Monday 13 February 2017

‘‘கீழக்கரிசல் செம்மறியாடுகளின் சிறப்புத் தன்மை என்ன? எந்தப் பகுதியில் வளர்க்கலாம்?’’


திருநெல்வேலி கால்நடை மருத்துவக் கல்லூரியின் உதவிப் பேராசிரியரும், கீழக்கரிசல் ஆடுகள் பற்றி ஆராய்ச்சி செய்தவருமான டாக்டர். ரவிமுருகன் பதில் சொல்கிறார்.

‘‘கீழக்கரிசல் என்ற இந்த செம்மறியாடு ரகமானது மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம்... ஆகிய தென்மாவட்டங்களைப் பூர்விகமாகக் கொண்டவை. தூத்துக்குடி மாவட்டம்,ஒட்டப்பிடாரம் பகுதியில் இவை பரவலாக வளர்க்கப்படுகின்றன. உடல் முழுவதும் பழுப்பு நிறமாக இருந்தாலும், அடிவயிற்றுப் பகுதியில் கறுப்பு நிறம் காணப்படும். அதனால்தான் இதைக் கீழக்கரிசல் என்று அழைக்கிறார்கள். ஆடுகளைப் பொறுத்தவரை அதன் நிறமும் முக்கியமானது. இந்த ரக ஆடுகள் கடுமையான வெயில் அடித்தால்கூட, அசராமல் இருக்கும். வறண்ட சூழ்நிலையிலும் தாக்குப் பிடித்து வாழும். புல், பூண்டுகளை உண்டேகூட பல நாட்கள் தாக்குப் பிடிக்கும். மற்ற இன ஆடுகளை நீல நாக்கு நோய் தாக்கினாலும், கீழக்கரிசல் ரக ஆடுகள் நோய் எதிர்ப்புச் சக்தியுடன் இருக்கும்.

பார்ப்பதற்கு மான் போல தோற்றம் கொண்ட இவை, சுமார் ஆறு அடி உயரத்தைக் கூட சுலபமாகத் தாண்டும். கீழக்கரிசல் ஆடுகள் தன் குட்டிகளுக்கு மட்டுமல்ல, பிற ஆட்டுக் குட்டிகளுக்கும் பால் கொடுக்கும் குணம் உள்ளவை. எங்கள் ஆராய்ச்சியில் கரிசல் மண் தன்மை கொண்ட இடங்களில், இந்த இன ஆடுகள் நன்றாக வளர்கின்றன. இதற்கு மூலக்காரணம், இந்த மண்ணில் விளையும் புற்களை, இந்த ரக ஆடுகள் எளிதாக செரிமானம் செய்துவிடுகின்றன. இதனால், ஆடுகளின் வளர்ச்சியும் சிறப்பாக இருக்கும்.

சில ஆண்டுகளுக்கு முன்பு தென்மாவட்டங்களில் உள்ள செம்மறியாட்டு இனங்களைக் கணக்கு எடுத்தோம். அப்போது கீழக்கரிசல் ரகத்தில் நானூறு எண்ணிக்கை கூட இல்லை. இதையடுத்து, எங்கள் பல்கலைக்கழகமும் தேசியக் கால்நடை மரபு வள அமைப்பும் இணைந்து நிதிப் பங்களிப்பு செய்ததுடன், இந்த இனத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டன. கீழக்கரிசல் கிடாவை இன விருத்திக்காக மந்தையாளர்களுக்கு இலவசமாகவும் வழங்கி வந்தோம். தற்போது 20 கிலோ எடை கொண்ட பெட்டை ஆடு ஒன்று 5 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.’’

செம்மறியாட்டின் இனங்கள் பற்றிய காணொலி காண :

https://www.youtube.com/watch?v=F0RRoMpzmYo

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment