Monday 14 May 2018

கோடைக் காலங்களில் செல்லப் பராணிகளைப் பராமரிக்கும் முறைகள் :

1. வெப்பநிலைப் பரிமாற்றம்
2. வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகள்
3. வெப்ப அயர்ச்சிப் பிரச்சனைக்கான தீர்வுகள்
4. பொதுவான பராமரிப்பு

கோடைக்காலம் வந்தாலே நம் செல்லப் பிராணிகள் வெப்ப அயர்ச்சிக்கு ஆளாகின்றன. அதிலும் குறுகலான தலையமைப்பு கொண்ட நாயினங்களைச் சேர்ந்த பக், பாக்ஸர், புல்டாக் போன்றவை அதிகமாகப் பாதிப்புக்குள்ளாகின்றன.

வெப்பநிலைப் பரிமாற்றம் :

மனிதர்களைப் போல் செல்லப் பிராணிகள் உடல் வெப்பத்தை வியர்வையாகத் தோல் மூலமாக வெளியேற்ற இயலாது. செல்லப்பிராணிகளின் உடல் வெப்பமானது வாய் வழியாகச் சுவாசித்தல் மூலம் 80 விழுக்காடு வெப்பமானது மூக்கு, தோல், காது, முடி, கால் பாதம் ஆகியவற்றின் வழியாகச் சமநிலை படுத்தப்படுகிறது.

வெப்ப அயர்ச்சியின் அறிகுறிகள் :

செல்லப்பிராணிகள் சுற்றுப்புற வெப்பத்திற்கு அதிக அளவு ஆட்படும்போது அதன் உடல் வெப்பநிலை 102.50 - ல் இருந்து 106 - ஆக அதிகரிக்க வாய்ப்புள்ளது. அவ்வாறு உடல் வெப்பம் அதிகரிக்கும்போது உடல் சோர்வு, மூச்சிறைப்பு போன்ற இளைப்பு வாங்குதல், வாயில் உமிழ்நீர் வெளிப்படுதல், உதடு மற்றும் பிற மென்மையான பகுதிகள் நீரற்ற வறட்டுத் தன்மையுடன் காணப்படுதல் போன்ற அறிகுறிகள் காணப்படும். தகுந்த நேரத்தில் செல்லப்பிராணிகளைக் கவனிக்காவிட்டால் நிலைமை மோசமாகி மூக்கில் இருந்து ரத்தம் வருதல், வாந்தி, வலிப்பு போன்ற அறிகுறிகள் தென்படுவதுடன் சில சமயங்களில் இறப்பும் ஏற்படலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

வெப்ப அயர்ச்சிப் பிரச்சனைக்கான தீர்வுகள் :

செல்லப்பிராணிகளை அதிக வெப்பத் தாக்கத்திலிருந்து பாதுகாக்க அவற்றை வளர்ப்போர் கோடைக் காலத்தில் கடைப்பிடிக்க வேண்டிய சில வழிமுறைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

நிழலில் உடற்பயிற்சி :

* செல்லப் பிராணிகளை நிழல்கள் நிறைந்த வெளியிடங்களில் சிறிது நேரம் விளையாட அனுமதிக்கலாம்.

* குளிர்ந்த காற்றுடன் கூடிய நிழல் படர்ந்த பூங்காவிற்கு அழைத்துச் செல்லலாம்.

* செல்லப் பிராணிகளைப் பராமரிக்கும் பகுதியானது நேரடியாக வெயில் படாதவாறு பாதுகாக்க வேண்டும்.

* வெண்மை நிற உடைகளைச் செல்லப் பிராணிகளுக்கு உடுத்தலாம்

* வெயில் நேரம் தவிர்த்து வெப்பம் குறைவான காலை, மாலை நேரங்களில் செல்லப் பிராணிகளுக்கு உடற்பயிற்சி அளிக்க வேண்டும்.

* குளிர்ந்த நீர்ப் பொட்டலங்கள் அல்லது பனிக்கட்டி நிரம்பிய பொட்டலங்கள் போன்றவற்றை விளையாட்டுச் சாதனங்களாகச் செல்லப் பிராணிகளுக்கு விளையாட அளிக்கலாம்.

* அதிக வெப்பநிலையின் போது செல்லப் பிராணிகளை, செல்லப் பிராணிகளுக்கென அமைக்கப்பட்ட நீச்சல் குளங்கள் அல்லது சிறிய நீர்த் தொட்டிகளில் சிறிது நேரம் விளையாடச் செய்வதன் மூலம் உடல் வெப்பத்தை குறைக்க முடியும்.

தரை :

* கான்கிரீட் தரைகளில் செல்லப் பிராணிகளை அழைத்துச் செல்லும்பொது முதலில் தரையின் வெப்பநிலையினை அறிந்த பின்பு, அனுமதித்தல் அவசியம்.

* செல்லப்பிராணிகளைப் பராமரிக்கும் பகுதிகளில் மரக்கட்டையிலான தரைகளை அமைத்தல் நல்லது. மரக்கட்டை ஓர் அரிதிற்கடத்தி என்பதால் அப்பகுதியில் வெப்பம் அதிகரிக்காது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

குளிர்ந்த காற்று :

* மின் விசிறி வசதியுடன் அல்லது குளிர் சாதன வசதியுடன் கூடிய அறையில் செல்லப் பிராணிகளைப் பராமரிக்கலாம்.

* வீடுகளில் மின் விசிறிகளைப் பயன்படுத்துவதன் மூலம் வெப்பமான காற்று வெளியேறித் தூய்மையான குளிர்ந்த காற்று உள்ளே வருவது நாய்களுக்கு உகந்த சூழ்நிலையை உருவாக்கும்.

* வீடுகளில் உள்ள மற்ற மின்னணுச் சாதனங்களைத் தேவையற்ற நேரங்களில் அணைத்து வைத்தல் அவசியம், ஏனெனில் இவை குறிப்பிட்ட அளவு வெப்பத்தினைச் சுற்றுப்புறத்தில் வெளியிடுவதனால் சுற்றுப்புற வெப்பநிலை அதிகரித்து வீட்டிலுள்ள செல்லப் பிராணிகளைப் பாதிக்கக் கூடும்.

* இரவு நேரங்களில் சன்னல் கதவுகளைத் திறந்து வைத்தல் வேண்டும்.

* நிறைய சன்னல்கள் உள்ள வீடுகளில் அனைத்துச் சன்னல் கதவுகளையும் திறந்து வைப்பதன் மூலம் காற்றோட்ட வசதியினை ஏற்படுத்தலாம்.

* சூரிய வெப்பத்தை தடுக்கும் திரைச்சீலைகளை சன்னல்களில் பயன்படுத்தலாம்.

* ஓன்று அல்லது அதற்கு மேற்பட்ட மின் விசிறிகளைப் பயன்படுத்துவதன் மூலம் செல்லப் பிராணிகளைப் பராமரிக்கும் அறையில் தூய்மையான காற்றினைப் பெறலாம்.

* ஒரு சிறிய பாத்திரத்தில் குளிர்ந்த நீரினை நிரப்பிச் சிறிது பனிக் கட்டிகளை அதில் சேர்த்து மின் விசிறிக்கு முன்பாக வைப்பதன் மூலம் குளிர்ந்த காற்றினைச் செல்லப் பிராணிகளுக்கு அளிக்கமுடியும்.

* செல்லப் பிராணிகளுக்குக் கோடைக் காலங்களில் குளிர்ந்த படுக்கை அமைப்புகளை ஏற்படுத்தித் தருதல் அவசியம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

உணவும் குடிநீரும் :

* கோடைக் காலங்களில் வீடுகளில் தயாரிக்கப்பட்ட குளிர்ந்த உணவுகளைச் செல்லப் பிராணிகளுக்குக் கொடுப்பதனால் அதிகமாக உள்ள உடல் வெப்பநிலையைக் குறைக்க முடியும்.

* வேளியில் தயாரிக்கப்பட்ட உணவுகளைச் சிறிது நேரம் குளிர்சாதனப் பெட்டியில் வைத்துச் செல்லப் பிராணிகளுக்கு அளிக்கலாம்.

* செல்லப் பிராணிகளுக்கு கோடைக்காலங்களில் இளநீரை அருந்தக் கொடுக்கலாம்.

* அதிகமாக வெளியில் சுற்றிவரும் செல்லப் பிராணிகளுக்குப் போதுமான அளவில் பாதுகாப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் அளித்தல் வேண்டும்.

பொதுவான பராமரிப்பு :

* மிக அதிக உடல் வெப்பத்துடன் மற்றும் மிகவும் சோர்வுடன் கூடிய செல்லப் பிராணிகளைக் குளிர்ந்த நீரில் 20 நிமிடங்கள் அமர வைத்து எடுப்பதன் மூலம் உடல் வெப்பத்தைக் குறைக்க முடியும்.

* நீண்ட முடிகளைக் கொண்ட செல்லப் பிராணி இனங்களில் சிறிதளவு முடிகளை வெட்டி விடுவது அல்லது முழுவதுமாக முடி அகற்றம் செய்வதன் மூலம் உடலில் உள்ள அதிகப்படியான வெப்பத்தை வெளியேற்றலாம்.

* கோடைக் காலங்களில் பூச்சிகள் ஒட்டுண்ணிகள் செல்லப் பிராணிகளின் மீது பரவி நோய்களை உண்டாக்கும். எனவே அவை செல்லப் பிராணிகளை நெருங்காவண்ணம் பாதுகாத்தல் அவசியம்.

* பொதுவாகக் கோடைக் காலங்களில் செல்லப் பிராணிகளைக் காரில் அழைத்துச் செல்லும்போது. அவைகளுக்குப் போதிய காற்றோட்டம் காரின் உள்ளே உள்ளதா என்று பார்த்துக் கொள்ள வேண்டும். மேலும் செல்லப் பிராணிகளைக் காரில் விட்டுச் செல்லக்கூடாது. ஏனெனில் காரில் வெப்பம் அதிகரிக்கும். அதனால் வெப்ப அயர்ச்சி ஏற்பட வாய்ப்புள்ளது.

* வயதான மற்றும் குண்டான செல்லப்பிராணிகள் எளிதாக வெப்ப அயர்ச்சிக்கு உள்ளாகும் தன்மையுடையவை. ஆகவே, இந்த வகையான செல்லப் பிராணிகளைத் தகுந்த கவனத்துடன் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* வெப்ப அயர்ச்சியின் சீற்றம் அதிகமாக காணப்பட்டால் உடனடியாகக் கால்நடை மருத்துவரை அணுகிச் செல்லப் பிராணிகளுக்குத் தகுந்த சிகிச்சையை அளிக்க வேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment