Monday 13 February 2017

கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 13



வெள்ளாடு “ஏழைகளின் பசு” :

வெள்ளாடு “ஏழைகளின் பசு” என்று அழைக்கப் படுகிறது. மேட்டுப்பாங்கான நிலங்களில் பசுக்களையும், எருமைகளையும் வளர்க்க இயலாது. எனவே இத்தகைய சூழலுக்கு உகந்தது. வளர்ப்பில் குறைந்த முதலீட்டைக் கொண்டு நல்ல லாபம் பெறலாம்.

இன்றைக்கு மேய்ச்சல் நிலங்களில் அளவு குறைந்து, பிளாட்டுகளின் எண்ணிக்கை தறுமாறாக அதிகரித்து வருகிறது. முன்பு எல்லாம், பத்து பதினைந்து மாடுகளை வைத்திருந்தவர்கள், இப்போது ஒன்றிரண்டு மாடுகளையாவது வளர்த்து வருகிறார்கள்.

ஆடு வளர்த்தால் நல்ல லாபம் பார்க்கலாம். ஒரு மாட்டை வாங்கி வளர்க்க பல ஆயிரம் ரூபாய்க்களை முதலீடு செய்ய வேண்டி இருக்கும். ஆனால், ஆட்டினை வளர்ப்பதற்கு சில ஆயிரங்களே முதலீடு செய்தால் போதும். ஒராண்டிலேயே முதலீடு செய்த தொகைவிட பல மடங்கு லாபம் பார்க்கலாம்.

வெள்ளாடுகள் வளர்ப்பது சம்பந்தமாக இன்றைய நிலையைக் கீழ்க்காணுமாறு சுருக்கமாகக் குறிப்பிடலாம்.

1. அந்நிய ஆட்சிக் காலத்தில் ஏற்பட்ட வெள்ளாட்டு எதிர்ப்புக் கொள்கை இன்னும் முற்றிலுமாக நீங்கவில்லை. எனினும், தற்போது கால்நடைப் பராமரிப்புத் துறைப் பண்ணைகளில், தலைச்சேரி, சமுனாபாரி வெள்ளாடுகள் வளர்க்கப்படுகின்றன.

2. மேய்ச்சல் நிலம் குறைந்து வரும் சூழ்நிலையில், செம்மறி ஆடுகளின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வரும் வேளையில், வெள்ளாடுகள் எண்ணிக்கை கூடிக் கொண்டே வருகின்றது.

3. நிலமற்ற ஏழைகள் எல்லா எதிர்ப்பையும் தாண்டி வெள்ளாடுகளை வளர்க்கின்றார்கள்.

4. சாலை மரங்கள், பொது இடங்களிலுள்ள மரங்கள் தழைக்கு வெட்டப்படுகின்றன.

5. இன்னும் பல ஊர்களில் ஊர்க் கட்டுப்பாடு வைத்து வெள்ளாடு வளர்ப்புத் தடை செய்து கொள்கின்றார்கள். ஆனால், யாவருமே வெள்ளாட்டுக் கறியைத்தான் விரும்பிக் கேட்டு உண்பார்கள்.

இச்சூழ்நிலையில் ஏழைகள் பெருமளவில் வளர்க்கும் வெள்ளாடுகள் சிறக்க வேண்டும். அதன் காரணமாக ஏழைகள் வளம் பெற வேண்டும்.

பெருகி வரும் வெள்ளாட்டு இறைச்சித் தேவையை ஈடுகட்டவும், அதன் விலையைக் கட்டுப்பாட்டில் வைக்கவும், அதிக அளவில் அறிவியல் அடிப்படையில் முன்னேற்ற முறையில், வெள்ளாடுகள் வளர்க்கப்பட வேண்டும். அதே வேளையில், வெள்ளாடுகள் விரும்பி உண்ணும் தழை உற்பத்திக்காக நிறைந்த அளவில் தீவன மரங்கள் எங்கும் நடப்பட வேண்டும். ஆடுகள் வளர்ச்சியால், காடுகள் பாதிக்கப்படாமல் அதிக அளவில் மரங்கள் வளர்க்கப்படும் நிலை ஏற்பட வேண்டும்.

கறவை மாட்டிற்கான பராமரிப்பு செலவை விட, ஆட்டிற்கான பராமரிப்பு செலவு குறைவு.ஆடுகளை வளர்ப்பதற்கு பெரிய அளவில் இடமும் தேவையில்லை. வீட்டிற்கு பக்கத்திலேயே வளர்க்கலாம். பலரும் இப்போது லாபகரமாக வளர்த்து வருகிறார்கள்.

மாட்டு வளர்ப்புக்கு கொஞ்சம் வறட்சியான ஏரியாவில் வளர்ப்பது என்பது கடினம். ஆனால் ஆட்டை வறட்சியான ஏரியாவிலும் நன்கு வளரக்கூடியது. மானாவாரியான நிலம் வைத்திருப்பவர்களும் எளிதாக வளர்க்கலாம். லோனும் கிடைக்கிறது. சிறு மற்றும் குறு விவசாயிகளும், பெண்களும் குறைந்த முதலீட்டில் ஆடு வளர்ப்பை ஆரம்பிக்கலாம். தமிழ்நாட்டின் காலநிலைக்கு ஆடு வளர்ப்பது அற்புதமான வாய்ப்பு அமைப்பு ஆகும். மேலும், இறைச்சியின் விலையும் அதிகரித்து வருவதால் தொடர்ந்து லாபம் பெறுவதற்கு வாய்ப்பு. விற்பதற்கு சந்தையை நோக்கி ஓட தேவையில்லை. தேவையானவர்கள் உங்களை நோக்கி ஓடி வருவார்கள். அந்தளவிற்கு தட்டுபாடு நிலவி வருகிறது.

மாடு வருடத்திற்கு ஒரு முறைத்தான் கன்று போடும். ஆனால் ஆண்டுக்கு இரண்டு முறை குட்டி போடும். இதில் ஒரு தடவை இரண்டு குட்டி போடும் வகையாக தேர்வு செய்தால் நல்ல வருமானம் கிடைக்கும். அதுவும் உயர்தர கலப்பின ரகத்தை தேர்ந்தெடுத்தால் ஆறு மாத வளர்ப்பிலேயே நல்ல வருமானம் கிடைக்கும். இதுவே இரண்டு மூன்று வருடங்கள் வளர்த்தால் பெரிய அளவில் பணம் பார்க்கலாம். மேலும் பெரிய அளவில் ஆடு வளர்க்கும் போது ஆட்டு எருவிற்கும் நல்ல வரவேற்பு இருப்பதால் அதனை விற்று காசக்கலாம். உங்களிடம் இடமிருக்கும் பட்சத்தில் ஒரு சிறிய கொட்டகை போட்டும் வளர்க்கலாம். உங்களிடம் நிலம் இருந்தால் தீவனங்களையும், புல்களை வளர்த்துக் கொடுத்துக்கலாம்.

தகுந்தமுறையில் வளர்க்கும் போது ஆட்டிற்கு பெரிய அளவில் நோய் தாக்குதல் இல்லை. ஆடு வளருமிடத்தில் ஈரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் வெயில் இருக்காமலும் பார்த்துக் கொள்ள வேண்டும். கற்றோட்டமான இடம், நல்ல அடர் தீவனம், தேவையான சமயத்தில் உரிய தடுப்பூசிகளையும், குடல்புழு நீக்கமும், ஒட்டுண்ணி நீக்கமும் செய்ய வேண்டும். வயிற்றுபோக்கு, சளி மற்றும் இதர பிரச்சனைகளிலிருந்து பாதுகாக்கப்பட்ட வேண்டும்.

வெள்ளாடுகள் விரிகுளம்புகளை உடைய அசைபோடும் விலங்கினம். பழங்காலந் தொட்டே மனிதனோடு இசைந்து வாழும் விலங்கினங்களில் ஒன்று. சில ஆசிரியர்கள், கால்நடைகளில் மனிதனோடு முதலில் தோழமை கொண்டவை வெள்ளாடுகளே என்கின்றனர். ஆடுகள் எல்லாச் சூழ்நிலையிலும் வாழக் கூடியவை.

தொகுப்பு : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment