Sunday 21 October 2018

மாடுகளை தாக்கும் உருண்டைப் புழுக்களும், தடுப்பு முறைகளும் :

1. முன்னுரை
2. நாக்குப்பூச்சி நோய்
3. குடல்முடிச்சு நோய்
4. நோய் பரவும் விதம்
5. நோயின் அறிகுறிகள்
6. கொக்கிப்புழு நோய்
7. ஹெமான்கோஸிஸ்
8. குடற்புழு நீக்கம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை
9. குடற்புழு நோய்களைத் தடுக்கும் முறைகள்

முன்னுரை :

உருண்டைப்புழு நோய்கள் மாட்டின் ஆரோக்கியத்தைப் பாதித்துப் பால் உற்பத்தித் திறனைக் குறைக்கின்றன. மேலும் மாட்டிலிருந்து சத்துப் பொருட்களை உறிஞ்சுவதால் மாடுகள் மெலிந்து காணப்படும். சினைப்பருவத்திற்கு வருவது தாமதமாகும் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்து பிற கொடிய நோய்களின் தாக்கத்திற்கு உட்படும். இது தவிர உருண்டைப்புழுக்களின் தாக்கம் தீவிரமாக இருந்தால், மாடுகள் இறந்து பொருளாதார இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. அதனால் கறவை மாடுகளைத் தாக்கும் உருண்டைப்புழு ஒட்டுண்ணி நோய்கள் என்னென்ன, அவை எவ்வாறு பரவுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்துவது எப்படி என்று தெரிந்துகொள்வது மிகவும் அவசியமாகும்.

மாடுகளைத் தாக்கும் குடற்புழுக்களில் மிகவும் முக்கியமானது உருண்டைப்புழுக்களாகும். ஆகவே, மாடுகளைத் தாக்கும் முக்கியமான உருண்டைப் புழுக்களைப் பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

நாக்குப்பூச்சி நோய் :

இந்நோய் நாக்குப்பூச்சி என்ற உருண்டைப்புழுவினால் ஏற்படுகிறது. இந்நோயின் தாக்கம் இளம் கன்றுகளில்தான் காணப்படும். குறிப்பாக எருமைக் கன்றுகளில் அதிகமாகக் காணப்படும். இந்த உருண்டைப் புழுக்களின் இளம் புழுப்பருவம் சீம்பால் வழியாகத் தாய் மாட்டிலிருந்து இளம் கன்றுகளுக்குச் செல்கிறது. இந்த இளம் புழுப்பருவம் கன்றுகளின் குடலில் 25 செ.மீ நீளம் வரை வளர்ந்து நோயை உண்டாக்குகின்றன.

இந்நோயினால் பாதிக்கப்பட்ட கன்றுகளில் களிமண் நிறத்தில் கொழுப்பு கலந்த கழிச்சல் காணப்படும். சாணம் துர்நாற்றத்துடன் இருக்கும். மேலும் புழுக்களின் நச்சுகளினால் வயிற்றுவலி ஏற்படும். புழுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால் கன்றுகள் இறக்க நேரிடும்.

பரிசோதனை செய்து புழுக்களின் முட்டைகள் உள்ளதா என்று பார்த்து இந்நோயைக் கண்டறியலாம். நோய்த் தாக்கம் காணப்பட்ட கன்றுகளுக்குக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி குடற்புழு நீக்க மருந்தளிக்க வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

குடல்முடிச்சு நோய் :

இந்நோய் உணவுக்குழல் என்ற உருண்டைப் புழுக்களால் ஏற்படுகிறது.

நோய் பரவும் விதம் :

இந்தப் புழுக்களின் முட்டைகள் சாணத்தின் மூலம் பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து வெளியேற்றப்படுகின்றன. இவை 24 மணி நேரத்தில் பொரிக்கப்பட்டு முதல் நிலை, இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலை இளம் பருவங்களாக வெளிவருகின்றன. இந்த மூன்றாம் நிலை இளம் பருவம் புற்களின் நுனிப்பகுதியில் ஒட்டிக்கொண்டிருக்கும். கன்றோ அல்லது மாடுகளோ இந்தப் புற்களை மேயும் போது புற்களுடன் இளம்புழுப் பருவத்தினையும் தின்று விடுவதால் நோய் ஏற்படுகிறது. மேலும் இந்த இளநிலைப் பருவம் அதிகாலை மற்றும் அந்திசாயும் நேரங்களிலும் அதிக எண்ணிக்கையில் புற்களின் நுனியில் ஒட்டிக்கொண்டிருக்கும். இந்த மூன்றாம் நிலைப் பருவம் மூன்று மாத காலங்களுக்கு உயிர் வாழக்கூடியதாக இருந்தாலும், இது கோடைக் காலங்களில் நீண்ட நாள்களுக்கு வாழ்வது கடினம். தமிழகத்தில் பங்குனி, சித்திரை, வைகாசி மற்றும் ஆனி மாதங்களில் நிலவும் தட்பவெப்ப நிலையில் இந்தப் புழுக்கள் நீண்ட நாள்களுக்கு உயிர் வாழ முடியாது. அதனால் கோடைக் காலங்களில் உருண்டைப்புழுக்களின் தாக்கம் அவ்வளவாக இருக்காது. பெரும்பாலும் மழை பெய்ய ஆரம்பித்து ஓரிரு வாரங்களில் இந்தப் புழுக்களின் தாக்கம் அதிகமாகக் காணப்படும். குறிப்பாகக் புரட்டாசி, ஐப்பசி, மார்கழி மற்றும் தை மாதங்களில் இப்புழுக்களின் தாக்கம் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால் மாடுகளுக்குத் தகுந்த மருத்துவம் அளிக்கலாம்.

நோயின் அறிகுறிகள் :

மாடுகள் முதல் முறையாக உருண்டைப்புழுக்களின் தாக்கத்திற்கு உட்பட்டிருந்தால், இந்த நோயின் தீவிரம் அதிகமாக இருக்காது. அதாவது குடலில் முடிச்சுகள் ஏதும் இருக்காது. ஆனால், பலமுறை இந்த உருண்டைப்புழுக்களின் தாக்கத்திற்கு உட்பட்டுள்ள மாடுகளில், இந்த உருண்டைப்புழுக்கள் குடலில் முடிச்சுகளை ஏற்படுத்துவதால், செரிப்புக் கோளாறு மற்றும் சத்துகளை உறிஞ்சுவதில் பிரச்சனைகள் ஏற்பட்டுப் பாதிக்கப்பட்ட கால்நடைகளில் சளி கலந்த வயிற்றுப்போக்கு (பச்சை நிறத்தில் கழிச்சல்), வளர்ச்சியின்மை, மாடுகள் சோர்ந்து மெலிந்து காணப்படுவதுடன் இறப்பு நேரிட வாய்ப்புள்ளது. பாதிக்கப்பட்ட மாடுகளிலிருந்து சாணத்தை எடுத்துப் பரிசோதனை செய்து பார்ப்பதன் மூலம் நோயைக் கண்டறியலாம். பிரேதப் பரிசோதனை செய்யும்போது குடலில் குறிப்பாகப் பெருங்குடலில் முடிச்சுகள் காணப்படும். கொழுப்பு ஏதும் காணப்படாது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

கொக்கிப்புழு நோய் :

* கொக்கிப்புழு என்ற உருண்டைப்புழுக்களால் ஏற்படுகிறது. இவ்வகைப் புழுக்கள் இரத்தத்தை உறிஞ்சக்கூடியதால் இரத்தச் சோகை ஏற்படுத்தும். இந்நோயின் மூன்றாம் நிலைப் பருவமானது மணற்பாங்கான, ஈரமான இடங்களில் குறப்பாக நீர்த்தொட்டிக்கு அருகில் அதிகமாகக் காணப்படும். இந்த மூன்றாம் நிலை இளம்பருவம் மாடுகளின் தோலைத் துளைத்துக்கொண்டு உடம்பிற்குள் சென்றுவிடுகிறது. இது முதலில் நுரையீரலுக்குள் சென்று, பிறகு குடலைச் சென்றடைகிறது.

* நோய் கண்ட மாடுகளில் இரத்தச்சோகை காணப்படும். இரத்தம் மிகவும் தண்ணிராக இருக்கும். தாடைவீக்கம் பாட்டிலைச் செருகியது போலக் காணப்படும். வயிற்றுப்போக்கு இருக்கும். சாணம் கருப்பாகக் காணப்படும். கண் சவ்வு வெளிறியிருக்கும். சாணப்பரிசோதனை மற்றும் பிரேதப் பரிசோதனை (நெஞ்சுப்பகுதியில் நீர் கோர்ப்பு) மூலம் நோயைக் கண்டறியலாம். இந்நோயைத் தடுக்கத் தண்ணிர் மற்றும் தீவனத் தொட்டியைச் சுற்றியுள்ள இடங்களில் அதிக ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

ஹெமான்கோஸிஸ் :

இந்த நோயானது எமாங்கசு என்ற உருண்டைப்புழுவினால் ஏற்படுகிறது. இந்தப் புழுவும் இரத்தம் உறிஞ்சக்கூடியதாகும். இப்புழுவானது தமிழ்நாட்டில் ஆடு, மாடுகளைத் தாக்கும் முக்கிய உருண்டைப் புழுவாகும். மாடுகள் மேய்ச்சலின் போது இந்தப் புழுவின் மூன்றாம் நிலை இளம்பருவங்களைத் தின்றுவிடுவதால் இந்நோய் வருகிறது. இது 15 நாட்களில் முதிர்ச்சியடைந்துவிடும். நோய் கண்ட மாடுகளில் இரத்தச் சோகை மற்றும் சாணம் கருமை நிறமாகக் காணப்படும். இதைத்தவிரப் புரதக் கசிவு ஏற்படுவதால் தாடை வீக்கம் இருக்கும். பாதிக்கப்பட்ட மாடுகள் மெலிந்து சோர்வுற்றுக் காணப்படும். சாணப்பரிசோதனை, பிரேதப் பரிசோதனை மற்றும் நோயின் அறிகுறிகளை வைத்து நோயைக் கண்டறியலாம். நோய்த் தாக்கம் கண்ட மாடுகளுக்குக் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி மருந்துகளைக் கொடுக்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

குடற்புழு நீக்கம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை :

1. குடற்புழு நீக்கம் செய்வதற்கு முந்திய நாள் இரவிலிருந்து மாடுகளுக்குத் தீவனம் கொடுக்கக்கூடாது. இவ்வாறு செய்வதால் வயிறு காலியாக இருக்கும். வயிறு காலியாக இருப்பதால், நாம் கொடுக்கக்கூடிய குடற்புழு மருந்துகள் குடல்பகுதியில் நன்கு உறிஞ்சப்பட்டு அனைத்துக் குடற்புழுக்களையும் அழித்து வெளியேற்றிவிடும்.

2. சரியான குடற்புழு நீக்க மருந்தினைத் தேர்வு செய்வது மிகவும் முக்கியமானதாகும். மேலும் மருந்துகளைச் சரியான அளவில் மாடுகளின் எடைகளுக்குத் தகுந்த அளவில் கணக்கிட்டுக் கொடுக்க வேண்டும்.

3. குடற்புழு நீக்க மருந்துகளை மாடுகளுக்கு அதிகாலையில் தண்ணிர் ஏதும் கொடுக்காமல் வெறும் வயிற்றில் சரியான அளவில் கொடுக்கவேண்டும்.

4. குடற்புழு நீக்க மருந்து கொடுத்த பின்பு மாடுகளுக்குப் பச்சைத் தீவனம் ஏதும் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் பச்சைத் தீவனம் கொடுத்தால் அதிலிருக்கும் தண்ணீர் சாணத்தை இலகுவாக்கி வயிற்றுப் போக்கு மாதிரித் தண்ணிராக வெளியேற்றிவிடும். இதனால் மருந்துகள் குடலில் தங்கும் நேரம் குறைந்து வெளியேற்றப்பட்டுவிடும். மருந்துகள் இவ்வாறு வெளியேற்றப்பட்டுவிட்டால் குடற்புழுக்கள் மருந்துகளின் தாக்கத்திற்கு உட்படாமல் பிழைத்துக்கொள்ளும். ஆகையால் உலர் தீவனத்தை மாடுகளுக்குக் கொடுக்கவேண்டும்.

குடற்புழு நோய்களைத் தடுக்கும் முறைகள் :

* சுகாதார விதிமுறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

* கொட்டகையிலுள்ள சாணம் மற்றும் கழிவுகளை முறைப்படி அகற்ற வேண்டும். இரண்டு மாதத்திற்கு ஒரு முறை சாணப்பரிசோதனை செய்து ஒட்டுண்ணி இருந்தால் குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும். 9 தீவனம் மற்றும் தண்ணிர்த் தொட்டிகளைத் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். 9 மாடுகளை வயதுக்கேற்ப அடைக்கவேண்டும். புதிதாக மாடுகள் வாங்கும்போது குடற்புழு நீக்க மருந்து கொடுக்க வேண்டும்.

* மேய்ச்சல் தரைகளை அடிக்கடி மாற்றப்பட வேண்டும், மேலும் மாடுகளை அதிகாலை மற்றும் அந்திமாலை நேரங்களில் மேய்ச்சலுக்கு அனுப்பக்கூடாது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment