Sunday 6 May 2018

ஏக்கருக்கு ரூ 1,75,000 தோட்டத்திலேயே வெல்லம் தயாரிப்பு!

கரும்புக்கான விலையை உயர்த்தக்கோரியும், நிலுவைத்தொகையை வழங்கக்கோரியும் இந்தியாவில் போராட்டம் நடக்காத நாளே இருக்காது. அந்த அளவுக்கு அனைத்து மாநிலங்களிலும் கரும்பு விவசாயிகள் கடுமையாகப் பாதிக்கப் பட்டுள்ளனர். இத்தகைய சூழ்நிலையிலும் இயற்கை முறையில் குறைவான செலவில் கரும்புச் சாகுபடி செய்து... அதை விற்பனை செய்ய ஆலைகளை நம்பியிருக்காமல், மதிப்புக்கூட்டல் மூலம் சொந்தமாக வெல்லம் தயாரித்து நல்ல லாபம் எடுக்கும் விவசாயிகளும் இருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களில் ஒருவர்தான், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன். இவர் ஜீரோ பட்ஜெட் முறையில் விவசாயம் செய்து வருகிறார்.

விழுப்புரம் மாவட்டம், மதகடிப்பட்டு அருகே உள்ள பி.எஸ்.பாளையம் எனும் கிராமத்தில் இருக்கிறது ரவிச்சந்திரனின் தோட்டம். காலைப் பொழுதொன்றில் பண்ணையில் இருந்த ரவிச்சந்திரனைச் சந்தித்துப் பேசினோம்.

“பாரம்பர்யமான விவசாயக் குடும்பம் எங்களுடையது. 1978-ம் வருஷம், படிப்பை முடிச்ச உடனே விவசாயத்துக்கு வந்துட்டேன். நெல், கரும்பு, வாழைனு விவசாயம் செஞ்சுட்டுருந்தேன். அப்போ முழுக்க ரசாயன விவசாயம்தான். படிப்படியா மகசூல் குறைஞ்சுக்கிட்டே வரவும், 1990-ம் வருஷத்துல மண்ணைச் சோதனைக்கு அனுப்பினேன். மண்ல சத்தே இல்லைனு சொல்லிட்டாங்க. அதுக்கப்புறம் ரசாயன உரங்களைக் குறைச்சுக்கிட்டுத் தொழுவுரம், ஆட்டு எருனு பயன்படுத்த ஆரம்பிச்சேன். கொஞ்சம் மாறுதல் தெரியவும் 2000-ம் வருஷத்துல இருந்து ரசாயன உரங்களை நிறுத்திட்டு, இயற்கை இடுபொருள்களைப் பயன்படுத்திட்டு வர்றேன்.

2010-ம் வருஷத்துல, ‘ஜீரோபட்ஜெட் வித்தகர்’ சுபாஷ் பாலேக்கர் நடத்துன ஒரு பயிற்சியில கலந்துகிட்டேன். அது ரொம்பப் பிடிச்சுப் போகவும் முழுமையான ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு மாறிட்டேன். எங்க குடும்பத்துக்கு மொத்தமா 55 ஏக்கர் நிலம் இருக்கு. மொத்த நிலத்துலயும் நான்தான் விவசாயம் செய்றேன். இதுக்கு கிணத்துப்பாசனம்தான் கைகொடுத்திட்டு இருக்கு. 18 ஏக்கர் நிலத்துல கரும்பு, 10 ஏக்கர் நிலத்துல நெல்லி, 6 ஏக்கர் நிலத்துல சப்போட்டா, 16 ஏக்கர் நிலத்துல மரங்கள் இருக்கு. மீதி 5 ஏக்கர் நிலத்துல நெல், வாழைனு பயிர் செய்திட்டிருக்கேன்” என்று முன்கதை சொன்ன ரவிச்சந்திரன் கரும்புச் சாகுபடி குறித்துப் பேசினார்.

“இந்த மண்ணுல கரும்பு நல்லா வளருங்கிறதால, முன்னாடி அதிகப்பரப்புல கரும்புச் சாகுபடி செஞ்சுட்டுருந்தேன். சர்க்கரை ஆலைக்கு கரும்பை அனுப்பிட்டு இருந்தேன். அதுல கட்டுபடியான விலை கிடைக்கலை. பணத்தையும் ஒழுங்காகத் தராம இழுத்தடிச்சாங்க. அதனால, இனிமே கரும்புச் சாகுபடியே வேணாம்னு முடிவு பண்ணியிருந்தேன். ஜீரோ பட்ஜெட் விவசாயத்துக்கு வந்த பிறகுதான் மறுபடியும் கரும்புச் சாகுபடியை ஆரம்பிச்சேன். அதே மாதிரி ஆலைக்கு அனுப்பக் கூடாதுனு முடிவு பண்ணி, நானே வெல்லம் தயாரிக்கலாம்னு முடிவு செஞ்சேன். ஆண்டு முழுவதும் கரும்பு கிடைக்கிற மாதிரி, சுழற்சி முறையில 18 ஏக்கர் நிலத்துல கரும்பு நடவு செஞ்சுருக்கேன். ரெண்டு மாசத்துக்கு ஒரு தடவை, ரெண்டு ஏக்கர் நிலத்துல அறுவடை பண்ணி வெல்லம் தயாரிச்சிட்டிருக்கேன். கரும்பு நடவு செஞ்சு எட்டு வருஷம் ஆகுது. மறுதாம்பு வந்துட்டே இருக்கு. 100 வருஷங்கள்கூட மறுதாம்பு வரும்னு சொல்றாங்க. முதல் மூணு அறுவடையில ஒரு ஏக்கருக்கு 30 டன் வரை மகசூல் கிடைச்சது. இப்போ சராசரியா ஏக்கருக்கு 25 டன் கிடைச்சுட்டுருக்கு” என்ற ரவிச்சந்திரன் விற்பனை மற்றும் வருமானம் குறித்துச் சொன்னார்.

“ஒரு டன் கரும்பை அரைச்சா 550 லிட்டர் கரும்புச்சாறு கிடைக்கும். ரெண்டு மாசத்துக்கு ஒருமுறை ரெண்டு ஏக்கர் நிலத்துல அறுவடை செய்றப்போ 50 டன் கரும்பு கிடைக்குது. அதுல இருந்து 27,500 லிட்டர் கரும்புச்சாறு கிடைக்கும். அதைக் காய்ச்சுறப்போ 5,000 கிலோ வெல்லம் கிடைக்கும். ஒரு கிலோ வெல்லம் 98 ரூபாய்னு விற்பனை செய்றேன். 5,000 கிலோ வெல்லம் விற்பனை மூலமா 4,90,000 ரூபாய் வருமானம் கிடைக்குது. அதுல எல்லாச்செலவும் போக 3,50,000 ரூபாய் வரை லாபம் கிடைக்குது. ஒரு ஏக்கருக்குச் சராசரியா 1,75,000 ரூபாய் லாபம் கிடைக்குது.

சுழற்சி முறையில தொடர்ச்சியா வருமானம் கிடைச்சுட்டுருக்கு. வெல்லமாகக் காய்ச்சி விற்பனை செய்றதாலதான் இந்த அளவுக்கு லாபம். அப்படிச்செய்யாம ஆலைக்கு அனுப்புனா, சாகுபடிச் செலவுக்குக்கூடக் கட்டுபடியாகாது” என்ற ரவிச்சந்திரன் நிறைவாக, ‘‘ஆரம்பத்துல இயற்கை முறையில உற்பத்தி செய்ற வெல்லத்தை மார்க்கெட்டிங் செய்றது கொஞ்சம் சிரமமாத்தான் இருந்துச்சு. வெள்ளை நிறமா இல்லாம காபி கலர்ல இருக்கிறதால பெரும்பாலான மக்கள் விரும்ப மாட்டேங்குறாங்க. ஆனா, இதோட மகத்துவம் தெரிஞ்சவங்க தேடிப்பிடிச்சு வாங்கிட்டுப் போறாங்க. நான் ஒரு கிலோவாக பாக்கெட் போட்டு நேரடியா விற்பனை செய்றேன். மொத்த வியாபாரிகளும் எங்கிட்ட வாங்கிட்டு போய் விற்பனை செய்றாங்க. சென்னை மாதிரியான பெரிய நகரங்கள்ல நல்ல வரவேற்பு இருக்கு” என்று சொல்லி மகிழ்ச்சியாக விடைகொடுத்தார்.

தொடர்புக்கு,
ரவிச்சந்திரன்,
செல்போன்: 94432 36983
வெல்லம் தயாரிப்பு

ஒரு டன் அளவு கரும்புகளைச் சாறு பிழியும் இயந்திரத்தில் போட்டுச் சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். சாற்றை 550 லிட்டர் கொள்ளளவு கொண்ட தாச்சுவில் ஊற்றி நெருப்பைப் பற்ற வைக்க வேண்டும். காய்ந்த கரும்புச்சக்கைகளை எரிபொருளாகப் பயன்படுத்திக்கொள்ளலாம். கரும்புச்சாறு சூடேற ஆரம்பித்தவுடன் கசடுகள் மேல்நோக்கி மிதக்க ஆரம்பிக்கும். அவற்றை வடிகட்டி மூலம் அகற்றிவிட்டு 4 கரண்டி ஆப்ப சோடாவைச் சேர்த்துக் கலக்கி விட வேண்டும்.

நன்றாகக் கொதிக்க ஆரம்பித்தவுடன், 200 மில்லி தேங்காய் எண்ணெயை ஊற்ற வேண்டும். பாகு கெட்டியாகத் திரள ஆரம்பிக்கும் சமயத்தில், அதைப் பலகையில் கொட்டிக் கிளறி கால் மணிநேரம் ஆறவிட வேண்டும். மிதமான சூட்டில் உருண்டைகளாகப் பிடித்து ஆற விட வேண்டும். நன்றாகக் காய்ந்ததும் மரப்பெட்டியில் அடுக்கி வைக்க வேண்டும். எறும்பு ஏறாமலும், ஈரக்காற்றுப் படாமலும் சேமித்து வைத்தால், பல ஆண்டுகள் ஆனாலும் வெல்லம் கெட்டுப்போகாது.
இப்படித்தான் சாகுபடி செய்யணும்

ஒரு ஏக்கர் நிலத்தில் கரும்புச் சாகுபடி செய்வது குறித்து ரவிச்சந்திரன் சொன்ன தகவல்கள் பாடமாக இங்கே...

ஆலைக்கரும்புக்கு ஆவணிப் பட்டம் ஏற்றது. தேர்வு செய்த ஒரு ஏக்கர் நிலத்தை டிராக்டர் மூலம் நான்குமுறை உழுது, 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து பாசனம் செய்ய வேண்டும். நிலம் காய்ந்த பிறகு, ஓர் உழவு செய்து, 8 அடி இடைவெளியில் பார் பிடிக்க வேண்டும். தேவையான அளவு நீண்ட கணு உள்ள விதைக்கரணைகளை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அவற்றை ஜீவாமிர்தக்கரைசலில் மூழ்க வைத்து எடுத்து, ஒவ்வொரு பாரிலும் ஓர் அடி இடைவெளியில் நடவு செய்ய வேண்டும். மறுநாள், 200 லிட்டர் ஜீவாமிர்தக் கரைசலைப் பாசன நீரில் கலந்து விட வேண்டும்.

தொடர்ந்து பத்து நாள்களுக்கு ஒருமுறை இதுபோலப் பாசனம் செய்து வர வேண்டும். நிலம் காய்வதுபோல இருந்தால், இடையில் பாசனம் செய்து கொள்ளலாம். 3-ம் மாதத்தில் கரும்புச்செடிகளின் தூரில் மண் அணைத்து விட வேண்டும். தேவைப்பட்டால் களைகளை அகற்றி வர வேண்டும்.

அவ்வப்போது கரும்புத்தோகைகளை அகற்றி, மூடாக்காகப் போட்டு வந்தால் களைகள் வராது. ஏதேனும் பூச்சிகள் தாக்கினால், மூலிகைப் பூச்சிவிரட்டி தெளிக்கலாம். இலைக்குருத்துப்புழு தாக்கினால், 12 லிட்டர் தண்ணீருக்கு 1 லிட்டர் அக்னி அஸ்திரா என்ற விகிதத்தில் கலந்து தெளிக்க வேண்டும். நடவு செய்த பத்து மாதங்களில் அறுவடைக்கு வந்துவிடும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment