்சத்து மார்பக புற்றுநோய் உள்ளவர்களுக்குச் சிறந்தது. சிறுதானியத்தில் உள்ள பாஸ்பரஸ் உடலின் செல்களை உறுதிப்படுத்தி, எலும்புகளுக்கு உறுதியை அளிக்க வல்லது. ஒரு கப் சிறுதானிய உணவு ஒரு நபருக்கு ஒரு நாளைக்குத் தேவையான 24 சதவிகித பாஸ்பரஸ் தேவையைப் பூர்த்திச் செய்கிறது. சிறுதானிய உணவில் உள்ள மாவுச்சத்து மெதுவாகச் செரிமானமாவதால் சர்க்கரை நோயாளிக்கு சிறந்த உணவாக இருக்கும். சிறுதானியங்களில் உள்ள மெக்னீசியம் என்ற தாது உப்பு, எலும்பு சம்பந்தமான நோய்களும் இதய நோய்களும் வராமல் பாதுகாக்க வல்லது.

இந்த அவசர உலகில், நிதானமாக ரசித்து ருசித்துச் சாப்பிட யாருக்கும் நேரமில்லை. அதுவும் நகரங்களில் பணியாற்றுபவர்கள் நின்றுகொண்டே சாப்பிட்டு ஓடும் நிலையில் இருக்கிறார்கள். இப்படி அவசரமாகச் சாப்பிடும் உணவு சத்தாகவும் ருசியாகவும் இருக்க வேண்டும். சிறுதானியங்களை உடனடி உணவுகளாகவோ அல்லது சிறுதானிய உணவுகளாகவோ பதப்படுத்தி வியாபாரமாகச் செய்யலாம். இதனால், கிராமங்களில் வேலைவாய்ப்பை அதிகரிப்பதுடன் மக்களுக்குக் குறிப்பாக நகர்ப்புற மக்களுக்குச் சத்தான உணவு கிடைக்கும். இதனைக் கருத்தில்கொண்டு சிறுதானியங்களைப் பதப்படுத்தி இன்றைய காலத்திற்கு ஏற்ப எளிதில் தயாரிக்கக்கூடிய உடனடி உணவுகளை எல்லா வயதினருக்கும், எல்லா வியாதியினருக்கும் ஏற்ற வகையில் ஆராய்ச்சி மூலம் உருவாக்கப்பட்டுள்ளன.

இப்போது உணவு பழக்கவழக்கங்கள் மற்றும் உடல் ஆரோக்கியத்தில் மக்களுக்கு ஏற்பட்டுள்ள ஈடுபாடு, கவனம் போன்றவை உணவுப்பதப்படுத்தும் தொழில்கள் பெரிய அளவில் விரிவு பெற வாய்ப்பு உள்ளது. சிறுதானிய உணவுப் பொருள்களுக்கும் நல்ல விற்பனை வாய்ப்பு உருவாகி வருகிறது.

நல் வாய்ப்பை பயன்படுத்துக் கொள்ள வேண்டும். சிறுதானியங்களில் ருசியான, சத்துக்குறையாத உணவுகளைத் தயாரிக்க முடியும். சிறுதானியக் கொழுக்கட்டை, கம்பு இனிப்பு ஆப்பம்... எனப் பல வகையான மதிப்புக்கூட்டல் பொருள்களைத் தயாரிக்க முடியும். இதற்கான கட்டணப் பயிற்சி வகுப்புகள் எங்கள் கல்லூரியில் நடத்தப்படுகின்றன. ஆர்வம் உள்ளவர்கள் முன்பதிவு செய்து பங்கு பெறலாம்.’’

தொடர்புக்கு,
தொலைபேசி: 0452 2424684.

சிறுதானிய உணவு வகைகள் :

1. சிறுதானியக் கொழுக்கட்டை. (கம்பு அல்லது சோளம்).

2. கம்பு இனிப்பு ஆப்பம் (சோளம்).

3. சமோசா (வரகு அரிசி அல்லது சோளம்).

4. பனியார மிக்ஸ் (கம்பு அல்லது சோளம்).

5. காரா சேவு (சோளம் அல்லது வரகு).

6. போளி (வரகு அல்லது தினை அல்லது சாமை).

7. புட்டு மிக்ஸ் (சோளம் அல்லது கம்பு அல்லது மக்காச்சோளம்).

8. ஹெல்த் மிக்ஸ் (சாக்லேட் பவுடர் சேர்த்தால் ருசியாக இருக்கும்).

9. பொங்கல் வகைகள், கலவை சாத வகைகள், பிரியாணி போன்ற உணவுகள் (வரகு அரிசி, தினை அரிசி, சாமை அரிசி, குதிரைவாலி அரிசி).

10. பலதானிய ஆப்பம்.

11. சிறுதானிய நூடுல்ஸ்.

12. சிறுதானிய அடைமிக்ஸ்.

13. சிறுதானிய அடுமனை பொருள்கள் (பிரட், ரஸ்க், சூப் ஸ்டிக், சாமை பிஸ்கட், வரகு கேக் மற்றும் சோள பிஸ்கட்).

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment