Tuesday 29 May 2018

நாய் வளர்ப்பு பாகம் - 11

நாய்கள் - பேரிடர் கால ஆபத்து உதவிகள் :

1. முன்னெச்சரிக்கை அறிகுறிகள்
2. பேரிடர்க் காலங்களில் நாய்கள்

நமக்கு வாழ்வளித்து அரவணைக்கும் இயற்கை, சில சமயங்களில் மனிதர்களின் செயல்பாடுகளினால் மற்றும் இயற்கைச் சீற்றங்களினால் கொந்தளித்து ஏற்படுத்தும் நிலநடுக்கம், சுனாமி, பஞ்சம், வறட்சி, காட்டுத்தீ, நிலச்சரிவு, மழை, வெள்ளம் போன்ற இயற்கை மாறுபாடுகளைப் பேரிடர் என்று கூறலாம். பேரிடர் சமயங்களில் மனிதர்களின் வாழ்வாதாரமே ஆட்டங்கண்டு அபாயத்துக்குள்ளாகும். மனிதர்கள் மட்டுமின்றி மற்ற ஜீவராசிகளும் பேரிடரால் பாதிப்புக்குள்ளாகின்றன. பேரிடர் சமயங்களில் விலங்குகளின் பங்கு மற்றும் விலங்குகளைக் காப்பாற்றும் முறைகள் பற்றிய விழிப்புணர்வு மக்களிடையே குறைவாக உள்ளது. பேரிடர் கால ஆபத்து உதவிகளில் விலங்குகளின் பங்கு அளப்பரிய முடியாதது ஆகும். பேரிடர் காலத்தில் நாய்களின் பங்களிப்பு மற்றும் உதவிகள் குறித்து விரிவாகக் காணலாம்.

முன்னெச்சரிக்கை அறிகுறிகள் :

பேரிடர் நிகழ்வை முன்கூட்டியே உணரும் தன்மை விலங்குகளுக்கு இயற்கை கொடுத்த வரம். பேரிடர் நிகழ்வதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பே, செல்லப்பிராணிகள் சில விசித்திரமான குணாதிசயங்களை வெளிப்படுத்தும் உதாரணமாக அமைதியின்றி இருத்தல், மனிதர்களைத் துரத்துதல், கடித்தல், பதுங்குதல், மிரட்சியுடன் காணப்படுதல் போன்ற செயல்பாடுகளை வெளிப்படுத்தும். இதனைப்பற்றிய ஆராய்ச்சிகள் ஆரம்ப கால நிலையில் உள்ளன. அவற்றில் சிலவற்றைப் பற்றிக் காண்போம்.

1. நிலநடுக்கம் ஏற்படுவதற்கு முன்னர், நாய்கள் விசித்திரமாகக் கத்துவது ஊளையிடுவது மற்றவர்களைக் கடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடுவதாக அறிந்து பதிவு செய்துள்ளார்கள். மேலும், நிலநடுக்கத்தின் பொழுது, பூமிக்கு அடியில் மனிதர்களால் உணரமுடியாத அலைகள் ஏற்படுகின்றன. எனினும் அத்தகைய அலைகளால் ஏற்படும் ஓசைகளை நாய்களால் உணர முடிகிறது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

2. 2004 ஆம் ஆண்டு சுனாமியின் பொழுது, நாள்தோறும தன்னுடன் நடைப்பயிற்சிக்குத் துள்ளிக் குளித்து வரும் தன் வீட்டின் வளர்க்கும் நாய், ஏனோ அன்று நடைப்பயிற்சிக்கு வர முரண்டு பிடித்ததாகவும், அக்காரணத்தால் தான் நடைப்பயிற்சிக்கு அன்று கடற்கரைக்குச் செல்லவில்லையென்றும், அவ்வாறு சென்றிருந்தால் தானும் சுனாமியின் பேரலையில் சிக்கி உயிர்துறந்திருப்பேன் என்று சென்னையைச் சேர்ந்த ஒருவர் தன் அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டுள்ளார். சுனாமியின் நிகழ்வை முன்கூட்டியே தன் செல்லப்பிராணியால் உணர முடிந்ததால் தான் இன்று அவர் உயிரோடு இருப்பதாகவும், அதற்காகத் தன் நாய்க்கு நன்றிக்கடன் பட்டிருப்பதாகவும் சென்னை கால்நடை மருத்தவ கல்லூரியில் நடைபெற்றக் கூட்டம் ஒன்றில் அவர் நெகிழ்வுடன் கூறினார்.

3. 2011 ஆம் ஆண்டு ஜப்பானில் ஏற்பட்ட 9 நிலநடுக்கப் பகுதிகளில் அந்நாட்டுப் பல்கலைக்கழகம் மேற்கொண்ட ஆய்வில், பூனைகள் நிலநடுக்கம் ஏற்படுவதற்கு சில மணி நேரத்திற்கு முன்பே விசித்திரமான குணாதிசயங்களை வெளிப்படுத்தியதாகக் குறிப்பிடப்பட்டது. மனிதர்களை விட பூனைகளுக்குப் பல தரப்பட்ட ஓசைகளைக் கேட்கும் திறன் உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

4. விலங்குகள் மட்டும் அல்லாது பறவைகளும் பேரிடர் நிகழ்வுகளை முன்கூட்டியே உணரும் சிறப்பு பெற்றுள்ளன. தமிழ்நாட்டில் 2004 ஆம் ஆண்டு சுனாமி நிகழ்வதற்கு சில நாள்களுக்கு முன்பே, பாய்ண்ட் கேலிமியர் வன விலங்குகள் சரணாலாயத்தில் வளர்க்கப்பட்ட பிளம்மிங்கோ ரகப் பறவைகள், தாழ்வான பகுதிகளில் இருந்து உயர்மட்ட இடங்களுக்கு பறந்து விட்டதாகச் செய்திகள் பதிவாகிவுள்ளன.

பேரிடர்க் காலங்களில் நாய்கள் :

• பேரிடர்க் காலங்களில் இடிபாடுகளில் சிக்குண்ட மனிதர்களை மீட்கும் முயற்சியில் நாய்கள் அளப்பரிய பங்கு வகிக்கின்றன. குறிப்பாக, இதற்காக பிரத்தியேகமாக வளர்க்கப்படும் மோப்ப நாய்கள் இடிபாடுகளில் சிக்குண்ட மனிதர்களை மீட்க உதவுகின்றன.

• ஆமெரிக்காவின் இரட்டைக்கோபுர வர்த்தகமையத் தாக்குதலின் போது ஓர் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரியின் வளர்ப்பு நாய், இந்த கட்டிட இடிபாட்டில் சிக்கி உயிர்தப்பிய கடைசி நபரைக் காப்பாற்ற கட்டிட இடிபாடுகளிடையே 30 அடிகள் குழிதோண்டிச் சென்று தன் உயிரைப் பணையம் வைத்துக் காப்பாற்றிய விதம் உலகளவில் மிகவும் பாராட்டப்பட்டது.

• பேரிடர் சமயங்களில் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்படும் நிலையில் தகவல் தொடர்பிற்கு நாய்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

• மேலும் பேரிடர் நிகழ்வின்போது தன் எஜமானருக்குத் தேவையான உணவு மற்றும் தண்ணீர் கொண்டுவர நாய்கள் உதவுகின்றன.

• பேரிடர் காலங்களில் சுற்றுப்புறத்தைச் சுத்தம் செய்து நோய் கிருமிகள் பரவாமல் தடுப்பதற்கு நாய்கள் மிகவும் பயன்படுகின்றன. தேவையற்ற கெட்டுப் போன உணவு பண்டங்களையும், மற்ற விலங்குகளின் உடல்களையும் உண்டு மக்களுக்கு பேருதவி செய்கின்றன.

• பேரிடர் காலங்களில் தன் எஜமானரை விஷ ஐந்துக்களின் தாக்குதலிலிருந்து நாய்கள் காப்பாற்றி பேருதவி செய்கின்றன.

• சில நேரங்களில் பேரிடரில் சிக்கித் தவிக்கும் ஆதரவற்ற முதியோர்களுக்கு, அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகள் ஊன்றுகோலாக நின்று உதவி செய்த நிகழ்வுகளும் பதிவாகி உள்ளன. அமெரிக்காவில் இரட்டை கோபுரக் கட்டிடம் தீவிரவாதத் தாக்குதலுக்குட்பட்டபொழுது, கண் பார்வையற்ற ஒரு முதியவரைப் பல மாடிகள் உயரத்திலிருந்து பத்திரமாகக் காப்பாற்றி வெளியேற்ற உதவியது அவர் வளர்த்த செல்ல நாய் என்ற செய்தி நம்மை நெகிழ வைக்கிறது என்பது உண்மையாகும்.

பேரிடர் காலங்களில் நாய்களின் பங்கு பொது மக்களுக்குப் பேருதவியாக திகழ்வதை நாம் இதன்மூலம் வாயிலாக உணர்ந்தோம். ஆபத்துக் காலத்தில் நமக்கு உதவி செய்யும் செல்லப்பிராணிகளை நாம் பேணிக் காப்பதன் மூலம் பேரிடர் காலத்தில் விலங்குகளின் முன்னெச்சரிக்கைகளையும் மற்றும் உதவிகளையும் நாம் உறுதியாய்ப் பெற இயலும் என்பது திண்ணம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment