Monday 13 February 2017

கால்நடை சார்ந்த கேள்விகளும் பதில்களும் பாகம் - 5



வெள்ளாடுகளின் இறைச்சி, பால் உற்பத்திக்குத் தீவனம் அளித்தல் எப்படி?

இறைச்சி உற்பத்திக்குத் தீவனம் அளித்தல் :

வெள்ளாடுகள் இறைச்சிக்காகவே வளர்க்கப்படுகின்றன. சிலர் ஓரிரு கடாக் குட்டிகனை வாங்கி வளர்த்து, விற்பனை செய்வர். படித்த பட்டதாரிகள், பல கடாக்களை வளர்த்து நிறைந்த வருவாய் பெற வாய்ப்புள்ளது. வெள்ளாடுகள் விரைவில் எடைகூடும்படி தீவனம் அளிக்கப்பட வேண்டும். அப்படியானால்தான் வளர்ப்போருக்கு அதிக ஆதாயம் கிடைப்பதுடன், இறைச்சியும் மிருதுவாக இருக்கும். வெள்ளாட்டுக் குட்டிகளின் வளர்ச்சி வீதம் 3 மாதம் முதல் 6 மாதம் வரை அதிகமாக இருக்கும். ஆகவே, 6 மாத வயதில் ஆட்டுக்கடாக்கள் நல்ல எடை கூடும்படி திட்டமிட்டு வளர்ப்பது சிறப்பாக அமையும்.

இறைச்சிக்காகக் குட்டிகள் வளர்க்கும்போது 3 மாதமாவது குட்டிகளைத் தாய் ஆடுகளுடன் விட்டுவிடுவது நல்லது. இது சூழ்நிலைக்கேற்றார்போல் மாறுபடும். குட்டிகளைப் பிரித்து வளர்த்து ஒரு நாளைக்கு 3-4 முறை பால் குடிக்க அனுமதிக்கலாம். மேய்ச்சலுக்கு வசதியுள்ள பகுதியில் குட்டிகளைத் தாய் ஆடுகளுடன் அனுப்புவதே சிறப்பானதாகும். தாயுடன் செல்லும் குட்டிகளட மேய்ச்சல் நிலத்தில் எவ்வகைத் தாவரங்களைத் தவிர்ப்பது ஆகியவற்றை அறிந்து கொள்ளும். அத்துடன் அவ்வப்போது தேவையான பாலையும் குடித்துக் கொள்ளும். குட்டிகளின் வளர்ச்சிக்கு ஏற்றாற்போல் 2 முதல் 3 மாத வயதிற்குள் குட்டிகளைத் தாயிடமிருந்து பிரித்து வளர்க்க வேண்டும். வெள்ளாடுகள் இறைச்சி உற்பத்தித் திறனில் செம்மறி ஆடுகளை விடக் குறைந்தவை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், யாவரும் வெள்ளாட்டு இறைச்சியை விரும்புவதால் இதன் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். இத்திறன் குறைவு காரணமாக, வெள்ளாடுகள் உடல் எடையில் 3 – 4% தீவனத்தையே உடல் வளர்ச்சிக்காக ஏற்றுக் கொள்கின்றேன். ஆனால் பால் உற்பத்திக்காக 8% வரை தீவனத்தை ஏற்கின்றன.

பால் உற்பத்திக்குத் தீவனம் அளித்தல் :

வெள்ளாடுகள் பால் உற்பத்தித் திறன் மிக்கவை. ஒரே அளவு தீவனத்தைக் கொண்டு, வெள்ளாடுகள் பசுக்களைவிட அதிக பால் உற்பத்தி செய்ய வல்லவை. பசுவிற்குத் தீவனத்தைப் பாலாக மாற்றும் திறன் 38% என்றால், வெள்ளாட்டுக்கு 45% முதல் 71% ஆகும். ஆகவேதான் வெள்ளாடுகள் ஏழையின் பசு எனப்படுகிறது. பொதுவாகவே எல்லா வலங்கினங்களிலும் பால் உற்பத்தி மிகத் திறனுடையதாகும். உடல் வளர்ச்சிக்கு அதிகத் தீவனத்தை உண்ண முடியாத வெள்ளாடுகள் பால் உற்பத்திக்கு உடல் எடையில் 8% வரை தீவனம் உண்ணப் கூடியவை. இந்த அளவை ஏற்க ஏதுவாக அகன்ற பெருவயிறு உள்ளது.

வெள்ளாடுகள் கலப்புத் தீவனம் இன்றியே தரமான தழை உண்டு முழு அளவு பால் வழங்கக் கூடியவை. எனினும், நமது நாட்டுச் சூழ்நிலையில் உயர்ந்த தழை எப்போதும் கிடைக்காததால், கலப்புத் தீவனம் இன்றியமையாதது. இதனால் குட்டிகளுக்குத் தேவையான பால் கடைப்பதுடன், சிறிதளவு விற்பனைக்கும் பால் கறந்து கொள்ள முடியும். ஒரு லிட்டர் பால் உற்பத்திக்கு 300 – 400 கிராம் கலப்புத் தீவனம் தேவை.

ஆடுகளுக்குச் சினையான கடைசி ஓரிரு மாதங்களில் 300 – 400 கிராம் கலப்பும் தீவனம் அளிப்பது அவை நன்கு பால் கொடுக்கவும் குட்டிகளின் வளர்ச்சிக்கும், உதவியாக இருக்கும்.

தொகுப்பு : A R தியாகரஜன், கால்நடை மருத்துவர், சுவாமிநாதன் ஆராய்ச்சி நிறுவனம், புதுச்சேரி

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment