Monday 13 February 2017

15 சென்ட் நிலம்... ஒரு மணி நேர வேலை... தினசரி ரூ 750 லாபம்!

சத்தான வருமானம் கொடுக்கும் கீரை சாகுபடி...

விவசாயத்தில் ஆண்டு வருமானம், மாத வருமானம், வார வருமானம், தினசரி வருமானம் எனத் தரக்கூடிய பல பயிர்கள் உள்ளன. தினசரி வருமானம் தரக்கூடிய பயிர்கள் கீரைகள் மற்றும் மலர்கள்தான். மண்வளம், தட்பவெப்பநிலைக்கு ஏற்ற, ‘தினசரி வருமானம் கொடுக்கும் பயிர்’களைத் தேர்ந்தெடுத்து அவற்றைக் கணிசமான பரப்பில் சாகுபடி செய்துவந்தால், அன்றாடச் செலவுகளுக்கு அல்லாடத் தேவையில்லை. அந்த வகையில், பல வகைக் கீரைகளைச் சாகுபடி செய்து நல்ல வருமானம் ஈட்டிவருகிறார், கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த தங்கவேல்.

இருகூர் அடுத்துள்ள அத்தப்ப கவுண்டன் புதூர் கிராமத்தில் இருக்கிறது, தங்கவேலின் தோட்டம். இவர், சுழற்சி முறையில் பலவகைக் கீரைகளைச் சாகுபடி செய்வதோடு, ஏழு ஆண்டுகளாக ஜீரோ பட்ஜெட் முறையில்தான் விவசாயம் செய்து வருகிறார்.

காலை வேளையில் கீரைகளை அறுவடை செய்து கட்டுகளாகக் கட்டிக் கொண்டிருந்த தங்கவேலுவைச் சந்தித்தோம். “ஒன்பது மணிக்கு மார்க்கெட் போற வேன் வந்துடும். அதுக்குள்ள கீரைகளைக் கட்டி வைக்கணும்” என்ற தங்கவேல், வேலையாள்களிடம் பொறுப்பைக் கொடுத்துவிட்டுப் பேச ஆரம்பித்தார்.

உவர் தண்ணீரில் விளையும் கீரை

“இது எங்க பூர்வீக கிராமம். கேணிப்பாசனத்தோட 7 ஏக்கர் தோட்டம் இருக்கு. பக்கத்துலேயே நொய்யல் ஆறு இருக்கிறதால ஊத்துத்தண்ணிப் பொங்கி, கேணி வத்தவே வத்தாது. கோயம்புத்தூரிலிருந்து திருப்பூருக்கு போறதுக்கு முன்னாடியே எங்க ஊரு இருக்கிறதால சாயக்கழிவு பிரச்னை இல்லை. முன்னாடியெல்லாம் தண்ணி, கண்ணாடி மாதிரி இருக்கும். அதனால நெல், கரும்பு, புகையிலை, பருத்தினு சாகுபடி செஞ்சோம். இப்போ, கோயம்புத்தூர் மாநகர கழிவு நீரை இதுல கலந்து விட்டுடுறாங்க. அதனால ஊத்துத் தண்ணி உவர்ப்பாயிடுச்சு. இப்போ அதுக்கேத்த வெள்ளாமையைச் செஞ்சுக்கிறோம். அந்த வகையில கீரை நல்லா வருது” என்ற தங்கவேல், தான் இயற்கை விவசாயத்துக்கு மாறிய கதையைச் சொல்ல ஆரம்பித்தார்.

“முன்னாடியெல்லாம் மேய்ச்சல் காடுகள்ல ஆடு மாடுக அதிகமா இருக்கும். மாசக்கணக்குல ஆட்டுக்கிடை போட்டு பயிர் வெப்போம். வெள்ளாமை நல்லா இருக்கும். பசுமைப் புரட்சிங்கிற பேர்ல உரத்தைக் கொட்டிக் கொட்டி மண்ணை மலடாக்கிட்டாங்க. நானும் பத்து வருஷத்துக்கு முன்னாடி வரைக்கும் ரசாயன உரத்தைத்தான் பயன்படுத்திக்கிட்டு இருந்தேன்.

கையைக்கடித்த மல்லிகை சாகுபடி

1990-ம் வருஷம் அரை ஏக்கர் நிலத்துல மல்லிகைப்பூ போட்டிருந்தேன். அதுல அசுவினி, சாறு உறிஞ்சும் பூச்சி, வேர்ப்புழுனு அடுத்தடுத்துப் பூச்சிகள் வந்துட்டே இருக்கும். தொடு நஞ்சு, ஊடுருவிப் பாயும் நஞ்சுனு எல்லா நஞ்சையும் ‘பூச்சி மருந்து’ங்கிற பேர்ல லிட்டர் கணக்குல தெளிப்போம். அப்பவும் பூச்சிகள் போகாது. அரை ஏக்கர் மல்லிகையை, அறுவடை பண்றதுக்குள்ள அவ்வளவு பிரச்னை இருக்கும். அடுத்தடுத்து பூச்சிக்கொல்லி வாங்கியே நான் கடன் பட்டுப் போயிட்டேன். மகசூல் கிடைக்காததால மல்லிகை நமக்குத் தோதுப்படாதுனு பிடுங்கி எறிஞ்சுட்டேன். அப்புறம் கொஞ்ச வருஷம் வெள்ளாமையே வெக்கல. அடுத்து பூச்சிக்கொல்லி, ரசாயன உரத்தையெல்லாம் குறைஞ்ச அளவுல பயன்படுத்தி வெள்ளாமை செஞ்சுட்டு இருந்தேன்.

கைகொடுத்த ஜீரோ பட்ஜெட் :

அப்படியே போய்க்கிட்டிருந்தப்போ, கோயம்புத்தூர்ல சுபாஷ் பாலேக்கரோட ஜீரோ பட்ஜெட் பயிற்சியில கலந்துக்க வாய்ப்பு கிடைச்சது. அந்த மூணு நாள் பயிற்சி என்னை ரொம்பவே மாத்திடுச்சு. பல வருஷமா ரசாயன விவசாயத்துக்கு மாற்றைத் தேடி வந்த எனக்கு, ஜீரோ பட்ஜெட்தான் ஒரே வழினு தோணுச்சு. 2009-ம் வருஷத்துல இருந்து ஜீவாமிர்தம், கன ஜீவாமிர்தம், பீஜாமிர்தம், அக்னி அஸ்திரம், பிரம்மாஸ்திரம், ஈரிலை தாவர விதைப்பு, மூடாக்குனு முழு ஜீரோ பட்ஜெட் விவசாயம்தான் செஞ்சுட்டு இருக்கேன்” என்ற தங்கவேல் கீரை வயலுக்கு அழைத்துச்சென்று காட்டினார்.

சுழற்சி முறையில் சாகுபடி

தொடர்ந்து பேசிய தங்கவேல், “ஜீரோ பட்ஜெட் இடுபொருட்கள் தயாரிக்கிறதுக்காக மூணு நாட்டு மாடுகள் வெச்சுருக்கேன். இப்போ 4 ஏக்கர் நிலத்துல தென்னை இருக்கு. 2 ஏக்கர் நிலத்துல பசுந்தீவனம் இருக்கு.
மீதி 1 ஏக்கர் நிலத்துலதான் சுழற்சி முறையில கீரை விவசாயம் செஞ்சுட்டு இருக்கேன். இப்போ, 15 சென்ட் நிலத்துல, கீரை அறுவடையாகுது. சிறுகீரை, அரைக்கீரை, தண்டுக்கீரை, பாலக் கீரை வயல்ல இருக்கு. மீதி நிலத்துல பாத்தி எடுத்து, இதே ரகக் கீரைகளோட சேர்த்து வெந்தயக்கீரை, புதினா, செங்கீரைனும் விதைச்சிருக்கேன்.

சுழற்சி முறையில 15 சென்ட் நிலத்துல தொடர்ந்து விதைச்சிட்டே இருக்கிறதால, வருஷம் முழுசும் கீரை கிடைச்சுட்டே இருக்கும். 6 அடி நீளம் 4 அடி அகலத்துக்குப் பாத்தி எடுத்துதான் விதைப்பேன். அரைக்கீரை, பாலக் கீரை தலா ஆறு பாத்திகள்ல இருக்கு. சிறுகீரை, தண்டுக்கீரை தலா மூணு பாத்திகள்ல இருக்கு” என்ற தங்கவேல் மகசூல் மற்றும் வருமானம் குறித்துப் பேசினார்.

தினமும் 150 கட்டுக் கீரைகள்

“இந்த 15 சென்ட் நிலத்துல இருந்து எல்லா வகைக் கீரைகள்லயும் சேர்த்து தினமும் 150 கட்டுக் கீரை கிடைக்குது. ஒரு கட்டு 350 கிராம்ல இருந்து 400 கிராம் வரை இருக்கும். பெருவிரலையும் ஆள் காட்டி விரலையும் வட்டமா ஆக்கி, அதுக்குள்ள கீரைகளோட தண்டுப்பகுதிகளை வெச்சு பிடிக்கிற அளவை எடுத்தா, அது ஒரு கட்டு. தினமும் வியாபாரிகள் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கிறாங்க. அதேபோல இயற்கை அங்காடிகள்ல இருந்தும் ஆர்டர் கொடுத்து வாங்கிக்கிறாங்க. அறுவடையாகுற 150 கட்டுகள்ல 100 கட்டுகளை வியாபாரிங்க இங்க வந்து வாங்கிக்குவாங்க. அவங்களுக்கு தேவையைப் பொறுத்து ஒரு கட்டு 4 ரூபாய்ல இருந்து 6 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்றேன். மீதி 50 கட்டு கீரைகளை ஆர்கானிக் கடைகளுக்கு ஒரு கட்டு 10 ரூபாய்னு அனுப்பி வெச்சுடுவேன்.

தினசரி வருமானம் 950 ரூபாய்

தோட்டத்துல விற்பனையாகுற 100 கட்டுகள் மூலமா, தினமும் சராசரியா 450 ரூபாய் வருமானம் கிடைச்சுடுது. இயற்கை அங்காடிகளுக்கு அனுப்புற 50 கட்டுகள் மூலமா, சராசரியா தினமும் 500 ரூபாய் வருமானம் கிடைச்சுடுது. ஆக மொத்தம் 15 சென்ட்ல இருந்து தினமும் 950 ரூபாய் வருமானம் கிடைச்சுடும். இதுல விதைப்பு, களை எடுக்குறது, பறிப்பு, இடுபொருட்கள் எல்லாம் சேர்த்தா, தினமும் 250 ரூபாய் செலவாகிடும். அதுபோக 700 ரூபாய் லாபமா நிக்கும்” என்ற தங்கவேல் நிறைவாக,

நிம்மதி கொடுக்கும் இயற்கை வேளாண்மை!

“15 சென்ட் நிலத்துல இந்த லாபம் திருப்தியானதுதான். அதைவிட, நஞ்சில்லா கீரையை உற்பத்தி பண்றோம்னு மனசுக்கு நிம்மதியா இருக்கு. கீரை சாகுபடிக்காகத் தினமும் நான் ஒரு மணி நேரம்தான் செலவு செய்றேன். என்ன மாதிரி விவசாயம் செய்தாலும் தினசரி வருமானத்துக்காகக் கீரைகளைச் சாகுபடி செஞ்சா அன்றாடச் செலவுகளுக்கு சரியா இருக்கும்” என்று சொல்லிக் கொண்டிருக்கும் போது கீரையை எடுத்துச்செல்ல வாகனம் வந்ததால், கீரையை வண்டியில் ஏற்றுவதில் மும்முரமானார், தங்கவேல்.

தொடர்புக்கு,
தங்கவேல்,
செல்போன்: 98422 12412

ஆறு அடிக்கு நான்கு அடியில் பாத்தி... பாத்திக்கு 100 கிராம் விதை :

கீரை சாகுபடி குறித்து தங்கவேல் சொன்ன விஷயங்கள் பாடமாக இங்கே...

பொதுவாக கீரை சாகுபடிக்குப் பட்டம் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் விதைக்கலாம். அதிக மழைப் பொழியும் சமயத்தில் விதைப்பைத் தவிர்க்க வேண்டும். விதைக்கப்போகும் நிலத்தின் அளவை முடிவு செய்து, தேர்ந்தெடுக்கப்பட்ட நிலத்தை நன்கு உழுது, 6 அடி நீளம் 4 அடி அகலத்தில் பாத்திகள் எடுக்க வேண்டும். ஒரு பாத்திக்கு 10 கிலோ வீதம் தொழுவுரத்தைத் தூவி சமப்படுத்த வேண்டும். பிறகு ஒவ்வொரு பாத்தியிலும் ஒரு கிலோ வீதம் கனஜீவாமிர்தம் இட வேண்டும். ஒவ்வொரு பாத்தியிலும் 100 கிராம் அளவில் கீரை விதைகளைத் தூவி, குச்சிகொண்டு குறுக்கும்நெடுக்குமாகக் கீறிவிட வேண்டும். ஒரு பாத்திக்கு 500 மில்லி ஜீவாமிர்தம் என்ற கணக்கில் 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும்.

விதைத்த 3-ம் நாள் விதைகள் முளைவிடும். அவ்வப்போது களைகளை அகற்றி வர வேண்டும். நிலத்தின் ஈரப்பதத்தைப் பொறுத்துப் பாசனம் செய்தால் போதும். ஒவ்வொரு பாசனத்தின் போதும், ஒரு பாத்திக்கு 500 மில்லி ஜீவாமிர்தம் என்ற அளவில் தண்ணீரில் கலந்துவிட வேண்டும். அரைக்கீரை, சிறுகீரை, தண்டுக்கீரை ஆகிய மூன்றும் 22 முதல் 30 நாட்களுக்குள் அறுவடைக்கு வந்துவிடும். பாலக் கீரை 45 நாட்களில் அறுவடைக்கு வரும். சிறுகீரை, தண்டுக்கீரை இரண்டும் ஓர் அறுவடை வகைக் கீரைகள். அதனால் அவற்றை வேரோடு பிடுங்கிவிட வேண்டும். பிறகு பாத்திகளில் உள்ள மண்ணைக் கொத்தி, 15 நாட்கள் ஆறவிட்டு மீண்டும் விதைக்கலாம். அரைக்கீரை, பாலக் கீரை இரண்டும் மறுதழைவு வகைக் கீரைகள். அரைக்கீரையை 20 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம்; கிட்டத்தட்ட 10 அறுப்புகள் வரும். பாலக் கீரையை 15 நாட்கள் இடைவெளியில் அறுவடை செய்யலாம். கிட்டத்தட்ட 30 அறுப்புகள் வரும்.

ஓர் அறுவடை கீரைகளைத் தொடர்ந்து சில பாத்திகளில் விதைத்துக்கொண்டே வந்தால் சுழற்சி முறையில் தினமும் கீரைகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். மறு தழைவு கீரைகளை மகசூல் காலத்தைக் கணக்கிட்டு விதைத்தால் அவற்றையும் சுழற்சி முறையில் அறுவடை செய்யமுடியும்.

பண்ணைக்கு வந்த பாலேக்கர் தங்கவேலின் தோட்டத்தை

2009-ம் ஆண்டில் சில விவசாயிகளோடு வந்து பார்வையிட்டிருக்கிறார், ‘ஜீரோ பட்ஜெட் பிதாமகர்’ சுபாஷ் பாலேக்கர். அதுகுறித்துத் தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்ட தங்கவேல், “என்னோட வயல்ல ஓர் இடம் பாக்கியில்லாமல் சுத்திப்பார்த்தார், பாலேக்கர். சில இடங்கள்ல மண்ணுல சத்துக் குறைவா இருக்குறதையும் சுட்டிக்காட்டினார். அதோட, ‘மண்புழுக்கள்தான் சிறந்த விவசாயி. நெலத்தில் சாணம் இருந்தா போதும். எத்தனை அடி ஆழத்துல இருந்தாலும் மண்புழுக்கள் மேல வந்து சாணத்தைச் சாப்பிட்டு எச்சத்தை உரமாக் கொடுக்கும். ஈரப்பதத்தோட இருக்கிற சாணம்தான் மண்புழுக்களை ஈர்க்கும். காய்ந்த தொழுவுரம் மண்புழுக்களை ஈர்க்காது. அதனால, தொழுவுரத்தை நிலத்தில் கொட்டினதும், 10 லிட்டர் தண்ணீர்ல ஒரு லிட்டர்ங்கிற விகிதத்துல ஜீவாமிர்தத்தைக் கலந்து தெளிச்சுவிட்டா, மண்புழுக்கள் கூட்டம் கூட்டமா வந்துடும்’னு சொன்னார். அதை கடைப்பிடிச்சதால என் நிலத்துல எங்க கைவெச்சாலும் மண்புழுக்களைப் பார்க்க முடியும். ஜீவாமிர்தத்தை வடிகட்டி சொட்டுநீர்ப் பாசனம் மூலமாவும், தெளிப்புநீர்ப் பாசனம் மூலமாவும் கீரைகளுக்குக் கொடுத்துட்டு இருக்கேன்” என்றார்.

விதைநேர்த்திக்குப் பீஜாமிர்தம்... பூச்சிகளுக்கு அக்னி அஸ்திரம் :

“அடுத்த போகத்துக்குத் தேவையான கீரை விதைகளைப் பெரும்பாலும் கடையில இருந்து வாங்குறதில்லை. சில செடிகளை மட்டும் பூக்கவிட்டு, அதிலிருந்து விதை எடுத்து வெச்சுக்குவேன். விதைகளைப் பீஜாமிர்தக் கரைசல்ல விதை நேர்த்தி செஞ்சுதான் விதைப்பேன். அதனால, முளைப்புத்திறன் நல்லா இருக்கு. வேர் சம்பந்தமான நோய்களும் வர்றதில்லை. கீரை வயல், வரப்புகள்ல 10 அடிக்கு ஒரு செண்டுமல்லி செடியை வெச்சு விட்டுட்டா, பூச்சிகள் தொல்லை இருக்காது. அதையும் தாண்டி, கீரை வயல்ல பூச்சிகள் தென்பட்டா அக்னி அஸ்திரம், பிரம்மாஸ்திரம் மாதிரியான கரைசல்களைத் தெளிச்சுடுவேன்” என்கிறார், தங்கவேல்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment