Saturday 26 May 2018

நாய் வளர்ப்பு பாகம் - 8

செல்லப்பிராணிகளின் முதுமை மேலாண்மை :

1. முதுமை எது?
2. முதுமையடைந்த செல்லப்பிராணிகளில் ஏற்படும் நோய்கள்
3. உணவூட்டமுறை
4. பொதுவான முதுமை மேலாண்மை

வளர்ந்து வரும் கால்நடை மருத்துவத்தில் செல்லப்பிராணி வளர்ப்பு மிக அதிக வளர்ச்சியை எட்டியுள்ளது. பலபேர் அதிக விலை கொடுத்து நாய்க்குட்டி வாங்குகிறார்கள். இளமைப் பருவத்திலும், வளரும் பருவத்திலும் ஆர்வத்துடன் வளர்க்கப்படும் செல்லப்பிராணிகள் முதுமைக் காலங்களில் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவை முறையாகப் பராமரிக்கப்படாமல் இறந்து விடுவதாக அறியப்படுகிறது.

முதுமை எது?

செல்லப் பிராணிகளின் வளர்ச்சி நிலையானது அதன் இனத்தின் வகை, மரபு, உணவூட்ட முறை மற்றும் சுற்றுச்சூழலைப் பொறுத்து அமைகிறது. பொதுவாக நாய் மற்றும் பூனைகளின் வாழ்க்கையை மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். குழந்தைப் பருவமானது பிறந்ததிலிருந்து 1 வயது வரையிலும், இடைப்பட்ட வளர்ச்சி நிலையானது 1 முதல் 8 வயது வரையிலும் மற்றும் முதுமை நிலையானது 8 வயதிற்குப் பிறகும் கணக்கிடப்படுகிறது.

கோல்ஸ்டன் (1989) அவர்களின் கூற்றின்படி செல்லப்பிராணிகளை அவற்றின் வயது மற்றும் எடையை கொண்டு முதுமை நிலையை கீழ்க்கண்டவாறு வகைப்படுத்தலாம்.

* சிறிய நாய்கள் (9.07 கிலோ) 9 -13 வருடங்கள்

* நடுத்தர நாய்கள் (9.5 - 22.7 கிலோ) 9 -11.5 வருடங்கள்

* பெரிய நாய்கள் (23.1 – 40.8 கிலோ) 7.5 – 10.5 வருடங்கள்

* மாபெரும் நாய்கள் (40.8 கிலோ) 6 – 9 கிலோ

* பூனைகள் (பெரும்பாலான அமெரிக்கன் இனங்கள்) 8 – 10 வருடங்கள்

முதுமையடைந்த செல்லப்பிராணிகளில் ஏற்படும் நோய்கள் :

முதுமையடைந்த செல்லப்பிராணிகளில் புற்றுநோய், இதய நோய், கல்லீரல் நோய், எலும்பு மற்றும் மூட்டு சம்பந்தமான நோய்கள், சிறநீரகச் செயலிழப்பு மற்றும் நீரிழிவு நோய் போன்ற நோய்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1. நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பு :

மனிதர்களைப் போலவே செல்லப்பிராணிகளில் இந்த நோய் அதிகளவில் காணப்படுகிறது. இதனால் உடலின் கழிவுப்பொருட்கள் சிறுநீர் மூலம் வெளியேற்றப்படாமல் இரத்தத்தில் யூரியா, கிரியாட்டினின், யூரிக் அமிலம் போன்ற தேவையற்ற கழிவுப்பொருட்களின் அளவு அதிகரிப்பதால் அசட்டோனோமியா மற்றும் யுரீமியா (சிறநீர் இரத்தத்தில் கலந்த நிலை) ஏற்படுகிறது. அதிகமாக நீர் அருந்துதல், அதிக அளவில் சிறுநீர் வெளியேறுதல், வயிற்றுப்போக்கு, வாந்தி, பசியின்மை, உடல் எடை குறைதல், இரத்தச் சோகை, சோர்ந்து காணப்படுதல் மற்றும் வாய்ப்புண் ஆகிய நோய் காணப்படுதல் மற்றும் வாய்ப்புண் ஆகிய நோய் அறிகுறிகளைக் கொண்டு மருத்துவரிடம் சிகிச்சைப் பெறுவது அவசியமாகும்.

2. இரத்தச்சேர்க்கை இதயச் செயலிழப்பு :

செல்லப்பிராணி வளர்ப்போரால் ஆரம்ப காலத்திலேயே, இந்த நோயைக் கண்டறியப் போதுமான விழிப்புணர்வு இல்லாததால், இது அதிகளவில் காணப்படுகிறது. இதயச் செயலிழப்பு காரணமாக இரத்தம் இதயத்திலிருந்து வெளியேற்றப்படாமலும் உள்வாங்க முடியாமலும் இரத்தச் சேர்க்கை மற்றும் திரவக் கோர்வை நிலை ஏற்படுகிறது. உடற்பயிற்சி சகிப்பின்மை, குறைவாகச் சாப்பிடுதல், இருமல், வயிற்றில் நீர்க் கோர்த்தல், மயக்க நிலை, படுக்கும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஆகிய அறிகுறிகளைக் கொண்டு இந்த நோயை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து தக்க சிகிச்சை அளிக்க வேண்டும். இறுதிக் கட்ட நோய் நிலைகளில் இறப்பு நேரிடும்.

3. பல் சம்பந்தப்பட்ட நோய்கள் :

பல் சம்பந்தப்பட்ட நோய்கள் வயதான செல்லப்பிராணிகளில் மிக அதிக அளவில் காணப்படக்கூடிய நோயாகும். அன்றாடம் பல்லைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் முற்றிலுமாகத் தடுக்கப்படக்கூடிய நோயாகும். நோயின் ஆரம்ப கால அறிகுறிகள் 3 வயதிலிருந்தே தொடங்கி விடுகின்றன. பாக்டீரியா பற்களிலும், பல் ஈறுகளிலும் தங்கிச் சேதத்தை ஏற்படுத்துவதால் கெட்ட சுவாசம், பற்சொத்தை, ஈரிலிருந்து இரத்தம் வடிதல், உணவு மெல்லும்போது வலி ஏற்படுதல் மற்றும் பற்சிதைவு ஆகிய அறிகுறிகள் காணப்படும். பற்களைச் சுத்தமாகப் பராமரித்தல், தினமும் பல் துலக்குதல், தரமிக்க உணவுப்பொருட்களை அளித்தல் மூலம் பல் மற்றும் ஈறு சம்பந்தப்பட்ட நோய்களைத் தடுக்கலாம்.

4. புற்றுநோய் :

புற்றுநோய்களின் தாக்கம் வயதினைப் பொறுத்து அதிகமாகிறது. வயதான செல்லப்பிராணிகளில் பால் மடிப் புற்றுநோய், விதைப்பைப் புற்றுநோய் அதாவது செர்டோலி செல் புற்றுநோய் மற்றும் பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. இவற்றைத் தவிர்க்க வளரும் பருவத்திலேயே கருமுட்டை மற்றும் கருப்பை அகற்றுதல் மற்றும் விதை நீக்கம் செய்ய வேண்டும். கதிரியக்கச் சிகிச்சை மற்றும் தக்க வேதியியல் மருந்துகளையும் உபயோகப்படுத்தலாம்.

5. கருப்பைச் சீழ் :

கருப்பை அகற்றப்படாத வயதான பெண் நாய்களில் இது பொதுவாக காணப்படுகிறது. சினைப்பருவ காலம் முடிந்து 4-6 வாரத்திற்குப் பிறகு இது பொதுவாகக் காணப்படுகிறது. கருப்பைச் சீழ் கொண்ட செல்லப்பிராணிகளில் காய்ச்சல் உணவுண்ணாமை, வாந்தி, வயிற்றுப்போக்கு, அதிகமாக நீர் அருந்துதல், அதிகமாகச் சிறுநீர் வெளியேற்றுதல், கருப்பை வாய் திறந்த செல்லப்பிராணிகளில் இரத்தத்துடன் சீழ் கலந்து வடியும். கருப்பையை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றுதல் மிகச் சிறந்ததாகும்.

6. நீரிழிவு நோய் :

இது நடுத்தர வயது மற்றும் வயதான செல்லப்பிராணிகளில் அதிகம் காணப்படுகிறது. இரத்தத்திலும் சிறுநீரிலும் குளுக்கோஸ் அதிகமாகக் காணப்படும். அதிகமாக நீர் அருந்துதல், அதிகமாகச் சிறுநீர் வெளியேற்றுதல், உடல் எடை குறைதல் மற்றும் அதிகமாக உணவு உண்ணுதல் இந்த நோயின் வழக்கமான அறிகுறிகள் ஆகும். மருத்துவரின் ஆலோசனையின்படி உடல் எடை அதிகமுள்ள செல்லப்பிராணிகளில் குறைந்த கலோரிகள் உள்ள உணவும், நார்ச் சத்துக்கள் அதிகமுள்ள உணவும் மற்றும் உடல் எடை குறைவாக உள்ள செல்லப்பிராணிகளில் அதிக கலோரிகள் உள்ள உணவும், இன்சுலின் சிகிச்சையும் அளிக்கப்பட வேண்டும்.

7. மூட்டு அழுகல் நோய் :

இது மூட்டைச் சுற்றியுள்ள குருத்தெலும்பு தேய்மானமடைவதால் வயதான செல்லப்பிராணிகளில் ஏற்படுகிறது. இதனால் நடப்பதில் தடுமாற்றம், வாதம் மற்றும் கடினமான நடை ஆகியவை காணப்படும். ஆரம்ப காலங்களிலே மருத்துவ ஆலோசனை பெறுவது மிக முக்கியமானதாகும்.

8. தைராய்டு சுரப்பி குறைந்த நிலை :

இது நாய்களில் அதிகளவில் தைராய்டு ஹார்மோனின் அளவு குறைவதால் ஏற்படுகிறது. பாதிக்கப்பட்ட நாய்களில் சோர்வு, முடி கொட்டுதல், உடல் எடை கூடுதல், குளிர் தாங்காமை, இரத்தத்தில் அதிகக் கொழுப்பு காணப்படுதல், இரத்தச் சோகை, தோல் உணர்நிறமூட்டல் மற்றும் இதயச் செயலிழப்பு காணப்படும். ஆரம்ப காலங்களிலே உரிய ஆலோசனை பெறுவது அவசியமாகும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

உணவூட்டமுறை :

* வளரும் நிலையில் இருப்பவைகளில் ஊட்டச்சத்துகளின் தேவைப்பாடு 2-4 முறை முது நிலையிலிருப்பவைகளை விட அதிகம் தேவைப்படுகிறது.

* முதுமையடைந்த செல்லப்பிராணிகளில் உடல் எடையை கட்டுப்படுத்தக் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் கலோரிகள் உள்ள உணவும், அதிக அளவு நார்ச்சத்துள்ள உணவும் கொடுக்க வேண்டும்.

* ஆதிகப் புரதம் உள்ள உணவைக் கொடுக்கும்போது சிறுநீரகம் பாதிக்கப்பட்டுச் சிறுநீரகச் செயலிழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.

பொதுவான முதுமை மேலாண்மை :

* மனிதர்களைப் போலவே செல்லப் பிராணிகளிலும் முழு உடல் பரிசோதனை வருடத்திற்கு இரு முறை மேற்கொள்ள வேண்டும்.

* எளிதில் செரிமானமடையக் கூடிய உணவுப் பொருள்களையும், உடல் எடை அதிகமுள்ளவைகளில் குறைந்த கலோரிகள் உள்ள உணவுப்பொருள்களையும், உடல் மெலிந்தலைகளில் அதிக கலோரிகள் உள்ள உணவுப்பொருள்களையும் கொடுக்க வேண்டும்.

* போதுமான உடற்பயிற்சி அளிப்பதன் மூலமாகவும், செல்லப்பிராணிகளுடன் விளையாடுவதன் மூலமாகவும் நல்ல ஆரோக்கியமான உடல் நிலையைப் பெறுவதுடன், நடத்தை தொடர்பான பிரச்சனைகளையும் தடுக்கலாம்.

* முதுமைக் காலங்களில் ஏற்படும் புற்றுநோயைத் தடுக்க வளரும் பருவத்திலேயே விதை நீக்கம் செய்வதாலும், கருமுட்டை மற்றும் கருப்பையை அகற்றுவதாலும் பால்மடி, விதைப்பை மற்றும் பிராஸ்டேட் சுரப்பி புற்றுநோய்களைத் தடுக்கலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment