Wednesday 30 May 2018


செல்லப் பிராணிகளின் நோய்த் தடுப்பு முறைகள் :


1.பாதிக்கும் நோய்கள்
2. தாய்ப்பாலும் நோய் எதிர்ப்பாற்றலும்
3. தடுப்பூசியின் அவசியம்
4. வெறிநோய் பற்றி விழிப்புணர்வு

நம்மில் பலருக்கும் செல்லப்பிராணிகளை எவ்வாறு வளர்ப்பது மற்றும் எவ்விதமான நோய்த்தடுப்பு முறைகளைக் கையாள வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வு இல்லை. இதனால் செல்லப் பிராணிகள் எளிதாக நோய்வாய்ப்பட்டு இறக்க நேரிடுகிறது. இவற்றிற்கெல்லாம் பதில் அளிக்கும் வகையில் செல்லப்பிராணிகளில் பல்வேறு விதமான நோய்த் தடுப்பு முறைகள் மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து விளக்கமாகக் காணலாம்.

பாதிக்கும் நோய்கள் :

செல்லப்பிராணிகள் சில நோய்கள் தாக்குதலுக்கு உள்ளாகி இறந்து விடுகின்றன. குறிப்பாகப் பார்வோ எனப்படும் இரத்தக்கழிச்சல் நோய் ( 6 மாத வயதிற்குட்பட்ட நாய்க்குட்டிகளை அதிகம் தாக்கும் பண்புடையது), நொடிப்பு நோய், வெறிநோய், எலிக்காய்ச்சல் நோய், கல்லீரலைப் பாதிக்கும் நோய், கனல் ஃகாப் எனும் சுவாச நோய், பூஞ்சைக் காளான்களால் ஏற்படும் தோல் சம்பந்தப்பட்ட நோய், புறஓட்டுண்ணிகளால் ஏற்படும் காய்ச்சல் நோய் மற்றும் குடற்புழுக்களால் ஏற்படும் இரத்தச் சோகை எனப் பல்வேறு வகையான நோய்கள் உள்ளன.

பூனைகளில் வயிற்றுப் போக்கு, இரத்தக்கழிச்சல், சுவாச அழற்சி, பூஞ்சைக்காளான் மற்றும் புறஒட்டுண்ணிகளால் ஏற்படும் நோய்களும், பறவைகளில் கழிச்சல் நோய் மற்றும் சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்களும், முயல்களில் சொறி மற்றும் சுவாச நோய்களும் காணப்படுகின்றன. அவற்றில் சிலவற்றிற்கு முறையான தடுப்பூசி போடுவதன் மூலமாகவும் மற்ற நோய்களைச் சிறப்பான பராமரிப்பு முறைகளைக் கையாளுவதன் மூலமாகவும் நோய்கள் வருமுன் தடுக்கலாம்.

தாய்ப்பாலும் நோய் எதிர்ப்பாற்றலும் :

வியாபார ரீதியாக வளர்க்கப்படும் நாய்களில், பிறந்த 20 முதல் 25 நாள்களில் நாய்க்குட்டிகளை அதன் தாயிடமிருந்து பிரித்து விற்று வருகிறார்கள், இவ்வாறு செய்வதால் நாய்க்குட்டிகளுக்குத் தனது தாயின் பாலிலிருந்து கிடைக்ககூடிய நோய் எதிர்ப்புத்திறன் முற்றிலும் கிடைக்காமல் பல்வேறு வகையான நோய்களுக்கு ஆளாகின்றன. எனவே நாய்க்குட்டிகளுக்குக் குறைந்தது 35 – 40 நாள்களுக்குப் போதுமான அளவு தாய்ப்பால் அளித்தப் பிறகு தாயிடமிருந்து பிரிக்க வேண்டும்.

தடுப்பூசியின் அவசியம் :

நாளுக்கு நாள் மாறிக்கொண்டு வரும் பருவ கால மாற்றங்களுக்கு ஏற்ப மனிதர்கள் மற்றும் விலங்குகளைத் தாக்ககூடிய நுண்ணுயிரிகள் வளர்சிதை மாற்றத்திற்கு உட்பட்டு நோயின் சீற்றத்தை அதிகரித்துக் கொண்டு இருக்கின்றது. இது போன்ற ஒரு தருணத்தில் நமது செல்லப்பிராணிகளுக்குத் தடுப்பூசி போடாமல் இருந்தால் எளிதாக நோய்ப் பாதிப்பிற்கு உள்ளாக்கலாம். ஆகவே செல்லப்பிராணிகளுக்குக் குறித்த காலகட்டத்தில் தடுப்பூசி போடுவதன் மூலம் பல முக்கிய நோய்களிலிருந்து அவற்றைக் காப்பாற்றலாம்.

நாய்களைத் தாக்கும் பார்வோ எனப்படும் இரத்தக் கழிச்சல் நோய், நொடிப்பு நோய், கல்லீரல் பாதிப்பு நோய், சுவாச நோய் மற்றும் எலிக்காய்ச்சல் போன்றவை வராமல் தடுக்க இதற்கென்று பிரத்யேகமாகத் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியினைக் குட்டி பிறந்த ஆறாவது வாரத்தில் முதல் தடுப்பூசியினையும் பின் மூன்று வார இடைவெளியில் அதே தடுப்பூசியினை இருமுறைகள் கொடுத்து மீண்டும் வருடத்திற்கு ஒருமுறை கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி போட வேண்டும். முதல் மூன்று தடுப்பூசிகளைப் போடுவதற்கு முன் நாய்க்குட்டிகளை வீட்டை விட்டு வெளியே எடுத்துச் செல்வதைத் தவிர்க்க வேண்டும். மேற்கூறிய நோய்கள் பாதிக்கப்பட்ட நாய்களின் மலம், சிறுநீர், கண்ணீர் மற்றும் சளி வழியாக நோய்க் கிருமிகள் வெளியேறி ஆரோக்கியமான நாய்களைத் தொடக்கூடாது. பீளிச்சிங்க் பவுடர் போன்ற கிருமிநாசினிகளைக் கொண்டு பாதிக்கப்பட்ட நாய்கள் இருக்கும் இடத்தைச் சுத்தம் செய்வதன் மூலம் இந்நோய்களை மற்ற நாய்களுக்குப் பரவாமல் தடுக்கலாம்.

நகரங்களில் நாய்களுக்கென்று தங்கும் விடுதிகள் மற்றும் அழகு நிலையங்களுடன் கூடிய நவீன மருத்துவமனைகள் உருவாகி வருகின்றன. நாய்களை விட்டுச் செல்லும்போது கெனல் ஃகாப் எனும் சுவாச நோய் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த நோய்க்கென்று உருவாக்கப்பட்ட தடுப்பூசியினை 3 முதல் 4 வார வயதில் உள்ள குட்டிகளுக்கு மூக்கு வழியே செலுத்தி நோய் வராமல் தடுக்கலாம்.

பூனைகளில், வயிற்றுப் போக்கு இரத்தக் கழிச்சல் மற்றும் சுவாச அழற்சி போன்ற நோய்கள் வராமல் இருக்க ‘சி’ ஆப் பி” எனும் தடுப்பூசியினைக் குட்டிகளுக்கு 8 முதல் 9 வார வயதில் முதல் தடுப்பூசியினையும் பின் மூன்று வார இடைவெளியிலும் அதே தடுப்பூசியினை மீண்டும் வருடத்திற்கு ஒருமுறையும் கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி போட வேண்டும்.

வெறிநோய் பற்றி விழிப்புணர்வு :

வெறிநோய் என்பது நச்சுயிரியால் ஏற்படக்கூடிய கொடிய நோயாகும். இந்நோய் மனிதர்கள் மற்றும் விலங்குகளைப் பாதிக்கும் வல்லமை உடையது. வெறிநோயால் பாதிக்கப்பட்ட நாய்கள் மற்ற நாய்களையோ அல்லது மனிதர்களையோ கடிக்கும் பொழுது அதன் எச்சில் மூலமாக வெறிநோய் பரவுகிறது. நாய்களுக்கு வெறிநோய்த் தடுப்பூசியினை மூன்று மாத வயதிலும் அதன் பிறகு ஆண்டுக்கு ஒரு முறையும் போட்டுக் கொள்ள வேண்டும். இந்நோய்த் தாக்கத்திற்கு உட்பட்ட நாய்கள் மற்ற நாய்களை கடித்துவிட்டால் கடித்த இடத்தை வேகமாக வரும் குழாய்த் தண்ணீரில் காண்பித்துக் கழுவியபின் கார்பாலிக் சோப்பு கொண்டு கழுவ வேண்டும். கடிபட்ட இடத்தில் டிஞ்சர் அயோடின் அல்லது போவிடோன் அயோடின் போன்ற கிருமிநாசினியைத் தடவ வேண்டும். பிறகு கால்நடை மருத்துவரின் ஆலோசனைப்படி வெறிநோய்க்கான தடுப்பூசியை போட்டுக் கொள்ள வேண்டும். நாய்களைப் போன்றே பூனைகளுக்கும் முதல் தடுப்பூசி மூன்று மாத வயதிலும் பின் வருடந்தோறும் போட வேண்டும். வெறிநோய்த் தடுப்பூசி முறையாகப் போட்டு வீட்டுக்குள்ளேயே வளர்க்கும் நாய்கள் கடித்தால் வெறிநோய்த் தடுப்பூசி போட வேண்டியதைப் பற்றி மருத்துவரை அணுகித் தெரிந்து கொள்ள வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment