Wednesday 23 May 2018

நாய் வளர்ப்பு பாகம் - 6

இனப்பெருக்க மேலாண்மை :

1. பருவ கால மேலாண்மையில் தவறுகள்
2. இனச்சேர்க்கை செய்ய அனுகூலமான நாட்கள்

ஒரு தரமான ஆண் நாயின் மூலம் பெண் நாயிடமிருந்து அதிகக் குட்டிகளைப் பெறுவதற்கு, அதனுடைய அடிப்படை உடல் இயங்கு இயல் பற்றியும், சினைப் பருவச் சுழற்சி பற்றியும் தெரிந்துகொள்வது மிகவும் அவசியமானதாகும். பெரும்பாலான கள மருத்துவர்களின் கணிப்பில், நாய்களில் ஏற்படும் மலட்டுத்தன்மையே முக்கியமான பிரச்சினையாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் இவ்வாறு குறிப்பிடப்படும் வீரியமுள்ள மலட்டுத்தன்மையுடைய பெண் நாய்கள் பொதுவாக நல்ல ஆரோக்கியத்துடனும் வீரியம்மிகுந்தும் காணப்படும். இவைகளுக்கு, இப்பிரச்சினை ஏற்படுவதற்கு முக்கியக் காரணம் நமது கவனக்குறைவேயாகும்.

பொதுவாகத் தொழில் முறை நாய் இனவிருத்தியாளர்கள், பெண் நாயானது முன்பருவச் சினைக்காலத்திலிருந்து குட்டிகளை ஈன்ற பிறகு 9 ஆவது நாளில் சேர்க்கைக் காலத்தை அடைந்துவிடுவதாக எண்ணிக்கொள்கிறார்கள். இது முற்றிலும் தவறான கருத்தாகும். ஏனெனில் நாய்களில் பெரும்பாலும் இந்தச் சினைப்பருவ காலமானது வேறுபாட்டிற்கு உட்பட்டதாகும். முன் பருவகாலம், சினைப் பருவ காலம், கருவுறுதல் காலம் அனைத்தும் ஒவ்வொரு நாய்களுக்கும் வேறுபடும் தன்மையுடையவை. இப்பருவமுறையில்லாத மற்றும் ஒரே மாதிரியான போக்கைக் கடைப்பிடிக்கும்போது, நல்ல ஆரோக்கியமான, கருத்திறன் கொண்ட நாய்கள் கூடக் கருவுறாமல் போய்விடுகின்றன. நாம் இப்பதிவில் அதற்கான காரணங்களையும் இதன் தீர்வுகளையும் காணலாம்.

பருவ கால மேலாண்மையில் தவறுகள் :

பெரும்பாலும் தொழில் முறை நாய் இனவிருத்தியாளர்கள் முன் குறிக்கப்பட்ட நாட்களான பருவச் சுழற்சிக்குப் பிந்தைய 9 ,11 மற்றும் 13 ஆகிய நாட்களில் மட்டும் நாய்களை இனப்பெருக்கத்திற்கு உட்படுத்துகிறார்கள். இம்முறையானது சராசரி அளவுக்கு உட்பட்ட நாய்களுக்கு மட்டுமே அதுவும் குறைந்த விகிதம் வரை கருவுறச்செய்யலாம். ஆனால் பெரும்பாலான நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குச் சராசரிக்கு உட்படாத பெண் நாய்களுக்கு இது பொருந்தாது.

யோனிக்குழாயில் வடியும் திரவத்தின் நிறம் மாற்றம் - பொதுவாகவே, யோனிக்குழாயில் வழியும் திரவத்தின் நிறமானது அடர் சிவப்பு நிறத்திலிருந்து வெளிர் சிவப்பு நிறமாக அல்லது பழுப்பு நிறமாகும்போது இனப்பெருக்கத்திற்கு உகந்த காலமாக ஒரு சிலர் கருதுகின்றனர். இவ்வாறு யோனிக்குழாய்த் திரவத்தின் நிற மாற்றத்தை வைத்து, நாய்களுக்கு இனச்சேர்க்கை செய்வது தவறான செயலாகும் ஏனெனில் சில பெண் நாய்களுக்குத் தன் பருவகாலம் முழுவதுமே போனிக்குழாயில் சிவப்பு நிறத் திரவமே காணப்படும். மேலும் வேறு சில நாய்களுக்குப் பின் சினைக்காலத்திலும் இவ்வாறான திரவம் தென்படும். ஆகவே திரவ நிறத்தை ஒரு காரணமாக வைத்து, இனச்சேர்க்கை செய்ய முடிவுசெய்ய இயலாது.

பெண் குறி வெளி இதழ் விரைப்பானது முன் பருவ காலத்தில் வீக்கத்துடனும் பருவ காலத்தில் மிருதுவான தன்மையுடனும் காணப்படும். ஆயினும் இதனை ஒரு பொருட்டாகக் கொண்டு இனச்சேர்க்கை செய்தல் இயலாது.

ஆண் நாயின் ஏற்புத்தன்மையை வைத்தும் இனச்சேர்க்கை செய்வது தவறான ஒன்றாகும். ஏனெனில் ஆண் நாயானது பெண் நாயின் முன்பருவக் காலத்திலிருந்து கவர முற்படுகின்றது. ஆகையால் இம்மாதிரியான இனப்பெருக்க முறை நம்பகத்தன்மையற்றதாகும்.

இனச்சேர்க்கை எண்ணிக்கையைக் குறைத்தல்- பல ஆண் நாய்களின் உரிமையாளர்கள் ஒரு சினைப்பருவச் சுழற்சிக்கு இரண்டு முறை மட்டுமே இனச்சேர்க்கைக்கு அனுமதிக்கின்றனர். அதுவும் முன்பே முடிவு செய்து வைத்து இருக்கும் தேதிகளில் மட்டுமே அணுமதிக்கின்றனர். ஒரு சினைப்பருவச் சுழற்சிக்குப் பல முறை இனச்சேர்க்கை செய்வதன் மூலம் தவறான காலத்தில் இனச் சேர்க்கை செய்வதைத் தவிர்க்கலாம். மேலும் கருத்தரித்தல் விகிதம் மற்றும் குட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இனப்பெருக்கத்திறன் கொண்ட வீரியமிக்க ஆண் நாய் என அனுமானித்துக்கொள்ளுதல் :

ஆண் நாய்களை எப்பொழுதும் இனப்பெருத்தக்திறன் கொண்டவை என அனுமானித்துக் கொள்ளக்கூடாது. தற்காலிக அல்லது நிரந்தர மலட்டுத்தன்மை எந்த நேரத்திலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே விந்தணுக்களின் பகுப்பாய்வும் தேவைப்படுகிறது.

பெண் நாய்களின் இனப்பெருக்க வாழ்க்கையில் சில காலம் மட்டும் சினைப்பருவச் சுழற்சியில் சினைப்பருவம் உள்ளது. எனவே, இனப்பெருக்கத் தேதியை சரியாகத் தீர்மானிப்பது முக்கியமாகும்.

இனச்சேர்க்கை செய்ய அனுகூலமான நாட்கள்
கீழ்க்காணும் வழிமுறைகள் நாய்களுக்கு எப்பொழுது இனச்சேர்க்கை செய்ய அனுகூலமான நாட்கள் அல்லது கருவூட்டல் செய்ய வேண்டிய நாட்கள் என முடிவெடுக்க உதவுகிறது.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

1. பாலியல் நடத்தை அடிப்படையில் இனப்பெருக்கம் செய்தல் :

பெண் நாய்கள் ஆண் நாய்களை ஏற்றுக்கொள்வதன் அடிப்படையில் இனப்பெருக்கம் செய்வது மிகவும எளிய, நம்பகமான ஒன்றாகும். பெண் நாய்களைத் தினமும் 10 - 20 நிமிடம் ஆண் நாய்களிடம் கொண்டு செல்லுதல் அவசியம். பெண் நாய்கள் ஆண் நாய்களை ஏற்றுக்கொள்வதை அறிய அதே இன நாய்களே அவசியம் என்பது இல்லை. ஆண் நாய்கள் மேலே தாண்டும்போது பெண் நாய்கள், பல்லைக் கடித்துக்கொண்டு உறுமுதல், பதுங்குதல், படுத்துக்கொள்ளுதல் அல்லது வாலால் மூடிக்கொள்வதன் மூலம் மறுப்பது போன்றவை பெண் நாய்கள் இனச் சேர்க்கைக்குத் தயாராக இல்லை என்பதை அறிய உதவும் காரணிகள். (இரண்டு நாள்களுக்கு ஒருமுறை இம்முறை மேற்கொள்ளப்படுகிறது). ஆண் நாய்களின் தாண்டுதலை ஏற்றுக்கொள்ளும் நாள் இனப்பெருக்கக்கால நிலையின் முதல் நிலையாகக் கருதப்படுகிறது. இனச்சேர்க்கையை இந்நிலையில் துவங்கவேண்டும். மேலும் 2-3 நாள்களுக்கு ஒரு முறை இனச்சேர்க்கை செய்தல் வேண்டும். பின் பெண் நாயானது ஆண் நாய் தன் மேலே தாண்டுவதை எப்போது மறுக்கிறதோ அதுவரை இனப்பெருக்கம் செய்ய வேண்டும்.

2. யோனிக்குழாயில் செல்களின் ஆய்வு அடிப்படையில் இனப்பெருக்கம் செய்தல் :

யோனிக் குழாயிலிருந்து இரத்தக்கசிவு ஏற்பட்டு 5 நாள்களில் இருந்து 2 நாள்கள் இடைவெளியில் மருத்துவரின் ஆலோசனைப்படி யோனிக்குழாயின் சவ்வு மாதிரிப் பரிசோதனையை நாய்களுக்குச் செய்தல் வேண்டும். மேலும் இம்முறை மூலம் இனப்பெருக்கத்திற்கு உகந்த நாள்களைக் கணிக்க முடியும். ஆனால் இந்த முறை மூலம் அண்டவிடுப்பின் சரியான நாள்களைக் கண்டறிய இயலாது.

3. யோனிக்குழாய் உள் நோக்கியியல் மூலம் இனப்பெருக்கம் செய்தல் :

யோனிக்குழாய் உள்நோக்குக் கருவியானது, யோனிக்குழாயின் சீதச் சவ்வின் மடிப்புகள், எல்லைக்கோடு, சீத மென் சவ்வின் நிறம் மற்றும் அங்குள்ள திரவத்தின் தன்மையை அறிய உபயோகப்படுத்தப்படுகிறது. மயக்க மருந்து ஏதுமின்றி, இந்த முறையை எளிமையாகப் பெண் நாய்களை நிற்க வைத்தே மேற்கொள்ள முடியும்.

4. கண நீரான டுர் மற்றும் புரோஜஸ்டிரான் அளவினைக் கண்டறிதல் மூலம் அண்ட விடுப்பின் நேரம், சினை முட்டை முதிர்ச்சி மற்றும் கருத்தரித்தல் நேரத்தை கணிக்கலாம். உறுதுணையான நம்பகத்தன்மையான பரிசோதனையாக இதனை எடுத்துக்கொள்ளலாம். ஊனிரில் புரெஜிஸ்டிரானின் அளவைத் துல்லியமாகவும் துரிதமாகவும் கண்டறிவதன் மூலம், பெண் நாயினை இணை சேரவைப்பதற்கான சரியான சமயத்தைக் கணிக்க முடியும். ஊனிரில் புரெஜிஸ்ரானின் அளவு மிகச் சிறய அளவிலேயே தினமும் அதிகரிப்பதால், டுர் உயர்வைக் கண்டறியத் தினமும் இரத்த ஆய்வு செய்வதைப் போல், இதற்குச் செய்யத் தேவையில்லை. இரண்டு (அ) மூன்று நாள்களுக்கு ஒரு முறை ஊனிர் புரோஜஸ்டிரான் அளவை கண்டறிதல் போதுமானதாகும்.

கருவுறுதல் பிரச்சனைக்காகக் கொண்டு வரப்படும் பெரும்பாலான பெண் நாய்கள் நல்ல உடல் நலத்துடன், நல்ல கருவுறுதல் தன்மை உடையதாகவே இருக்கின்றன. அவற்றின் இனப்பெருக்க உடற்செயலினைச் சரியாகப் புரிந்து கொள்ளாமல் தவறான சமயத்தில் இனச்சேர்க்கை செய்வதே அவை கருவுறாமல் இருப்பதற்கு முக்கியக் காரணமாகும். மேலும் ஒரு சோதனையை மட்டும் வைத்து இனச்சேர்க்கை செய்யும் நேரத்தைத் துல்லியமாகக் கணக்கிட முடியாது. எனவே பலவகையான பரிசோதனை முறைகளைக் கையாள்வதன் மூலம் அவற்றின் நிறைகள் மற்றும் குறைகளை அறிந்து கருவுறுதல் காலத்தைக் கணக்கிடலாம். ஆகையால் ஒவ்வொரு பெண் நாயின் உரிமையாளர், அதன் சினைக்காலத்தைக் கூர்மையாகக் கவனிப்பதன் மூலமும், அவற்றைத் தக்க மருத்துவரின் ஆலோசனையுடன் பரிசோதனை மேற்கொள்வதினாலும், கருவுறுதல் காலத்தில் ஒன்றிற்கு மேற்பட்ட முறை இனச்சேர்க்கை செய்வதனாலும், கருவுறுதல் வீதம் மற்றும் குட்டிகளின் எண்ணிக்கையை அதிகரித்துப் பலன் பெறலாம்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment