Monday 13 February 2017


முயல் வளர்ப்பு பாகம் : 2


வீட்டமைப்பு மற்றும் இடவசதி :


சரியான வெளிச்சத்துடன் காற்றும், நல்ல இடவசதியும் கொண்ட கொட்டகை /வீட்டமைப்பு முறை முயல் வளர்ப்பிற்கு மிகவும் அவசியம் சரியான கூண்டுகள் அல்லது மரத்தால் அமைக்கப்பட்ட பெட்டியமைப்புகளில் குடிநீர், தீவன வசதிகள் முறையாக வழங்கப்பட்டிருக்கவேண்டும். முயல்கள் ஓடிவிடாமல் இருக்க சுற்றுப்புற அமைப்பு கொண்ட வீட்டமைப்பு அவசியம். வளர்க்கும் இடம், தட்பவெப்பநிலை, பொருளாதார வசதியைப் பொறுத்து பல முறைகள் முயல் வளர்ப்பில் பின்பற்றப்படுகின்றன. மூங்கில்கள், பழைய பெட்டிகள், மரத்துண்டுகள், செங்கற்கள், ஏஸ்பெஸ்டாஸ் சீட்டுக்கள் மற்றும் கட்ச் தரைகள், சுவர்கள் போன்றவை பொதுவாக உபயோகிக்கும் பொருட்கள்.

ஒளி (வெளிச்சம்) :

முயல்களின் இனப்பெருக்கத்தில் ஒளியானது முக்கிய பங்கு வகிக்கிறது. இயற்கை அல்லது செயற்கை ஒளி முயல்களுக்குக் கட்டாயம் வழங்கப்படவேண்டும். ஒரு ஆண் முயல் (இனக்கலப்பிற்குப் பயன்படுத்தப்படுவது) 8-12 மணி நேரம் ஒளி வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அதன் உயிரணுக்கள் நல்ல ஓட்டத்துடன் இருக்கும். அதே போல் சினைத் தருணத்தில் இருக்கும் பெண் முயலானது குறைந்தது 6 மணி நேரத்திற்காவது வெளிச்சத்திற்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அதன் இனப்பெருக்கத்திறன் நன்கு இருக்க இவ்வொளி மிகவும் அவசியம். இயற்கை வெளிச்சம் குறைவாக உள்ள இடங்களில் செயற்கை பல்புகளைப் பொருத்துதல் நலம்.பொதுவாக 100 வாட்ஸ் குமிழி விளக்கு (பல்பு) அல்லது 40 வாட்ஸ் ஒளிரும் குழாய் விளக்குகளைப் பயன்படுத்தலாம். இப்பல்புகளை 3 மீட்டர் இடைவெளி விட்டு தரையிலிருந்து 2 மீட்டர் தொலைவில் இருக்குமாறு 16 மணி நேரம் எரியுமாறு அமைத்தல் வேண்டும். இந்தப் பல்புகளை அடிக்கடி அனைத்துப் பின் போடக்கூடாது. காலை 6 மணியிலிருந்து இரவு 8 மணி வரை எரியுமாறு பார்த்துக் கொள்ளவேண்டும். அடிக்கடி விளக்கை அணைத்துப் போடுவதால் அவை பயந்து, ஒன்றன் மேல் ஒன்று தாவிக் காயங்களை அனைத்துப் போடுவதால் முயல்கள் பயந்து, ஒன்றன் மேல் ஒன்று தாவிக் காயங்களை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்புண்டு. இளம் முயல்களுக்கு ஓரிரு மணி நேர வெளிச்சம் போதுமானது.

வெப்பநிலை :

5 டிகிரி செல்சியஸ் இருந்து 33 டிகிரி செ வரை முயல்கள் வெப்பத்தைத் தாங்கக்கூடியவை. எனினும் முயலுக்கு உகந்த வெப்பநிலை அளவு 10 டிகிரி செல்சியஸ் – 26 டிகிரி செல்சியஸ். நமது இந்தியத் தட்பவெப்பநிலைக்கு முயல்கள் மிகவும் ஏற்றவை. சூடான காற்றை விட முயல்கள் குளிர்காற்றையே விரும்பும். எனினும் உயரமான மலைப்பகுதிகளில் இவைகள் வளர்வது இல்லை. கோடைகாலங்களில் சிறிது வெப்ப அழுத்தம் ஏற்படலாம். சரியான குளிர்ச்சியும், காற்றும் அளிப்பதால் இவ்வழுத்தத்தைத் தணிக்கலாம். வறட்சி ஏற்பட்டு அதனால் முயல்கள் பாதிக்கப்படாதவாறு பார்த்துக் கொள்ளவேண்டும். வயதான முயல்கள் தன் உடலை நீட்சிப்பதன் மூலம் வெப்பத்தை தாங்கிக் கொள்ளலாம்.இளம் முயல்களைத் தகுந்த முறையில் பாதுகாக்கவில்லையெனில் அவை வெப்பத்தைத் தாங்க இயலாமல் பாதிக்கப்படலாம்.

ஈரப்பதம் :

முயல்கள் அதிக ஈரப்பதத்தையும் தாங்கக்கூடியவை, எனினும் ஈரப்பதம் 50 சதவிகிதமாக இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். அதிக வெப்பமும் அதிக ஈரப்பதமும் முயல்களில் நோய்த் தாக்கம் ஏற்படுத்தலாம். எனவே மழைக்காலங்களில் ஈரப்பதத்தைத் தடுக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். எந்த ஒரு நீர்க்கசிவும் உள்ளே ஏற்படாதவாறு தண்ணீர்க்குடுவைகளை வெளியிலேயே வைப்பது நல்லது.

காற்றோட்டம் :

சுத்தமான புகையற்ற காற்று முயல்களுக்கு மிக அவசியம். முயல் பண்ணையில் தூயகாற்று தங்கு தடையின்றி உலவுமாறு அமைந்திருத்தல் வேண்டும். கோடைக்காலங்களில் காற்று குளிர்ந்ததாக இருத்தல் வேண்டும். வறண்ட காற்று முயல்களின் சுவாசத்திற்கு ஏற்றதல்ல. எனவே ஆங்காங்கு மரங்களை நட்டு வளர்த்தல் நன்மை பயக்கும்.

சப்தம் :

முயல்களில் ஒலியின் பாதிப்பு அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படவில்லை எனினும் முயல்கள் அதிக சப்தத்தை விரும்புவதில்லை. குறிப்பாக குட்டிகள் பாலூட்டும் போதும், இனச்சேர்க்கையின் போதும் சிறு சப்தம் கூட பாதிப்பு ஏற்படுத்தலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment