Monday 7 May 2018

மண், மக்கள், மகசூல்! - உங்கள் நிலத்திலேயே உரத்தொழிற்சாலையை உருவாக்கலாம்..!

மண் நலம்

முனைவர். சுல்தான் அகமது இஸ்மாயில்

மண்ணின் நலத்தை மீட்டெடுப்பதன் மூலமே, மனித குலத்தை இனி பிழைத்திருக்கச் செய்ய முடியும்’ என்ற உண்மையை உரக்கச்சொல்லி, உழவர்களைச் செயல்படத் தூண்டும் அனுபவத் தொடர் இது!

தோட்ட மண், காற்றையும் தண்ணீரையும் சரியான அளவில் தனக்குள் செல்ல அனுமதித்து, பயிர் வளர ஏதுவான சூழலை உருவாக்குகிறது என்று சென்ற இதழில் பார்த்தோம். ‘பயிர்கள் வளர, மண்ணுக்கு நீர் அவசியமென்று புரிகிறது. ஆனால், காற்று தேவைப்படுமா’ என்று சிலர் கேட்கலாம். மண்ணுக்குள் வசிக்கும் உயிர்களுக்கு, ஏன் நுண்ணுயிர்களுக்குக்கூடக் காற்று அவசியம். பயிர்கள் தங்களது வேர்களில் உருவாக்கும் பொருள்களில் கார்போஹைட்ரேட் அதிகமிருக்கும். அவற்றை உடைத்து, எளிதில் தங்களுக்குத் தேவையான சக்திக்காக கார்பனாக மாற்றும் பணியை நுண்ணுயிர்கள் செய்கின்றன. இதற்கு ஆக்ஸிஜன் மிகவும் அவசியம்.

இந்த அறிவியல் தெரியாவிட்டாலும்... ‘மண் கெட்டித்தட்டினாலோ, மண்ணில் வாசனை இல்லாமல் போனாலோ, மண்ணைப் புரட்டிப் போடவேண்டும்’ என நம் முன்னோர் உணர்ந்திருந்தனர். காற்று உள்செல்வதால் பயிர்கள் நன்கு வளர்கின்றன என்பதை அனுபவபூர்வமாக உணர்ந்த அவர்கள், ஏர் மூலம் உழத் தொடங்கினர். ஏர் உழ, உழ வளமான மண் பஞ்சுபோல மேலே வந்தது. காற்று உள்ளே சென்றது. அதனால், நுண்ணுயிர்கள் வளரத் தேவையான சூழல் உருவானது. மேலும் அவர்கள், நுண்ணுயிர்களுக்கு உணவாக நவதானியப் பயிர்களைப் பயிரிட்டு மடக்கி உழுதனர். பயிர்ச்சுழற்சியை மேற்கொண்டனர். நெல்லுக்கு அடுத்து நிலக்கடலையையோ, பயறு வகைகளையோ பயிரிட்டதன் மூலம் அவற்றின் வேர்முடிச்சுகளில் பாக்டீரியாக்கள் பெருகின. அந்த நுண்ணுயிர்கள் மண்ணிலுள்ள பொருள்களைச் சிதைத்து, மண்ணுக்குத் தேவையான நுண்ணூட்டச்சத்தைக் கொடுத்தன. இப்படி நம் மண்ணையும் அதிலுள்ள உயிர்களையும் நம் முன்னோர் போற்றிப் பாதுகாத்தனர்.

அவர்கள், மண்ணையும், எருவையும், மண்புழுக்களையும் ஒருங்கிணைத்துச் சொந்த மண்ணிலேயே, ஓர் உரத் தொழிற்சாலையைப் போல நுண்ணுயிர்களைப் பெருக்கினர். ஆனால், இன்று நடப்பது என்ன? மண் சூழலைப் பற்றிய புரிதல் இல்லாமல், அசோஸ்பைரில்லம், அசிட்டோபாக்டர், ரைசோபியம் போன்ற நுண்ணுயிர்களைப் பாக்கெட்டில் அடைத்து விற்பனை செய்யும் நுண்ணுயிர் உரத் (Microbial Fertilisers) தொழிற்சாலைகள் இயங்கத் தொடங்கிவிட்டன. ‘நீ மண்ணை எப்படி வேண்டுமானாலும் பாழ்படுத்திக் கொள். மகசூலைப் பெருக்க என்னிடம் மருந்திருக்கிறது’ என அந்த நுண்ணுயிர் பாக்கெட்டுகளை நம்மிடம் விற்கிறார்கள். இன்று மனிதர்களுக்கு மட்டுமல்லாமல், மண்ணுக்கும் ‘உணவே மருந்து’ என்ற கலாசாரம் மாறி, ‘மருந்தே உணவு’ என்ற போக்கு உருவாகியுள்ளது. ஒரே ஆறுதல், மருந்து இயற்கை மருந்தாக இருப்பதுதான். ஆனால், இந்தப்போக்கு நீடித்தால், மண்ணை நலமுடன் நம்மால் பாதுகாக்க முடியாது.

‘மண் நலனில், கடைகளில் கிடைக்கும் உயிர் உரங்கள் கூடாது என்பதில்லை, அவை போதாது’ என்பதே என்னைப் போன்றவர்களின் நிலைப்பாடு. அதற்குக் காரணங்கள் இல்லாமலில்லை. தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும்போது வேண்டுமானால்... பாக்கெட்டுகளில் அடைக்கப்படும் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை பத்தில் ஏழு மடங்காக இருக்கலாம். அவற்றை உயிர்ப்புடன் வைக்கத் தாங்கு பொருளாக (Carrier material) எரு அல்லது லிக்னைட் பயன்படுத்தப்படுகிறது. இருப்பினும், நுண்ணுயிர்கள் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு, வேளாண் துறையையோ, கடைகளையோ அடைந்து, விவசாயிகளின் கைகளுக்கு வந்தடையும்போது, அவற்றின் எண்ணிக்கை பத்தில் இருமடங்கு அல்லது மும்மடங்கு என்ற அளவில் இருந்தாலே அதிகம். சில நேரங்களில், வேளாண் துறைத் திட்டங்களில் கொடுக்கப்படும் நுண்ணுயிர் பாக்கெட்டுகள், காலாவதி அடையக்கூடிய சமயங்களில்தான் விவசாயிகளின் கைகளுக்குக் கிடைக்கின்றன. அதனால், பாக்கெட் உயிர் உரங்கள் பயனற்றுப் போய் விடுகின்றன.

அவை பயனற்றுப் போவதற்கு இன்னொரு காரணமும் உண்டு. ஒரு ஸ்பூன் அளவிலான மட்குள்ள மண்ணில், கோடிக்கணக்கில் நுண்ணுயிர்கள் இருக்கும் என்று பார்த்திருக்கிறோம். கோடிக்கணக்கில் உள்ள நுண்ணுயிர்களில், நன்மை தரும் நுண்ணுயிர்களே பலவகைகள் உள்ளன. ஆனால், ஒரே ஒரு வகை அல்லது ஒருசில வகை நுண்ணுயிர்களை மட்டுமேதான், நாம் பாக்கெட் உயிர் உரங்களில் பெற முடியும். புரியும்படி சொல்ல வேண்டுமென்றால் சாதம், சாம்பார், ரசம், வற்றல் குழம்பு, மோர், பாயசம், கூட்டு, பொரியல், அப்பளம், வடை... எனப் படைப்பதுதான் விருந்து. இவற்றில் ஏதாவதொன்றை மட்டுமோ அல்லது இரண்டை மட்டுமோ இலை நிறையப் போட்டு வைத்தால் அது விருந்தாகுமா? இன்னொரு உதாரணத்தைச் சொல்கிறேன். நம் வீடுகளில் பாலில் உறைமோர் ஊற்றித் தயிராக்குவோம். இரவு மிதமான சூட்டிலுள்ள பாலில் உறைமோரை ஊற்றி வைத்தால், மறுநாள் காலை, சுவையான தயிர் கிடைத்துவிடும். ஆனால், வீட்டில் தயாரிக்கப்படும் தயிர் எல்லா நாள்களிலும் ஒரே சுவையுடன் இருப்பதில்லை.

பாலைத் தயிராக்கும் லேக்டோ பேசில்லஸ் போன்ற நன்மை செய்யும் நுண்ணுயிர்கள் உறைமோரில் உள்ளன. அந்த நுண்ணுயிர்களே பாலைத் தயிராக உறையச் செய்கின்றன. அவற்றின் எண்ணிக்கை மற்றும் அந்த நுண்ணுயிர்களின் வகைகள், தட்ப வெப்பத்துக்கு ஏற்ப மாறுபடும். அதனால்தான் எல்லா நாள்களிலும் தயிரின் சுவை ஒரே மாதிரி இருப்பதில்லை.

ஆனால், கடைகளில் விற்கப்படும் தயிர் அல்லது யோகர்ட் எப்போதுமே ஒரே சுவையில் இருப்பதையும் நாம் உணர்ந்திருப்போம். அதற்கும் காரணம் உண்டு. அந்தத் தயிரைத் தயாரிக்கும் நிறுவனங்கள் சில குறிப்பிட்ட வகை நுண்ணுயிர்களைத் தனியாகப் பிரித்தெடுத்து, அவற்றை மட்டுமே பாலைத் தயிராக்கப் பயன்படுத்துவார்கள். அதனால்தான் சுவை என்றும் மாறுவதில்லை. பல்வேறு வகையான நன்மை செய்யும் நுண்ணுயிர்களால் உருவான தயிர் நல்லதா? ஒரே வகை நுண்ணுயிரால் உருவான பாக்கெட் தயிர் நல்லதா என்று யோசியுங்கள். பஞ்சகவ்யா, மீன் அமினோ அமிலம், அமுதக்கரைசல் போன்ற இயற்கை இடுபொருள்களை மண்ணில் பயன்படுத்தும்போது... அதில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிர்களும், நுண்ணுயிர்களுக்கு உணவாகும் பொருள்களும், நுண்ணுயிர்களை மண்ணில் பெருக்கி மண்ணின் நலத்தைக் கூட்டுகிறது. ஆனால், உயிர் உரங்கள், குறிப்பிட்ட வகை நுண்ணுயிர்களை மட்டுமே மண்ணில் பெருக்கும். எனவே, வீட்டுத் தயிர் வேண்டுமா அல்லது கடையில் விற்கும் பாக்கெட் தயிர் வேண்டுமா என்று நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

வீட்டுத் தயிர் தயாரிக்கும் முறையைப் போல, நுண்ணுயிர்களைப் பெருக்குவதன் மூலம் மண்நலத்தைச் சிறப்பாகப் பராமரிக்க முடியும் என்பதற்குக் காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள முன்னோடி இயற்கை விவசாயி தெய்வசிகாமணியின் ‘தமிழ் நிலம் தமிழ்ப் பண்ணை’யை உதாரணமாகக் கூறலாம். இந்தத் தொடரின் ஆரம்பத்தில் அவரின் பண்ணையிலிருந்து மண்புழுக்கள் பற்றி நான் பேசிய விகடன் டிவி வீடியோவை (பகுதி 1) மீண்டும் ஒருமுறை பாருங்கள். அவரின் பண்ணையில், மரங்களிலிருந்து விழும் இலை தழைகளை யாரும் பெருக்கி வாருவதில்லை. நடைபாதை, பயிரிடும் பகுதிகளைத் தவிர்த்து மற்ற பகுதிகள் அனைத்தும் இலை தழைகளால் மூடப்பட்டு இயற்கையான மூடாக்கு அங்கே அமைந்துள்ளது.

மாடுகள், அங்கும் இங்கும் நடமாடி நினைக்கும் இடங்களில் எல்லாம் சாணம் போடுகின்றன. அதனால், மேல் மண்ணில் நுண்ணுயிர்கள் பெருகி, மண்புழுக்களும் அதிகம் காணப்படுகின்றன. நாங்கள் அவர் பண்ணைக்குச் சென்றபோது மழைக்காலமாகக் கூட இல்லை. ஆனாலும், மண்ணை ஒரு சதுர அடி அளவுக்குத் தோண்டினால், குறைந்தது 10-15 மண்புழுக்களை அங்கே காணமுடிகிறது. ‘ஒரு சதுர அடி மண்ணில் 15-20 மண்புழுக்கள் இருந்தால் அந்த மண் நலமாக இருக்கிறது’ எனச் சர்வதேச அமைப்பான ‘இயற்கை வேளாண் இயக்கங்களின் பன்னாட்டுக் கூட்டமைப்பு (IFOAM)’ தெரிவிக்கிறது.

எனவே, தெய்வசிகாமணி அவர்களின் மண் நலமாக இருக்கிறது என்று நாம் துணிந்து கூறலாம். இப்படி மண்நலம் பேணும் அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதுடன், மண்ணை நலமாக்க அவர் செய்யும் முயற்சிகளையும் நாம் பின்பற்ற வேண்டும். தெய்வசிகாமணியைப் போல ஆக்கபூர்வமான வேளாண்மையைச் செய்ய வேண்டுமென்றால், நம்மூர் முதியவர்களிடம் பாரம்பர்ய விவசாய முறைகளைப் படியுங்கள். அவற்றைப் பரிசோதித்துப் பார்த்து நடைமுறைக்குக் கொண்டு வாருங்கள். மண்ணின் நலன் காக்கும் முதல்படி, நம்மிடம் ஏற்கெனவே உள்ள பொக்கிஷங்களான மரபுசார் விவசாய முறைகளை மீட்டெடுப்பதே என்பதை நினைவில் வையுங்கள்.

-முயற்சி தொடரும்

இலைவழி ஊட்டம் எப்போது கொடுக்கலாம்?

பெரும்பாலான இடங்களில் வளமற்ற மண், ஒரு பெரும் பிரச்னையாக இன்று நம்முன் நிற்கிறது. நீண்டகாலத் திட்டமாக மண்நலம் காக்கும் முயற்சியில் நாம் இறங்கினாலும், தற்காலிகமாகப் பயிர்களுக்கு நேரடியாக ஊட்டமளிப்பதன் மூலம் பயிர் வளர்ச்சியை ஊக்குவிக்கலாம், விளைச்சல் இழப்பையும் தவிர்க்கலாம்.

செடிகளின் இலைகளிலும், தாள்களிலும் நுண்துளைகள் (Stomata) உள்ளன. இவை நுண்ணூட்டங்களை நேரடியாக எடுத்துக்கொள்ளும் திறன் பெற்றவை. இந்த இலைத்துளைகள் சுருங்கி விரியும் தன்மை கொண்டவை. வெயிலில் இந்த இலைத் துளைகள் மூடிக்கொள்ளும்.

வறண்டப் பகுதிகளிலும், பாலை வனங்களிலும் உள்ள தாவரங்களின் இலைத் துவாரங்கள் நீரிழப்பைத் தவிர்க்க பெரும்பாலும் மூடியே உள்ளன. இயற்கை வேளாண்மையில் பஞ்சகவ்யா, அமுதக் கரைசல், மீன் அமினோ அமிலம், பழத்திறமி போன்றவற்றை மண்ணிலும், இலைவழி ஊட்டமாகவும் (Foliar Feed) பயன்படுத்துகிறோம். இவற்றிலுள்ள நுண்ணூட்டங்கள், இலைகள் மற்றும் தாள்களின் வழியே உட்சென்று செடிகளின் ஆரோக்கியத்துக்கு வழிவகுக்கும்.

இலையூட்டக் கரைசல்களை, விடியற் காலை அல்லது மாலை நேரத்தில்தான் தெளிக்க வேண்டும். வெயில் நேரத்தில் இலைத்துளைகள் மூடிக்கொள்ளும் என்பதால், நண்பகல் நேரத்தில் தெளிப்பது பயனளிக்காது. அதேபோல், 5-10 சதவிகிதம் இலைவழி ஊட்டக்கரைசல், 95-90 சதவிகிதம் தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து பயன்படுத்த வேண்டுமென்பதே பொதுவான விதி.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment