Monday 13 February 2017


முயல் வளர்ப்பு பாகம் : 5


உணவளிக்கும் போது கவனிக்க வேண்டியவை :

1. சுத்தமான, புதிய புற்கள் அல்லது பயறு வகைத் தாவரக் கழிவுகளை முயலுக்கு உணவாகக் கொடுக்கலாம் (70 சதவிகிதம்).

2. இனப்பெருக்கத்திற்குப் பயன்படுத்தும் ஆண், பெண் முயல்களுக்கு 50 சதவிகிதம் பயறு வகைத் தாவரங்களும் 50 சதவிகிதம் புற்களும் சேர்ந்த உணவு மிகவும் ஏற்ற மலிவான தீவனமாகும்.

3. அடர் தீவனத்தில் சிறிது நீர் விட்டுக் கூழாக்குவதன் மூலம் அது பறந்து வீணாவது குறைக்கப்படுகிறது.
முயல்கள் புளித்துப் போனதை விரும்புவதில்லை. எனவே அவ்வகை உணவு அல்லது தீவனங்களை தவிர்ப்பது நல்லது.

4. தூய, குளிர்ந்த நீர் எல்லாச் சமயங்களிலும் கிடைக்குமாறு செய்தல் வேண்டும்.

5. குட்டி ஈன்றவுடன் தாய் முயலுக்குத் தீவனம் அதிகமாக அளித்தல் கூடாது.குட்டி பிறந்த 5-7 நாட்கள் கழித்து தான் தாய் முயலின் தீவனத்தை அதிகப்படுத்தவேண்டும்.

6. தீவனத்தில் திடீரென எதையும் புதிதாகச் சேர்த்தோ, நீக்கியோ மாற்றங்கள் செய்யக்கூடாது.

7. 5 சதவிகிதம் கரும்புக் கழிவுகளை சேர்த்துக் கொடுக்கலாம்.

8. அதிக அளவு கலப்புத் தீவனம் கொடுப்பதை விட சிறிது வைக்கோல் அல்லது புல் சேர்த்துக் கொடுப்பதால் குட்டிகள் உட்கொள்ளும் அளவு அதிகமாக இருக்கும்.

9. ரேப்சீடு எண்ணெய்க் கழிவுகளை தீவனத்தில் சேர்க்கும் முன் சிறிது சூடு செய்தல் நலம். மேலும் இது 15 சதவிகிதம் அளவு மட்டுமே தீவனத்தில் இருக்கவேண்டும்.

10. உணவில் கால்சியம் சிறிதளவே இருக்கவேண்டும். அதிகளவு கால்சியம் சினை முயலின் வயிற்றுக் குட்டிகளைப் பாதிக்கும். ஆகையால் சரியான அளவே பயன்படுத்த வேண்டும்.

11. இனச்சேர்க்கையில்லாத காலங்களில் ஆண், பெண் முயல்களுக்கு நாளொன்றுக்கு 100-120 கிராம் உருளைத் தீவனமளிக்கலாம்.

12. வளரும் குட்டிகள், சினை முயல்களுக்கு தானியங்கள் அல்லது உருளைத் தீவனங்களை சிறிது இடைவெளிவிட்டு அவ்வப்போது அளிக்கவேண்டும்.

13. நல்ல தரமான பயறு வகைத் தாவரங்களையும், அதன் கழிவுகளையும் தீவனமாக அளிக்கலாம்.

14. கேரட், பசும்புற்கள், முள்ளங்கி. லியூசர்ன், பெர்சீம் போன்றவை சதைப்பற்று மிகுந்த முயலுக்கு உகந்த தீவனமாகும்.

15. மேலும் சமையல் கழிவுகள், கெட்டுப்போன பால், உடைந்து அழுகிய பழங்கள் போன்ற வீணாகும் பொருட்களையும் முயல்களுக்குக் கொடுக்கலாம்.

தீவனத்தொட்டி / பாத்திரங்கள் :

பலவகையான தீவனப் பாத்திரங்கள் மற்றும் தீவன அமைப்புகள் முயல் வளர்ப்பில் பயன்படுத்தப்படுகிறது. கூண்டுகளில் வெளியிலிருந்தே உள்ளே தீவனம் வைப்பது போல் அமைப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. தரையிலிருந்து தீவனத் தொட்டி 5-8 செ.மீ உயரத்தில் இருக்கவேண்டும். அப்போது தான் முயல் கழிவுகள் தீவனத்தொட்டியில் விழாமல் இருக்கும். நீரைத் திறந்தவெளியில் வைப்பதை விட புட்டிகளில் அடைத்து வைத்தல் சிறந்தது. மண் பானை (அ) அலுமினிய கிண்ணங்கள் போன்றவை மலிவான பொருட்களாகும். தீவனங்கள் அதிகம் சிந்தி இறையாமல் பார்த்துக் கொள்ளவேண்டும். தண்ணீர் புட்டிகளை சுத்தமாகக் கழுவிப் பயன்படுத்த வேண்டும். பெரிய பண்ணைகளில் நீரைத் தானாக செல்லுமாறு அமைத்தல் ஆள்கூலியை மிச்சப்படுத்தும். எந்த வகைத் தொட்டிகளாயினும் அவற்றைக் கழுவி சுத்தமாக வைத்திருத்தல் வேண்டும்.

இரு கலப்புத் தீவனங்களின் கலவைகள் :

பொருட்கள் - அளவு :

கொண்டைக்கடலை - 14 பங்கு

கோதுமை - 30 பங்கு

கடலை பிண்ணாக்கு- 20 பங்கு

எள்ளுப் பிண்ணாக்கு - 20 பங்கு

இறைச்சி மற்றும் எலும்புத்தூள் - 10 பங்கு

உளுந்து உமி - 24 பங்கு

தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் - 1-5 பங்கு

உப்பு - 0.5 பங்கு

கொண்டைக்கடலை - 10 பங்கு

கடலைப்பிண்ணாக்கு - 20 பங்கு

எள்ளுப்பிண்ணாக்கு - 5 பங்கு

தீட்டப்பட்ட அரிசி - 35 பங்கு

கோதுமை - 28 பங்கு

வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் - 1.5 பங்கு

உப்பு - 0.5 பங்கு

அகத்தி பயிரிடப்படும் தீவனப்பயிர்களான கினியாடெஸ்மான்தஸ். லூசர்ன், ஸ்டைலோ போன்றவையும் பலா இலை, முள் முருங்கை, கல்யாண முருங்கை இலை போன்றவைகளையும் கொடுக்கலாம்.
மேலும் முயல்களில் வளரும் முயல்களுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 10 மிலி அளவும் பாலூட்டும் முயலுக்கு 100 கிராம் உடல் எடைக்கு 90 மிலி அளவும் தூய தண்ணீர் வழங்கப்படவேண்டும்.

முயல்களுக்கான தீவன அளவு அட்டவணையை படத்தில் காணலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment