Tuesday 15 May 2018

வீட்டு விலங்குகள் வளர்ப்பில் கவனிக்க வேண்டியவை :

1. ஸ்கேபிஸ் பாதிக்கப்பட்ட நாய்
2. சொறிப்பூச்சிகளின் தாக்கம்
3. நோய் காரணிகள்

ஸ்கேபிஸ் பாதிக்கப்பட்ட நாய் :

ஒரு நாள் சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியின் செல்லப் பிராணிகளுக்கான தோல் சிகிச்சைப் பிரிவுக்கு ஒரு தந்தையும் அவரது மகனும் ஒருசேர சோகத்துடன், தமது மூன்று மாத நாய்க்குட்டியைக் கொண்டு வந்திருந்தார். தாம் இந்த நாய்க்குட்டியைக் கடந்த மாதம் புதிதாக வாங்கியதாகவும், ஆரம்பத்தில் நன்றாகக் குடும்பத்தில் ஒருவராக விளையாடிக் கொண்டிருந்த நாய்க் குட்டியானது கடந்த ஒரு வார காலமாக எந்நேரமும் தன்னைத்தானே சொரிந்து கொண்டே இருப்பதாகக் கூறினார்.

உடனே நாய்க்குட்டி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அவர் கூறியவாறே அது சொரிவதிலேயே குறியாக இருந்தது. மேலும் காது, முழங்கால் மற்றும் நெஞ்சின் அடிப்பகுதியில் பட்டையான செதில் போன்ற துகள்கள் படர்ந்து காணப்பட்டன. கூடவே வயிற்றுக்கடியில் சிவப்புக் கொப்பளங்கள் சிறிய அளவில் காணப்பட்டன. சற்றே காதுக்கருகில் இருந்து செதில் பட்டையினைச் சுரண்டி நுண்ணோக்கியின் மூலம் என்ன வகை பூச்சியினால் நாய்க்குட்டியானது பாதிக்கப்பட்டுள்ளது என்பது கண்டறியப்பட்டது. ஆய்வின் முடிவில், நாய்க் குட்டிக்கு வந்திருப்பது புற ஒட்டுண்ணியான சொறிப்பூச்சியினால் ஏற்பட்டுள்ள ஸ்கேயிஸ் எனும் ஒருவகைச் சொறி நோய் என தெரிய வந்தது. விட்டில் உங்கள் யாருக்காவது இதே தோல் அரிப்பு பிரிச்சனை உள்ளதா எனக் கேட்டபோது, அதற்கு முதலில் தயங்கிய அவர் பின்னர் தனது மகனும் கடந்த ஒரு வார காலமாக லேசாக அரிப்பினால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்

அந்தச் செல்லப்பிராணி வளர்ப்பவர் நாய்க்குட்டியிடமிருந்து தனது மகனுக்கு இந்த அரிப்பு நோய் தொற்றியுள்ளதா என ஆச்சர்யப்பட்டுத்தான் போனார்…! பின்னர் விலங்குகளுக்கும், மனிதனுக்கும் மிகுந்த அரிப்பு மற்றும் தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள் ஏற்படுத்தும் ஸ்கேபிஸ் நோய் தொற்றும் முறையையும், அதனைக் குணப்படுத்துதல் மற்றும் தடுப்பது குறித்த ஆலோசனைகளும் அவருக்கு வழங்கப்பட்டன. முடிவில் தொடர்ந்து பத்து நாள்களுக்குச் சிகிச்சையைக் கடைப்பிடிக்கவேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டது.

சொறிப்பூச்சிகளின் தாக்கம் :

பொதுவாக மிகச் சிறிய ஒட்டுண்ணியான சொறிப்பூச்சிகள் 4 மி.மீ அளவில்தான் இருக்கும். ஆண் பூச்சியைவிடப் பெண் பூச்சியே உருவத்தில் பெரியதாகவும் தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் இருக்கும். ஆண் பூச்சிகள் இனப்பெருக்கத்துக்கு உதவியதும் இறந்துவிடும். பெண் பூச்சிகள் மட்டுமே மனித உடலில் துளைகளிட்டு அவற்றில் முட்டைகள் இட்டு, இனப்பெருக்கம் அடையும். ஆனால் இவற்றைக் கண்டு பயப்படத் தேவையில்லை. சொறி நோயை முற்றிலும் குணப்படுத்த முடியும். சொறிப்பூச்சிகள் நம்மைத் தொற்றிக் கொண்ட 3 முதல் 6 வாரங்களில் தோல் நோய்க்கான அடையாளங்கள் மற்றும் அறிகுறிகள் தொடங்கும். பொதுவாக விலங்குகள் உடலில் சொறிப்பூச்சி இனப்பெருக்கம் அடைந்த 7 முதல் 10 நாள்களுக்குள் தீவிர அரிப்பு இருக்கும். மாலை நேரத்திலும், இரவிலும் அந்த அரிப்பு அதிகமாக இருக்கும்.

பொதுவாகக் காதைக்சுற்றிய பகுதிகள், உறுப்புகளின் மடிப்புத் தசைகள், மார்பின் அடிப்பகுதி, வயிறு, தொண்டை, பிறப்புறுப்புகள், கால் விரல்களின் இடுக்குள், அக்குள் மற்றும் வால் போன்ற இடங்கள் சொறிப்புச்சிகளின் பாதிப்புகளுக்கு உள்ளாகும். விலங்குகளின் உடலில் சொறிப் பூச்சிகள் இருந்தால், சிவப்பும் பழுப்பும் கலந்த நிறத்தில், தோலில் கொப்புளங்கள் உருவாகும். தீவிர தோல் அழற்சி உண்டாகும். அதிகமாகப் பாதிக்கப்பட்ட இடங்களைச் சொறிந்தால், தோலில் சிராய்ப்புகள் ஏற்பட்டுத் தோலின் நிறம் கருமை அடையும். செதில்கள் அதிகம் உருவாகும். எந்நேரமும் சொறிந்து கொண்டே இருக்கும்.

நோய் காரணிகள் :

சொறி, சிரங்கு, கிருமித் தொற்று உள்ள நாய்க் குட்டிகளோடு நமது சிறார்கள் சேர்ந்து விளையாடுதல், அவற்றுடன் சேர்ந்து உறங்குதல், கிருமி தொற்றிய நாய் வீட்டினில் இருக்கும்போது அது பூச்சியின் முட்டையினை வீடெங்கும் பரப்புவதன் மூலம் சொறி, சிரங்கு பரவும். குழந்தைகளின் தோல் மிகவும் மிருதுவாக இருப்பதால், சொறிப் பூச்சிகள் அவர்களின் உடலில் எளிதாக நுழைந்துவிடும்.

சொறிசிரங்கை முற்றிலும் குணமாக்க, கால்நடை மருத்துவரை அணுகித் தக்க மாத்திரைகள் மற்றும் களிம்புகள் கொடுக்க வேண்டும். மருத்துவர் பரிந்துரைக்காத களிம்புகளை நேரடியாகக் கடைகளில் தவிர்க்க வேண்டும். இந்தச் சொறிநோய் வராமல் தடுக்க, முற்றிலும் குணமடையும் வரை பாதிக்கப்பட்ட நாயோடு ஒட்டி உறவாடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் அந்த நாயை நம் கண்முன்னே இருக்குமாறு தனிமைப்படுத்த வேண்டும். ஏனெனில் அது செல்லுமிடமெல்லாம் இந்தப் பூச்சியில் முட்டையினைப் பரப்ப வாய்ப்புள்ளது.

நாயைக் குளிப்பாட்டும்போதும் மருந்து தடவும்போதும் கையுறை அணிவது அவசியம். பாதிக்கப்பட்ட நாய் உள்ள வீட்டின் தரை பகுதியை மருத்துவரின் ஆலோசனைப்படி தகுந்த கிருமிநாசினி கொண்டு அவ்வப்போது கழுவி விட வேண்டும். புதிதாக வாங்கிய நாய்க்குட்டிகளுக்கு மருத்துவரை அணுகவும். பொதுவாக இருவாரத்திற்கு ஒருமுறை சுத்தமான நீரில் நாய்களின் உடலைத் தேய்த்துக் குளிக்க வைக்க வேண்டும். நாயின் உரிமையாளருக்குச் சொறி சிரங்குக்கான அறிகுறி காணப்பட்டால், உடனே மருத்துவரின் ஆலோசனைகளைப் பெற வேண்டும். சொறி சிரங்கு நோய் நேரடி உடல்ரீதியான தொடர்பினால் விரைவாக பரவும். திரும்பவும் தொற்றுநோய் ஏற்படுவதைத் தடுப்பதற்காக நெருங்கிய தொடர்பு வைத்திருக்கும் எல்லாருக்கும் சிகிச்சையளிக்கப்பட வேண்டும். உடைகள், பாய்கள் மற்றும் படுக்கை விரிப்புகள் வெந்நீரில் துவைக்க வேண்டும்.

எனவே தோல் அரிப்பு, சொறி, சிரங்கு சம்பந்தமான தொற்று நோய்களில் இருந்து நாமும், நமது செல்லப்பிராணிகளும் தகுந்த மேலாண்மை முறைகள் மற்றும் பழக்க வழக்கங்களின் மூலம் வரும்முன் காத்துக்கொள்வதே சிறந்தது!



Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment