Sunday 6 May 2018

மாடுகளுக்கான பொது மேலாண்மை முறைகள் பகுதி - 2

கன்றுகளுக்கு சீம்பால் அளித்தல் :

* கன்று ஈன்றவுடன் மாட்டின் மடியிலிருந்து சுரக்கும் முதல் பால் சீம்பாலாகும்.

* சீம்பாலில் காமாகுளோபுலின்கள் எனப்படும் நோய் எதிர்ப்பு புரதங்கள் அதிக அளவு உள்ளன. இவை மாட்டினை ஏற்கெனவே பாதித்த நோய்க்கிருமிகளுக்கு எதிராக மாட்டின் உடலில் உருவாகி பால் வழியாக கன்றுகளுக்கு சென்று கன்றுகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அளிக்கின்றன.

* சீம்பாலில் சாதாரண பாலை விட 7 மடங்கு புரதச்சத்து அதிகமாகவும், மொத்த திட சத்துகள் இரண்டு மடங்கு அதிகமாகவும் உள்ளது. எனவே சீம்பால் கன்றின் தொடக்கக் கால வயதில் புரதச்சத்து மற்றும் இதர சத்துகளையும் அளிக்கிறது.

* நோய் எதிர்ப்பு சக்தியினை உருவாக்கும் முக்கிய காரணிகளான தாது உப்புகளும், வைட்டமின் ‘ஏ’ சத்தும் சீம்பாலில் அதிக அளவு உள்ளது. இவற்றை சீம்பால் மூலமாக கன்று உட்கொள்ளும் போது கன்றின் நோய் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கிறது.

* சீம்பாலிலுள்ள நோய் எதிர்ப்பு புரதங்களை சீம்பால் வழியாக கன்றுகள் எடுத்துக்கொள்ளும்போது, கன்றுகள் அவைகளுக்குத் தேவையான நோய் எதிர்ப்பு சக்தியினை பெறுகின்றன.

* சீம்பால் ஒரு மலமிளக்கியாக செயல்பட்டு முதன் முதலில் கன்றின் குடலிலிருந்து சாணத்தினை வெளியேற்றவும் உதவுகிறது.

* கன்று பிறந்து 15-30 நிமிடங்களுக்குள்ளாக கன்றுகளுக்கு முதல் தவணை சீம்பாலை அளித்து விடுவது மிகவும் நல்லது. இரண்டாம் தவணையாக கன்று பிறந்த 10-12 மணி நேரத்திற்குள் சீம்பாலை அளிக்கவேண்டும்.

* கன்று பிறந்து அரை மணி நேரம் முதல் 12 மணி நேரத்திற்குள் கன்றின் உடல் எடையில் 5-8% சீம்பாலை அளிக்கவேண்டும். பிறகு 2, 3ம் நாள் வயதில் அதன் உடல் எடையில் 10% சீம்பாலைக் கொடுக்கவேண்டும்.

* மாட்டிலிருந்து கறக்கப்படும் அதிகப்படியான சீம்பாலை குளிர்பதனப்பெட்டியில் சேமித்து தாயற்ற கன்றுகளுக்கும் கொடுக்கலாம்.

ஆதாரம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம்

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1 comment: