Tuesday 14 February 2017

மாடித்தோட்டத்திலும் மகத்தான மகசூல்!


பஞ்சகவ்யா!

மாடித்தோட்டத்திலும் மகத்தான மகசூல்!

ஆரம்பக் காலத்தில் பஞ்சகவ்யா கரைசலைப் பயன்படுத்தியவர்கள், அதைப் பரவலாக விவசாயிகளிடம் எடுத்துச் சென்றவர்கள் குறித்த தொடர் இது. வயல்களில் பஞ்சகவ்யாவைப் பயன்படுத்தி வெற்றி கண்ட பிறகு, பலரும் அதை மாடித்தோட்டங்களுக்குப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த வகையில் வீட்டின் மாடியில் வளர்த்து வரும் செடிகளுக்குப் பஞ்சகவ்யா கொடுத்து பலன் கண்டு வரும் கோயம்புத்தூர் லட்சுமி மில்ஸ் பகுதியைச் சேர்ந்த கிருத்திகா, தனது அனுபங்களை இங்கே பகிர்ந்துகொள்கிறார்.

காலை வேளையில் மாடித்தோட்டச் செடிகளுக்குத் தண்ணீர் தெளித்துக் கொண்டிருந்த கிருத்திகாவைச் சந்தித்தோம். “அஞ்சு வருஷமா மாடியில கீரை, காய்கறி, பழங்கள்னு வளர்த்திட்டு இருக்கேன். ஆரம்பத்தில இருந்தே இயற்கை முறைதான். சாணம், பசு சிறுநீர் கொடுக்குறதுல எனக்கு விருப்பம் இல்லாததால, மண்புழு உரம், மூலிகைப் பூச்சிவிரட்டி, வேப்பம் பிண்ணாக்குனு மட்டும்தான் கொடுத்திட்டு இருந்தேன். சாணத்தைக் கொடுத்தா புழுக்கள் வந்துடும்னு பயந்தேன். அந்தப் பயத்தைப் போக்கினது, ‘பசுமை விகடன்’தான். கோயம்புத்தூர்ல பசுமை விகடன் நடத்தின ஒரு பயிற்சியில் கலந்துகிட்டேன். அதுல, இயற்கை இடுபொருட்கள் தயாரிக்கிறது குறித்துச் சேவா விவேகானந்தன் சொல்லிக்கொடுத்தார். அப்போதான் பஞ்சகவ்யா கரைசல் குறித்தும் அதைத் தயாரிக்கிறது குறித்தும் சாணம், சிறுநீர் மூலமா கிடைக்கிற பலன்கள் குறித்தும் தெரிஞ்சுகிட்டேன்.

அப்போதான் ‘கொடுமுடி டாக்டர்’ நடராஜன் குறித்தும் விவேகானந்தன் சொன்னார். அதோட, ‘பஞ்சகவ்யா கரைசல் தொடர் ஆராய்ச்சிக்கு உட்பட்டது. அதுல சேர்க்கிற மூலப்பொருட்கள் அஞ்சு என்பது அடிப்படை. ஆனால், அதைப் பயன்படுத்தும் விவசாயிகளே விஞ்ஞானிகளா மாறி சர்க்கரை, கனிந்தபழம், கடலைப்பிண்ணாக்கு, இளநீர்னு பல மூலப்பொருட்களைச் சேர்த்துப் பயிர்களுக்குத் தெளிச்சுப் பரிசோதனை செஞ்சிருக்காங்க. அதனால, பலன்களும் நிறைய கிடைச்சிருக்கு. அப்படியான ஆராய்ச்சியாளர்களுக்கு வழிகாட்டிக்கிட்டு இருக்கார், டாக்டர் நடராஜன். அவர்கிட்ட பேசினா நிறைய தகவல்கள் கிடைக்கும்’னு சொன்னார். அப்புறம்தான் டாக்டர்கிட்ட பேசி வீட்டுத்தோட்டப் பயிர்களுக்குப் பஞ்சகவ்யாவை எப்படிப் பயன்படுத்துறதுனு தெரிஞ்சுகிட்டேன்” என்ற கிருத்திகா தொடர்ந்தார்.

“நாங்க இருக்கிறது அடுக்குமாடிக் குடியிருப்புல. அதுலதான் மாடித்தோட்டம் போட்டிருக்கேன். இங்க பஞ்சகவ்யா தயாரிக்கிறது, சாத்தியம் கிடையாது. அதனால, நாமக்கல் மாவட்டத்துல இருக்குற எங்க தோட்டத்திலதான் பஞ்சகவ்யா தயாரிச்சு எடுத்துட்டு வந்து பயன்படுத்துறேன். 15 நாளைக்கு ஒரு முறை நாங்க அங்க போவோம். போனதும் முதல் வேலையா பஞ்சகவ்யா தயாரிச்சிடுவேன்.

சாணம், சிறுநீர், பால், தயிர், நெய்னு கலந்து பஞ்சகவ்யா தயாரிச்சுத் தெளிக்கிறப்போ, செடிகள் மேல ஒரு வாசனை இருக்கும். அது பக்கத்து வீட்டுக்காரங்களுக்குப் பிடிக்கலை. அதனால, நான் பஞ்சகவ்யாவுல பன்னீர் சேர்த்துக்க ஆரம்பிச்சேன். 5 லிட்டர் தண்ணீர்ல 150 மில்லி பஞ்சகவ்யா, 200 மில்லி பன்னீர் சேர்த்து தெளிக்கிறப்போ, பஞ்சகவ்யா வாசனை குறைஞ்சு பன்னீர் வாசனை அடிச்சதால, பிரச்னை தீர்ந்திடுச்சு. 15 நாட்களுக்கு ஒருமுறை எல்லா செடிகளுக்குமே, 3 சதவிகித பஞ்சகவ்யா கரைசலை வேர் வழியா கொடுக்கிறதோட தெளிச்சிட்டும் இருக்கேன். அதனால நல்ல பலன் கிடைக்கிது. செடிகள்ல பூப் பிடிச்சிருக்கிற சமயத்துல பஞ்சகவ்யாவைத் தெளிக்கிறதில்லை. அப்படி தெளிச்சா பூக்கள் உதிர வாய்ப்பு இருக்கு. அதனால பிஞ்சு, காய்ப் பருவங்கள்ல தெளிச்சி விடுவேன்.

கீரை, தக்காளி, மிளகாய், கத்திரி, அவரை, புடலை, நெல்லினு பலவிதப் பயிர்கள் இங்க இருக்கு. தக்காளி, கத்திரி, மிளகாய் விதைகளை நாற்றாக வளர்த்துதான் நடணும். நாற்றாக வளர்க்கிறதுக்கு நாற்றாங்கால் பைகள்ல விதைக்கும்போது, விதைகளைப் பஞ்சகவ்யாவுல விதைநேர்த்தி செய்யறப்போ நல்ல பலன் கிடைக்கிது. காய்ப்பு நல்லா இருக்குது. வேர்வழி நோய்கள் வர்றதில்லை. அரை லிட்டர் தண்ணீர்ல 15 மில்லி பஞ்சகவ்யா கலந்து, அதுல விதைகள 20 நிமிடம் ஊற வெச்சு எடுத்து, நிழலில் காயவெச்சு விதைக்கணும். எல்லா விதைகளையும் இப்படி விதை நேர்த்தி செய்யலாம். அதேமாதிரி நாற்றை எடுத்து நடுறப்போ, நாற்றோட வேர்ப்பகுதியையும் பஞ்சகவ்யா கரைசல்ல முக்கி எடுத்து நடவு செய்யணும். இப்படி தொடர்ந்து ஊட்டத்துக்காக பஞ்சகவ்யா கொடுத்திட்டு வந்தா, செடிகள்ல வழக்கமான காலத்துக்கு முன்னதாவே காய்கள் கிடைச்சிடும். பறிச்சு வெச்ச காய்கள், பழங்கள் ஒரு வாரம் வரை கெடாம இருக்கும். இப்படி இயற்கையில் விளைஞ்ச காய்களை ஃபிரிட்ஜ்ல வைக்க வேண்டிய அவசியமே இல்லை” என்ற கிருத்திகா நிறைவாக,

“காய்கறிச் செடிகளுக்குக் கொடுக்கிற மாதிரி, இலையாகவே அறுவடை பண்ற கீரைகள், கறிவேப்பிலை, கொத்தமல்லி மாதிரியான செடிகளுக்கு அதிகமா பஞ்சகவ்யா தெளிக்கக்கூடாது. இந்த மாதிரி செடிகளுக்கு வேர்வழியா மட்டும்தான் கொடுக்கணும். பறிக்கிறதுக்குப் பதினைஞ்சு நாட்களுக்கு முன்னாடி தெளிக்கலாம். கீரை மாதிரி மென்மையான பயிர்களுக்கு அதிகம் தெளிச்சா செடிகள் பட்டுப்போயிடும்” என்று, கவனத்தில் வைக்க வேண்டிய சில விஷயங்களைச் சொல்லி விடைகொடுத்தார்.

-மணம் பரப்பும்

விரைவில் மணம் கமழும் பஞ்சகவ்யா!

கிருத்திகா கூறியிருப்பது போல பஞ்சகவ்யாவில் பன்னீர் கலப்பது குறித்து... கொடுமுடி டாக்டர்’ நடராஜனிடம் பேசினோம். “பஞ்சகவ்யா வாசனை உண்மையில் கிருமிகளை விரட்டக்கூடியது. கொசுக்களைக் கூட இந்த வாசனை விரட்டிவிடும். அதைச் சுவாசிப்பதால் மனிதர்களுக்கு நன்மைகள்தான் அதிகம். பஞ்சகவ்யா தெளிக்கும்போது அவ்வாசனை செடிகள் மீது மூன்று நாட்களுக்குத்தான் இருக்கும். பிறகு படிப்படியாகக் காற்றில் கரைந்துவிடும். இவ்வாசனை பிரச்னையாக உருவெடுக்கும்போது, பன்னீர் கலப்பதில் தவறில்லை. வீட்டுத்தோட்டத்தைச் சுற்றி மல்லிகை, முல்லை, மனோரஞ்சிதம், மரிக்கொழுந்து, துளசி, திருநீற்றுப் பச்சிலை போன்ற மணக்கும் இலைகளைக் கொண்ட செடிகளை வளர்த்து வந்தாலும் பஞ்சகவ்யா வாசனை கட்டுப்படும்.

75 சதவிகிதம் உரமாகவும், 25 சதவிகிதம் பூச்சி விரட்டியாகவும் செயல்படும் பஞ்சகவ்யாவை வீட்டுத்தோட்டம் அமைப்பவர்களில் பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால், நகரங்களில் வசிக்கும் பலருக்குப் பஞ்சகவ்யா தயாரிக்கும் வாய்ப்பு இல்லாததால், வெளியில் விலைக்கு வாங்கித்தான் பயன்படுத்துகிறார்கள் எனக் கேள்விப்பட்டேன். அதற்கு முழுக் காரணம் பசுமை விகடன்தான் என்பதை மறுக்க முடியாது. தற்போது, இயற்கை வாசனை திரவியங்களை உள்ளடக்கிய மணக்கும் பஞ்சகவ்யா தயாரிக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளேன்” என்றார்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm


No comments:

Post a Comment