Monday 27 February 2017

சொட்டுநீர்ப் பாசனம்...


சிலருக்கு கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பாடு போட்டு சாப்பிடுவது பிடிக்கும். சிலருக்கு சாப்பிடுகிறோமோ இல்லையோ, தட்டு நிறையச் சாப்பாடு இருந்தால்தான் பிடிக்கும். இப்படி வயிறு நிறைவதற்குப் போதுமான உணவைவிட, கண்ணும் மனமும் நிறையுமளவுக்கு உணவைப் பரிமாறுவதைப் போலத்தான்... பயிருக்கு நாம் கொடுக்கும் அதிகப்படியான தண்ணீர். வாய்க்கால் வெட்டி அதில் தழும்பத்தழும்பத் தண்ணீர் விட்டால்தான் பயிர் நன்றாக வளரும் என்பது பலரின் கருத்தாக இருக்கிறது. ஆனால், பயிருக்குத் தேவையான தண்ணீரை பயிரின் வேர் அருகில் கொடுத்தாலே போதுமானது என்பதுதான் நிரூபிக்கப்பட்ட உண்மை. இந்த வேலையைத்தான் செய்கிறது, ‘சொட்டுநீர்ப் பாசனம்’ என்னும் நவீனப் பாசன முறை.

தண்ணீருக்காக ‘மூன்றாம் உலகப்போர் மூளும்’ என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளார்கள். ஆனால், நம் நாட்டில் மாநிலங்களுக்கு இடையிலேயே தண்ணீருக்காகப் போர் மூண்டு கொண்டிருக்கிறது. இந்தச் சம்பவங்களெல்லாம் நாம் விழித்துக்கொள்வதற்கான சமிக்ஞைகள்தான். இனியாவது தண்ணீரைப் பணத்தைப் போல எண்ணி எண்ணிச் செலவழிக்க வேண்டும். அதற்கு முக்கியமான முறையான சொட்டுநீர்ப் பாசனம், அதற்கான கருவிகள், கருவிகளைப் பராமரிக்கும் முறைகள் போன்றவை குறித்து அலசப்போகிறது, இக்குறுந்தொடர்.

மரபுவழி பாசனம்!

மரபுவழி நீர்ப் பாசன முறையில் (வாய்க்கால் பாசனம்) ஏராளமான தண்ணீர் ஆவியாவதுடன், அதிகளவு களைகள் வளரவும் ஏதுவாகிறது. சொட்டுநீர்ப் பாசனம் மூலமாகப் பாசனம் செய்யும்போது, 45 சதவிகிதம் முதல் 60 சதவிகிதம் வரை தண்ணீர் பயன்பாடு குறைகிறது. மேடுபள்ளமான நிலங்களிலும் சாகுபடி செய்ய முடிகிறது. வேலையாட்களின் எண்ணிக்கை குறைகிறது. மண் அரிப்பு தடுக்கப்படுவதுடன், பயிர்கள் சீராக வளர்கின்றன. இப்படிப் பல நன்மைகள் இருந்தாலும், தமிழக விவசாயிகள் இன்னமும் முழுமையாகச் சொட்டுநீர்ப் பாசனத்துக்கு மாறவில்லை.

வாய்க்கால் பாசனம் செய்யும்போது, பயிருக்கு மட்டுமல்லாமல், நிலம் முழுவதும் தண்ணீர் பாயும். இதனால், பயிருக்குத் தேவையான தண்ணீரைப்போல பல மடங்கு தண்ணீர் வீணாகிறது. உதாரணமாக, தென்னைக்கு ஒரு நாளைக்கு 100 லிட்டர் தண்ணீர் போதுமானது. ஆனால், வாய்க்கால் பாசனத்தில் 200 லிட்டர் முதல் 300 லிட்டர் தண்ணீர் பாயும். நாம் எவ்வளவு அதிகமாகப் பாசனம் செய்தாலும், பயிர் தனக்குத் தேவையான அளவுக்குத்தான் தண்ணீரை எடுத்துக்கொள்ளும். குறுகிய காலப் பயிர்கள் சாகுபடி செய்யும் நிலங்களில் வாய்க்கால் எடுத்துப் பாசனம் செய்யும் முறையால், சாகுபடிப்பரப்பு குறையவும் வாய்ப்புகள் உண்டு.

தற்போது பலவிதமான நவீன நீர்ப் பாசன முறைகள் புழக்கத்தில் இருந்தாலும், அவை அனைத்துக்கும் அடிப்படையானது, சொட்டுநீர்ப் பாசனம்தான். இத்தொழில்நுட்பங்கள், ஒரு சில ஆண்டுகளில் கண்டுபிடிக்கப்பட்டவை அல்ல. இது மனித குலத்தின் தொடர் முயற்சியால் கிடைத்தவை. வழக்கமான பாசன முறைகளுடன், புதுமையான பாசன முறைகளை மேற் கொள்ளும் முயற்சிகள், பன்னெடுங்காலமாக உலகம் முழுவதும் இருந்து வந்திருக்கின்றன. அதில் முக்கியமான முயற்சி, மண் பானைகளில் நீர் நிரப்பி, அடியில் சிறிய துளையிட்டு, செடியின் வேர் அருகில் வைத்துவிடும் முறை. இன்றைய சொட்டுநீர்ப் பாசனத்துக்கு இதுதான் அடித்தளம்.

சொட்டுநீர்ப் பாசனத்தின் வரலாறு 1866-ம் ஆண்டு, ஆப்கானிஸ்தானில் தொடங்கியது. களிமண் பானைகளுக்குப் பதிலாக முதன்முதலாக களிமண் குழாய்களைப் பயன்படுத்தத் தொடங்கினார்கள். வறண்ட பகுதிகளில் பாசனம் செய்யத்தான், இந்த ஆராய்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. தாவரங்களின் வேர்ப் பகுதியில் தண்ணீர் கசிவதால், அதிகளவு நீர் சேமிக்கப்படுவதுடன், தாவரங்களும் சிறப்பாக வளர்வதைக் கண்டறிந்த பிறகு, இந்தத் தொழில்நுட்பத்தில் மேலும் பல ஆராய்ச்சிகள் தொடர்ந்தன. பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, 1920-ம் ஆண்டு, ஜெர்மன் நாட்டு விவசாயிகள், பிளாஸ்டிக் குழாய்களில் துளையிட்டுப் பாசனம் செய்யத் தொடங்கினர். ‘ஹென்னிஸ் தில்’ என்ற ஆஸ்திரேலிய ஆராய்ச்சியாளர்தான் முதன்முறையாக, நீண்ட குழாய்கள் மூலமாக, பயிர்களுக்குச் சமமாகத் தண்ணீர் விநியோகிக்கும் கட்டமைப்பை உருவாக்கினார். இந்தக் கண்டுபிடிப்புக்குப் பிறகுதான் குறைவான தண்ணீர் கிடைக்கும் பகுதிகளிலும் பயிர்கள் வளரத் தொடங்கின.

1952-ம் ஆண்டு, இஸ்ரேலில் ‘சிம்கா பிளாஸ்’ மற்றும் ‘கிப்புட்ஸ் ஹெத்லெரிம்’ ஆகியோர் நடைமுறையில் இருந்த முறைகளை மேம்படுத்தி, சொட்டுவான்களை (டிரிப்பர்) உருவாக்கி, அதற்கான காப்புரிமையைப் பெற்றனர். ஆனால், சிறிய சொட்டுவான்களில் ஒரு பிரச்னை ஏற்பட்டது. சிறிய குழாயாக இருந்ததால், சின்னச் சின்னத் துகள்கள் நீர் சொட்டும் பகுதியை அடைத்துக்கொண்டன. இதனால் தண்ணீர் வெளியேறுவது தடைப்பட்டது. இதனைச் சரி செய்வதற்காக நீண்ட பெரிய குழாய்கள், அடுத்து அதைவிடச் சிறிய குழாய்கள், அடுத்து சிறிய குழாய்கள் எனக் கிட்டத்தட்ட நடப்பில் இருக்கும் முறைக்கான அடித்தளத்தை இட்டனர், சிம்கா மற்றும் அவரது மகன் யெஸ்ஹயாகு ஆகியோர்.

தொடர்ந்து பல ஆராய்ச்சிகளின் விளைவாக, பலவிதமான சொட்டுவான்கள், தெளிப்பான்கள் எனத் தொழில் நுட்பங்கள் மேம்பட்டுக்கொண்டே வந்திருக்கின்றன. நவீன நீர்ப் பாசன முறையில், ‘தெளிப்பு நீர்ப் பாசனம்’ உலகின் மதிப்புமிக்க கண்டுபிடிப்பாகக் கருதப்படுகிறது. சொட்டுநீர் மற்றும் தெளிப்பு நீர்ப் பாசன முறைகள் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, உலகளவில் வறண்ட பகுதிகளிலும் விவசாயம் தொடங்கப்பட்டது. உலகளவிலான உணவு உற்பத்தி அதிகரித்ததில் நவீன நீர்ப் பாசனத்தின் பங்கு மகத்தானது. இதில் இன்னமும் மேம்படுத்துவதற்கான ஆராய்ச்சிகள் நடைபெற்றுக் கொண்டே இருக்கின்றன. அடுத்த சில ஆண்டுகளில் விலைமதிப்பில்லாத நீரை, வாய்க்கால் மூலமாகப் பாசனம் செய்யத் தடை வந்தாலும் வரலாம்.

எதிர்கால விவசாயத்தை லாபமுள்ளதாக மாற்றும் தொழில் நுட்பமாகத் திகழப்போவது, நவீனப் பாசன முறைகள்தான். தண்ணீர்த் தட்டுப்பாடு காரணமாக, பல லட்சம் ஏக்கர் நன்செய் நிலங்கள், புன்செய் நிலங்களாகவும் தரிசு நிலங்களாகவும் மாறிக் கிடக்கின்றன. இருப்பதையாவது காப்பாற்ற வேண்டுமானால், நவீனப் பாசன முறைகளைக் கைக் கொள்வதுதான் சிறந்த வழி.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment