Monday 28 May 2018


நாய் வளர்ப்பு பாகம் - 10


உண்ணிகளின் தாக்கம் மற்றும் தடுக்கும் முறைகள் :

கேள்வி : உண்ணிகளால் செல்லப்பிராணிக்குப் பாதிப்பு ஏற்படுமா?

பதில் : கண்டிப்பாகப் பாதிப்பு ஏற்படும். மேலும் உண்ணிகள் நாயின் உடம்பிலுள்ள இரத்தத்தைக் குடித்து இரத்த இழப்பை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் உண்ணிக் காய்ச்சல் நோய்களான பேபிசியா கேனிஸ், எரிலிகியா கேனிஸ மற்றும் ஹெபடசோவன் கேனிஸ போன்ற ஓரணு ஒட்டுண்ணிகளைப் பரப்பி இரத்தச் சிவப்பணுக்களில் பெருகி அதிகமான பாதிப்பை ஏற்படுத்தும். ஒரணு ஒட்டுண்ணிகளால் பாதிக்கப்பட்ட செல்லப்பிராணிகள் அதிகக் காய்ச்சலாலும், உணவு எடுக்காமலும், சில நேரங்களில் விழி வெண்படல ஒளிர்வு ஏற்படும்.

உண்ணிகள் பலவிதமான நோய்கள் பரவக் காரணமாக இருப்பதாலும் மேலும் நாய்களின் இரத்தச்சோகை, உடல் எடைக்குறைவு ஏற்படுவதாலும் உண்ணிகளை அழிக்க வேண்டும்.

கேள்வி : உண்ணிகளைக் கட்டுப்படுத்த தவறாமல் அடிக்கடி உண்ணி ஊசி போடுவதாலும் உண்ணிகளை நீக்க உண்ணி நீக்க பவுடர் அல்லது மருந்துகளை செல்லப்பிராணி மேல் போடுவதாலும் உண்ணிகளைத் தடுக்க முடியவில்லை என்றால் என்ன செய்வது?

பதில் : கீழ்கண்ட அறிவுரைகளைப் பயன்படுத்தினால் உண்ணிகளை முழுமையாக அழிக்கலாம்.

1. உண்ணி ஊசியை அடிக்கடி செல்லப் பிராணிகளுக்குப் போடக்கூடாது. அவ்வாறு போடுவதால் உண்ணிகளுக்கு எதிரான மருந்தின் எதிர்ப்புதிறன் ஏற்படும்.

2. உண்ணி நீக்க மருந்துகளைச் செல்லப்பிராணிகளில் மேல் தெளிப்பதை விட உண்ணி நீக்க மருந்தான டெல்டாமெத்ரின் மருந்தைத் தண்ணீரில் (1 லிட்டர் தண்ணீரில் இரண்டு மி.லி. மருந்து) தேவையான அளவில் கலந்து நாய்களுக்கு மருந்துக் குளியல் (கண், காது, மூக்கு, வாய்ப் பகுதிகளில் மருந்து கலந்த நீர் படாதவாறு) கொடுக்க வேண்டும்.

3. மருந்துக் குளியல் கொடுக்கும் அந்த நாளிலேயே மருந்து கலந்து தண்ணீரைச் செல்லப்பிராணிகள் இருக்கும் (தங்கும்) இடங்களில் தெளிக்கவேண்டும்.

குறிப்பாக செல்லப்பிராணிகள் தங்கும் குடில், உலாவும் இடங்கள், மெத்தைகள், கால் மிதியடிகள், தரைக் கம்பளங்கள் மற்றும் உட்காரும் இடங்கள் போன்றவற்றில் தெளிக்க வேண்டும். ஏனென்றால் நாய் உண்ணிகள் (பழுப்புநிற உண்ணிகள்) எப்பொழும் செல்லப்பிராணிகள் மேல் இருப்பது இல்லை. இந்த உண்ணிகள் இரத்தத்தைக் குடித்த உடன் கீழே தரையில் விழுந்து முட்டைகளை (சுமார் 20,000 முட்டைகள்) இட்டு இறந்துவிடும். முட்டைகள் பொரித்து இளம் பருவ உண்ணிகள் நாய்களின் மேல் ஏறி இரத்தத்தைக் குடித்து விட்டுக் கீழே தரையில் விழுந்து விடும். பின்பு இவை நிம்ப் என்ற இளம் பருவ நிலைகளாக நாய்களின் மேல் ஏறி இரத்தத்தைக் குடித்துக் கீழே விழுந்து விடும். எனவே உண்ணிகளால் பாதிக்கப்பட்ட நாய்களுக்கு மருந்துக் குளியல் செய்த பிறகு நாய் தங்கும் இடம் மற்றும் உலாவும் இடங்களில் தெளிக்க வேண்டும்.

பெரும்பாலும் உண்ணிகள் நாய்களின் காதுகள், பின்புறம், முகம், ஆசனவாய், பிறப்புறுப்பு, குறிப்பாக முடிகள் அதிகமான பிடரி மற்றும் கால் விரல் இடுக்குகளில் காணப்படும். மேலும் முடிகள் அதிகமாகக் காணப்படும் ஸ்பிட்ஸ், லாப்ரேடார், ஜெர்மன் ஷெப்பர்டு, கோல்டன் ரேட்ரீவர் மற்றும் பொமேரேனியன் நாய்களில் உண்ணிகள் அதிகமாகக் காணப்படும். இந்த வகை செல்லப்பிராணிகளில் உண்ணிகளை நீக்கக் கூடுதல் கவனம் செலுத்தவேண்டும்.

கேள்வி : செல்லப்பிராணி மனிதர்களுடன் படுக்கை மெத்தையில் படுத்துக் கொள்வதால் உண்ணிகளால் ஏற்படும் பாதிப்பு பரவக்கூடுமா?

பதில் : செல்லப்பிராணிகளை உடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்றால் நாய்களுக்கு உண்ணிகளை நீக்க மருந்துக் குளியல் செய்தபிறகே தங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும். மேலும், சிறிய மற்றும் பெரிய உண்ணிகள் பெரும்பாலும் நாய்களின் மேல் இருப்பதை விடத் தரை, மெத்தை, உட்காரும் இடங்களில் (சோபா) ஊர்ந்து கொண்டிருக்கும். சில நேரங்களில் இந்த உண்ணிகள் மனிதர்களைக் கடித்து மனிதர்களின் தோலில் சிவப்புநிறப் பருக்கள் போன்ற தடிப்பை ஏற்படுத்தி அரிப்பை ஏற்படுத்தும். எனவே உண்ணிகளைத் தடுக்கச் சரியான முறைகளைக் கால்நடை மருத்துவரின் உதவியுடன் செய்யவேண்டும்.

Subscribe Us : http://www.youtube.com/c/FaizalPetsFarm

No comments:

Post a Comment