Tuesday 29 May 2018

வாழையில் ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி முறை :

ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி முறையை பின்பற்றினால், வாழை சாகுபடியில், நல்ல மகசூல் பெறலாம் என, தோட்டக்கலைத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

உடுமலை சுற்றுவட்டாரத்தில் தண்ணீர் வசதி அதிகமுள்ள பகுதிகளில், பரவலாக வாழை சாகுபடி செய்யப்படுகிறது. நேரடி பாசனத்தை தவிர்த்து, சொட்டு நீர் பாசனம் அமைப்பதால், நீர் விரயம் தவிர்க்கப்படுகிறது.

எனவே, பெரும்பாலான விவசாயிகள் சொட்டு நீர் பாசனம் அமைத்து, வாழை சாகுபடி மேற்கொள்கின்றனர். இதில், ஒருங்கிணைந்த பயிர் சாகுபடி முறையை கடைபிடித்தால் வாழையில் எக்டேருக்கு, 42 டன் வரை மகசூல் பெற முடியும் என, தோட்டக்கலைத்துறையினர் தெரிவிக்கின்றனர்.

தோட்டக்கலைத்துறையினர் அறிக்கை :

* வாழை சாகுபடியில், சீரான வளர்ச்சி, சிறப்பான மகசூலுக்கு தரமான கன்றுகளே ஆதாரமாகும்.
தாய்மரத்துக்கு அருகிலுள்ள கிழங்கிலிருந்து, 2 முதல் 3 அடி உயரம் வளர்ந்த கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். கன்றுகளின் எடை சீராக இருத்தல் வேண்டும்.

* குறைந்தபட்சம், 3 மாத கன்றுகளாக இருக்க வேண்டும்.தேர்வு செய்யப்பட்ட கன்றுகளின் வெளிப்புறத்திலுள்ள வேர்கள் மற்றும் அழுகிய பகுதிகளை அகற்றிவிட்டு, 100 லிட்டர் தண்ணீரில், 1 லிட்டர் பஞ்சகவ்யம் மற்றும் 1 கிலோ சூடோமோனாஸ் கலந்து, கன்றுகளை நேர்த்தி செய்து பின் நடவு செய்ய வேண்டும்.

* வகைகள் பூவன், ரஸ்தாளி, மொந்தன், கற்பூரவல்லி, ரொபஸ்டா, மோரிஸ், நேந்திரன், செவ்வாழை மற்றும் கிராண்ட்நைன் உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன.

* நேந்திரன் மற்றும் பூவன் வகைகள் நம் பகுதியில் சிறப்பாக வளரக்கூடிய தன்மையுடையவையாகும்.

* தாய்மரத்தின் அருகில் முளைக்கும் பக்க கன்றுகளை, 15 நாட்களுக்கு ஒருமுறை அகற்ற வேண்டும்.

* தாய்மரம் குலையிட்ட பிறகு அதன் அருகில் மறுதாம்பிற்கு ஒரு கன்றை விட வேண்டும். அவ்வப்போது இலைகளையும் கழித்துவிட வேண்டும்.

* மரங்கள் பூப்பதற்கு முன்போ அல்லது பூக்கும் சமயத்திலோ கம்புகளை கொண்டு முட்டுக்கொடுக்க வேண்டும்.காற்றிலிருந்து மரங்களை காப்பாற்ற வரப்பில், அகத்தி போன்ற பல்வேறு வேலிப்பயிர்களை நடவு செய்ய வேண்டும்.

* வாழையில் ஊடுபயிராக வெங்காயம், முள்ளங்கி, தக்காளி, கொடி வகை காய்கறிகள் உட்பட குறுகியகால பயிர்களை சாகுபடி செய்யலாம்.

* இத்தகைய தொழில்நுட்பங்களை பின்பற்றினால், வாழை சாகுபடியில், சிறந்த மகசூல், லாபம் பெறலாம். இவ்வாறு, அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment