Saturday 19 May 2018


நாய் வளர்ப்பு பாகம் - 1

நாயின் மோப்பச் சக்தியும் நமக்கான பயன்களும் :


1. நாயின் மோப்பத் திறன்
2.
வாசனை உணரும் நரம்புக் கூறுகள்
3.
பயிற்சியும் பயன்பாடும்
4.
சுவை உணர்வு

பல்வேறு செல்லப்பிராணிகளை நாம் வளர்த்து வந்தாலும் நாய்களே நமக்குப் பேருதவிகள் புரிவதில் முன் நிற்கின்றன. நாய்களின் மோப்பத்திறன் குறித்த விளக்கங்களையும் மனித குலத்திற்கு எந்த வகையில் அவை எல்லாம் பயன்படுகின்றன என்பதனை இங்குக் காண்போம்.

நாயின் மோப்பத் திறன் :

உலகிலேயே மோப்பச் சக்தி மிகுந்த விலங்கு நமது செல்லப்பிராணியான நாய்தான். அதன் மோப்பச் சக்தி மனிதர்களை ஒப்பிடும்போது பத்து இலட்சம் மடங்கு துல்லியமானதாகும். உதாரணமாக ஒரு துளி இரத்தத்தை ஐந்து லிட்டர் தண்ணீரில் கலந்தாலும் அதன் வாசனையை அறியும் திறன் கொண்டது. அது மட்டுமல்லாமல் ஒவ்வொரு வாசனையையும் தனித்தனியே பிரித்து நுகரும் சக்தியும் கொண்டது.

மனிதர்களின் மோப்பத்திறன் ஒரு வாசனையையோ அல்லது பல வாசனைகள் கலந்த கலவைப் பொருள்களின் மொத்த வாசனையையோ ஒரு நேரத்திற்கு ஒன்றை மட்டும் உணரக்கூடியது. நாயின் மோப்பச் சக்தி ஒரு நேரத்தில் பல வாசனைகளின் கலவையைத் தனித்தனியே தரம் பிரித்துத் துல்லியமாக உணரக்கூடியது. அதுமட்டுமல்லாமல் மிகச் சிறிய வாசனையின் தன்மையையும் மிகச் சக்தி வாய்ந்த காரத் தன்மையுள்ள பொருள்களுடன் (உதாரணமாக மிளகாய்த்தூள் மிளகுத்தூள்) கலந்து இருந்தாலும் அதனை தனிமைப்படுத்தி உணரக்கூடியது உணர்ந்த மோப்ப உணர்வுகளை மூளையில் நிரந்தரமாகப் பதிந்து வைத்துக்கொள்ளும் சக்தியும் படைத்தது.

இதற்கு காரணம் நாய்களின் மூக்கினுள் வாசனையைக் கிரகிக்கும் நரம்பின் நுனி அமைந்துள்ள பரப்பு பல விளைவுகளான மடக்கப்பட்டு டர்பினேட் என்ற சுருளில் பொருத்தப்பட்டுள்ளது. அப்படிப் பொருத்தப்பட்டுள்ள பரப்பின் அளவு அறுபது சதுர அங்குலம் ஆகும். ஆனால் மனிதர்களுக்கு இது ஒரு சதுரங்க அங்குலம் அளவாகும். அது மட்டுமில்லாமல் உணர்வுகளை உணரச்செய்து பதியச் செய்யும் மூளைப் பகுதியின் அளவு மனிதர்களைக் காட்டிலும் நாற்பது மடங்கு அதிகம்.

வாசனை உணரும் நரம்புக் கூறுகள் :

நாயின் மூக்கின் நீளம் மற்றும் அகலத்தைப் பொறுத்து வாசனை உணரும் நரம்புக் கூறுகளின் எண்ணிக்கை கீழ்க்கண்டவாறு வேறுபடுகிறது.

மனிதர்களுக்கு – 5 மில்லியன் நரம்பு நுனிகள்

டே (க்) ஷண்டு வகை நாய்க்கு -125 மில்லியன்

ஜெர்மன் ஷெப்பேர்டு வகை நாய்க்கு -225 மில்லியன்.

பிளட்ஹவுண்டு வகை நாய்களுக்கு மிக அதிக அளவு – 300 மில்லியன்

நாய்கள் சாதாரணமாகச் சுவாசிக்கும் போது வாசனை எல்லா நரம்பு நுனிகளையும் அடைவதில்லை. ஆனால் அவை வாசனையை உறிஞ்சி உணர முற்படும்போது வாசனைத் துகள்கள நரம்பு நுனிப்பரப்பை அடைந்து மூளைக்கு சென்று மிகவும் ஆற்றலுடன் உணருகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

பயிற்சியும் பயன்பாடும் :

இப்படிப்பட்ட மோப்பச் சத்தி அற்றல் மிகுந்த நாய்களுக்கு மனிதர்கள் தங்கள் திறமையால் பயிற்சி அளித்து அவற்றை மனிதகுல நன்மைக்காகத் தரம் பிரித்து பயன்படுத்துகிறார்கள்.

மோப்ப நாய் : இந்த மோப்ப நாய்கள் போதை மருந்து வெடிப்பொருள்கள், இரத்த வாசனை அறிதல், சுங்கத்துறையின் தாவர மற்றும் மாமிசப்பொருள்களைக் கண்டறிதல், பணத்தை கண்டறிதல், வீட்டில் கறையான் மற்றும் மூட்டைப்பூச்சி இருக்கும் இடத்தைக் கண்டறிதல், புற்றுநோய் வந்ததை மிக முன்கூட்டிடீய கண்டறிதல், பெண்களுக்குக் கருப்பையில் கருமுட்டை வெளிவருவதைக் கண்டறிதல் போன்ற எண்ணற்ற வேலைகளுக்காகப் பயன்படுகின்றன.

தேடல் நாய் : இதைப் பூகம்பம் போன்ற பெரிய இயற்கைச் சீற்றத்தில் அகப்பட்டுத் தொலைந்த மனிதர்களையும் இறந்த மனிதர்களின் உடல்களையும் உடல்பாகங்களையும் தேடிக் கண்டறியப் பயன்படுத்துகிறார்கள்.

வேட்டை நாய் : இது சிறிய முயல் போன்ற மிருகங்களைக் கண்டறிந்து வேட்டையாடவும் அழிந்துவரும் மிருகங்கள் பறவைகள் இருக்கும் இடமிறந்து செயலாற்றவும் பயன்படுத்துகிறார்கள்.

வலிப்பு நோயாளிகளுக்கு உதவும் பயிற்சி பெற்ற நாய் அதன் உரிமையாளருக்கு வலிப்பு வருவதற்கு முன்பே அவர் மூளையில் சுரக்கும் நரம்புதூண்டு கணநீர்களின் அளவு அதிகரிப்பதை உணர்ந்து உரிமையாளரைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லும். வலிப்பு வந்தபின் குரைத்து அருகில் உள்ளவர்களின் கவனத்தை ஈர்த்து உரிமையாளரின் உயிர் காக்கும் உதவியினைச் செய்கிறது.

சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் நாய்கள் பயந்த மனிதர்களைத் துரத்திக் கடிக்கச்செல்வதும் தைரியமாக நிற்பவர்களைப் பார்த்து அடங்கிப் போவதும் அதின் மோப்பச் சக்தியால் மனிதர்களின் உடலில் வெவ்வேறு தருணங்களில் சுரக்கும் ஹார்மோன்களின் துல்லிய வாசனையை நுகர்ந்து செயல்படுவதே ஆகும்.

நாய்களின் மூக்கின் நுனியில் மனிதர்களின் விரல்களில் உள்ளதுபோல் வேறுபட்ட ரேகைகள் இருப்பதால் அதனைப் பதிவுசெய்து நாய்களின் அடையாளமாக உலகெங்கும் கென்னல் கிளப்பில் பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.

சுவை உணர்வு :

நாய்களின் நாக்கில் உள்ள சுவை உணரும் நரம்பு நுனிகள் மனிதனோடு ஒப்பிடும்போது மிகக் குறைவாகவே உள்ளன. அதன் எண்ணிக்கை 20 - இல் ஒரு பாகம்தான். மேலும் சர்க்கரைச் சுவையை உணரும் நரம்பு நுனிகள் நாய்களுக்கு இல்லாததால் அவை இனிப்புச் சுவையைச் சுவைக்க முடியும். நாய்கள் தங்கள் உணவை அதன் வாசனையை வைத்தே உட்கொள்ளத் தீர்மானிக்கின்றன. சுவை என்பது இரண்டாம் பட்சம்தான். ஏனென்றால் நாய்கள் உணவை உட்கொள்ள எடுத்துக்கொள்ளும் நேரம் மிகக் குறைவு (5 – 10 நிமிடம்). நாய்களின் மூக்கின் உட்பாகத்தைத் தாக்கும் நோய்களாகிய சளி இரத்தம் படிதல் புற்றுநோய் போன்றவை நாய்கள் உணவருந்துவதைப் பெரிதும் பாதிக்கின்ற படியால் உடன் சிகிச்சை எடுத்துக்கொள்வது நல்லது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment