Monday 27 February 2017

பாரம்பரிய நெல் :


‘தமிழகத்தில் இயற்கை விவசாயத்தைப் பசுமை விகடனுக்கு முன், பசுமை விகடனுக்குப் பின் என இரண்டாகப் பிரிக்கலாம். பசுமை விகடன் வெளிவந்த பிறகுதான் ஏராளமானோர் இயற்கை விவசாயத்துக்கு வந்துள்ளனர்’ என இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ.நம்மாழ்வார், அடிக்கடி சொல்வார். அப்படி, பசுமை விகடன் ஏற்படுத்திய தாக்கத்தால், விவசாயத்தின் மீது ஈர்ப்பு ஏற்பட்டு இயற்கை விவசாயம் செய்து வருபவர்கள் பலர் உண்டு. அவர்களில் ஒருவர்தான் தஞ்சாவூர் பகுதியைச் சேர்ந்த கோவிந்தராஜன்.

உள்ளாட்சி நிதி தணிக்கைத்துறை ஆய்வாளராகப் பணியாற்றி ஒய்வு பெற்றவர் கோவிந்தராஜன். பசுமை விகடன் மூலமாக இயற்கை விவசாயம் மற்றும் பாரம்பர்ய நெல் ரகங்கள் மீது காதல் கொண்ட இவர், நெல் சாகுபடியில் ஈடுபட்டு வருகிறார். சொந்தமாக மாடுகள் இல்லாதபோதும், தன் வீட்டு பால்காரரிடம் சாணம், சிறுநீர் வாங்கி அவற்றின் மூலம் வீட்டிலேயே இடுபொருட்களைத் தயார் செய்து, வீட்டிலிருந்து 13 கிலோமீட்டர் தொலைவில் அன்னப்பன்பேட்டை எனும் கிராமத்தில் உள்ள தனது வயலுக்குக் கொண்டுசென்று இயற்கை விவசாயம் செய்துவருகிறார், கோவிந்தராஜன்.

கடந்த இரண்டு ஆண்டுகளாகப் பாரம்பர்ய நெல் ரகங்களைச் சாகுபடி செய்து நிறைவான லாபம் பார்த்து வரும் இவர், இந்த ஆண்டு குறுவைப் பட்டத்தில் கருங்குறுவை நெல் சாகுபடி செய்து அறுவடை செய்துள்ளார்.

ஆசை ஏற்படுத்திய பசுமை விகடன் :

ஒரு பகல்பொழுதில் கோவிந்தராஜனைச் சந்தித்தோம். “எங்க குடும்பம் விவசாயக் குடும்பம்தான். ஆனாலும், எனக்கு அதுல சுத்தமா நாட்டமில்லை. படிப்பு முடிச்சதுமே அரசு வேலை கிடைச்சுட்டதால, விவசாயம் செய்யணுங்கிற எண்ணம் வந்ததேயில்லை. அப்பா இருந்த வரைக்கும் விவசாயம் பார்த்தார். அதுக்கப்புறம், பூர்வீக நிலத்தைக் குத்தகைக்கு விட்டுட்டேன். மூன்றரை வருஷத்துக்கு முன்னாடிதான் பசுமை விகடன் எனக்கு அறிமுகமாச்சு. அதைப் படிக்க ஆரம்பிச்ச பிறகு இயற்கை விவசாயம், பாரம்பர்ய நெல் ரகங்கள் மேல ஆசை வந்து, விவசாயம் செய்யணும்னு தோணுச்சு. எங்களோட பூர்வீக நிலத்திலேயே விவசாயத்தை ஆரம்பிச்சேன். இப்போ, ரெண்டு வருஷமா தீவிரமா விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன்” என்று சுய அறிமுகம் செய்துகொண்ட கோவிந்தராஜன், தொடர்ந்தார்.

இரவல் தண்ணீரில் விவசாயம்

“மொத்தம் 7 ஏக்கர் நிலம் இருக்கு. களிமண் பூமி. பாசன வசதி கிடையாது. இப்போ பக்கத்துத் தோட்டத்துக்காரர்கிட்ட தண்ணீர் வாங்கிதான் விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். அஞ்சு வருஷமா விவசாயம் செய்யாம தரிசாகக் கிடந்த 2 ஏக்கர் நிலத்துல இயற்கை விவசாயத்தை ஆரம்பிக்கலாம்னு முடிவு செஞ்சேன். போன வருஷம், சம்பா பட்டத்துல கதிராமங்கலத்தைச் சேர்ந்த இயற்கை விவசாயி ஸ்ரீராம்கிட்ட இலுப்பைப்பூ சம்பா, சீரகச் சம்பா, தூயமல்லி, மைசூர் மல்லி, சிவப்பு கவுனினு பாரம்பர்ய ரகங்களை வாங்கிட்டு வந்து 2 ஏக்கர் நிலத்துல சாகுபடி செஞ்சேன். ஸ்ரீராம்கூட பசுமை விகடன் மூலமா அறிமுகமானவர்தான்.

புகையானைத் தடுத்த இயற்கை விவசாயம்

பசுமை விகடன்ல தெரிஞ்சுகிட்ட தொழில்நுட்பங்களைத்தான் கடைப்பிடிச்சேன். தேவைக்குச் சில இயற்கை விவசாயிகள்கிட்ட ஆலோசனைகளையும் கேட்டுக்கிட்டேன். எல்லா ரகங்களும் சேர்த்து ஏக்கருக்கு 14 மூட்டைங்கிற (60 கிலோ மூட்டை) அளவுல மகசூல் கிடைச்சுது. முதல் சாகுபடியிலேயே அந்தளவு மகசூல் கிடைச்சது மனநிறைவா இருந்துச்சு. இந்த வருஷம் தண்ணீர் தட்டுப்பாடுங்கிறதால குறுவைப் பட்டத்துல, 40 சென்ட் நிலத்துல கருங்குறுவை ரக நெல்லையும், 50 சென்ட் நிலத்துல பூங்கார் ரக நெல்லையும் பயிர் பண்ணினேன்.

பூங்கார் ரகத்துல 15 மூட்டையும் கருங்குறுவையில 10 மூட்டையும் மகசூல் கிடைச்சது. கருங்குறுவை ரகம் போட்டிருந்த வயல்ல ஆடுகள் மேய்ஞ்சதால கொஞ்சம் பாதிப்பு. இல்லேனா இன்னும் ரெண்டு மூட்டை சேர்த்து மகசூல் கிடைச்சிருக்கும். பக்கத்துல சில வயல்கள்ல புகையான் தாக்குதல் இருந்துச்சு. ஆனா, என்னோட பயிர்கள்ல அந்தப் பிரச்னையே இல்லை” என்ற கோவிந்தராஜன், அறுவடை செய்து வைத்திருந்த நெல்மணிகளை எடுத்துக் காட்டினார்.

வியந்து பார்த்த விவசாயிகள்

தொடர்ந்து பேசிய கோவிந்தராஜன், “இந்தப் பகுதியில யாரும் கருங்குறுவை சாகுபடி செய்றதில்லை. என் வயல்ல கருங்குறுவை நெல்மணிகள் சாம்பல் நிறத்துல இருந்ததைப் பார்த்ததும் நிறைய விவசாயிகள் வந்து பார்த்துட்டுப் போனாங்க. இதோட மகத்துவத்தைக் கேட்டுத் தெரிஞ்சுகிட்டு விதைநெல்லையும் சிலர் கேட்டிருக்காங்க. அதனால, விளைஞ்சதுல பாதி அளவுக்கு விதை நெல்லாகவே விற்பனை செய்துடலாம்னு இருக்கேன். மீதியை அரிசியா மாத்தி விற்பனை செய்யப்போறேன்.

ஒரு செடியில் 50 தூர்கள்

கருங்குறுவை ரக அரிசிக்கு தேவை அதிகமா இருக்கு. அறுவடை சமயத்துல கருங்குறுவை பயிர் நாலரையடி உயரத்துக்கு வளர்ந்திருந்துச்சு. ஒவ்வொரு பயிர்லேயும் 35 தூர்ல இருந்து 50 தூர்கள் வரை இருந்துச்சு. கதிர்கள் வாளிப்பா அரை அடி நீளத்துக்கும், ஒவ்வொரு கதிர்லேயும் 120 மணிகள்ல இருந்து 150 நெல்மணிகள் வரையும் இருந்துச்சு. நெல்மணிகள் ஆரம்பத்துல பச்சை நிறத்துல இருந்து, அப்படியே கறுமை நிறத்துக்கு மாறிடுச்சு. முழுமையா முதிர்ச்சி அடையறப்போ சாம்பல் நிறத்துல இருந்துச்சு.

இலைக்கருகலுக்குச் சாணிப்பால் + சூடோமோனஸ் :

பயிர் வளர்ச்சிக்கு கனஜீவாமிர்தம், பஞ்சகவ்யா, தேமோர் கரைசல் மூணையும்தான் பயன்படுத்தினேன். அதில்லாம, வாய்மடையில தனியா உரக்குழி அமைச்சு, அதுல சாணத்தையும், இலை தழைகளையும் போட்டு மட்க வெச்சுப் பாசனம் செஞ்சேன். ஒரு வாரம் வரை செடிகள் ஊறி மட்கின தண்ணீரைப் பாசனம் செஞ்சதால செடிகளுக்குத் தேவையான தழைச்சத்து நல்லா கிடைச்சது. நடவுல இருந்து 50 நாட்கள் வரை இப்படி கொடுத்தேன். 60 நாளுக்கு மேல, வெப்பக் காற்று அதிகமா வீசினதால, இலைக்கருகல் நோய் வந்துச்சு. 20 கிலோ பசுஞ்சாணத்தைத் தண்ணீர்ல ஒரு நாள் ஊற வெச்சு வடிகட்டி, அதுல அரை கிலோ சூடோமோனஸ் சேர்த்து, தண்ணில கலந்து தெளிச்சதும், மூணே நாள்ல இலைக்கருகல் சரியாகிடுச்சு. வேற நோய்களோ, பூச்சிகளோ தாக்கவேயில்லை” என்றார்.

கொஞ்சம் விதைநெல்... கொஞ்சம் அரிசி

நிறைவாக வருமானம் பற்றிப் பேசிய கோவிந்தராஜன், “கருங்குறுவை ரகத்துல 600 கிலோ நெல் கிடைச்சிருக்கு. அதுல 300 கிலோவை விதை நெல்லா கிலோ 50 ரூபாய்னு விற்பனை செய்யலாம்னு இருக்கேன். அதுமூலமா 15 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்கும். மீதி 300 கிலோ நெல்லை அரிசியா மாத்தினா, 165 கிலோ அரிசி, 15 கிலோ குருணை, 115 கிலோ தவிடு கிடைக்கும். ஒரு கிலோ அரிசி 80 ரூபாய்னு விற்பனை செஞ்சா 13 ஆயிரத்து 200 ரூபாய் கிடைக்கும்.

பதினைந்து கிலோ குருணையைக் கிலோ 40 ரூபாய்னு விற்பனை செஞ்சா, 600 ரூபாய் கிடைக்கும். நூற்றுப் பதினைந்து கிலோ தவிட்டை கிலோ 8 ரூபாய்னு விற்பனை செஞ்சா, 920 ரூபாய் கிடைக்கும். ஆக மொத்தம் 29 ஆயிரத்து 720 ரூபாய் வருமானம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன்.

விதைப்புல இருந்து அரிசியா மாத்துறது வரைக்கும் கிட்டத்தட்ட 10 ஆயிரம் ரூபாய் வரை செலவு இருக்கும். எப்படியும் 20 ஆயிரம் ரூபாய் அளவுக்கு லாபம் கிடைக்கும்னு எதிர்பார்க்கிறேன். நாற்பது சென்ட் நிலத்துல நெல் சாகுபடி செஞ்சு 20 ஆயிரம் ரூபாய் லாபம் கிடைச்சா, அதுவே பெரிய லாபம்தானே. இதுதான் இயற்கை விவசாயத்தோட மகிமை” என்று சந்தோஷமாகச் சொல்லி விடைகொடுத்தார்.

தொடர்புக்கு :
கோவிந்தராஜன்
செல்போன்: 88833 32257

5 சென்ட் நாற்றாங்கால்... 5 கிலோ விதைநெல் :

நாற்பது சென்ட் நிலத்தில் கருங்குறுவை நெல் ரகத்தைச் சாகுபடி செய்யும் விதம் குறித்துக் கோவிந்தராஜன் சொன்ன விஷயங்கள் இங்கே...

கருங்குறுவை ரகத்தின் வயது 110 நாட்கள். இது, மோட்டா ரகம். நாற்பது சென்ட் நிலத்தில் சாகுபடி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றாங்கால் அமைக்க வேண்டும். நாற்றாங்காலுக்கான நிலத்தில் 2 சால் சேற்றுழவு செய்து எருக்கன், ஆடாதொடை, புங்கன், வேம்பு, நொச்சி இலைகள் ஆகியவற்றைக் கலந்து 50 கிலோ அளவில் போட்டு காலால் மிதிக்க வேண்டும். ஒரு வாரம் கழித்து, 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவி நிலத்தைச் சமப்படுத்த வேண்டும்.

மறுநாள், 5 கிலோ விதைநெல்லை மூன்றாம் கொம்பு விதையாக விதைக்க வேண்டும். காய்ச்சலும் பாய்ச்சலுமாகத் தண்ணீர்ப் பாய்ச்சி வர வேண்டும். விதைத்த 10-ம் நாள் 10 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவ வேண்டும். பதின்மூன்றாம் நாள் 100 மில்லி பஞ்சகவ்யாவை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். பதினெட்டாம் நாளில் முக்கால் அடி உயரத்துக்கு நாற்றுகள் வளர்ந்து நடவுக்குத் தயாராகிவிடும்.

சாகுபடி வயலில் 2 சால் சேற்றுழவு செய்து நிலத்தைச் சமப்படுத்தி, வரிசைக்கு வரிசை 40 சென்டிமீட்டர் இடைவெளியும், பயிருக்கு பயிர் 25 சென்டிமீட்டர் இடைவெளியும் இருக்குமாறு குத்துக்கு 2 நாற்றுகள் என நடவு செய்ய வேண்டும். தேவைப்பட்டால் அவ்வப்போது களைகளை அகற்ற வேண்டும். நடவு செய்த 3, 15, 30 மற்றும் 45-ம் நாட்களில், 50 கிலோ கனஜீவாமிர்தத்தைத் தூவிவிட வேண்டும்.

நடவு செய்த 5, 17, 32 மற்றும் 47-ம் நாட்களில், ஒன்றரை லிட்டர் பஞ்சகவ்யாவை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளித்து வர வேண்டும். இலைக்கருகல் நோயைத் தடுக்க, 60-ம் நாளன்று 10 கிலோ சாணம் கலந்த கரைசலில் 50 மில்லி சூடோமோனஸ் கலந்து தெளிக்க வேண்டும். தண்டு உருளும் பருவத்தில் 5 லிட்டர் தேமோர் கரைசலை 50 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். நடவிலிருந்து 92-ம் நாளுக்கு மேல் பயிர் அறுவடைக்குத் தயாராகிவிடும்.

மண்ணும் பட்டமும் :

கருங்குறுவை ரகம் எல்லா வகையான மண்ணிலும் விளையும். குறுவை, சம்பா இரண்டு பட்டங்களுக்கும் ஏற்றது. இதன் பூர்வீகம் நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் எனச் சொல்லப்படுகிறது. சோறு மற்றும் கஞ்சிக்கு சிறப்பாக இருக்கும். அரிசி, வெளிர் சிவப்பு நிறத்தில் இருக்கும். இந்த அரிசியில், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.

ரத்தசோகை, குஷ்டம் ஆகிய நோய்களைக் குணப்படுத்தக்கூடியது என்று சித்த மருத்துவம் சொல்கிறது. இதுதவிரப் போக சக்தியை அதிகரிக்கும். நோய்வாய்ப்பட்டிருப்பவர்கள் இந்த அரிசியில் கஞ்சி வைத்து குடித்தால் நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment